இயறகையின் முன் - கவிதை - செ .பாஸ்கரன்

.

அடுத்து என்ன நடக்கும்
விழி எறியும் தூரம்வரை
பார்வை நகர்கிறது
எங்கும் மழைத்துளியின்
வானத்துக்கும் பூமிக்குமான
அரவணைப்பு
கண்ணாடிக் கதவுகளை
உடைத்துவிடுவதுபோல்
சாரல் காற்று
தட்டிப்பார்க்கிறது
மழைக்குளிரை நீக்கிவிட
போர்வை தேடுகிறேன்
நேற்றுவரை
வெப்பத்தின் அனல் கரங்கள்
பொசுக்கி எடுத்த பூமி
தண்ணீரில் மிதக்கிறது
தாளம் தவறிய வாத்தியம் போல்
உரத்தும் சிறுத்தும்
மழை கூரையில் சந்தமிசைக்கிறது
இயற்கையின் விளையாட்டை
எண்ணிச் சிரிக்கிறேன்


இங்குதான் மனிதனும் மரங்களும்
விலங்குகளும் பறவைகளும்
கட்டுப் படுத்த முடியாத
காட்டுத் தீயோடு
கருகி மடிந்த அவலங்கள்
இன்றும் கேட்கிறது
உதவிக்குரல்கள்
வெள்ளத்தில் இருந்து
வெளியே வருவதற்காக \
இயறகையின் முன்
மண்டியிடுபவனாக இருந்து விடுகிறேன்

No comments: