மழைக்காற்று -- தொடர்கதை – அங்கம் 16 - முருகபூபதிகற்பகம் ரீச்சர் ஊரிலிருந்து திரும்பி வந்தபோது வாசலுக்கு வந்து வரவேற்றாள் அபிதா. ரீச்சர் முதல் நாள் இரவு யாழ்ப்பாணத்தில் பஸ் ஏறி,  நிகும்பலையில் பெரியமுல்லை சந்தியில்   இறங்கி, ஓட்டோ பிடித்து வந்திருந்தாள்.
புறப்படுவதற்கு முன்னர் அபிதாவுக்குத்தான் கைத்தொலைபேசியில் தொடர்புகொண்டு சொல்லியிருந்தா.
அந்த பஸ் அதிகாலை நான்கு மணிக்கே வந்துவிடும் என்பதை தனது இவ்வூருக்கான முதல் வருகையிலிருந்து  தெரிந்துகொண்ட  அபிதா, தனது தலைமாட்டில் வைத்திருக்கும் ஜீவிகா தந்திருந்த கடிகாரத்தில் அதிகாலை நான்கு மணிக்கு அலாரம் வைத்து துயில் எழுந்திருந்தாள்.
வீட்டு வாசலில் கேட்டின் அருகே  கற்பகம் ரீச்சர் இறங்கியதுமே அபிதாவுக்கு மீண்டும் கோல் எடுத்தமையால், அவள் கதவைத்திறந்துகொண்டு ஓடிவந்து கேட்டைத்திறந்து ரீச்சருடன் வந்த பேக்குகளை தூக்கினாள்.
ரீச்சர், ஓட்டோவுக்கு காசைக்கொடுத்துவிட்டு வந்தா.
 “ என்ன…, இங்கே மழைவிட்டுவிட்டதா அபிதா..? 
 “ ஓம் ரீச்சர். நல்லா மெலிந்துபோனீங்க. இப்போது காய்ச்சல் எப்படி..? வாங்க…. இருங்க…. ரீயா..? கோப்பியா..? என்னவேணும்..?  “ அபிதா ரீச்சரை அன்போடும் அக்கறையோடும் வரவேற்றாள்.
கற்பகம் ரீச்சரின் அறையைத் திறந்து, ரீச்சருடன் வந்திறங்கிய 
பேக்குகளை எடுத்துவைத்தாள்.
   என்ர அறையெல்லாம் க்ளீன் செய்தாயா..? இல்ல,  நான் போனதும் அப்படியே மூடியே வைத்திருந்தாயா..?  “ வந்தவுடனேயே தனது அதிகாரத்தை ரீச்சர் காண்பிக்கத் தொடங்கிவிட்டாள்.
 “ வந்து பாருங்க ரீச்சர்.  அதற்குப்பிறகு சொல்லுங்க. “  என்றாள் அபிதா.
ரீச்சரின் அறை சுத்தமாகவே காட்சியளிக்கிறது. ஊதுவத்தியின் வாசம் அறையில் பரவியிருந்தது. கட்டில் மெத்தையில் அழகான பூக்கள் அச்சிடப்பட்ட படுக்கை விரிப்பும், அதே நிறத்தில் தலையணை உறையுடன் இரண்டு தலையணைகளும் கிடந்தன.
யன்னலுக்கும் வேறு துணி மாற்றியிருந்தாள்.
கற்பகம் ரீச்சர், தான் அதிகாரம் செலுத்திக்கேட்பதற்கு வேறு ஏதும் கேள்விகளை மனதிற்குள் தேடிக்கொண்டிருப்பதை அபிதா தனது உள்மன வாசிப்பினால் புரிந்துகொண்டு,                          “ ரீச்சர்… கொஞ்சநேரம் படுத்து நல்லா ரெஸ்ட் எடுங்க…இன்றைக்கு ஸ்கூலுக்குப்போறீங்களா…?  எனக்கேட்டாள்.
  ஓம்….ஓம்… போகத்தான் வேண்டும் 
சிறிதுநேரத்தில் ரீச்சர் கேட்டிருந்த தேநீரை, அவவுக்குரிய கப்பில் ஊற்றி எடுத்துவந்து நீட்டினாள் அபிதா.
 “ அதில வை. முகம் கழுவிவிட்டு வாரன். “
கூடத்திலிருந்த  டீப்போவில் வைத்துவிட்டு, சமையலறைக்குச்சென்றாள் அபிதா.
கற்பகம் ரீச்சரின் பலமும் பலவீனமும் அவ்வாறு மற்றவர்களிடத்தில், குறிப்பாக வேலைக்காரிகளிடத்தில் அதிகாரம் செலுத்துவதில்தான் தங்கியிருக்கிறது. அவவிடம் குடியிருக்கும் மேட்டிமைப்புத்தி, அங்கிருக்கும் மற்றவர்களிடம் இல்லை என்பது அபிதாவுக்கு பெரிய ஆறுதல்.

குளியலறையிலிருந்து வெளியே வந்த கற்பகம் ரீச்சர், சுவரிலிருந்து  கைகள் இரண்டையும் விரித்தவாறு  ஆசிகூறும் சத்திய சாயிபாபாவை தொட்டு வணங்கிவிட்டு, அபிதா வைத்துச்சென்ற பால் தேநீர் கப்பை எடுத்துக்கொண்டு தனது அறைக்குள் சென்றாள்.
செல்லும்போதும் மற்றும் ஒரு அதிகாரக்கணையை அபிதாவை நோக்கி எய்துவிட்டே சென்றாள்.
 “ அபிதா, பாபா படத்தில் பூச்சரம் காய்ந்துவிட்டது. இன்றைக்கு முதலில் அதனை மாற்றிவிட்டு, அடுத்த வேலையைப்பார்…. என்ன கேட்குதா…? 
 “ ஓம் ரீச்சர் 
 காலை ஆகாரம் தயாரிப்பதா…? அல்லது, இந்த அதிகாலைவேளையே முற்றத்திற்கு குளிரில் சென்று நந்தியாவட்டையும், முல்லையும், கொடி மல்லிகையும் செவ்வரத்தம் பூவும் கொய்துகொண்டு வந்து  பூச்சரம் தொடுப்பதா….? “
பாபாவை வணங்கிய பின்பாவது பேச்சில் கனிவு வரமாட்டாதா..? இவர்களின் நம்பிக்கையும் வெறும் பம்மாத்துதானோ..?!
சரிதான். சுடுதண்ணீ வந்துவிட்டது. இனி கொதித்துக்கொண்டே இருக்கும். சொன்னதை செய்துவிடுவோம். சேலைத்தலைப்பை தலையில் முக்காடிட்டுக்கொண்டு, ஒரு எவர்சில்வர் தட்டம் எடுத்தவாறு வெளிமுற்றத்திற்கு அபிதா வந்தாள்.
எங்கிருந்தோ ஒரு சேவல் கூவியது. காமாச்சோடை பள்ளிவாசலிலிருந்து ஒலிபெருக்கியில் பாங்கோசை கேட்டது. தெருவில் ஓட்டோக்கள் செல்லத் தொடங்கிவிட்டன.
கூடத்திலிருந்து அபிதா பூச்சரம் தொடுத்துக்கொண்டிருந்தபோது, கற்பகம் ரீச்சரின் அறையிலிருந்து குறட்டைச்சத்தம் கேட்டது. யாழ்ப்பாணத்திலிருந்து முதல் நாள் இரவு புறப்பட்ட பஸ்ஸில் கற்பகம் ரீச்சருக்கு பக்கத்தில் அமர்ந்து பயணித்த புண்ணியவான் அல்லது புண்ணியவதி என்ன பாக்கியம் செய்திருக்கலாம்..? என நினைத்ததும் அபிதாவுக்கு மனதிற்குள் சிரிப்பு வந்தது.
   என்ன,  ஜான்ஸிராணி வந்திட்டாங்களா..? “  என மெல்லிய குரலில் கேட்டவாறு வருகிறாள் சுபாஷினி. அபிதா,  “ ஓம்… ஒம்…..வந்ததும் அதிகாரத்தை தொடங்கிவிட்டா.  “ எனச்சொல்லியவாறு கதிரையில் ஏறி பூச்சரத்தை சாயிபாபா படத்திற்கு சூட்டினாள்.
அபிதா சமையலறையில் தனது அன்றாடக்கடமையை செய்துகொண்டிருந்தபோது, ஒவ்வொருவரும் வேலைக்குப்புறப்பட்டனர்.
கற்பகம் ரீச்சர் சற்றுப்பிந்தி எழுந்து, வேலைக்குச்செல்ல தயாரானாள். அன்று அவள் கற்பிக்கும் பாடசாலையில் தமிழ்த்தினவிழா போட்டிக்கு செல்லவிருக்கும் மாணவர்களின் பேச்சுத் திறமையை அவதானிக்கும் நிகழ்ச்சியும் ஒழுங்கு செய்யப்பட்டிருப்பதாக அதிபர் கற்பகத்திடம் ஏற்கனவே சொல்லி வைத்திருந்தமையால், முதல்நாளே புறப்பட்டு நிகும்பலைக்கு அன்று காலை வந்துசேர்ந்திருந்தாள்.
கற்பகம் அன்று அணிந்த மஞ்சள் நிற நைலெக்ஸ் சேலை அழகாக இருக்கிறது என்று அபிதா வர்ணித்ததும், “  பின்னால் வந்து சேலையின் கீழ்க்கரையை சரி செய்துவிடு  “ என்றதும் அபிதா அந்தக்கடமையையும் செய்தாள்.
ரீச்சரின் டிஃபன் பொக்ஸையும் குடை, தண்ணீர்போத்தலையும் எடுத்துக்கொடுத்தாள்.
டிஃபன் பொக்ஸை கையிலெடுத்த ரீச்சர்,  போகும்போது கோயிலுக்கும் போவேன். இதில்  மச்சம், முட்டை ஏதும் இல்லைத்தானே...?   “ எனக்கேட்டாள்.
 “ இல்லை ரீச்சர். எப்படியும் இன்று நீங்க கோயிலுக்குப்போவீங்க என்பது தெரியும். லெமன் ரைஸ், கிழங்குப்பிரட்டல் செய்து வைத்திருக்கிறன். மிச்சம் வைக்காமல் சாப்பிடுங்க.    வாசல் வரையும் வந்து வழியனுப்பி, கேட்டையும் திறந்து மூடினாள்.
நான் கோயிலுக்கு நிச்சயம் போவேன் என்பது இவளுக்கு எப்படித் தெரியும்..?  என்ற யோசனையுடனேயே கற்பம் ரீச்சர் பாடசாலைக்குச் சென்றாள்.
 ‘ புதிய சேலை வாங்கினால் முதலில் அதனை கோயிலுக்கு செல்லும்போதுதான் அணிவேன் ‘  என்று என்றோ ஒரு நாள் அபிதாவிடம் சொன்னதை அப்போது மறந்துவிட்டிருந்தாள்.
பாடசாலைக்கு முன்னாலிருக்கும் கோயிலுக்குச்சென்று,  அரச்சனை  செய்துவிட்டு, வீதியைக்கடக்கும்போது எதிர்ப்பட்ட சக ஆசிரியை மங்களேஸ்வரி,  “ எப்போது வந்தீங்க..?  காய்ச்சல் சுகமா..? எனக்கேட்டவாறு அருகில் வந்து தோளை அணைத்தாள்.
இருவரும் பேசிக்கொண்டு நகர்ந்தனர்.
அதிபரும் இதர ஆசிரியர்களும் கற்பகம் ரீச்சரின் சுகம் விசாரித்தனர். காலை பிரார்த்தனையுடன் பாடசாலை அன்றைய கடமையில்  பரபரப்புடன் மூழ்கியது.
தமிழ்த்தின விழாப்போட்டிக்கு அடுத்த வாரம் செல்லவிருக்கும் மாணவர்களை  பிரதான மண்டபத்திற்கு செல்லுமாறு ஒலிபெருக்கியில் சொல்லப்பட்டது.
வகுப்பறைகளில் கதிரை மேசைகள் நகரும் ஓசைகளோடு சில மாணவர்கள் பிரதான மண்டபத்திற்குள் பிரவேசித்தனர்.
தனக்குத் தரப்பட்ட ஒரு கடமையை சரிவரச்செய்யவில்லையே என்ற குற்றவுணர்வோடு கற்பகம் ரீச்சரும், அதிபர் அறையில் வருகைப்பதிவேட்டில் கையொப்பம் வைத்துவிட்டு, மற்றும் ஒரு ஆசிரியையுடன் சிரித்துப்பேசிக்கொண்டு நகர்ந்து வந்தாள். கற்பகம் அன்று அணிந்து வந்த புதிய நைலெக்ஸ் சாரி அழகாக இருக்கிறது எனவும் சொல்லி, எங்கே வாங்கியது..? எனவும் கேட்டாள்.
அவர்களிடத்திலும் டெங்கு  காய்ச்சலும் அந்த புதிய சாரியும் தான் பேசுபொருளாக இருந்தது. அந்த இளம் ஆசிரியை திடீரென,  “ டெங்கு தொற்று நோயா..?    எனக்கேட்டதும், கற்பம் சற்றுத்திகைத்து சற்று ஒதுங்கி நடந்தாள்.
   இந்த ரீச்சர்மாருக்கு டெங்கு பற்றி இன்னமும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவில்லையா..? டெங்கு காய்ச்சல் வந்தால்தான், அது எவ்வாறு வருகிறது..? என்பது தெரியவருமா…?  சாரி வகைகளைப்  பற்றிய விழிப்புணர்வும் தேவையோ ‘  கற்பகம் யோசித்துக்கொண்டே மண்டபத்திற்குள் வந்து கதிரையை சுவர் ஓரமாக நகர்த்திவைத்து, அதில் அமர்ந்தாள்.
மங்களேஸ்வரி ரீச்சர் சபையில் அமர்ந்திருந்த அதிபரின் அருகில் சென்று சன்னமான குரலில் ஏதோ சொல்லிவிட்டு, மேடைக்கு ஏறினாள்.
முன்பு அந்தவேலைகளைச்செய்த கற்பகம் ரீச்சர் மௌனமாக காட்சிகளை அவதானித்தவாறு, கையோடு எடுத்துவந்த தண்ணீர் போத்தலைத் திறந்து குடித்தாள்.
டெங்கு வந்தால் தண்ணீர்  சுத்தமான தண்ணீர் அடிக்கடி குடிக்கவேண்டும் என்ற ஆலோசனையை பெற்றிருந்ததனால் வந்த தாகம் மட்டுமல்ல, குற்றவுணர்வும் தாகத்தை வருவித்தது.
மங்களேஸ்வரி ரீச்சர் சிறிய வரவேற்புரையை நிகழ்த்திவிட்டு, அதிபரை மேடைக்கு அழைத்தாள்.
தமிழ்த்தின விழா பற்றியும் அது நடத்தப்படுவதன் நோக்கம் பற்றியும், கடந்த வருடங்களில் தமது பாடசாலையிலிருந்து தமிழ்த்தினப்போட்டிக்குச்சென்ற மாணவர்கள் பெற்றுவந்த தங்கப்பதக்கம் சான்றிதழ்கள் பற்றியும் சொல்லிவிட்டு, மாணவர்கள் போட்டிகளை வெற்றி – தோல்விகளிலிருந்து தீர்மானிக்கலாகாது. பேச்சாற்றலை விருத்தி செய்வதற்காகத்தான் இது நடத்தப்படுகிறது என்றும், பரிசுகிடைத்தால் துள்ளிக்குதிக்கவும் வேண்டாம். கிடைக்காவிட்டால் துவண்டுவிடவும் வேண்டாம் எனவும் பேசிவிட்டு வந்து ஆசனத்தில் அமர்ந்தார்.
போட்டிக்குத்தெரிவுசெய்யப்பட்டு, செல்வதற்கு தயாராகியிருக்கும் மாணவர்களின் பெயர்களை சொன்னபோது, கற்பகம் ரீச்சர் மாணவர் பக்கம் திரும்பி அவர்களின் முகங்களை கூர்ந்து கவனித்தாள்.
தான் பேச்சு எழுதித்தருவதாகச்சொன்ன அந்த இரண்டு மாணவர்களையும் அங்கு கண்டாள். முன்னர் சொன்னவாறு எழுதிக்கொடுக்காமலும் பயிற்சி வழங்காமலும் சென்றுவிட்டு, இன்றுதானே திரும்பி வந்திருக்கின்றேன். யார் இவர்களுக்கு எழுதிக்கொடுத்திருப்பார்கள்…?  சிலவேளை மங்களேஸ்வரி எழுதிக்கொடுத்திருப்பாளாக்கும்..!
அந்த மாணவர்கள் பின்வரிசையில் இருந்தனர். மங்களேஸ்வரி ரீச்சர் ஒவ்வொரு மாணவராக மேடைக்கு அழைத்தாள்.
வந்த மாணவர்கள் பேசியபோது, அதில் உச்சரிப்பு - ஏற்ற இறக்கம், முகபாவனை மேடைப்பண்பு பற்றியெல்லாம் அதிபர் திருத்தங்கள் சொல்லிக்கொடுத்தார்.
இறுதியாக  அடுத்தடுத்து இரண்டு மாணவர்களை மங்களேஸ்வரி மேடைக்கு அழைத்தாள். ஏற்கனவே அவர்கள் இருவரதும் பேச்சையும்  கேட்டிருக்கும்  அவள்,  காகிதத்தில் அழகான கையொழுத்தில் எழுதப்பட்டிருந்த உரையையும் வாசித்துப்பார்த்திருந்தமையால், இறுதியாக அவர்கள் இருவரையும் மேடையில் ஏற்றும் முன்னேற்பாட்டு திட்டத்துடன்தான் இருந்தாள்.
வயது குறைந்த கீழ்ப்பிரிவு மாணவனும் வயது கூடிய மேற்பிரிவு மாணவனும் மேடையேறி அபிதா எழுதிக்கொடுத்த உரையை அழகாக அழுத்தம் திருத்தமாகப்பேசினர்.  அபிதா வழங்கிய பயிற்சியும்  கைகொடுத்தது. அரங்கத்தில் கரகோஷம் எழுந்தது.
அதிபருக்கு சுட்டிக்காண்பிக்கத்தக்க தவறேதும் அந்த உரைகளிலோ பேசிய தோரணையிலோ தென்படவில்லை.  மங்களேஸ்வரியின் பயிற்சிதானாக்கும். அதனால்தான் இறுதியாக இம்மாணவர்களை அழைத்திருக்கவேண்டும் என்று அதிபர் மட்டுமல்ல,  கற்பகம் ரீச்சரும் மனதிற்குள்  நினைத்துக்கொண்டார்கள்.
அதிபர் அம்மாணவர்கள் இருவரையும் அருகில் அழைத்து முதுகில் தட்டி உற்சாகப்படுத்தினார். கற்பகம் ரீச்சரும் எழுந்து வந்து அம்மாணவர்களின் தலைகளைத் தடவிவிட்டு, அதிபர் பக்கம் திரும்பி,  “ சேர்… நான்தான் எழுதிக்கொடுத்து பயிற்சி தருவதாகச் சொல்லியிருந்தேன். ஊருக்குப்போன இடத்தில் டெங்கு வந்து வரமுடியாமல் போய்விட்டது. நல்லவேளை…இது மங்களேஸ் மிஸ்தான் எழுதிக்கொடுத்து பழக்கியிருப்பா என நினைக்கின்றேன்.. “ என்றாள்.
சற்றும் தாமதியாமல் அந்த இரண்டு மாணவர்களும் ஏக குரலில்,   “ இல்லை சேர்…. இந்த மிஸ் இருக்கும் வீட்டிலிருக்கும் ஒரு அன்ரிதான் எழுதித்தந்தாங்க.  “ என்றார்கள்.
வயதால் கூடிய மாணவன்  “ அவுங்க  நல்ல அன்ரி. தினமும் ஸ்கூல்விட்டு வந்ததும் அங்கே போனோம். தினமும் பயிற்சி தந்தாங்க. எங்கட பேச்சு நல்லா இருந்துதா சேர்.  தங்கப்பதக்கம் கிடைக்கும்தானே..?  “ என்றான்.
 “ அன்ரியா…?  “ கற்பகம் ரீச்சரின் வாய் அவள்  அறியாமலே பிளந்தது.
அதிபரும் வியப்புடன் மாணவர்களையும் கற்பகம் ரீச்சரையும் மாறி மாறி பார்த்தார்.
கற்பகத்தின் மனதில் யார் அந்த அன்ரி..? ஜீவிகாவா..? சுபாஷினியா..? மஞ்சுளாவா..?  மூவர் பெயர்களும் ஓடிக்கொண்டிருந்தன.
(தொடரும் )-->No comments: