கன்பராவின் இரு நெருப்புகள் - கன்பரா யோகன்

.
                                           
                                  


நீண்ட நாட்களின் பின் நேற்று வானம் இருண்டு கொண்டு வந்தது. இம்முறை  புகை மூடியதால்  அல்ல. மழைக்கான இருட்டுதான் அது.  பல நாட்களாய்த்  தொடரும் நமாஜி தேசிய வனப் பிரதேசம்  தீப்பிடித்ததனால் ஏற்பட்ட நெருப்பும் புகையும் இன்னும் முற்றாக குறைந்து விடாத நிலையில் இந்த  வெந்த காட்டைத் தணிவிக்க மழையை எல்லோரும் எதிர்பார்த்துள்ளனர்.

கிணறு வெட்ட பூதம் புறப்பட்ட கதையாய் கன்பராவின் இரு வெவ்வேறு இடங்களில்  தீ ஏற்பட்டதற்கான காரணங்கள் இப்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. 
ஜனவரி 22 இல் கன்பரா விமான நிலையத்திற்கு மிக அண்மையிலுள்ள பியாலிகோ ரெட்வூட் காடுகள்  தீப்பற்றியமையும் , அதன் பின் சரியாக ஐந்து நாட்கள் கழித்து  ஜனவரி 27 இல்  நமாஜி தேசிய வனப் பிரதேசத்திலுள்ள ஒறோறல் பள்ளத்தாக்கு காட்டுத்தீ ஏற்பட்டமைக்கான காரணமும் தவறுதலாலான  மனித செயற்பாடுகளே என்பது தெரிய வந்தது.

நமாஜியில் ஏற்பட்ட தீயுடன் ஒப்பிடுகையில் பியாலிகோ தீ சிறிதளவாயினும் விமான நிலையம் மற்றும் பல  வர்த்தக நிலையங்கள், அரச அலுவலகங்களுக்கு அண்மித்திருந்ததால் அவையெல்லாம் அவசர அவசரமாக மூடப்பட்டதுடன், ஊழியர்களும் அவ்விடங்களிலிருந்து  வெளியேற்றப்பட்டனர்.





பியாலிகோ தீ ஏற்பட்டமைக்கு தேனீ வளர்ப்பாளர்கள் சிலர் தேன் கூடுகளுக்கு புகையூட்டுவதற்காக  வைத்த தீ தேனீக்கள் மூலமே பரவி முதலில்  ரெட்வூட் காடுகளை பற்றிப் பிடித்தது என்று தற்போது அறியப்பட்டுள்ளது.  விமான நிலைய வான் போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்களால்  இது உடனடியாகக் கண்டுபிடிக்கப்பட்டாலும் விரைவாகவே அது அண்மித்த குடியிருப்புப் பகுதிகளைப் பற்றிக் கொண்டதால்  ஏறக்குறைய 400 ஹெக்டயர் பிரதேசத்தை தீ எரித்து விட்டது..

நமாஜி வனப் பகுதியில் ஏற்பட்டது இரண்டாவது தீ. ஜனவரி 27ம் திகதி மதியம் 1 மணியளவில் இப்பகுதியிலுள்ள ஒறோறல் பள்ளத்தாக்கில் பாதுகாப்புப் படையினரின் MRH-90 Taipan ரக ஹெலிகோப்டர் ஒன்று தரையிறங்கியது.

பொதுவாக  இக்காட்டுப் பகுதிகளில் வரண்ட கோடை வெப்ப காலங்களில் காற்றும் உலர்ந்து போய்விடும் நாட்களில் ஓர் சிறு பொறி போதும்  பேரழிவுக்கு. இப்பொறி ஒரு மின்னல் மூலமும் ஏற்படக்கூடும். எனவே அவ்வப்போது தெரிந்தெடுக்கப்பட்ட சில  பகுதிகள் தீயணைப்புப் படையினரால் சுத்தம் செய்யப்பட்டு தீயணைப்புக்கு உதவும் ஹெலிகோப்டர்கள் தரையிறங்குவதற்காக தயார் செய்யப்படுவது வழக்கம்.
Fire Trail எனப்படும் தீயணைப்புக்கான வழித் தடங்களை அல்லது பாதைகளை அமைப்பதற்கும் இவர்கள் முயற்சிப்பர்.

அவ்வாறான ஒரு வேலைக்காகவே பாதுகாப்பு படையினர் இந்த  ஹெலிகோப்டரில் வந்திறங்க, தரையிறக்கத்தின்போது  எரியும் சக்தி வாய்ந்த விளக்கின் வெப்பத்தினால் காய்ந்த புற்கள் தீப் பற்றிக் கொள்ள  16 மீற்றர் நீளமான  ஹெலிகோப்டரின் அடிப்பகுதியை தீயின் நாக்குகள் சுவைக்க ஆரம்பித்தன. தரையிறங்கிய 12 செக்கன்களுக்குள் இது நிகழ்ந்து விட சிறிதளவு சேதமடைந்த ஹெலிஹொப்டர் உடனடியாகவே அங்கிருந்து கன்பரா விமான நிலையம் திரும்பியது. இதுவே நமாஜி பேரழிவுக்கு வித்திட்டது. நமாஜிக்கு அண்மித்திருத்த குடியிருப்புப் பிரதேசமான தார்வா  பக்கத்திலிருந்த மக்கள் வெளியேற்றப்பட்டு தெற்குக் கன்பராவுக்கு வந்தனர். 
2003 கன்பரா காட்டுத்தீயின் பின்பு ஏற்பட்ட ஆபத்தான மிகப் பெரிய தீ இது என்று ACT  முதலமைச்சர் அன்ட்ரு பார்  தெரிவித்தார்.
கிட்டத்தட்ட நமாஜியின் மொத்தப் பரப்பளவான 110, 000 ஹெக்டயரில் ஒறோறல் பள்ளத்தாக்கு தீ மட்டும்  86,500 ஹெக்டயர் காடுகளை எரித்ததுடன் இன்னும் 52 கிலோ மீட்டர் நீளத்திற்கு அதன் எரியும் தீ விளிம்பு தொடர்கிறது. பகலில் புகையினால்   மறைக்கப்பட்டிருந்தாலும் , இரவில் மலையின் விளிம்புகளில் தெளிவாக தீயின் சுவாலையைப்  பார்க்க முடிகிறது.
இதில் முக்கியமானதென்னவென்றால் தலைநகர்ப் பிராந்தியமான ACT  இன் 46% நிலப்பரப்பை இந்த நமாஜி வனப் பகுதியின் காடும், மலைகளும் சார்ந்த பிரதேசமே உள்ளடக்குவதால் கன்பெரா எப்போதும்  bush capital  என்றே அழைக்கப்பட்டு வந்தது.
இன்று தீயின் ஆக்கிரமிப்பினால் ACT பிராந்தியத்தின்  25% இற்கும் மேற்பட்ட காட்டுப்பகுதியும் அதன் வளங்களான பல்வேறு வகைப்பட்ட விலங்கு, பறவையினங்களும்  அழிந்துள்ளமையானது சூழலியலாளர்களாலும், விஞ்ஞானிகளாலும்   விசனத்துக்குரிய ஒன்றாக  கணிப்பிடப்பட்டுள்ளது.




No comments: