மழை வேண்டல் - தமிழ், திருமுறை வழிபாடு செவ்வனே ஆரம்பித்தது...!


லகம் உய்ய,
சென்ற 21ம் திகதி காலை 9:30மணி முதல் மதியம் 12மணி வரை,
சிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் ஆலயத்தில்
தமிழ்ப் பாராயணம் ஓதுதல் தெய்வீகமாய் நிகழ்ந்தேறியது.
அவுஸ்திரேலியாவில் - குறிப்பாக நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில்
கடுமையான வறட்சி, காட்டுத் தீயின் உக்கிரம் என இவ்விரு
இயற்கையின் சீற்றங்களையும் நிவர்த்திக்கும் முகமாக
மழை வேண்டிப் பிரார்த்தித்தனர் பெரியோர்.

💧💧💧💧

உலக சைவப் பேரவையின் அவுஸ்திரேலியக் கிளையினர்
நல்லெண்ணத்தோடு முயற்சி செய்து,
30பக்கங்களுக்கும் மேற்பட்ட நூல் ஒன்றை அன்று வெளியிட்டனர்.
நூல் அனைத்தும் வான்மழை பற்றிய தமிழ்ப் பாடல்கள்.
இறைச்சான்றோர் பெருமக்களால் ஞாலம் உய்யப்
பாடப்பட்ட பாடல்கள்.
திருக்குறள்,
பன்னிரு திருமுறைகளிலிருந்து மழை பற்றிய அடிகள் உள்ள பாடல்கள்,
மேகராகக் குறிஞ்சிப் பண்ணிலமைந்த பதிகங்கள், திருப்புகழ்,
சிலப்பதிகாரச் செய்யுள்கள் மற்றும் நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் என,
பல பாடல்களை உள்ளடக்கி வெளியிட்டமை மிகச் சிறப்பு.

💧💧💧💧

சங்கீத கலா வித்தகர் பல் வைத்திய கலாநிதி திருமதி சிவரதி கேதீஸ்வரன் அவர்கள் பண்ணோடு இசைபாட,
அங்கு கூடியிருந்த ஐம்பதிற்கும் மேற்பட்ட அடியார்கள் ஒவ்வொரு பாடல்களாகச் சேர்ந்து இசைத்தார்கள்.
தொடர்ந்து ஆலய உச்சிக் காலப் பூசையுடன் பாராயணம் அன்று நிறைவெய்தி,
அடியவர்க்கான மகேசுர பூசையும் சிறப்புற நடந்தேறியது.
ஆலயத்தார்க்கும் சைவப் பேரவையினர்க்கும் நன்றிகள் பல!

💧💧💧💧

மிக நல்ல ஆரம்பம்!
ஆம் ஆரம்பம்தான்.
தொடர்ந்து ஆலயங்களிலும், இல்லங்களிலும்,
இப்பாடல்கள் அடியார்கள் அனைவராலும் பாடப்படல் வேண்டும்.
ஏனெனில், இவை கால தத்துவத்தோடு தொடர்புடையது.
பாடப்பாடத்தான் இராகம் வரும்.
அவரவர் பக்குவத்திற்கேற்ப,
தொடர் முயற்சிதான் திருவினையாக்கும் என்பது மெய்.

💧💧💧💧

தேங்காய்  இன்று விதைத்து நாளை துளிர்விடுவதில்லை.
பத்துத் திங்கள் காத்திருந்தே மகவு மகிழ்வோடு பிறக்கின்றது.
தவமியற்றிய புரையோர் ஒன்றும் மறுநாள் வரம்பெற்றதாய்ச் சரித்திரமில்லை.
மழை வேண்டலும் அஃதே!
சைவப் பேரவையின் நன்முயற்சியில் வெளிவந்துள்ள இம் மழை வேண்டல் பிரார்த்தனை நூல்,
இறை அடியவர் அனைவரும் பெற வழிவகை செய்து, தொடர் பாராயணம் செய்யின்,
மழை வெள்ளிடை மலை!

💧💧💧💧

ஒவ்வொருவரும் அவரவர்தம் இறை பக்தியின் பிரகாரம்,
நம்பிக்கையின் பிரகாரம்,
கொள்கையின் அடிப்படையில்,
குறிக்கோளை அடைதல் முறை.
மழை வேண்டும்!
அறம்பற்றி,
எவ்வகையில் அமையினும் சிறப்பு.
பாரதி கூறிய "நிதி மிகுந்தவர் பொற்குவை தாரீர்…"
கம்பன் சொல்லிய "ஒன்றேயென்னின் ஒன்றேயாம்…"
இஃதே!
உணர்ந்தார் உயர்வர்.
அறியாதார் அறியாதாரே!

No comments: