முருகபூபதியின் “ இலங்கையில் பாரதி “ இலங்கையர்கள் எவ்வாறு பாரதியைக் கொண்டாடினார்கள் ?

( கொழும்பு தமிழ்ச்சங்கம் வினோதன் மண்டபத்தில் ஞானம் ஆசிரியர் தி. ஞானசேகரன் நிகழ்த்திய மதிப்பீட்டுரை)  
பாரதிதான்    முதன்முதலில்   சாதாரண     மக்களின்   சமூக வாழ்வை கவிதையில் பாடு பொருளாக்கியவன்.    அதற்கு முன்னர் கவிதை நிலப்பிரபுத்துவ    வாழ்க்கையை உள்ளடக்கமாகக்   கொண்டிருந்தது.  சமயச் சார்புடையதாக இருந்தது.
பாரதிதான் அரசியல் சமூக வாழ்வைக் கவிதையில் கொண்டுவந்தவன்.   “ எளிய பதங்கள்,    எளிய நடை,     எளிதில் அறிந்து     கொள்ளக்கூடிய   சந்தம்,   பொதுஜனங்கள் விரும்பும் மெட்டு    இவற்றினையுடைய   காவியம்    ஒன்று     தற்காலத்திலே செய்து தருவோன்    நம் தாய் மொழிக்கு புதிய உயிர் தருவோன் ஆகிறான் "   என்று கூறியவன் பாரதி.
எனவே இலக்கியத்தில் நவீனத்தை புகுத்தியவன் பாரதி. அதாவது நவீனத்தை பாடு பொருளிலும் எடுத்துரைப்பு முறையிலும் புகுத்தி புதுமை செய்தவன் பாரதி.  இலக்கியத்தில்   திருப்பு முனையை ஏற்படுத்தியவன் பாரதி.   அவன் காட்டிய வழியில் புதிய யுகத்திற்குள்   படைப்பாளிகள்   புகுந்தனர்.
இந்தப்பின்னணிகளுடன் முருகபூபதி  எழுதியிருக்கும்   புதிய நூல்  இலங்கையில் பாரதி.   பாரதி ஏற்படுத்திய தாக்கம் எத்தகையது? பாரதியை இலங்கையர்களாகிய நாம் எவ்வாறு கொண்டாடுகிறோம் என்பதை  இந்நூல்  விரிவாகப் பேசுகிறது.
பாரதி  பற்றிய பல நூல்கள் ஈழத்திலே வெளிவந்துள்ளன.                                 ந. இரவீந்திரன் எழுதிய பாரதியின் மெய்ஞ்ஞானம், இளங்கீரனின் பாரதிகண்ட சமுதாயம்,  அமிர்தநாதர் தொகுத்த பாரதி தரிசனம், பேராசிரியர் க. அருணாசலம் எழுதிய பாரதியார் சிந்தனைகள், எஸ். எம். ஹனிபா எழுதிய மகாகவி பாரதி, பேராசிரியர் கைலாசபதி எழுதிய இரு மகாகவிகள்,  பேராசிரியர் தில்லைநாதன் எழுதிய வள்ளுவன் முதல் பாரதிதாசன் வரை, க.த. ஞானப்பிரகாசம் எழுதிய பாரதி பிள்ளைத்தமிழ், சொக்கன் எழுதிய பாரதியின் சக்திப் பாடல்கள்,  பேராசிரியை  சித்திரலேகா எழுதிய பாரதியின் பெண்விடுதலை,  அகளங்கள் எழுதிய பாரதியின் பாஞ்சாலி சபதம்,  மனோன்மணி சண்முகதாஸ் எழுதிய பாரதியின் கன்னிக்குயிலின் இன்னிசைப்பாட்டு, தாழை செல்வநாயகம் எழுதிய ஈழம் வருகிறான் பாரதி  முதலான பல நூல்கள் இலங்கையில்  ஏற்கனவே வந்துள்ளன.
நான் மேலே குறிப்பிட்ட நூல்கள் யாவும் பாரதியின் படைப்புகளை வெவ்வேறு கோணங்களில் அணுகியிருக்கின்றன. மேற்குறிப்பிட்ட நூல்களிலிருந்து முருகபூபதியின் இந்த நூல் எவ்வாறு வேறுபடுகிறது என்று பார்ப்போமானால், பாரதி இலங்கையில் எவ்வாறு முக்கியப்படுத்தப்பட்டான்?,    இலங்கையர்கள் எவ்வாறு பாரதியைக்    கொண்டாடினார்கள்?   பாரதியின் புகழ்பரப்புவதில் எவ்வாறு பங்களிப்புச்   செய்தார்கள், பாரதியை இளந்தலை முறையினருக்கு    எவ்வாறு கொண்டு சென்றார்கள் என்பது   பற்றி இந்த   நூல்    ஆராய்கிறது.

 உதாரணத்துக்குக்    கூறுவதானால் இலங்கையில் பாரதி பெயரில் தலவாக்கலை,    பதுளை    ஆகிய இடங்களில் பாடசாலைகள் அமைந்துள்ளன.     பாரதி     பெயரில்    சஞ்சிகைகள் வெளியாகியுள்ளன.     பாரதி கழகங்கள்   அமைந்துள்ளன.    பாரதி பெயரில்    விழாக்கள் இடம் பெற்றுள்ளன.    பாரதி பெயரில் சிறப்பு மலர்கள் வெளியாகியுள்ளன.  பத்திரிகைகள் எவ்வாறு பாரதியைக் கொண்டாடுவதில் பங்களித்தன,     திரைப்படங்கள் தொலைக்காட்சிகளில்    பாரதி    எவ்வாறு காட்சிப்படுத்தப்பட்டான்? பாரதியின்     பாடல்கள் எங்கெல்லாம் இடம் பெறுகின்றன? பாரதியின்    தமிழ்வாழ்த்து,   விழாக்களிலே பாடப்படுவதன் முக்கியத்துவம். போன்ற பல்வேறு   விடயங்களை இந்நூல்   பதிவு செய்துள்ளது.
இந்த வெளியீட்டு அரங்கிலே  எனது பணி,   பத்திரிகைகளிலே - இதழியலியலிலே,  பாரதியின் தாக்கம் எவ்வாறு இருந்தது என்பது பற்றி இந்நூலில் காணப்படுகின்ற  விடயங்கள் தொடர்பான  கருத்துரையை  பகிர்வதாக அமையும்.
முதலில்  இலங்கைப் பத்திரிகைகள் எவ்வாறு  பாரதி இயலை முன் னெடுத்தன எனப் பார்ப்போம்.
 வ. ரா. ---  இவர் 1935  இல் இலங்கை வந்து வீரகேசரி பத்திரிகையில் பணியாற்றியவர்.  புதுச்சேரியில் பாரதியார் இருந்தபொழுது பாரதியாரைச் சந்தித்தவர். பாரதியாரைத் தமது குருவாக ஏற்றுக் கொண்டவர்.  1911 முதல் 1914 ஜனவரி வரை புதுவையில் பாரதியாருடன் தங்கியிருந்தவர், அவருக்குச் சேவை செய்தவர். பாரதி பற்றிய சரிதத்தை எழுதியவர்.  1930  இல் உப்புச் சத்தியாக்கிரகத்தில் பங்குபற்றி சிறை சென்றவர். இவரும் ஒரு பார்ப்பனர். பாரதியின் சொற்படி சாதியின் அடையாளமான பூணூலை  கழற்றிவிட்டவர்.  பாரதியாரால்  
 “ உரைநடைக்கு வ. ரா. “   என்று போற்றப்பட்டவர்.
 இவர் வீரகேசரியில் இருந்த காலத்தில் பாரதியின் கருத்துக்களை வீரகேசரி பத்திகையூடாகப் பரப்பியவர்.   இவர் இலங்கையில் இருந்த காலத்தில் பல இடங்களிலும் விழாக்களில் பேசும் போதெல்லாம்  பாரதி பற்றி பேசியுள்ளார்.  பாரதி புகழ் பரப்பியுள்ளார் என அறிய முடிகிறது. பாரதியின் நண்பர் வ. ரா வீரகேசரியில் ஆசிரியராக அமர்ந்த காலம் முதல் இன்று வரையில் பாரதி தொடர்பான படைப்புகளுக்கும் விவாதங்களுக்கும் வீரகேசரி களம் அமைத்து வருகிறது. பாரதி நூற்றாண்டு காலப்பகுதியிலும் வீரகேசரியில் பலர் பாரதி பற்றி கட்டுரைகள் கவிதைகள் எழுதியுள்ளனர்.
வீரகேசரி குழுமத்தின் மற்றும் ஒரு வெளியீடான மித்திரன், பாரதி நூற்றாண்டை முன்னிட்டு சம்பிரதாய பூர்வமான ஒரு சிறுகதைப் போட்டியை  நடத்தியிருக்கிறது. அந்தப் போட்டிக்கான தலைப்புகளாக சாதிகள் இல்லையடி பாப்பா, உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம், நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட  பார்வை முதலிய பாரதியின் வரிகளே  போட்டித் தலைப்புகளாக அமைந்தன.
அடுத்து தினகரன் பத்திரிகையை எடுத்துக் கொண்டால், அதன் ஆசிரியராக இருந்த சிவகுருநாதன்,  தினகரனில் பல சந்தர்ப்பங்கங்களில் பாரதி தொடர்பான ஆசிரியத் தலையங்கங்கள் எழுதியுள்ளார். தினகரன் வார மஞ்சரியும் காலத்துக்குக் காலம் பாரதி ஆய்வுகனை வெளியிட்டும் மறுபிரசுரம் செய்தும் வந்திருக்கிறது. பேராசிரியர் கைலாசபதி எழுதிய பாரதியின் புரட்சி  என்ற கட்டுரை தினகரன் வாரமஞ்சரியில் அவர் மறைவதற்கு முதல்நாள் வெளிவரச் செய்தவர் சிவகுருநாதன்.
அடுத்து, பாத்திரிகை உலகில் ஜாம்பவான் என்று போற்றப்பட்ட எஸ். டி சிவநாயகம். சிந்தாமணியில் அவர்    “ நான் கண்ட பாரதி"  என்ற தொடரை  எழுதினார். இதுவரையில் அந்தத்தொடர் நூல்வடிவம் பெறவில்லை என அறிய முடிகிறது.
1926  இல் ஈழகேசரி பத்திரிகை வெளிவந்தது. ஈழகேசரி இதழில் வெளியிடப்பட்ட பாரதி பாடல்களையும்    ஏனைய    செய்திகளையும்     ஒருங்கு   நோக்கினால்,   அதன் ஆசிரியர் நா. பொன்னையா,    சுதந்திர இயக்கத்திலும் மகாத்மா காந்தியிலும் பாரதியிலும் பற்றுடையவரென்பதும் தரமான  இலக்கிய வளர்ச்சியை   விரும்பியவர் என்பதும் புலனாகும்  என பேராசிரியர்  சி. தில்லைநாதன் பாரதி பன்முகப்பார்வை  என்ற நூலில் பதிவு செய்துள்ளார்.
 ஈழகேசரி பத்திரிகையில், பாரதி நூல்களை தனலக்குமி புத்தகசாலையில் பெறலாம் என்ற விளம்பரமும் இருந்தது என அறிய முடிகிறது.   ஈழசேரியில் ஆசிரியர்களாகப் பணியாற்றிய நா. பொன்னையா,   சோ. சிவபாதசுந்தரம்,   இராஜ அரியரத்தினம் ஆகியோர்  1930 -1958   காலப்பகுதியில் ஈழகேசரி பத்திரிகையூடாக பாரதியின் பாடல்களையும் சிந்தனைகளையும் இலங்கையில் குறிப்பாக வடபுலத்தில்  பரவச் செய்த முன்னோடிகளாவார்கள். இவர்களில்   ஒருவரான சோ. சிவபாதசுந்தரம் அவர்கள்தான் இன்றும் நாம் கேட்டு   மகிழும்  லண்டன் பி.பி.சி. ஒலிபரப்பிற்கு  தமிழோசை என்ற பெயர் சூட்டியவர்.  பாரதியின் பாடல்வரிகளான  “ தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும் " என்ற பாடல்வரிகளிலிருந்து பிறந்ததுதான் இந்தத் தேமதுரத் தமிழோசை.
இந்த அரிய பல தகவல்களை முருகபூபதி,  இந்த நூலில் வரிசைக்கிரமமாக தொகுத்துள்ளார்.
ஈழநாடு பத்திரிகை யாழ். மண்ணில் தோன்றியது முதல் அஸ்தமிக்கும்  வரையில்  பாரதியின்  சிந்தனைத் தாக்கத்துடன் வெளிவந்தமைக்கு   அங்கிருந்த சமூக, அரசியல், பொருளாதாரக் காரணிகளும்    முக்கியமானவை.  இலங்கை  அரசியலில்  தமிழ்த் தலைவர்களால்   யாழ்ப்பாணத்தில் 1961ஆம்  ஆண்டில்  நடத்தப்பட்ட   சத்தியாக்கிரகப் போராட்டம்  வரலாற்று    முக்கியத்துவம்  வாய்ந்தது.    குறிப்பிட்ட     சத்தியாக்கிரகத்தை    உடனுக்குடன்    மக்களிடம்    எடுத்துச் சென்ற முக்கிய பத்திரிகையாக   ஈழநாடு திகழ்ந்தது  என்ற   தகவலும்  இந்நூலில் இடம்பெறுகிறது.
மலையகத்தில் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்திய தேசபக்தன் நடேசையர்,   அவரது  மனைவி மீனாட்சி அம்மாள்  ஆகியோர் மலையகத் தோட்டப் புறமெங்கும் பாரதியின் எழுச்சிமிக்க பாடல்களை பாடியிருக்கிறார்கள். துண்டுப்பிரசுரங்கள் ஊடாகவும் தேசபக்தன் பத்திரிகை வாயிலாகவும் பாரதியின் விழிப்புணர்வுச் சிந்தனைகளைப்  பரப்பியிருக்கிறார்கள்.
குறிப்பிட்ட   இந்தச் செய்திகளையும் முருகபூபதி  இந்நூலில் பதிவுசெய்கிறார்.
இலங்கையில் பாரதி புகழைப் பரப்பியவர்களில் முக்கியமானவர்கள்    மூவர்   பற்றியும்   இந்நூலில்  பேசப்படுகிறது.  அதில்    ஒருவர்   சுவாமி விபுலானந்தர்.   இவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில்   முதற் தமிழ்ப்பேராசிரியர் என்ற பெருமைக்குரியவர்.    1931   முதல்   1933   வரை   அங்கு பேராசிரியராக    இருந்தவர்.      அக்காலத்தில் தமிழகத்தில் பாரதியை    எவரும் கவிஞனாக ஏற்றுக் கொள்ளவில்லை.     அதற்குக் காரணம்     பாரதி   ஒரு பார்ப்பன    சமூகத்தைச் சேர்ந்தவன் என்பதாகும்.       அவன்     சாதிகள் இல்லையடி பாப்பா    என்று பாடியவன்,       அடிநிலைச் சாதியைச் சேர்ந்த ஒருவனுக்கு  பூணூல் அணிவித்து   அவனை   பிராமணன்    என்று     கூறும்படி செய்தவன். பிராமணன்    மீசை    வைப்பதில்லை.  பாரதி     பெரிய    முறுக்கு மீசை     வைத்திருந்தான்.      தனியொருவனுக்கு உணவில்லையெனில்     ஜகத்தினை அழித்திடுவோம்    என சமதர்மம்    பேசியவன்.      இவையெல்லாம்    இருந்த போதிலும் பாரதி   ஒரு பார்ப்பன  குலத்தில் பிறந்தவன் என்ற    காரணத்தினால் அவனை      ஒதுக்கினார்கள்.     அவனைக் கண்டு கொள்ளாமல் விட்டார்கள்.
அந்தக் காலகட்டத்திலேதான், அந்தச் சூழ்நிலையிலேதான் சுவாமி விபுலானந்தர்   அங்கு    பேராசிரியராகச் சென்றார்.    அங்கு   1932  இல் Bharathi Study Circle  என்னும் அமைப்பை பல்கலைக்கழகத்தில் நிறுவினார்.
அத்துடன் அண்ணாமலைப் பல்கலைக்கழக வெளியீடுகளிலும் பாரதிபற்றி ஆங்கிலத்தில் கட்டுரைகள் எழுதினார் என பெ.சு. மணி தான் எழுதிய சுவாமி விபுலானந்தர் என்ற நூலிலே குறிப்பிட்டுள்ளதையும்  முருகபூபதி சுட்டிக்காண்பிக்கின்றார். 
 விபுலானந்தர் பணிபற்றி மேலும் சில தகவல்கள் உள்ளன. விபுலானந்தர் முத்தமிழ் வித்தகர். பாரதி கழகம்  என்ற  சங்கத்தை அண்ணாமலையில்  தோற்றுவித்தவர் .   பாரதியின் பெயரில் முதலாவது நிறுவன அமைப்பைத் தோற்றுவித்தவர் இவரே. இசை வல்லுனர்களைக்    கொண்டு   பாரதியின் பாடல்களுக்கு இசை அமைத்தார்.    அவற்றை எல்லா இடங்களிலும் இசையுடன் பாடச் செய்தார்.  அதன் பின்னர்  பாரதியின் பாடல்களும் அவரது புகழும் தமிழகமெங்கும் பரவின.   பாமரமக்களிடமும்  சென்றடைந்தன.
அத்தோடு   அவர் பேராசிரியராகவும் பரீட்சகராகவும் இருந்தபடியால்     பல்கலைக் கழக    மாணவர்களுக்கு பாரதி பாடல்களை    ஆய்வுப் பொருளாக்கினார்.  இலங்கையில் அவர் பாடசாலைகளில்   பாரதி  பாடல்கள் சிலவற்றை தேர்ந்தெடுத்து முதலாம்    வகுப்பு    முதல் எட்டாம் வகுப்பு வரை போதிக்க வழி செய்தார்.     முதன் முதலில் பாரதிக்கு ஒரு அங்கீகாரத்தை தமிழகத்தில்   ஏற்படுத்திய பெருமை சுவாமி விபுலானந்தரையே சாரும்.     அதன்பின்னர் 1943 முதல் இலங்கைப் பல்கலைக் கழகத்தின் முதலாவது பேராசிரியரானார். இங்கும் பாரதி புகழ்பரப்புவதில்   முன்னின்று    செயற்பட்டார்.
முருகபூபதியின்  இந்த  ஆய்வு நூலின் தலைப்பு பற்றியும்  கூறவேண்டும்.
நான்    முன்னர் குறிப்பிட்ட நூல்களின் வரிசையில்  , ஈழம் வருகிறான் பாரதி   என்ற நூலை    தாழை செல்வநாயகம் எழுதியதாகக் குறிப்பிட்டேன்.    முருகபூபதி   இலங்கையில் பாரதி எனக்    குறிப்பிடுகிறார்.   ஈழம்,   இலங்கை    என    இரண்டு வேறுபட்ட    சொற்களால்   தலைப்பிடப்பட்டதைப்   பார்க்கிறோம்.
ஈழம்   என்பதே முதலில் தோன்றிய சொல்லாக இருக்க வேண்டும். சங்க    இலக்கியத்திலே    ஈழத்து பூதந்தேவனாரைப்   பார்க்கிறோம்.  முதற் சங்க இலக்கியங்களில்    ஒன்றான பட்டினப்பாலையில், ஈழத்துணவும்   காழகத்தாக்கமும்   என்று குறிப்பிடப்பட்டுள்து. சிலப்பதிகாரத்திலேதான் முதன்  முதலில் இலங்கை என்ற சொல் வருவதைக்காண்கிறோம் .  கடல்சூழ் இலங்கைக் கயவாகு மன்னனைப் பார்க்கிறோம்.    எனவே    இரண்டு சொற்பிரயோகங்களும் சரியானதுதான்.  ஆனால்,  ஈழம் என்ற சொல்லே பழமையானது.  கிறிஸ்துவுக்கு முற்பட்டது.   ஈழப்போர் இலங்கையில் ஏற்பட்டபின்னர் ஈழம் என்ற சொல்லை  பாவிப்பதற்கு ஒரு மனத்தடையை     பலரும்    வகுத்துக்கொண்டார்கள்.
இனி,   இந்த நூலில்  சொல்லப்படும்   சிற்றிதழ்களில் பாரதியின் தாக்கம் பற்றிப் பார்க்கலாம்.   1946    ஜனவரியில்   வெளியான    பாரதி இதழ் தமிழ் மொழிக்குப் புதுமைப் போக்களித்த பாரதியின் பெயர் தாங்கி வந்தது.    இதன் ஆசிரியர்களாக கே. கணேஷ்,  கே.ராமநாதன் ஆகியேர் விளங்கினர்.   இலங்கையின் முதன் முதலில் வெளிவந்த சிற்றிதழ் பாரதியின் பெயரைத் தாங்கி வந்தது கவனத்துக்கு உரியது.
அதே போன்று கிழக்கு இலங்கையில் இருந்தும் பாரதி என்ற பெயரில்  ஒரு சிற்றிதழ் வெளியாகியுள்ளது.  1948  இல் வெளிவரத் தொடங்கிய இதழ் ,  36   இதழ்களுடன் தனது பயணத்தை முடித்துக் கொண்டது.    பண்டிதர் ம.நாகலிங்கம்,     கு. தட்சணாமூர்த்தி, த.சபரத்தினம்     ஆகியோர்    இதன்    கூட்டாசிரியர்களாக இருந்துள்ளனர்.
கிழக்கு இலங்கையில் இருந்து தாரகை என்னும் இதழ் வெளியானது. பாரதி நூற்றாண்டு காலத்தில் தாரகை சிறப்பிதழ் வெளியிட்டுள்ளது.
1971   முதல் வெளிவந்த குமரன் இதழுக்கு செ. கணேசலிங்கன் ஆசிரியராக இருந்தார்.    கைலாசபதியின் பாரதி தொடர்பான பார்வைக்கும்    கணேசலிங்கனின்    பார்வைக்கும்    மார்க்சிய வெளிச்சத்திலேயே   வேறுபாடுகள் இருந்தன. அதன் எதிரொலியை குமரன் இதழ்களிலும்   பார்க்க முடிந்தது.    குமரன்  60    இதழ்களுடன் தனது பயணத்தை முடித்துக் கொண்டது.    குமரன் இதழில் வெளியான ஆய்வுகள் பாரதியைக் கேள்விக்கு உட்படுத்தின. மறுவாசிப்புச் செய்யத்தூண்டின என்பதையும் முருகபூபதி இந்நூலில் பதிவுசெய்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இயங்கிய தேசிய கலை இலக்கியப் பேரவையினால் வெளியிடப்பட்ட சிற்றேடு தாயகம். இதன் ஆசிரியர் க. தணிகாசலம். 1983 ஏப்ரல் இதழில் இருந்து தொடர்ச்சியாக பாரதி பற்றிய ஆய்வரங்குக் கட்டுரைகள் இதில் வெளிவந்துள்ளன. இக்கட்டுரைகள்  தொகுக்கப்பட்டு 1984  ஆம் ஆண்டில்  “ பாரதி பன்முகப்பார்வை  என்ற பெயரில் வெளிவந்தது.
1975   ஆம்    ஆண்டு  உருவான  அலை  இலக்கிய வட்டத்தின் காலாண்டு   இதழ் அலை.  ஆசிரியர் குழுவிலும் இடம்பெற்று அதன் நிருவாக    ஆசிரியராகவும்    இருந்தவர் அ. யேசுராசா.    பாரதி பற்றிய உண்மைகளைத் தெரிவிப்பதிலும் பாரதியை இனங்காண முயல்வோரை இனம் காண்பதிலும் அலை தீவிரம் காண்பித்தது.
அலையின் 22ஆவது இதழ் பீக்கிங்சார்பு பத்திரிகையான செம்பதாகை 11 ஆவது இதழில் பதிவு செய்திருந்த கட்டுரை ஒன்றை தேவை கருதி மறுபிரசுரம் செய்தது.    அக்கட்டுரையின் தலைப்பு 'பாரதி பற்றிய சில மதிப்பீடுகள்"   என்பதாகும். பாரதிபற்றி கற்க முனைபவர்கள் பாரதி மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் சரியானவையா?  பிழையானவையா?   என்பதை அறிய முனைபவர்கள் அவசியம் படிக்க வேண்டிய கட்டுரை இது என்ற குறிப்பும்   முருகபூபதியின்  நூலில்  காணப்படுகிறது.

( தொடரும் )

-->




No comments: