ரமேஷ் ரங்கநாதன் என்னும் நகைச்சுவை மன்னன் --ஒரு பார்வை-- உஷா ஜவாஹர் அவுஸ்திரேலியா


ரமேஷ் ரங்கநாதன் தற்போது லண்டனில் வாழ்ந்துவரும் நகைச்சுவை நடிகர் மற்றும் தொகுப்பாளர். இவரது பெற்றோர் இலங்கையிலுள்ள மட்டக்களப்பு எனும் இடத்தை சேர்ந்தவர்கள்.
ரமேஷ் லண்டனில் வெவ்வேறு தொலைக்காட்சி சானல்களிலும் வானொலி நிகழ்ச்சிகளிலும் பங்குபற்றுபவர். இவர் Asian Provocateur, The Misadventures of Ramesh Ranganathan, The Reluctant Landlord and Just Another Immigrant போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியிருக்கிறார். 
இவர் இடையிடையே கார்டியன்(Guardian) பத்திரிகையிலும் எழுதி வருகிறார்.
இவர் Asian Provocateur என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக இலங்கைக்கு சென்று அங்கு பல இடங்களையும் பார்வையிட்டு வெவ்வேறு கலாச்சார நிகழ்ச்சிகளையும் பதிவு செய்திருக்கிறார்.
அண்மையில் இவர் தன் வாழ்க்கை வரலாற்றை STRAIGHT OUTTA CRAWLEY  எனும் நூலில் பதிவுசெய்து வெளியிட்டிருக்கிறார்.

சிறுவயதில் கிராலியில்(Crawley) வளரும்போது தான் பாடசாலைக்கு செல்லும்போது அதீத உடற்பருமன் கொண்டிருந்ததாக குறிப்பிட்டிருக்கிறார். வழக்கமான இலங்கைப் பெற்றோரைப் போலவே தன் தாயும் தனக்கு அதிகளவு உணவு அளித்ததாக குறிப்பிட்டிருக்கிறார். தனது உடற்பருமன் காரணமாக சிறுவயதில் பெண்பிள்ளைகளுடன் நட்பு பேணமுடியவில்லை என்றும் குறிப்பிட்டிருக்கிறார். சிறு வயதில் தனியார் பாடசாலையில் படித்திருக்கிறார். பெரிய வீட்டில் வாழ்ந்திருக்கிறார். சுகபோகமான வாழ்க்கையை அனுபவித்திருக்கிறார். இத்தனையும் இவரை விட்டு நீங்கி விட்டன. ஏன் தெரியுமா? இவரது தந்தை தவறான பாதையில்  சென்றமையினால்தான்.  
பெரிய வீட்டிலிருந்து கவுன்சில் (Council) தந்த சிறு வீட்டுக்கு மாறி தாயான சாந்தியுடனும் தம்பியான தினேஷுடனும்  சிரமம் மிக்க வாழ்க்கையை தொடர்ந்திருக்கிறார். அந்த சிறிய வயதில் தன் தாய் படுக்கைக்கு செல்லும்போது இரவு கண்ணீருடன் படுக்கைக்கு செல்வதை அவதானித்து வந்திருக்கிறார்.
ரமேஷின் தாயும் மிகவும் கெட்டிக்காரிதான். தான் தனியே உழைத்து  பிள்ளைகளை நல்ல நிலைக்கு கொண்டுவந்திருக்கிறார்.
ரமேஷின் தந்தை இவர்கள் நல்ல நிலைமையில் இருந்தபோது தங்கள் வீட்டில் நடந்த பார்ட்டிகளில் பல ஜோக்குகளை அடித்துக்கொண்டு வீட்டில் உள்ள சட்டிகளை திருப்பிவைத்துக்கொண்டு நண்பர்களுடன் சேர்ந்து பழைய தமிழ் சினிமா பாடல்களை பாடியிருக்கிறார்.
ரமேஷ் ஆரம்பத்தில் எக்கனாமிக்ஸ் (Economics) டிகிரி படிப்பை முடித்துவிட்டு பின் கணிதத்தில் டிகிரி  படிப்பை முடித்திருக்கிறார்.
சிறிது காலம் தாயும் தந்தையும் பிரிந்து வாழ்ந்திருக்கிறார்கள். பிறகு தகப்பன் இவர்களுடன் வந்து சேர்ந்து வாழத்தொடங்கியிருக்கிறார். 
கணித டிகிரியை முடித்துவிட்டு உயர்தர பாடசாலையில் கணிதம் கற்பிக்கும் ஆசிரியராக வேலை பார்த்திருக்கிறார் ரமேஷ்.
ஆனால் ரமேஷுக்கு அங்கு இங்கிலாந்தில் Pubகளில் இடம்பெறும் Gig என்ற நிகழ்ச்சிகளில் பங்குபெற மிகவும் ஆர்வம் இருந்திருக்கிறது. Gig என்றால் நேரடியாக Pubகளுக்குப்போய் உயிரோட்டமாக நிகழ்ச்சிகளை, அதாவது Live Performanceகளை வழங்குவது.
தான் பங்குபற்றிய தன் பல நிகழ்ச்சிகளுக்கு தன் தந்தை ஆர்வத்துடன் வந்து கலந்துகொண்டதாக குறிப்பிட்டிருக்கிறார் ரமேஷ்.
ஒருமுறை அவரது தந்தை நன்கு குடித்துவிட்டு அன்றைய Gigஇல் பங்குபற்றிய நகைச்சுவை தொகுப்பாளர்களிடம் அவர்களின் நகைச்சுவைக்கதைகளை மாற்றிக்கூறியிருக்கிறார்.
பின்னர் ரமேஷிடம் அவரது தந்தை "நான் என்ன இன்று உன் நண்பர்களிடம் ஏதும் பிழையாக கதைத்துவிட்டேனா?" என ஏக்கம் தொனிக்கும் குரலில் கேட்டிருக்கிறார். "அதெல்லாம் நீங்கள் சரியாகத்தான் நடந்துகொண்டீர்கள்" என ரமேஷ் கூறியபின்தான் அவரது தந்தை நிம்மதிப்பெருமூச்சு விட்டாராம்.
தனது அறுபதாவது பிறந்தநாளை தன் உறவினர்களுடன் கோலாகலமாக கொண்டாடியிருக்கிறார் ரமேஷின் தந்தை. பிறகு ஒரு நாள் ரமேஷ் தன் Gig நிகழ்ச்சியில் இருந்தபோது அவரது தம்பியிடமிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்திருக்கிறது. "அப்பா எங்களை தவிக்க விட்டுவிட்டு இறந்துவிட்டார்". இதுதான் ரமேஷின் தம்பி ரமேஷுக்கு கூறிய செய்தி.
அதீத குடிப்பழக்கம், சிகரெட் புகைத்தல், சீரற்ற உணவு உண்ணும் பழக்கம் போன்றவையே தந்தைக்கு எமன் ரூபத்தில் வந்திருக்கிறது என்பதை உணர்ந்து வருந்தியிருக்கிறார் ரமேஷ்.
இவர் ஆரம்பத்தில் Cost Analyst ஆக விமானங்களுக்கு உணவு தயாரிக்கும் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்திருக்கிறார். ஒவ்வொரு நாளும் நீண்ட நேரம் அங்கு வேலை பார்ப்பதை அவர் விரும்பவில்லை. மனதுக்கு பிடித்த வேலை என்றால் தன்னால் மிகவும் கடினமாக வேலை பார்க்கமுடியும் என கூறியிருக்கிறார்.
ரமேஷ் A/L படிக்கும்போது வீட்டில் பணக்கஷ்டம். எனவே வேலைக்குப்போக யோசித்திருக்கிறார். வீட்டுக்கு சாப்பிட்டு சாமான்கள் வாங்குவதற்காக அல்ல. கையில் காசிருந்தால்தான் புகைப்பதற்கு வீட் (Weed) உம் ஆர்மனி டிசேர்ட் (Armani T-Shirt) ம் வாங்கலாம். அதைவிட Weed ம் Armani T-Shirt ம் இருந்தால் தான் இளம் பெண்களை கவரவும் இயலும். இப்படி யோசித்திருக்கிறது அந்த 19 வயது இளம் காளையின் உள்ளம்.
வெள்ளி, சனி இரவுகளில் லேட்டாக KFC இல் வேலை பார்த்திருக்கிறார். அங்கு பல இலங்கையைச் சேர்ந்த இளைஞர்களுடன் வேலை பார்த்திருக்கிறார்.
சில சமயங்களில் இவர் பாடசாலையில் படித்த பொல்லாத பையன்கள் KFCக்கு வந்தால் அவர்கள் அளித்த பணத்துக்கு மேலாக 60 Hot Wings ஐக்கொடுத்துவிட்டு பின் மேனேஜரிடம் மாட்டிக்கொண்டிருக்கிறார். தான் பயத்தினால்தான் அப்பிடி செய்ததாக குறிப்பிட்டிருக்கிறார்.
KFCஇல் வேலைபார்த்து அலுத்ததினால் அடுத்து Sainsbury கம்பெனி ஒரு கிளையை Horsham என்ற இடத்தில் திறப்பதாக அறிந்து விண்ணப்பித்து இண்டெர்வியூவுக்கு சென்றிருக்கிறார்.
ரமேஷுக்கு ஒரு கண் சாதுவாக மூடியிருக்கும். அதை சோம்பல் கண் (Lazy Eye) என்று அழைப்பார்கள். ரமேஷுக்கு மூன்று வயதிருக்கும்போது கண்ணில் ஏற்பட்ட தொற்று காரணமாக இவருக்கு இந்த சோம்பல் கண் உருவாகிவிட்டது.
இந்த சோம்பல் கண் இல்லாவிட்டால் தான் நகைச்சுவை தொகுப்பாளராக வந்திருக்க மாட்டார் என்று நம்புகிறார்.
ரமேஷுக்கு படிக்கும் காலத்தில் கணக்குப்பாடம் கைவந்த கலையாய் இருந்திருக்கவேண்டும். ஒருமுறை ஆசிரியர் முதல்நாள் எழுதிய அதே சமன்பாட்டை மறுநாளும் கரும்பலகையில் எழுதியிருக்கிறார். ஆசிரியரின் தவறை சுட்டிக்காட்டிய ரமேஷுக்கு ஆசிரியரிடம் இருந்து கிடைத்த பரிசு வார்த்தைகள் "நீ உன் வாயை பொத்திட்டு இரு" ஆகும்.
ரமேஷ் லீசா எனும் வெள்ளைக்காரப்பெண்ணைத் திருமணம் முடித்து மூன்று ஆண் குழந்தைகளுக்கு நல்ல தந்தையாயிருக்கிறார்.
ஆனாலும் பிள்ளைகளைப் படிப்பித்து ஆளாக்குவது என்ற விஷயம் தன்னைக் குழப்பத்தில் ஆழ்த்துகிறது என்கிறார். "பிள்ளைகள் வெற்றிநடை போடும் வழக்கறிஞராக வந்தால் மட்டுமே சந்தோசமாக இருப்பார்களா? அல்லது பசியோடு அலையும் கலைஞனாக வந்தால் சந்தோசமாக இருப்பார்களா? எது அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் எனத்தெரியவில்லை" என்கிறார்.
சிறுவயதில் தன்னைப்பாதித்த துன்பமான சம்பவங்களால்தான் தான் இப்போது பெயரும் புகழும் பெற்ற நகைச்சுவைத்தொகுப்பாளராக விளங்குவதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.
ரமேஷின் அப்பா சீரற்ற உணவுப்பழக்கத்தால் இறந்ததால் சீரான உணவு உண்ணும் முறையை கடைப்பிடிக்க முயற்சித்திருக்கிறார். வீகனாக (Vegan) மாறியிருக்கிறார். வீகனாக மாறியதால் கடைகளில் விற்கும் பொதுவான பீட்சாக்களை வாங்கி உண்ணமுடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். வீகன் என்றால் பால், முட்டை, பாலாடைக்கட்டி, இறைச்சி போன்றவற்றை உண்ண முடியாது.  பாலாடைக்கட்டி (Cheese) போடாத பீட்சா உண்பதற்கு கடினமாக இருக்கும் என உணர்ந்திருக்கிறார்.
இவரது நண்பர் David Blood என்பவர் இதய நோயால் தாக்கப்பட்டிருந்தார். அவர் மயிரிழையில் உயிரிழக்காமல் தப்பித்திருக்கிறார். David Blood ரமேஷிடம் British Heart Foundation க்காக Gig நிகழ்ச்சியொன்றை நடத்தித்தரும்படி கேட்டிருக்கிறார்.
ரமேஷும் தன் தந்தையும் இதய நோயால் இறந்ததை நினைவுகூர்ந்து நிகழ்ச்சியை நடாத்த ஒப்புக்கொண்டிருக்கிறார். ரமேஷ் British Heart Foundation க்காக நிகழ்ச்சியை நடாத்த ஒப்புக்கொண்டதை அறிந்த சில பொதுமக்கள் ரமேஷை ‘கன்னா பின்னா’ என்று திட்டி செய்திகளை அனுப்பியிருக்கிறார்கள். 
“British Heart Foundation தன் ஆராய்ச்சிக்காக பல நாய்களை கொன்றொழித்திருக்கிறது. வீகனான நீ எப்பிடி நாய்களை கொன்றொழிக்கும் British Heart Foundationக்காக நிகழ்ச்சியை நடாத்த ஒப்புக்கொள்ளலாம்?" இதுதான் அந்த மக்களின் கேள்வி.
மக்களின் கேள்வியின் நியாயத்தை ரமேஷ் புரிந்து கொண்டாலும் நண்பனுக்காக ஒப்புக்கொண்ட நிகழ்ச்சியிலிருந்து விலகாமல் நிகழ்ச்சிக்கு சென்றிருக்கிறார். அங்கும் வாசலில் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டம் செய்திருக்கிறார்கள். என்றாலும் ரமேஷ் நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்தியிருக்கிறார்.
தான் தொலைக்காட்சியில் தோன்றிய முதல் நிகழ்ச்சி தனக்கு பெரிதாக மகிழ்ச்சியளிக்கவில்லை என்கிறார் ரமேஷ். தன்னிடம் அப்போது நல்ல உடைகளை வாங்க போதுமான பணமிருக்கவில்லை என்கிறார்.
ஆரம்பகால தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் போது தனக்கு உதறல் ஏற்பட்டதாகவும் பின்னர் சமநிலை திரும்பியதாகவும் குறிப்பிடுகிறார். Mock the Week என்ற தொலைகாட்சி நிகழ்ச்சிக்கும் தொகுப்பாளராக வேலை பார்த்திருக்கிறார் ரமேஷ். மூன்று மணித்தியாலங்கள் ரெகார்ட் பண்ணிவிட்டு பின்னர் அதை எடிட் பண்ணி அரைமணிநேர தொலைக்காட்சி நிகழ்ச்சியை வழங்குவார்களாம்.
Mock the Week நிகழ்ச்சி செய்த பின்னர் தான் பொது இடங்களுக்கு செல்லும்போது மக்கள் தன்னுடன் புகைப்படம் எடுக்கப் பிரியப்பட்டார்கள் எனக்குறிப்பிட்டிருக்கிறார் ரமேஷ்.
ஒருமுறை அப்படி பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின் தான் வீடு திரும்பிக்கொண்டிருக்கும் போது தன்னை ஒரு கார் பின்தொடர்ந்ததாகவும் யாரோ தன்னை கொலைசெய்ய முயற்சித்ததாக நினைத்து மிகவும் பயந்திருக்கிறார். தான் காரால் இறங்கி தன் தோற்றத்தை காட்டியதாகவும், பின் அந்தக்கார் அந்த இடத்திலிருந்து விரைவாக அகன்று விட்டதாகவும் கூறியிருக்கிறார். பின்னர்தான் ரமேஷுக்கு தெரியவந்திருக்கிறது அது தன்னுடன் வேலை செய்த Charlie Baker என்பவர் தன்னை விளையாட்டாக காரில் துரத்திய விடயம்.
ரமேஷ் ரங்கநாதன் நல்ல மகனாகவும், அன்பான கணவனாகவும், தன் மூன்று மகன்மாருக்கும் கனிவுமிக்க தந்தையாகவும் அதே சமயம் புகழ் மிக்க கலைஞனாகவும் திகழ வேண்டும் என அனைத்து தமிழ் மக்கள் சார்பாகவும் வாழ்த்துகிறேன்.

                           ----------------------------------------------------  
-->

No comments: