பொன் விழா ஆண்டில் இந்தப்படங்கள் 1969 -2019 ச. சுந்தரதாஸ் பகுதி 16

நம்நாடு
தமிழ்த் திரையுலகில் நடிகராக அடியெடுத்து வைத்து, நட்சத்திரநடிகராகி அரசியலில் பிரவேசித்து பின்னர் தமிழக முதல்வராகவும் ஆகி இன்றும் மக்கள் மனதில் மங்காப்புகழுடன் வீற்றிருப்பவர் மக்கள் திலகம் எம். ஜி. ஆர்.  இவர் அரசியல்வாதியாக வேடமேற்று நடித்தபடம் தான் நம்நாடு.

பிரபல படநிறுவனமான விஜயா புரடக்ஷன்ஸ் அதிபர்களான நாகி ரெட்டி, சக்கரபாணி இருவரும் இணைந்து தெலுங்கில் என்டிராமராவ் நடித்து வெற்றி பெற்ற படத்தை தமிழில் நம்நாடு என்ற பெயரில் வண்ணப்படமாக தயாரித்தார்கள்.  ஊழல் அரசியல்வாதிகளின் முகமூடியை கிழித்து அவர்களின் அக்கிரமங்களை ஒழித்துக் கட்டும் துரை என்ற பாத்திரத்தில் எம்.ஜி.ஆர். நடித்தார். கதாபாத்திரத்திற்கு மிகப் பொருத்தமாக எம்.ஜி.ஆர். காட்சியளித்தார்.  அலுவலக ஊழியராகவும் அரசியல்வாதியாகவும் செல்வந்தராகவும் மூன்று வித பாத்திரங்கள் ஏற்றிருந்தார் எம்.ஜி.ஆர்.
நகரசபைத் தலைவராகவும் கட்டட காண்ட்ரக்டராகவும் வியாபாரியாகவும், மருத்துவராகவும் இருக்கும் சில பெரியபுள்ளிகள் எப்பேற்பட்ட அயோக்கியர்களாக நடமாடுகிறார்கள் என்பதை படம் தெளிவுப்படுத்தியது.

எம்.ஜி.ஆரின் படங்களில் வில்லனாக வழக்கமாக வரும் நடிகர்களுக்கு பதிலாக இதில் எஸ்.வி.ரங்கராவ் வில்லனாக நடித்திருந்தார்.  படத்திற்கு தனிச்சிறப்பு சேர்ப்பது போல் அவரின் நடிப்பும் மேகஅப்பும் அமைந்தது.  அலட்டல் இல்லாமல் மிக இயல்பாக தன் நடிப்புத் திறமையைக் காட்டியிருந்தார் ரங்கராவ். இவருடன் கே.ஏ.தங்கவேலு,  எஸ்.ஏ.அசோகன், எஸ்.வி.ரமதாஸ், என்னத்தே கன்னையா ஆகியோரும் பசுத்தோல் போர்த்த புலிகளாக படத்தில் வருகின்றனர்.
இவர்களை அதிர்த்து அரசியலில் குதித்து எம்.ஜி.ஆர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெறுகிறார்.  ஆனால் ஊழல் அரசியலுக்கு ஒத்துழைக்க மறுத்து பதவியை இழக்கிறார்.  

எம்.ஜி.ஆரின் இந்த கதாபாத்திரம் ரசிகர்களை மிக கவர்ந்து பிற்காலத்தில் அவர் அரசியலில் உச்சம் தொட மிக உதவியது.

படத்தில் இளநீர் விற்பவராக வருபவர் ஜெயலலிதா.  எம்.ஜி.ஆருக்கு பணிவிடை செய்து அவரின் மனதிலும் இடம பிடிக்கிறார். எம்.ஜி.ஆரின் அண்ணனாக டி.கே.பகவதியும், அண்ணியாக பண்டரிபாயும் நடிக்கிறார்கள்.  நாகேஷ் ஜோடியில்லாமல் தோன்றி நகைச்சுவையை வழங்குகிறார்.

படத்தின் வசனங்களை சொர்ணம் எழுதியிருந்தார்.  'தேர்தலில் பணக்காரரிடம் பணத்தை வாங்கவேண்டும் ஏழைகளிடம் வாக்குகளை வாங்கவேண்டும் பதவிக்கு வந்த பின் இருவரையும் மறந்து விடவேண்டும் விடக்கூடாத இடத்தை நாம்' விட்டு விட்டோம் வரக் கூடாத இடத்திற்கு அவன் வந்து விட்டான் போன்ற அவரின் பல வசனங்கள் இன்றைய அரசியலுக்கும் பொருந்துகிறது.
படத்தில் அனைத்துப் பாடல்களையும் வாலி இயற்றினார். நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே, வாங்கையா வாத்தியாரையா, நான் ஏழு வயதிலே இளநீ விற்றவ, ஆடைமுழுதும் நனைய நனைய ஆகிய பாடல்கள் இனிமையாக அமைந்தன. நினைத்ததை நடத்தியே முடிப்பவன் நான் பாடலும் இசையும் அதற்காகப் போடப் பட்ட அரங்கமும் பிரம்மாண்டமாக காட்சியளித்தன.  மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் குறைந்த வாத்தியங்களுடனும், ஏராளமான வாத்தியங்களுடனும் இந்தப் படத்திற்கு இசையமைத்திருந்தார்.

பல படங்களுக்கு படத் தொகுப்பாளராக பணியாற்றி பின்னர் டைரக்டரான ஜம்பு படத்தை டைரக்ட் செய்திருந்தார்.

1969ம் ஆண்டு தீபாவளிக்கு நம்நாடு திரையிடப்பபட்டது. வெற்றிப்படமானது. இந்த ஆண்டின் ஆரம்பத்திலும் 50 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இலங்கையில் திரையிடப்பட்டு ரசிகர்களின் ஆதரவை தக்க வைத்துக் கொண்டது நம்நாடு!





No comments: