பலாலியில் வெற்றிகரமாகத் தரையிறங்கிய முதலாவது இந்திய விமானம்
தமிழ் கட்சிகளின் இணக்கப்பாடு குறித்து சுமந்திரன், சுரேஷ் தெரிவிப்பது என்ன ?
5 தமிழ் கட்சிகள் கையொப்பமிட்டு பொது இணக்கப்பாடு ; சஜித், கோத்தாவிடம் முன்வைக்கவுள்ள ஆவணம் இதுதான்
இலங்கை – இந்திய உறவு வானத்தை தொட்டுவிட்டது - இந்திய உயர்ஸ்தானிகர்
பிரிகேடியர் பிரியங்கர பெர்ணான்டோவின் மரண அச்சுறுத்தல் விவகாரம்- இன்று மீண்டும் நீதிமன்றில்
யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் தெரிவு இடைநிறுத்தம்
யாழ். விமானநிலைய பெயர்ப்பலகை விவகாரம்: இனவாதத்தை தூண்டும் வகையிலான செய்திகள் கண்டனத்திற்குரியவை - ரஞ்சன்
பலாலியில் வெற்றிகரமாகத் தரையிறங்கிய முதலாவது இந்திய விமானம்
15/10/2019 யாழ்ப்பாணம்- சா்வதேச விமான நிலையத்தில் இந்திய தொழிநுட்ப அதிகாரிகள் குழுவுடன் இந்தியாவின் எயா் இந்தியா அலைன்ஸ் விமானம் இன்று பலாலியில் தரையிறங்கியது.
இதேவேளை 17 ஆம் திகதி விமான நிலைய திறப்பு விழாவுக்கான மேடை அமைக்கும் பணிகளும் இடம்பெற்று வருகின்றன.
நன்றி வீரகேசரி
25/10/2019 ஐனாதிபதித் தேர்தல் தொடர்பில் ஆறு தமிழ் கட்சிகளும் இணைந்ததாகத் தீர்மானமொன்றை எடுப்பதற்காகவே பல விட்டுக் கொடுப்புக்களுடன் பல மணி நேரம் பேசியிருக்கின்றோம் என எம்.ஏ.சுமந்திரன்,சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
ஆனாலும் இதற்கும் மேலாக ஒரு விடயத்தை உள்ளீர்க்க வேண்டுமெனத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கோரியிருந்த போதிலும் அந்தக் கோரிக்கை ஏற்கப்படாத நிலையிலேயே இந்த ஆவணத்தில் அவர்கள் ஒப்பமிடாமல் வெளியேறியிருக்கிறார்கள். ஆகவே அவர்களை யாரும் வெளியேற்றவில்லை என எம்.ஏ.சுமந்திரன்,சுரேஸ்பிரேமச்சந்திரன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒருமித்த நிலைப்பாட்டை எடுக்கும் கலந்துரையாடலின் பின்னர் அவ்வாறு ஐந்து கட்சிகள் இணைந்து எடுத்த நிலைப்பாடு தொடர்பாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச் சந்திரன் இணைந்து ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்டனர்.
இதன்போது கருத்துத் தெரிவித்த எம்.ஏ.சுமந்திரன்,
நடைபெறவுள்ள ஐனாதிபதித் தேர்தலிலே போட்டியிடும் வேட்பாளர்களுக்கும் அவர்களுடைய அரசியல் கட்சிகளுக்கும் தமிழ் மக்கள் சார்பாகக் குறித்த பொதுவான நிலைப்பாடொன்றை முன்வைக்க வேண்டுமென்கின்ற முயற்சியைப் பல்கலைக்கழக மாணவர்கள் எடுத்திருந்தார்கள். அதற்காக ஆறு தமிழ்க் கட்சிகளை அழைத்திருந்தார்கள்.
இந்தக் கட்சிகளுக்கிடையில் நான்கு அல்லது ஐந்த தடவைகள் இந்தச் சந்திப்புக்கள் இடம்பெற்றிருந்தன.
இன்றைக்கு அதிலே கணிசமான அளவு அது வெற்றியிலேயே முடிந்திருக்கிறது. அதாவது இந்த ஆறு கட்சிகளிலே ஐந்து கட்சிகள் இணைந்து நிலைப்பாடொன்றை ஒற்றுமையாக எடுத்திருக்கிறோம். நீண்ட உரையாடல்களுக்குப் பின்னர் இந்த நிலைப்பாடு எடுக்கப்பட்டிருக்கிறது.
இதனை நாங்கள் பிரதான வேட்பாளர்கள் அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்துகிற கட்சிகள் முன்பாக வைத்து இது தமிழ் மக்களுடைய ஏகோபித்த நிலைப்பாடு என்று சொல்லக் கூடிய ஒரு சூழ்நிலை உருவாகியிருக்கிறது.
ஆகையினாலே இதையொரு பாரிய வெற்றியாக நாங்கள் கணிக்கிறோம். அத்தோடு, பல்கலைக்கழக மாணவர்களுக்கு எங்களுடைய நன்றிகளை நாங்கள் தெரிவித்துக் கொள்கிறோம்.
அப்படி இந்தக் கோரிக்கைகள் ஏற்கப்படாதவிடத்து என ஊடகவியலாளர்கள் கேட்ட போது. நாங்கள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு தான் அதைப்பற்றி நாங்கள் தீர்மானிக்கலாம் இப்பவே இப்படி நடந்தால் அப்படி நடந்தால் என்னவென்று தீர்மானங்களை இப்பொழுது எடுக்க முடியாது. ஆனால் ஒரு தீர்மானத்தை எடுத்திருக்கிறோம்.
இந்தப் பேச்சுவார்த்தைகளுடைய பிரதிபலிப்புக்கள் அல்லது அதற்குப் பிறகு வருகிற விடயங்கள் என அவை தொடர்பில் இந்த ஐந்து கட்சிகளும் இணைந்து அப்பொழுது தீர்மானங்களை நாங்கள் எடுப்பதெனத் தீர்மானித்துள்ளோம்.
நாட்டில் புதிதாக உருவாக்க முனைந்த ஒற்றையாட்சி அரசியலமைப்பின் படி தான் நாங்கள் தொடர்ந்தும் பேச வேண்டுமென்தால் அதனைக் கைவிட வேண்டுமென்றே படியாலே நாங்கள் வெளியேற்றப்பட்டோம் அப்படி இல்லை.
இந்த ஆவணத்திலே தெளிவாக நாங்கள் ஒற்றையாட்சியை நிராகரிக்கிறோம் என்று சொல்லியிருக் கிறோம் அதிலே எந்தவிதமான மயக்கமும் இல்லை. எந்தவிதமான சந்தேகமும் இருப்பதற்கு இடமில்லை.
ஆகையினால் தான் நாங்கள் அதிலே உறுதியாக இருந்தோம். எங்கள் மனதிலே அதைக் குறித்து எந்தவிதமான சந்தேகமும் இருந்திருக்கவில்லை.
குறித்த ஒரு சில ஆவணங்களை முதன்மைப்படுத்தி அதை நிராகரிக்க வேண்டுமென்று சொல்லுவது பொருத்தமற்றது.
அது நாங்கள் செய்கிற இந்த முயற்சிக்கும் சம்மந்தப்படாத ஒரு விடயமாகத் தான் நாங்கள் அதனைப் பார்த்தோம். ஆகையினால் ஒற்றையாட்சி அரசியலமைப்பிற்கு நாங்கள் இணங்கமாட்டோம் என்பது தெட்டத் தெளிவாக இந்த ஆவணத்திலே சொல்லப்பட்டிருக்கிறது.
ஆறு கட்சிகளும் ஒன்றாக இருக்க வேண்டுமென்பதற்காகத் தான் நேற்றைய தினத்திலிருந்த இன்றைய தினம் வரை நாங்கள் முயற்சி எடுத்தோம். நேற்றைய தினம் நாங்கள் சந்தித்த வேளையின் ஆரம்பத்திலேயே ஐந்து கட்சிகளும் இந்த வரைபிற்கு இணக்கம் தெரிவித்துவிட்டன.
அது அரைமணித்தியாலத்திலே நாங்கள் செய்த முடித்துவிட்டு போயிருந்திருக்கலாம்.
ஆனால் ஆறாவது கட்சியும் இதில் இணங்கிப் போக வேண்டுமென்பதற்காகத் தான் நேற்று அவர்கள் கேட்டுக் கொண்ட அனைத்தையும் நாங்கள் முன்னெடுத்தோம். அதே போல இன்றைக்கும் முன்னெடுத்தோம். நேற்றைய தினம் நாங்கள் சந்திப்பதற்கு முன்னதாக அவர்கள் இந்தத் தேர்தல் பகிஷ்கரிக்க வேண்டுமென்று அவர்கள் தங்களுடைய முடிவை ஏற்கெனவே அறிவித்திருந்தார்கள்.
ஆகவே ஆரம்பத்தில் அதைக் குறித்த உரையாடலும் இருந்தது. அதாவது அவர்கள் ஏற்கெனவே முடிவெடுத்திருக்க அதற்குப் பிறகு வேட்பாளர்களிடத்தே சென்று எப்படி பேசுவது என்ற கேள்வியும் இருந்தது. அப்படி இருந்த போதிலும் கூட இந்த ஆணவத்திலேயாவது நாங்கள் ஒன்றுபட்டு வர வேண்டுமென்பதற்காக ஆரம்பத்திலே அந்த ஆவணத்தில் இணங்கியிருந்தாலும் ஏறத்தாழ பல மணி நேரம் ஒதுக்கிப் பேசினோம். அந்த ஒரு கட்சியையும் எப்படியாவது சேர்த்துக் கொள்ள வேண்டுமென்பதற்காக எடுத்த முயற்சி தான் அந்த எட்டு மணித்தியால முயற்சி.
ஆகவே மாணவர்களை எவரும் குறை சொல்ல நாங்கள் அனுமதிக்க மாட்டோம். அவர்கள் இதிலே முழுமையாக தங்களுடைய செயற்பாட்டைக் காட்டியிருக்கிறார்கள். எங்களைப் பொறுத்தவரையி லேயும் இந்த இணக்கப்பாட்டிற்காக அதாவது நாங்கள் ஏற்கெனவே இணங்கியிருந்த போதிலும் அவர்களையும் சேர்த்துக் கொள்வதற்காக எங்களால் இயன்ற அனைத்து முயற்சிகளையும்
எடுத்தோம். அவர்கள் கேட்டக் கொண்ட எல்லா விடயங்களையும் நாங்கள் சேர்த்துக் கொண்டிருக்கிறோம்.
இதன்போது கருத்துத் தெரிவித்த சுரேஷ் பிரேமச்சந்திரன்,
கடந்த பல வருடங்களாக இல்லாத நிலையில் பல்கலைக்கழக மாணவர்கள் முயற்சித்து எல்லாக் கட்சிகளுடனும் பேசி இந்த ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்து ஐந்து முறை கூடிப் பேசி மிக நீண்டதொரு பேச்சுவார்த்தையின் பின் முழுமையான ஆவணமொன்றை நாங்கள் தயாரித்திருக்கின்றோம்.
அந்த ஆவணம் என்பது வரக் கூடிய ஐனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களுடைய முக்கியமான அரசியல் கோரிக்கைகள் மற்றும் அன்றாடப் பிரச்சினைகள் என இரண்டையும் உள்ளடக்கியதாக அந்தக்கோரிக்கைகள் இருக்கின்றன. இப்பொழுது நாங்கள் ஒன்றுபட்டு எடுத்திருக்கின்றோம்.
அதாவது இந்த ஆறு கட்சிகளும் இணைந்து தான் இந்த தீர்மானத்தை நாங்கள் நிறைவேற்றியிருக்கின்றோம். ஆனால் ஒரு கட்சி ஒரு விடயத்தில் மிகவும் உறுதியாக இருந்ததால் இதில் அவர்கள் கையெழுத்திட முடியவில்லை.
ஆகவே இப்பொழுது நாங்கள் வெளியிடக் கூடிய ஆவணம் என்பதில் ஆறு கட்சிகளும் ஏற்றுக் கொண்ட ஆவணமாகத் தான் இருக்கின்றது.
ஆனால் ஒரு விடயத்தில் ஏனைய கட்சிகளிடத்திலிருந்து வித்தியாசமான கொள்கையைக் கொண்டிருந்ததால் அவர்கள் இதில் கையெழுத்திட மறுத்திருக்கிறார்கள் என்பது தான் உண்மை.
அந்த வகையில் தமிழ் மக்களின் ஒட்டு மொத்தமான கோரிக்கைகளாக இவை வெளிப்படுத்தப்படுகின்றது.
ஆகவே நாங்கள் நம்புகின்றோம் இந்த வேட்பாளர்களும் அவர்கள் சார்ந்த அரசியல் கட்சிகளும் இதற்கு கூடுதலான முக்கியத்துவத்தைக் கொடுப்பார்கள் கொடுக்க வேண்டுமென்று கேட்கின்றோம்.
ஆகையினால் இந்த ஐந்து கட்சிகளையும் சார்ந்த குழுவினர் மிக விரைவாகச் சம்மந்தப்பட்ட கட்சிகளுடனும் வேட்பாளர்களுடனும் பேசி எங்களது கோரிக்கைகளினுடைய நியாயத்தை நாங்கள் அவர்களுக்கு எடுத்துச் செல்ல இருக்கின்றோம்.
குறைந்தபட்சம் இதில் ஏதாவது சிலவற்றை நிறைவேற்ற முடியுமாக இருந்தால் நிச்சயமாகத் தமிழ் மக்களுக்கு அது எதிர்காலத்தில் சில பிரச்சினைகளையாவது தீர்ப்பதற்கு உதவியாக இருக்குமென்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
இதிலே இன்னுமொரு விடயத்தைத் தெளிவாகக் குறிப்பிட வேண்டும். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் வைத்த பல்வேறு கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டு அவை அனைத்தும் இந்த ஆவணத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டிருக்கிறது.
இன்னும் சொல்வதாக இருந்தால் ஒற்றையாட்சியை நிராகரித்து சமஷ்டி தமிழ் மக்களுடைய இறையாண்மை சுயநிர்ணய உரிமை என இவை அனைத்தும் அங்கீகரிக்கப்பட்ட வகையிலான ஒரு தீர்வு அவசியமென மிகத் தெளிவான வார்த்தைகளால் விளங்கப்படுத்தப்பட்டிருக்கின்றது.
ஆகவே அந்த வகையில் அவர்கள் நாங்கள் என எல்லோருமே இணைந்து அந்த வசனங்களைக் கடந்த பல தடவை பேசி தான் இறுதி வடிவத்தை எட்டியிருக்கின்றது.
ஆகவே அந்த வகையில் ஒற்றையாட்சி அல்லது இடைக்கால அறிக்கை என்ற விடயம் ஐனாதிபதித் தேர்தல் என்று வருகின்ற இந்தப் பரப்பிற்குள் இப்பொழுது தேவையில்லை என்பது பெரும்பாலான கட்சிகளுடைய வியாக்கியானமாக இருந்தது.
அதில் முக்கியமாக பல்வேறுபட்ட தரப்புக்கும் பல்வேறுபட்ட கருத்துக்கள் இருந்தாலும் கூட நாங்கள் எல்லோரும் ஒன்றிணைந்த போக வேண்டுமென்ற வகையில் ஒரு பொது உடன்பாடுகளுக்கு வந்த அந்தப் பொது உடன்பாடுகளை உள்ளடக்கியதாகத் தான் இந்த ஆவணம் என்பது தயாரிக்கப் பட்டிருக்கின்றது.
ஆகவே நாங்கள் ஆறு பேரும் ஒன்றாகப்போக வேண்டுமென்று அவர்களுக்கு மிக இறுதிவரை நாங்கள் சொல்லியிருந்தோம். ஆனால் அவர்கள் அதற்கு இணங்கவில்லை என்பது தான் உண்மை. நன்றி வீரகேசரி
5 தமிழ் கட்சிகள் கையொப்பமிட்டு பொது இணக்கப்பாடு ; சஜித், கோத்தாவிடம் முன்வைக்கவுள்ள ஆவணம் இதுதான்
14/10/2019 தமிழ் தேசத்தினை அங்கீகரித்து அதற்குத் தனித்துவமான இறமை உண்டு என்பதனையும் தமிழ் மக்கள் சர்வதேச சட்டத்தின் கீழ் சுயநிர்ணய உரிமைக்கு உரித்துடையவர்கள் என்பதனையும் அங்கீகரித்து சமஷ்டி ஆட்சி முறையின் கீழ் அரசியல் தீர்வு, பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கம் உள்ளிட்ட 13 கோரிக்கைகளை முன்வைத்து பொது ஆவணம் தயாரிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம், கிழக்கு பல்கலைக்கழகங்களின் மாணவர் ஒன்றியங்களால் ஒழுங்கமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட பொது உடன்பாட்டு ஆவணத்தில் தமிழ் அரசுக் கட்சி, தமிழ் மக்கள் கூட்டணி, ரெலோ, புளொட் மற்றும் ஈபிஆர்எல்எப் ஆகிய 5 தமிழ் கட்சிகளின் தலைவர்கள் கையொப்பமிட்டுள்ளனர்.
அந்த ஆவணத்தின் முழுமையான விவரம் வருமாறு:
இலங்கைத் தீவின் தேசியக் கேள்வியாக கடந்த பல பத்தாண்டுகளாக நீடித்து வந்திருப்பதும்3 பத்தாண்டுகளுக்கு மேலாக நீடித்து நிகழ்ந்த போருக்கும் வழிவகுத்ததுமான, தமிழ் தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வு என்பது தமிழ் தேசிய இனத்தின் அரசியல் வேணவாக்களை அங்கீகரித்து, வடக்கு – கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கிய பிரதேசம் தமிழ் தேசியத்தின் வரலாற்று ரீதியான வாழ்விடம் என்பதனையும் மரபுவழித் தாயகம் என்பதனையும் அங்கீகரித்து அதற்கு தனித்துவமான இறமை உண்டு என்பதனையும் அங்கீகரித்து, தமிழ் மக்களுக்கு சர்வதேச சட்டத்தின் கீழ் சுயநிர்ணய உரிமை உண்டு என்பதனை அங்கீகரித்து, சமஷ்டி ஆட்சி முறையின் கீழ் ஏற்படுத்தப்படவேண்டும் எனும் எமது நிலைபாட்டுக்கு அமைவாக;
நடந்து முடிந்த போரின் தாக்கத்தாலும் நீடித்து கொண்டிருக்கும் விளைவுகளாலும் தமிழ் மக்கள் தொடர்ந்து எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வை சாத்தியமான வழிகளில் காணமுடியும் என்ற நம்பிக்கையுடனும் எதிர்பார்ப்புடனும் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் அரசியல் கட்சிகளாகிய நாம் இதற்குக் கீழ் காணப்படும் கோரிக்கைகளை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பிரதான அரசியல் கட்சிகளிடமும் வற்றின் ஜனாதிபதி வேட்பாளர்களிடமும் முன்வைக்கின்றோம்.
கோரிக்கைகள்
புதிதாக உருவாக்கப்படும் அரசியலமைப்பில் ஒற்றையாட்சி முறைமையை நிராகரித்து தமிழ் தேசத்தினை அங்கீகரித்து அதற்குத் தனித்துவமான இறமை உண்டு என்பதனையும் தமிழ் மக்கள் சர்வதேச சட்டத்தின் கீழ் சுயநிர்ணய உரிமைக்கு உரித்துடையவர்கள் என்பதனையும் அங்கீகரித்து சமஷ்டி ஆட்சி முறையின் கீழ் இலங்கையின் தமிழ் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படவேண்டும்.
இறுதிப்போரில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை என்பவற்றுக்கு முழுமையான மற்றும் பக்கச்சார்பற்ற சர்வதேசப் பொறிமுறையிலான சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் / சர்வதேச தீர்ப்பாயம் ஊடாக விசாரணைகள் மேற்கொள்ளப்படவேண்டும்.
பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்படல் வேண்டும்.
தமிழ் அரசியல் கைதிகள் அனைவரும் நிபந்தனையின்றி விடுதலை செய்யப்படல் வேண்டும்.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் சர்வதேசப் பொறிமுறையின் கீழ் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்படவேண்டும்.
வடக்கு – கிழக்கு மாகாணங்களில் நிலை கொண்டிருக்கும் அரச படைகள் போருக்கு முன் தமிழ் மக்களின் பாவனையிலிருந்த தனியார் மற்றும் அரச காணிகளிலிருந்து வெளியேற்றப்பட்டு அக்காணிகள் அனைத்தும் உடனடியாக விடுவிக்கப்படுவதுடன், மீள்குடியமர்வு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படல்வேண்டும்.
வடக்கு – கிழக்கு மாகாணங்களில் அரச ஆதரவுடன் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் சிங்களமயமாக்கல், பௌத்தமயமாக்கல் மற்றும் சிங்களக் குடியேற்றங்கள் உடனடியாக நிறுத்தப்படவேண்டும்.
வடக்குக்கு மகாவலி நதியை திசை திருப்புவது என்ற போர்வையில் வடக்கு மாகாணத்தில் சிங்களக் குடியேற்றங்களை ஏற்படுத்துவதற்கு மாத்திரமே திட்டமிட்டுச் செயற்படும் சபையாக மகாவலி அதிகார சபை இயங்குவதால் மகாவலி அதிகார சபையின் நியாயாதிக்கம் வடக்கில் இல்லாது ஒழிக்கப்படல்வேண்டும். அத்துடன், கிழக்கில் மகாவலி அபிவிருத்தித் திட்டம் என்ற பெயரில் இடம்பெறும் சிங்களக் குடியேற்றங்கள் நிறுத்தப்படல்வேண்டும்.
அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட மொரகஸ்கந்த நீர்பாசனத் திட்டத்தின் கீழ் வன்னிப் பிரதேசத்தில் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் சிங்களக் குடியேற்றங்கள் அனைத்தும் உடனடியாக நிறுத்தப்படல்வேண்டும்.
தொல்லியல் திணைக்களம், வனவளத்திணைக்களம், வன உயிரினங்கள் திணைக்களம் உள்பட பல அரச திணைக்களங்கள் ஊடாக மேற்கொள்ளப்பட்டு வரும் நில, வழிபாட்டுத்தல ஆக்கிரமிப்புகள் அனைத்தும் உடனடியாக நிறுத்தப்படல்வேண்டும். மேற்குறிப்பிடப்பட்ட திணைக்களங்கள் ஊடாக ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்கள் அனைத்தும் ஏற்கனவே வெளியிடப்பட்ட அரசிதழ் பிரகடனங்களிலிருந்து விடுவிக்கப்படவேண்டும்.
போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு – கிழக்கு மாகாணங்களில் அபிவிருத்தியையும் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பினையும் ஏற்படுத்துவதை நோக்காகக் கொண்டு வெளிநாடுகளில் வாழ் இலங்கையர்களிடமிருந்து நேரடி முதலீடுகளை இலகுவாக பெற்றுக்கொள்வதற்கு ஏதுவாக இங்கு காணிகளையும் நிதிகளையும் கையாள்வதில் இப்போது அவர்கள் எதிர்கொள்ளும் சட்டப்பிரச்சினைகளை தீர்க்கவேண்டும்.
வடக்கு – கிழக்குக்கான அரச மற்றும் தனியார் துறைகளின் வேலைவாய்ப்புக்களில் அந்தந்த மாகாணத்தைச் சார்ந்த மக்களுக்கே முன்னுரிமை வழங்கப்படல்வேண்டும்.
வடக்கு – கிழக்கினை போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசமாக பிரகடனப்படுத்தி அதன் அபிவிருத்திக்கான நிதியினைக் கையாள்வதற்கு வடக்கு – கிழக்கில் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் நெறிப்படுத்தலில் பொதுக்கட்டமைப்பு ஒன்றினை உருவாக்குதல் வேண்டும்.
மேற்சொன்ன கோரிக்கைகளில் உடனடியாக தீர்க்கப்படவேண்டிய விடயங்களுக்கு ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்து புதிய ஜனாதிபதி பதவியேற்று 3 மாதகாலப் பகுதிக்குள் தீர்வு காணப்படல்வேண்டும் -என்றுள்ளது. நன்றி வீரகேசரி
இலங்கை – இந்திய உறவு வானத்தை தொட்டுவிட்டது - இந்திய உயர்ஸ்தானிகர்
18/11/2019 பலாலி சர்வதேச விமான நிலையம் உருவாக்கப்பட்டு தென்னிந்திய – யாழ். விமான சேவைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இதன்மூலமாக இலங்கை –இந்திய உறவில் மேலுமொரு மைல்கல் எட்டப்பட்டுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகர் தரன்ஜித் சிங் சந்து தெரிவித்தார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் யாழ்ப்பாணம் பலாலி சர்வதேச விமான நிலையம் நேற்று அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் கலந்துகொண்டனர். நிகழ்வில் உரையாற்றிய இந்திய உயர் ஸ்தானிகர் கூறுகையில்,
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இருதரப்பு உறவானது தற்போது வானத்தை தொட்டிருப்பதாக நினைக்கி றேன். அத்துடன் இந்த முதலாவது விமான சேவை, இரு நாடுகளுக்கும் இடையிலான மக்கள் - உறவுக்கான அர்ப்பணிப்பு தொடரும் என்பதற்கான மற்றொரு உதாரணமாகும். இருநாட்டு நட்புறவு, அபிவிருத்தி, கூட்டுறவு என்ற விடயங்களும் வெளிப்பட்டுள்ளன.
அத்துடன் மக்கள் தொடர்பின் ஆழத்தை மேலும் வலுவாக்க வேண்டியதிலுள்ள பகிரப்பட்ட அர்ப்பணிப்பையும் இது பிரதிபலிப்பதாக அமைகின்றது. இதில் வடக்கு மக்களின் கல்வி, சுகாதாரம், வீட்டுத்திட்டம், தகவல் தொழில்நுட்பம் மற்றும் கலாசார மத்திய நிலையம் என்ற வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம்.
காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. அதன் வேலைகள் முடிந்தவுடன் நிரந்தர வர்த்தக துறைமுகமாக இவை இயங்கும். அதேபோல் இப்போது விமானநிலை யம் உருவாக்கப்பட்டதன் மூலமாக தென்னிந்திய யாழ்ப்பாணம் சேவை மேலும் பலமடைந்துள்ளது. இலங்கையின் வரலாற்றில் இது ஒரு மைல்கல்லாக பதியப்பட்டுள்ளது. சென்னை – யாழ். விமானசேவை உருவாக்கப்பட்டுள்ளமையானது, பொருளாதார ரீதியிலும் சுற்றுலா ரீதியிலும் பாரிய பலமாக அமையும். இந்திய சுற்றுலா பயணிகளை இங்கு வருமாறு நான் அழைப்பு விடுக்கின்றேன்.
எமது மனங்களில் இலங்கைக்கு எப்போதும் சிறப்பிடம் உள்ளது. 2015 இல் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வருகை தந்தபோது இந்தியாவுக்கான எதிர்காலம் குறித்த எனது கனவு எமது அயலவர்களுக்குமானது” என்று கூறினார். அதுபோல் இந்திய உயர் துறையில் சிலரது முழுமையான ஒத்துழைப்பும் இருந்தது. திருவள்ளுவர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் முயற்சி திருவினையாக்கும் என கூறியுள் ளார். அந்த வாக்குக்கு அமைய நாம் முன்னெடுத்த முயற்சி இன்று எமக்கு கைகொடுத்துள்ளது. அந்த கடுமையான முயற்சியின் பயனாக இன்று வானுயர்ந்த உறவு பலமடைந்துள்ளது என்றார். நன்றி வீரகேசரி
பிரிகேடியர் பிரியங்கர பெர்ணான்டோவின் மரண அச்சுறுத்தல் விவகாரம்- இன்று மீண்டும் நீதிமன்றில்
18/10/2019 பிரிட்டனிற்கான இலங்கை தூதரகத்தில் இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வுகளின் போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை நோக்கி இலங்கை தூதரகத்தின் பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றிய பிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோமரண அச்சுறுத்தல் சைகை செய்தது தொடர்பான வழக்கினை வெஸ்மிஸ்டர்ஸ் நீதிமன்றம் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவுள்ளது.
இனப்படுகொலையை தடுப்பது வழக்கு தாக்கல் செய்வது தொடர்பான அமைப்பு இதனை தெரிவித்துள்ளது.
2018 பெப்ரவரி நான்காம் திகதி இடம்பெற்ற சம்பவம் தொடர்பிலேயே நீதிமன்ற விசாரணை மீண்டும் இடம்பெறுகின்றது.
இலங்கை தூதரகத்திற்கு வெளியே அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களை நோக்கி பிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோ மரண எச்சரிக்கை விடுப்பதை காண்பிக்கும் வீடியோக்களும் படங்களும் வெளியானதை தொடர்ந்து சர்வதேச அளவில் பலத்த சர்ச்சை ஏற்பட்டிருந்தது.
இதனை தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர். இனப்படுகொலையை தடுப்பது வழக்கு தாக்கல் செய்வது தொடர்பான அமைப்பு இதற்கு உதவியளித்தது. நன்றி வீரகேசரி
யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் தெரிவு இடைநிறுத்தம்
18/10/2019 ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் வெளியாகும் வரை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் தெரிவுக்கான நடைமுறைகள் எதனையும் மேற்கொள்ள வேண்டாம் எனத் தேர்தல் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் விக்னேஸ்வரன் திடீரெனப் பதவி விலக்கப்பட்டதையடுத்து புதிய துணைவேந்தர் பதவிக்காகக் கடந்த ஆகஸ்ட் 8ஆம் திகதி விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்த அதே நேரத்தில் செப்டெம்பர் 18 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் அறிவிப்பைத் தேர்தல் ஆணையாளர் வெளியிட்டிருந்தார்.
அதன் தொடர்ச்சியாக 2141/52 ஆம் இலக்க அதிசிறப்பு வர்த்தமானியின் மூலம் தேர்தல் காலத்தில் அரச திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்களில் பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் அடங்கிய வழிகாட்டல்களையும் வெளியிட்டிருந்தார்.
2141/52 ஆம் இலக்க அதிசிறப்பு வர்த்தமானி அறிவித்தலுக்கமைய ஜனாதிபதித் தேர்தல் காலத்தினுள் யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்துக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதை ஆட்சேபித்து, முன்னாள் துணைவேந்தர் அனுப்பிய கடிதத்துக்கமைவாக நியமன நடைமுறைகளைத் தேர்தல் முடிவுகள் வெளியாகும் வரை இடைநிறுத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் சட்ட மற்றும் புலன் விசாரணைகளுக்கான மேலதிக ஆணையாளரினால் நகரத் திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சின் செயலாளருக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
இந்த அறிவுறுத்தல் உயர்கல்வி அமைச்சின் ஊடாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்குத் தெரியப்படுத்தப்பட்டதையடுத்து, மேலதிக தேர்தல்கள் ஆணையாளரின் அறிவுறுத்தலுக்கமைய நடவடிக்கை எடுக்குமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர், யாழ்ப்பாண பல்கலைக்கழக தகுதி வாய்ந்த அதிகாரி பேராசிரியர் க. கந்தசாமிக்கு அறிவித்துள்ளார்.
யாழ்ப்பாண பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவிக்கான விண்ணப்ப முடிவுத்திகதி கடந்த 7 திகதி ஆகும். விண்ணப்ப முடிவுத்திகதியன்று துணைவேந்தர் பதவிக்காகப் புலம்பெயர் பேராசிரியர்கள் இருவர் உட்பட 9 பேர் விண்ணப்பித்திருந்தனர்.
விண்ணப்பம் கோரப்பட்ட காலப்பகுதிக்குள் ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையிலும், குறிப்பிட்ட காலப்பகுதியினுள் நாடுமுழுவதும் பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்களின் பணிப் புறக்கணிப்பு இடம்பெற்ற காரணத்தினாலும் துணைவேந்தர் தெரிவு நடைபெறுமா என்ற சந்தேகம் பல்கலைக்கழக வட்டாரங்களினுள் நிலவி வந்த நிலையில் தற்போதைய அறிவித்தல் மேலும் குழப்பத்தைத் தோற்றுவித்திருக்கிறது. நன்றி வீரகேசரி
யாழ். விமானநிலைய பெயர்ப்பலகை விவகாரம்: இனவாதத்தை தூண்டும் வகையிலான செய்திகள் கண்டனத்திற்குரியவை - ரஞ்சன்
18/10/2019 யாழ்ப்பாணம் சர்வதேச விமானநிலையத்தின் பெயர்ப்பலகையில் முதலில் தமிழ்மொழியின் பெயரிடப்பட்டிருப்பதை மையப்படுத்தி இனவாதத்தைத் தூண்டும் வகையில் சில சிங்கள ஊடகங்கள் செய்தி வெளியிடுவது கடும் கண்டனத்திற்குரியதாகும்.
எனினும் யாழில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருக்கும் நாமல் ராஜபக்ஷ இதனைக் கண்டித்து ஒரு வார்த்தைகூட வெளியிடாதது ஏன் என்று பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க கேள்வி எழுப்பியிருக்கிறார்.
யாழ் பலாலியில் நேற்று யாழ்ப்பாணம் சர்வதேச விமானநிலையம் உத்தியோகபூர்வமாகத் திறந்துவைக்கப்பட்ட நிலையில் விமானநிலையத்தின் பெயர் அதன் பெயர்ப்பலகையில் முதலில் தமிழ் மொழியிலும், இரண்டாவதாக சிங்கள மொழியிலும், மூன்றாவதாக ஆங்கில மொழியிலும் பெயரிடப்பட்டிருந்தது. அதனை சுட்டிக்காட்டி சில சிங்கள ஊடகங்கள் 'சிங்கள மொழி இரண்டாம்பட்சமாக்கப்பட்டு விட்டது' என்ற கோணத்தில் செய்தி வெளியிட்டிருந்தன.
தமிழ்பேசும் மக்கள் பெரும்பான்மையாக வாழும் வடமாகாணத்தில் பொதுசேவையை வழங்கும் யாழ்ப்பாண நீதிமன்றம், யாழ் போதனா வைத்தியசாலை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் போன்றவற்றின் பெயர்ப்பலகைகளிலும் முதலாவதாக தமிழ்மொழியிலேயே பெயரிடப்பட்டிருப்பதை தமது சமூகவலைத்தளப் பக்கங்களில் சுட்டிக்காட்டிய சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் பலரும், இனவாதத்தைத் தூண்டும்விதமாக செய்தி வெளியிட்டிருந்த சிங்கள ஊடகங்களைக் கடுமையாகக் கண்டனம் செய்திருந்தனர்.
இந்நிலையில் இதுகுறித்து தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் பதிவிட்டிருக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க மேற்கண்டவாறு சுட்டிக்காட்டினார். நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment