படைப்பிலக்கியவாதியும்
ஊடகவியலாளருமான முருகபூபதி எழுதிய இலங்கையில் பாரதி ( ஆய்வு ) நூலின் வெளியீட்டு
அரங்கு கொழும்பு தமிழ்ச்சங்கம் விநோதன் மண்டபத்தில் கடந்த 05
ஆம் திகதி (05-10-2019) சனிக்கிழமை மாலை நடைபெற்றது.
மகாகவி பாரதியின்
படைப்பாளுமை பண்புகள் இலங்கையில் ஏற்படுத்திய
தாக்கம் குறித்து ஆய்வுசெய்யப்பட்ட
இந்நூலின் உள்ளடக்கம், யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் காலைக்கதிர்
இதழில் 40 வாரங்கள் தொடராக வெளியானதுடன் அவுஸ்திரேலியா தமிழ் முரசு இணைய
இதழிலும் மறுபிரசுரமானது.
இலங்கையில் பாரதி நூல் வெளியீட்டரங்கு செல்வி பாமினி செல்லத்துரையின்
வரவேற்புரையுடன், ஈழத்தின் மூத்த எழுத்தாளர்
திரு. தெளிவத்தைஜோசப் தலைமையில் ஆரம்பமாகியது.
சிட்னியில் அண்மையில்
மறைந்த பேராசிரியர் பொன். பூலோகசிங்கம், கொழும்பில் மறைந்த, தமிழ் – சிங்கள இலக்கியப் பரிவர்த்தனைக்கு பாலமாக
விளங்கிய மொழிபெயர்ப்பாளர் உபாலி லீலாரத்ன, மற்றும் பிரபல ஓவியரும் முருகபூபதியின்
இலங்கையில் பாரதி நூலுக்கு முகப்பு ஓவியம் வரைந்தவருமான மொறாயஸ் ஆகியோரை நினைவுகூர்ந்தும் கடந்த ஏப்ரில் உயிர்த்த ஞாயிறில் கொல்லப்பட்ட மற்றும்
போர் அநர்த்தங்களில் கொல்லப்பட்ட இன்னுயிர்களின்
நினைவாகவும் இந்நிகழ்ச்சியில் மௌன அஞ்சலி நிகழ்த்தப்பட்டது.
யாழ். காலைக்கதிர் ஆசிரியர் திரு. வித்தியாதரன்
நூல் வெளியீட்டுரையை நிகழ்த்தினார்.
ஞானம் மாத இதழ்
ஆசிரியர் தி. ஞானசேகரன், எழுத்தாளர் கௌரி அனந்தன், இலக்கிய ஆர்வலர் வானதி ஆறுமுகம் ஆகியோர் நூல் மதிப்பீட்டுரைகளை நிகழ்த்தினர். முருகபூபதியின் பேத்தி செல்வி நிவேதிதா சிவசங்கர்
நூலின் பிரதிகளை வெளியிட்டுவைத்தார்.
கலை, இலக்கிய
ஆர்வலரும் எழுத்தாளருமான திரு. உடுவை தில்லை நடராஜா, ஈழத்தின் மூத்த எழுத்தாளர் ( அமரர்)
இளங்கீரனின் புதல்வர் திரு. மீலாத் கீரன், திருமதி ஜெயந்தி விநோதன், முன்னாள் பொலிஸ்
அத்தியட்சர் திரு. அரசரட்ணம் ஆகியோர் நூலின்
சிறப்பு பிரதிகளை பெற்றுக்கொண்டனர்.
நூலாசிரியர்
முருகபூபதி ஏற்புரை நிகழ்த்தினார்.
---0----
No comments:
Post a Comment