- கார்வண்ணன்
24/12/2019 கொழும்பில் உள்ள சுவிஸ் தூதரகத்தில் வீசா உதவி அதிகாரியாகப் பணியாற்றும் கார்னியர் பனிஸ்டர் பிரான்சிஸ் என்ற பெண், கடத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டை, இலங்கை அரசாங்கம் கையாளுகின்ற விதம் கடுமையான சர்ச்சைகளை தோற்றுவித்திருக்கிறது.
ஜனாதிபதியாக கோத்தாபய ராஜபக் ஷ பதவியேற்று ஒரு வாரத்தில் அந்தச் சம்பவம் இடம்பெற்றிருந்தது. அதுகுறித்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் கவனத்துக்கு சுவிஸ் தூதுவர், கொண்டு சென்றிருந்தார். நியூயோர்க் ரைம்ஸ் மூலம், ஊடகங்களிலும் அந்தச் செய்தி பரவத் தொடங்கியது.
இந்தக் குற்றச்சாட்டுத் தொடர்பாக குற்ற விசாரணைத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அரசாங்கத் தரப்பில் இருந்து தகவல் வெளியிடப்பட்ட சமநேரத்திலேயே, அவ்வாறான சம்பவம் ஒன்று நடக்கவேயில்லை என்று அரச தரப்பிலிருந்து மறுப்புகளும் வெளிவரத் தொடங்கி விட்டன.
அதேவேளை, சம்பந்தப்பட்ட பெண் பணியாளரை, நாட்டை விட்டு வெளியேறாமல் தடுத்து, அவரை சுவிஸ் அதிகாரிகளே குற்ற விசாரணைத் திணைக்களத்தில் கொண்டு வந்து நிறுத்துகின்ற நிலையையும் அரசாங்கம் ஏற்படுத்தியது.
அதையடுத்து அவரிடம் நீண்ட தொடர் விசாரணைகள் நடத்தப்பட்டு, மனநல சோதனைகள், சட்ட மருத்துவ சோதனைகள் என்று உளவியல் ரீதியான நெருக்கடிகள் கொடுக்கப்பட்டன.
இவற்றுக்குப் பின்னர், பாதிக்கப்பட்டதாக கூறப்படும் பெண் அதிகாரி, முரண்பாடான தகவல்களைக் கூறியிருப்பதாகவும், அவர் அரசாங்கத்துக்கு கெட்டபெயரை ஏற்படுத்த முயன்றுள்ளார் என்றும் குற்றம்சாட்டி அவரைக் கைது செய்திருக்கிறது குற்ற விசாரணைத் திணைக்களம்.
இந்தக் கைது நடவடிக்கையும், அவருக்கு எதிரான விசாரணைகளும் நியாயமான முறைகளில், அரசியல் தலையீடுகளின்றி, சுதந்திரமாக இடம்பெறுகின்றன என்று அரசாங்கம் கூறிக்கொள்கிறது.
கடந்த 16ஆம் திகதி குறித்த அதிகாரி கைது செய்யப்படுவதற்கு முன்னர், அன்று காலை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷவை சுவிஸ் தூதுவர் சந்தித்துப் பேசியிருந்தார்.
இதன் பின்னர், ஜனாதிபதி செயலகத்தில் இருந்து வெளியிடப்பட்ட அறிக்கையில், குறித்த அதிகாரி தவறிழைத்துள்ளார் என்பதை சுவிஸ் தூதுவர் ஒப்புக் கொண்டு விட்டார் என விளங்கிக் கொள்ளக் கூடிய வகையில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது,
ஆனால் அன்றிரவே, சுவிஸ் வெளி விவகார திணைக்களத்தினால் பேர்னில் இருந்து ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. அந்த அறிக்கை, இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாட்டை நிராகரிக்கும் வகையிலும், குறித்த சுவிஸ் தூதரகப் பணியாளர் நடத்தப்படும் விதம் குறித்து அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையிலும் இருந்தது.
உடல் நலம் குன்றியிருந்த நிலையிலும், பாதிக்கப்பட்டவரிடம் மூன்று நாட்கள் 30 மணி நேரம் தொடர்ச்சியாக விசாரணை நடத்தப்பட்டது குறித்து அதில் பிரஸ்தாபிக்கப்பட்டிருந்தது,
ஆனால், அரசாங்கமோ அவருக்கு எந்த உடல் நலக் குறைவும் இல்லை, தெளிவான மனநிலையுடன் தான் இருக்கிறார் என்று நிரூபிக்க அடுத்தடுத்து உளநல சோதனை என்ற பெயரில், உளவியல் ரீதியான செயற்பாடுகளுக்கு உட்படுத்தியது.
அவரிடம் முழுமையான தகவல்களைப் பெற முடியவில்லை. முதல் நாள் சாட்சியமளிக்கும் போது இரண்டு முறை மயங்கி வீழ்ந்தார் என்று குற்ற விசாரணைத் திணைக்களத்தினர் நீதிமன்றத்தில் கூட கூறியிருந்தனர்.
அதைவிட, விசாரணைகள் நடக்கும் போதே, குறித்த பணியாளர் பொய் சொல்கிறார் என்றும் அவ்வாறான சம்பவமே நடக்கவில்லை என்றும், தவறை அவர் ஒப்புக்கொண்டு விட்டார் என்றும், அரசாங்கத் தரப்பில் உள்ளவர்கள் தகவல்களை வெளியிட்டு வருவது குறித்தும் சுவிஸ் வெளிவிவகார திணைக்களம் அதிருப்தி வெளியிடப்பட்டிருந்தது.
விசாரணைகள் தேசிய – சர்வதேச சட்ட நடைமுறைகளுக்கு அமைய இடம்பெற வேண்டும் என்பதையும், தூதரக பணியாளரின் சிறப்புரிமையை மதிக்க வேண்டும் என்றும் சுவிஸ் வலியுறுத்தியிருந்தது.
அரசியலமைப்புக்கு அமைய செயற்படும் அரசு என்ற இலங்கையின் நற்பெயருக்கு பாதிப்பு ஏற்படாமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்ற எச்சரிக்கையையும் சுவிஸ் அறிக்கையில் காணமுடிந்தது.
ஆனால் அரசாங்கமோ இது ஒரு கட்டுக்கதை, என்றும் திட்டமிட்டு சிலரின் நிர்ப்பந்தத்தினால் குறித்த பணியாளர் பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருக்கிறார் என்றும் கூறிக் கொண்டிருக்கிறது.
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ, இந்தச் சம்பவத்தினால் தானே பாதிக்கப்பட்டிருப்பதாக கூறியிருக்கிறார்.
யார் இதன் பின்னணியில் இருந்தார்கள் என்பதைக் கண்டறிவதற்கான விசாரணைகளே முன்னெடுக்கப்படுவதாகவும், அரசாங்கத் தரப்பில் கருத்து வெளியிடுபவர்கள் கூறுகின்றனர்.
முன்னதாக, சுவிஸ் தூதரகம் நாடகம் நடத்தியிருப்பதாக அமைச்சர்கள் பலரும் கூறியிருந்தனர்- குற்றம் சாட்டியிருந்தனர்.
எதற்காக சுவிஸ் தூதரகம் இந்த நாடகம் ஆடியது என்று கண்டுபிடிக்கப்பட வேண்டும் என்று அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெலவே கூறியிருந்தார்.
வேறு சில அமைச்சர்கள், இது அமெரிக்காவின் வேலை என்று குற்றம்சாட்டினர். இன்னும் சிலர், ஐக்கிய தேசியக் கட்சியே இந்த நாடகத்தை நடத்தியிருக்கிறது என்றனர்.
அரசாங்கத்தின் பெயரை சர்வதேச அளவில் கெடுக்கும் முயற்சிகள் நடக்கிறது, ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் மாட்டி விட சதித் திட்டம் தீட்டப்பட்டிருக்கிறது என்று கூறினார்கள்.
திஸ்ஸ விதாரண போன்றவர்கள் ஏகாதிபத்தியத்துக்கு அடங்கிப் போக மறப்பதால் தான் இத்தகைய நெருக்கடிகள் கொடுக்கப்படுகின்றன. இன்னும் பல சூழ்ச்சிகள் நடக்கும், கவனமாக கடந்து செல்ல வேண்டும் என்று எச்சரிக்கிறார்கள்.
இவ்வாறாக சுவிஸ் மீதும், அமெரிக்கா மீதும், ஐ.தே.க. மீதும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள போதும் அந்த தரப்புகள் அனைத்தும் அதனை நிராகரித்துள்ளன.
சுவிஸ் இவ்வாறான ஒரு சம்பவத்தை சோடிக்க வேண்டிய வெளிப்படையான எந்த தேவையும் இருப்பதாகத் தெரியவில்லை.
அமெரிக்கா இவ்வாறான ஒரு காரியத்தில் இறங்கவில்லை என்கிறது, ஐ.தே.க. தம்மீது வீண் பழி போடப்படுகிறது என்று நிராகரித்திருக்கிறது,
எவ்வாறாயினும், இந்த விவகாரத்தினால், சர்வதேச அளவில் அரசாங்கத்தின் பெயர் கெட்டுப் போயிருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.
இந்தச் சம்பவத்தில் இருந்து வெளியே வருவதற்கு அரசாங்கமும். சுவிஸும் முயற்சித்தாலும், அது இப்போதைக்குச் சாத்தியமாகும் போலத் தெரியவில்லை.
ஏனென்றால், அரசாங்கத் தரப்பில் உள்ளவர்கள் சுவிஸ் அரசாங்கமும் இணைந்தே இந்தக் குற்றச்சாட்டை வைத்ததாக, சதியில் தொடர்புபட்டுள்ளதாக குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.
பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்து, இலங்கை அரசை நெருக்கடிக்குள்ளாக்கியதால், சுவிஸ் தூதுவர் திருப்பி அழைக்கப்பட்டுள்ளார் என்ற வதந்தியும் பரப்பப்பட்டது.
அதற்குப் பின்னர், தூதரகப் பணியாளர் பொய்யான குற்றச்சாட்டை சுமத்தியதை சுவிஸ் ஏற்றுக்கொண்டு விட்டது என்பது போன்ற மாயையை உருவாக்கவும் முயற்சிக்கப்பட்டது,
ஆனால், சுவிஸ் அரசாங்கமோ, தமது தூதரக அதிகாரியின் மீது இன்னமும் நம்பிக்கை கொண்டுள்ளது என்பதை சுவிஸ் வெளிவிவகாரத் திணைக்களத்தின் அறிக்கைகளில் இருந்து புரிந்து கொள்ள முடிகிறது. அவரை பாதுகாப்பதிலும் உறுதியாகவே இருக்கிறது, இது இலங்கை அரசாங்கத்துக்கு சங்கடத்தை ஏற்படுத்துகிறது.
எது எவ்வாறாயினும், சுவிஸுக்கும் சரி, இலங்கை அரசாங்கத்துக்கும் சரி இது ஒரு கௌரவப் பிரச்சினையாகவே மாறியிருக்கிறது. இந்த இரண்டு தரப்புகளில் ஏதோ ஒரு தரப்பின் நிலைப்பாடு தான் சரியானது. யாரோ ஒருவர் முன்வைக்கும் வாதமும், சாட்சியங்களும் பொய்யானது. அது யார், என்பது தான் சிக்கலான கேள்வி.
சுவிஸ் அரசாங்கம் தமது பணியாளரின் குற்றச்சாட்டு உண்மை என்று முழுமையாக நம்புவதால், அவரைப் பாதுகாக்க வேண்டும் என்று கருதுவதால்- தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறது.
இல்லாவிட்டால் எதிர்காலத்தில் சுவிஸ் மாத்திரமன்றி எந்த நாட்டு இராஜதந்திரிகளையும் நம்ப முடியாத நிலைக்கு பாதிக்கப்பட்டவர்கள் தள்ளப்பட்டு விடுவார்கள்.
அதேவேளை, அரசாங்கமும் இந்த விவகாரத்தில் தமது பக்கத்தில் தவறு இருந்தாலும் அதனை ஒப்புக்கொள்ளாது. ஏனென்றால் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ தொடக்கம் அனைவரும் இதனை பொய் என்றும் சோடிக்கப்பட்ட கதை என்றும் கூறி விட்டார்கள்.
திடீரென அந்த முடிவை மாற்றிக் கொள்ள முடியாது. அவ்வாறு மாற்றிக் கொண்டால் அரசாங்கத்துக்கு கெட்ட பெயர் ஏற்படுவது மாத்திரமே அதற்குள்ள பிரச்சினையல்ல.
இவ்வாறான ஒரு பாரதூரமான குற்றச்சாட்டு வந்த போது, அதனை தீர விசாரிக்காமல் அரசாங்கம் மறைக்க முற்பட்டது, என்ற குற்றச்சாட்டு எழும்.
தூதரக அதிகாரி ஒருவருக்கே இந்த நிலை என்றால் சாதாரண மக்களின் கதி என்னவாக இருக்கும் என்ற கேள்வியும் எழும்.
இவ்வாறான நிலைமைகளை தவிர்க்க, அரசாங்கம் தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்ற பிடிவாதத்தில் இருப்பதை விட வழியில்லை.
அதேவேளை, அமைச்சர்கள் பலரும் சுவிஸ் மீது குற்றச்சாட்டுகளை வீசினாலும், ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ சற்று அடக்கி வாசிக்கவே முனைந்திருக்கிறார்.
குற்றச்சாட்டு வந்த போது அதனை அரசாங்கத்திடம் கொண்டு வந்தது சுவிஸ் தூதரகத்தின் சரியான நடவடிக்கையே என்றும் தமது தூதரக அதிகாரியின் நலனில் அவர்கள் அக்கறை செலுத்தியது தவறில்லை என்றும் அவர் கூறியிருக்கிறார்.
அத்துடன் இந்த விவகாரத்தில் சுவிஸ் தூதரகத்துக்கு தொடர்பில்லை என்றும், வெளிநாட்டுச் செய்தியாளர்களுடன் நடத்திய சந்திப்பில் ஜனாதிபதி கூறியிருக்கிறார்.
இது சுவிஸுடன் எந்த இராஜதந்திர முறுகலும் இல்லை என்று காண்பிக்கின்ற ஒரு முயற்சியாகவே பார்க்கப்படுகிறது. ஆனால் உள்ளுக்குள் அவ்வாறான நிலை இருக்கிறதா என்ற கேள்வி இருக்கிறது.
இத்தகைய நிலையில், இந்த விவகாரத்தில் உண்மை வெளிப்படுமா – இரண்டு நாடுகளும் இந்த சிக்கலை எவ்வாறு தீர்த்துக் கொள்ளப் போகின்றன என்ற கேள்விகளுக்கு இப்போதைக்குப் பதில் கிடைக்கும் போலத் தெரியவில்லை. நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment