காரணந்தான் என்னவென்று
வாதமிட்டு வாதமிட்டு
வகையறியா நானிருந்தேன்
தலையெழுத்தாய் இருக்குமென்று
மனமெனக்கு சொல்லியது
தலையெழுத்து மாற்றமுற
தண்டனிட்டேன் இறைவனிடம் !
வேதனையில் சோதனையில்
சிக்குண்ட மணிவாசகர்
காதலுடன் இறைவனது
கழலினையே இறுகணைத்தார்
வேதனையால் சோதனையால்
வெகுண்டெழுந்து போகாமல்
நாதனது அருட்டிறத்தை
நயமுடனே எடுத்துரைத்தார் !
தலையெழுத்தால் தாக்குண்ட
மார்க்கண்டு எனுமடியார்
நிலைதளம்பா உறுதியுடன்
நிமலனையே சரண்புகுந்தார்
வேதனையும் சோதனையும்
விலகியங்கே ஓடிடவே
நாதனால் இளமையுடன்
வாழ்ந்தனரே அடியவரும் !
நந்தனெனும் அடியவரும்
நொந்துநின்றார் வாழ்வெல்லாம்
சோதனையை வேதனையை
சுகமெனவே பார்த்துநின்றார்
நந்தனது தலையெழுத்தை
நாதனருள் மாற்றியதே
தில்லையிலே நந்தனுக்கு
திருவருளும் கிட்டியதே !
வேதனையச் சோதனையை
பாதையாய் தேர்ந்தெடுத்து
வையத்துள் வாழ்வாங்கு
வாழுதலே வாழ்வாகும்
தலையெழுத்தை எண்ணியெண்ணி
தானழுது என்னபயன்
நிலைபெற நாம்வாழ்வதற்கு
நிமலனையே சரண்புகுவோம் !
1 comment:
நீங்கள் சொல்லுவது முற்றிலும் உண்மையேல்
Post a Comment