ஏற்றம் பெறும் தமிழும், தமிழ் பேசத்தயங்கும் தமிழரும் - பரமபுத்திரன்

.


ஆதியில் தோன்றி, மேதினி மீதினில், வீரியமாய் உலாவும், சீரிய மொழி தமிழ் என்று உணர்வூட்ட இக்கட்டுரை எழுதவில்லை. தமிழ்மொழிக்கும் அதற்கு உரித்தான தமிழ்மக்களுக்கும் இடையே  நடைபெறும் ஒரு மொழிப்போராட்ட நிலையை சற்று அலசிப்பார்க்கலாம் என்ற எண்ணத்தில் எழுதப்படுகின்றது.  காரணம் இன்று உலகளாவிய வகையில் தமிழ்மொழி இடம் பிடித்துவரும் அதேவேளை அம்மொழியின் உரிமையாளர்கள் தாய்மொழி தமிழ் என்று அதனை பற்றிக்கொள்ள விரும்பாமை நிலை இன்னும் தொடர்வதனையும்  நாம் அவதானிக்கின்றோம். ஏன் இந்நிலை என்று மட்டும் சிந்திக்கலாம்.


முதலில் நான் படிக்கும் பராயத்தில் எமக்குள் பேசப்பட்ட ஒரு நகைச்சுவையை குறிப்பிட விரும்புகின்றேன். எமக்கு ஆங்கிலம் தெரியாவிடினும் அது தெரியும் எனக்காட்டுவதில் ஆர்வமாக பலர் இருப்பர். அதற்கு ஒரேவழி ஆங்கில படம் பார்ப்பது.  ஆங்கிலப் படத்தில் வரும்  வேலைக்காரச் சிறுவனும் நன்றாக  ஆங்கிலத்தில் பேசுவான். அவர்களுக்குள் பேசுவார்கள்.  "எடேய் இங்கிலீசுப்படத்தில வாற அந்த வேலைக்காரப் பெடியனே  இங்கிலீசிலை நல்லா வெளுத்து வாங்கிறான்ரா"., அவன்ரை மொழி இங்கிலீஸ், அவன் இங்கலீசிலை பேசுவான்தானே, இதெல்லாம் ஒரு புதுமையோ'. ஆனால் இன்று தமிழர்களைப் பொறுத்தவரை அது உண்மை என்று தான் சொல்லவேண்டும். காரணம் குறிப்பாக புலம்பெயர்ந்து வாழும்  தமிழ் பிள்ளைகள்  தமிழ் பேசினால் "தம்பி நல்லா  தமிழ் பேசுறான்” என்று ஆச்சரியமாக அல்ல, அதிசயமாக பார்க்கின்றார்கள். தமிழ் அவனின் தாய்மொழி என்பதை மறந்துவிட்டார்கள்.  இதற்கும் மேலாக தமிழ் எமது இரண்டாம்மொழி என்றும் சொல்லிக்கொடுக்கின்றார்கள். அதாவது பாடசாலையில் ஆங்கிலத்தில் படிப்பதால் அது முதலாம்மொழி, தமிழரின் பிள்ளைகள் வீட்டில் பேசும் தங்கள் சொந்தமொழி இரண்டாம் மொழி. இதுதான் எங்கள் தாய்மொழி தமிழின் இன்றைய நிலை. இதேவேளை சில தமிழ்  பாடசாலைகள் வீட்டில் தமிழ்  பேசாத மாணவர்களுக்கான தமிழ்  வகுப்புகளும் நடத்துகின்றார்கள். இன்னும் சிலரோ பாடசாலைகளில் தமிழ்  கற்பிக்கும் அதேவேளை தங்கள் பிள்ளைகள் தமிழ்  படிப்பதை விரும்பாமலும் உள்ளார்கள். “ஊருக்கு உபதேசம் உனக்கல்லடி மகளே” என்ற முதுமொழிக்கு அமைவாக  அவர்கள் பிறர் பிள்ளை தலை தடவுகிறார்கள். அதாவது பிறர் பிள்ளை தமிழ்  படிச்சால் என்பிள்ளைக்கும் தமிழ்வரும் என்பதாக இருக்கலாம் . 



மனிதனின் தொடர்பாடல் ஊடகம் மொழி. மனிதர்கள்  தமக்குள் தொடர்பாட மொழியை உருவாக்கி கொண்டார்கள்.  ஆனால் மக்கள் வேறுபட்ட இடங்களில் கூட்டம் கூட்டமாக வாழ்ந்தமையால் எல்லோரும் ஒரே மொழியை பேசவில்லை. ஒவ்வொரு கூட்டமும் தமக்கென மொழியை உருவாக்கினர். ஒருவன் பேசும் மொழி அவனுக்கு  சொந்தமாயிற்று. அதனால்  மொழியால் வேறுபட்டனர். அதுவே அவனின் தாய்மொழியும் ஆயிற்று. அந்த வகையில் பாரம்பரியமாக, தம்முன்னோர்கள்   கொடுத்துவிட்டு சென்ற சொத்தாக, தங்கள்   சந்ததி தொடரும்வரை பற்றி இருக்கவேண்டிய பிரதான அம்சமாக, தங்கள்  மொழியை மக்கள்  போற்றுகின்றனர். எனவேதான் தாய்மொழி என்பது தரமுயர்ந்தது என்று அனைத்து மொழியினரும் அதனை இறுக பற்றிக்கொள்கின்றனர்.


மொழிகள் என்று அவதானிக்கையில் சில மொழிகள் பேச மட்டும் உதவும். சிலமொழிகள் எழுத மட்டும் பயன்படும். இவ்வாறான  பலமொழிகள் அழிந்தும்  விட்டன. இன்னும் சில மொழிகள் அழியும் நிலைக்கு தள்ளப்பட்டுக் கொண்டும்  இருக்கின்றன என்று ஆய்வுகள் காட்டுகின்றன.  தமிழ் மொழி பேசவும், எழுதவும், புதுச்சொல் ஆக்கவும், இலக்கியம் படைக்கவும், ஆளுமை செய்யவும்  தகுதி கொண்ட உயர்மொழி என்பது அறிஞர்கள் முடிபு. தமிழர்களை பொறுத்தவரை இக்கருத்து சரியாக அவர்கள் மனதில் வேரூன்றி உள்ளதா  என்பது  ஆய்வுக்கு உட்படுத்த வேண்டிய செய்தி. இல்லாவிடில் தமிழ் மொழியை உயர்த்தவேண்டும் அதனை பாதுகாக்க வேண்டும் என்று  தொடர்ந்து நாம் பேசிக்கொண்டிருக்க வேண்டிய தேவை  இல்லை. அதற்காக யாரும் குரல்  கொடுக்க வேண்டிய அவசியமில்லை.  

எங்கள் மொழி பெருமைமிக்கது . எனது இனமக்கள் உயர்வானவர்கள். நாம் புவிக்கு முன் உதாரணமானவர்கள். என்கின்ற எண்ணம் என்று மேலோங்குகின்றதோ அன்று தான் தமிழுக்கும், தமிழர்க்கும் உயர்வு என்று  உறுதியாக சொல்லமுடியும்.  தமிழ் ஆதியான மொழி என்று பிறமொழியினர் கூறுகின்றார்கள். ஆனால் தமிழர்கள் நம்பத்தயாராக  இல்லை என்றே கூறலாம்.  காரணம் அந்த நம்பிக்கை இருந்திருந்தால் எந்த இடத்திலும் தனது மொழியை பேச தயங்கமாட்டார்கள். என்மொழி தாழ்வானது என்ற வலிமையான நினைவு நெஞ்சில் குடியேறியதால் தமிழ் தெரிந்திருத்தல் பயனற்றது என்றும், ஆங்கிலமொழி பேசமுடியாவிடில் நான் தரம் குறைந்தவன் என்றும், நினைத்துக்கொள்ள வழிவகுக்கிறது.  தமிழ் என்தாய் மொழி, நன்றாக  எனக்குத் தெரிந்த மொழி, ஆனால் தமிழ் போன்று பிறமொழியை சிறப்பாக நான் அறிந்திருக்கவில்லை என்று சொல்லும் வலுவுள்ள மக்கள்  எத்தனை பேர் எங்கள் முன் உள்ளார்கள் என்பது  எண்ணிப்பார்க்க வேண்டிய செய்தி.


எங்களை நாங்களே குறைத்து மதிப்பிட்டு, எங்கள் மொழி குறைவென்று   தாழ்த்துகின்ற குறுகிய மனத்துள்  நாங்களே எங்களை புதைத்து விட்டோம்.  தமிழ் என்றால் நன்றல்ல என்று, நாமே யோசிக்கும்போது எப்படி எங்கள் பிள்ளைகளுக்கு தாய்மொழி தமிழ் என்று சொல்லிடமுடியும். இல்லை எப்படி  எதிர்காலத்துக்கு கடத்துவோம். உயர்நிலைக்கு எடுத்துச் செல்வோம். ஆனால் ஒன்று எம்மால்தான் தமிழ் வாழும் என்று எண்ணுதல் பயனற்றது. காரணம் இன்றைய தமிழுலகு  தொல்காப்பியர்  சொன்னதுபோல் "வடவேங்கடம்  தென்குமரி ஆயிடை தமிழ் கூறும் நல்லுலகம்" என்று மட்டுப்படுத்தப்பட  முடியாதது. தவிர  தமிழ் உலகம் முழுவதும் பரந்து விரிந்து வளர்ந்தது  மட்டுமல்ல, நவீன கணனி உலகிலும் தன்னை வலுப்படுத்திவிட்டது. தொல்காப்பிய சங்கங்களும் உருவாகி அடிப்படைத்தமிழ் ஆரோக்கியமாக பயணிக்க ஆரம்பித்துவிட்டது. அதனால் தமிழ்மொழி வீரியமாகிவிட்டது. விரைந்து நடை போடுகின்றது. 

ஆனாலும் அங்கும் சிக்கல்கள் உண்டு. தமிழ் கொண்டு  பணம் பண்ணும் பல்வேறு மக்காள் தமிழை இன்றும் சிதைப்பது நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றது. ஆதியில் வாழ்ந்த புலவர்கள் மட்டுமல்ல, அண்மையில் வாழ்ந்த பாரதியார், பாரதிதாசன்கூட பணம் பண்ண தமிழை பயன்படுத்தவே இல்லை. அவர்கள் பெயர்களால் பலர் பயணம் பண்ணுகின்றார்கள் என்பது ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய செய்தி.  தொல்காப்பியர்  தமிழ் இலக்கணத்தை தொடக்கிவைத்தார்  எனலாம். மொழியின் இயல்பினை திருத்தமாய் சொன்னார். எழுத்ததிகாரத்தில்  எழுத்துக்களின் பிறப்பினை
உந்தி  முதலா முந்து வளி தோன்றி
தலையினும் மிடற்றினும் நெஞ்சினும் நிலைஇ
பல்லும் இதழும் நாவும் மூக்கும்
அண்ணமும் உளப்பட"

என்று சொன்னார். உடலில் இருந்து வெளியேறும் வளியின் மூலம் சிரசின்  உறுப்புகள்  இணைந்து தொழில்படுவதால் தமிழை எவ்வளவு நேரமும் களைப்பின்றி பேசலாம். அது மட்டுமல்ல  எழுத்துக்கள் யாவும் வகைப்படுத்தப்பட்டு ஒழுங்கமைத்துள்ளதால் புதிய சொல் தோன்றவும் உதவுகின்றது. இதனால்தான் புதியவை  புனைந்து  என்றும் வனப்புடன், வலிமையாய், செயல்படும் இளமைமொழி தமிழ் என்கிறார்கள். தனக்கென எழுத்தும், சிறப்பான மொழிப்பிறப்பும் கொண்ட எம்தமிழை ஆங்கிலத்தில் எழுதி உச்சரிப்பதை என்னவென்று சொல்வது. சொல்லும் செயலும் ஒன்றே அமைதல் நன்றே ஆகும். எழுத்துண்டு, நல்ல வனப்புண்டு, உச்சரிக்க சிறப்புண்டு. அதனை ஆங்கிலத்தில் எழுதிப்படித்தலை எவரும் எதிர்க்கவில்லை என்பதல்ல குறைபாடு, அப்படியாவது தமிழ் பேசுகின்றார்கள், என்று மகிழ்வதனை எண்ணும்போது மனம் மிக வெதும்புகின்றது. படைப்பாளிகள்கூட இன்னும் ஒருபடி மேலே போய்நின்று, தமிழ் தெரியா தமிழருக்கு  ஆங்கிலத்தில் எழுதுகின்றோம் என்கின்றார்கள், இதனை எங்கு போய் சொல்லி அழ. பாரதி இருந்திருந்தால் துடித்துப்போயிருப்பான். தாயை பழித்தால் விடுவேன் என் தாய்மொழியை பழித்தால்  விடமாட்டேன் என்ற பாரதிதாசன் கேட்டிருந்தால் பதைத்திருப்பான். நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று கூறிய நக்கீரனை நாம் அறிந்திருப்போம். ஆனால் அங்கு நக்கீரனின் தலையீடு தவறானது என்ற செய்திக்கப்பால், அவனின் தமிழ்பற்று என்னவென்று பார்க்க வேண்டும்.  

உண்மையில் பாண்டிய மன்னனின் மனதில் தோன்றிய ஐயத்திற்கே  விடை தேவைப்பட்டது. ஆனால் மன்னனின் ஐயம் எதுவென்று வெளிப்படையாக சொல்லப்படவில்லை. எனவே மன்னனின் மனதினை உய்த்துணர்ந்தால் மட்டுமே  அவனது ஐயத்தை தீர்க்கமுடியும். அவ்வாறு மன்னனின் மனதறிந்து முடிவு கொண்டு வருகின்றான் தருமி. முடிவை மன்னன் ஏற்கின்றான். நக்கீரன் மறுக்கின்றான். பாட்டில் பிழையுண்டு. பொருளில் தவறுண்டு. தமிழுக்கு  தாழ்வுண்டு. அதனால் பரிசுபெற தடையுண்டு என்று சொல்கின்றான். இது தமிழுக்கான மொழிப்போட்டியோ அல்லது தமிழ் கவிக்கான போட்டியோ அல்ல. ஆனாலும் தமிழில் தவறு நேரக்கூடாதென்று தவிக்கின்றான். உண்மையை உணர்த்துகின்றான். தமிழை உயர்த்துகின்றான். இன்று அது உண்டா? இல்லவேயில்லை. ஐயா சொன்னால் சரி, படித்தவர் சொன்னால் சரி, பணம் படைத்தவர் சொன்னால் சரி என்று தமிழ் மொழியை பிழைப்பு மொழியாக மாற்றி சிதைக்கின்றனர். சரியாக தமிழ்  சொல்பவரை தவறு என்றும்  சுட்டிக்காட்டுகின்றார்கள்.

எக்காலத்தும் பொருந்தும் நற்கவி படைத்த பொய்யாமொழிப்புலவர்  வள்ளுவர் சொன்னார்.
கற்க கசடற கற்பவை கற்றபின்
நிற்க அதற்கு தக
கற்கவேண்டும். எதனை கற்கின்றோமோ அதனை சிறப்பாக கற்க வேண்டும். அப்படி கற்றால் மட்டும் போதாது அதன்படி ஒழுகவேண்டும். இன்று யார் அப்படி செய்கின்றார்கள். இதனால் தமிழ் வீழும் என்று எண்ணுதல் தவறு.  ஆனால் தமிழை  தவிர்த்தால்  நாம்தான் வீழ்வோம் என்பது கண்கூடு. காரணம் நாம் தமிழின் உரிமையிலிருந்து விலகி விடுவோம்.   எங்கள் இலக்கியங்களில் முக்கிய இலக்கியம் திருக்குறள்  என்று  இனங்காட்டிடமுடியும். இதன் ஆக்க கர்த்தாவான திருவள்ளுவர்  மன்னர் ஆட்சிக்காலத்தில் வாழ்ந்த புலவர். ஆனால் மன்னர் எப்படி இருக்கவேண்டும். ஆட்சி எப்படி அமையவேண்டும், மக்கள் எப்படி நடத்தப்படவேண்டும்  என்று துணிந்து சொன்னார்.


எனவே எதையும் துணிந்து சொல்லும் நேர்மை இருக்கவேண்டும். அதன்படி ஒழுகும் பண்பு இருக்கவேண்டும். கேள்விகள் பல எழும். தமிழர்கள் மட்டும் தனித்து வாழ்ந்தால் தூயமொழி பேணப்படும். கலப்படம் தவிர்க்கப்படும். இது சரியான கூற்றாக இருக்கலாம். ஆரம்பகாலத்தில் ஏடுகளில் தமிழ் எழுதப்பட்டுள்ளது. இதனால் பாடல்களாக, இலக்கியத்தரம் வாய்ந்த சொற்களாக எழுதப்பட்டிருக்கலாம். தொல்காப்பியம் கூட ஏட்டில் எழுதப்பட்டதுதான். பிறமொழிகளின் ஆளுமை தமிழின்  மீது அம்மொழிகளின் திணிப்பை செய்தன என்று சொல்வதா அல்லது  எம்மவர்கள் விரும்பி ஏற்றார்கள் என்று சொல்வதா என்று புரியவில்லை.  இதற்கு இன்றைய எழுத்தாளர்கள் சிறந்த உதாரணம். உண்மையில் தமிழ் திரைப்படங்கள், தொலைக்காட்சி நாடகங்கள், தொலைக்காடசி நிகழ்ச்சிகள் உலக அளவில் பிரபல்லியம் பெற்றுவிட்டன. ஆனால் அவர்களில் எத்தனை வீதம் பேர் தமிழுக்கு உயர்நிலை வழங்குகின்றார்கள். சமூகப்பொறுப்புடன் செயல்படுகின்றார்கள் என்பதும் சிந்திக்கப்படவேண்டியது. ஆங்கில உரையாடல்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது மட்டுமன்றி, ஆங்கிலம் பேசுவது மதிப்பு என்றும் காட்டுகின்றார்கள். புலம்பெயர் நாடுகளில்  ஆங்கிலம் பேசுவதை உயர்வாக பார்க்கின்றார்களா என்றும்   சிந்தித்து பார்க்கவேண்டும். ஒருவேளை  தமிழர்கள் பார்ப்பார்கள்.  அதேபோல மேடைநிகழ்வுகள் அல்லது பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில்  மிகவும் கீழ்த்தரமான தமிழ்  வார்த்தைகளை பேசுகின்றார்கள். இவை எல்லாவற்றையும்  தமிழ் சிதைப்பாகவே பார்க்கமுடியும். இங்கு தெரிந்துகொள்ள வேண்டிய  செய்தி  இதுமட்டுமல்ல. தமிழர்கள்தான் தமிழை சிதைக்கின்றார்கள். ஆனால்  அதற்கு பல்வேறு காரணங்களை துணை சேர்க்கின்றார்கள். தனித்தமிழ் இயக்கம் வேண்டி நின்ற மறைமலை அடிகளும் கேலி செய்யப்பட்ட சம்பவங்கள் உண்டு. தமிழ் என்பது தனிமொழி அதனுள் பிறமொழி வேண்டாம். இது பிறமொழி வெறுப்பல்ல. தமிழ் மொழிக்கான பாதுகாப்பு என்பதே அவரது வாதம்.

தமிழ் நிறைவான மொழி, எதனையும் தன் சொல்லால் உள்வாங்கும் திறன் கொண்ட மொழி. தாய்மொழியின் சொற்கள் வெளியேறி பிற மொழிச்சொற்கள் உட்புகுமாயில் காலப்போக்கில் தமிழ்சொற்கள் போய் பிற சொற்கள் நிலைத்துவிடும். இதனால் தான் தமிழ்மொழியுடன் வடமொழியை  கலந்து எழுதும் மணிப்பிரவாள நடை எதிர்க்கப்பட்டது. இன்று  தமிழ் நெடுங்கணக்கில் இல்லாத எழுத்துகள் ஸ, , ஹ, ஜ  போன்ற எழுத்துகளை  எழுதிக்குவிக்கின்றனர். அந்த எழுத்துக்கள் இன்றி பெயர் வைக்க முடியாதெனின் நம்முன்னோர்கள் பெயரின்றி  வாழ்ந்தார்களா என்ற கேள்விகளும் எழுகின்றது.  தமிழீழ விடுதலைப்புலிகள் தமிழ் பெயர்களை சேர்த்து ஒர் அகராதி தொகுத்தனர். அவை தமிழ் பெயர்கள் அன்றி வேறில்லை. அப்பெயர்களை விடுதலைப்புலிகளின் பெயர்கள் என்று ஒதுக்குவதை என்ன சொல்வது.

எது எப்படியோ இன்று தமிழ் உலகளவில் பரந்துவிட்டது. தமிழர் அல்லாதோர் தமிழ் படிப்பது அதிகரித்துவிட்டது. தமிழருக்கு என்று ஒரு அரசு இல்லாவிடிலும் பல அரசுகள் தங்கள் நாடுகளில் தமிழை ஒரு மொழியாக்கி கொள்கின்றது. பாடசாலைகளில் கற்கைமொழி ஆக்குகின்றது. இதற்காக உழைக்கும் பெரியவர்கள் யார் எனினும் அவர்கள் வணக்கத்துக்குரியவர்களே.  எனவே உலக அளவில் தமிழ் கற்கைமொழி என்று  வளர்ந்து வருகையில் தமிழின் உரிமையாளர்களாகிய  நாங்கள் தமிழை புறக்கணிப்பின் நாம் தமிழின் உரிமையை இழந்து செல்லும் அதேவேளை தமிழ் மேலும் வளர்ந்து  உயரிய நிலையை நோக்கி பயணிக்கும் என்பதில் ஐயமும் கொள்ளத்தேவை இல்லை. எனவே எங்கள் பிள்ளைகளை தமிழ்  பேசவும் கற்கவும் ஊக்குவித்தால் மட்டுமே, அவர்கள் தங்கள் மொழியை தெரிந்து கொள்வது மட்டுமன்றி எதிர்காலத்தில் தமிழராகவும் வாழ்வர். வளரும் உலகின் புதிய ஆக்கங்கள் படைத்து தமிழருக்கு வழங்குவர்.

பரமபுத்திரன்

No comments: