தீபாவளி விழாவில் வில்லுப் பாட்டு - (கன்பரா யோகன்)





நேற்று(19-10-2019) கன்பராத் தமிழ் சங்கம்(CTA) தனது வருடாந்த தீபாவளி விழாவை குயீன்பியன் பைசென்டினரி மண்டபத்தில் கொண்டாடியது.  பல்வேறு நடன, இசை, வாத்திய  இசை நிகழ்வுகளுக்கிடையே ஒரு வில்லுப்பாட்டு நிகழ்வும் அரங்கேறியது. இதைப் பற்றிய குறிப்புகளையே இங்கு எழுத எண்ணினேன்.

‘நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்…?’ என்ற தலைப்பில் எழுதப்பட்டிருந்த வில்லுப்பாட்டு கன்பராவுக்கு 25 வருடங்களுக்கு முன்னர் புலம் பெயர்ந்த ஒரு தமிழ் குடும்பத்தைப்  பற்றிய கதையை  25 நிமிடங்களில் சொல்வதற்கென்று தயாரிக்கப்பட்டிருந்ததெனினும்  இது பார்வையாளர்களிடம் எப்படி சென்றடைந்தது என்பதை அறிந்து கொண்டால் மட்டுமே இதன் தாக்கத்தைப் பற்றி கூறமுடியும். 


கதையில் இந்த கன்பெராத் தம்பதிகளுக்கு இரண்டு  பிள்ளைகள் பிறக்கிறார்கள். மூத்தவளை மெடிசின் படிப்பிப்பதற்காய் அனுப்பும் அவர்கள் மகள்  டொக்ரராகி திருமண வயதடைந்ததும் கலியாணம் பண்ணி வைப்பதற்காய்
பல இடங்களிலும் அவளுக்குப் பார்க்கும்  மாப்பிள்ளையிடம் தேடும் அளவுக்கு மீறிய எதிர்பார்ப்புகளைக் கிண்டலடிக்கிறது இந்த வில்லுப்பாட்டு.  பாடல்கள் இடைக்கிடையே பொருத்தமான இடங்களின் சேர்க்கப்பட்டு கதை சொல்வதில் ஒரு தொய்வையும் ஏற்படுத்தாது கதையை நகர்த்திக் செல்லும்  இந்த வில்லுப் பாட்டு  யுக்தியை ஏற்கனவே பலரும் அறிந்திருந்தாலும் நேற்றைய வில்லுப்பாட்டில்  ஐம்பதுகளில் , அறுபதுகளில் வெளிவந்த திரைப்படப் பாடல்  மெட்டுக்களை பயன்படுத்தி நிகழ்ச்சியை ஜனரஞ்சகமாக்கியதைக்  குறிப்பிடலாம்.

மகளுக்குப் பொருத்தம் பார்த்த எந்த மாப்பிள்ளையும் சரிவராத நிலையில் கடைசியாக ஒரு மாப்பிளை பெற்றோருக்குப்  பிடிக்கிறது. இதில் வேடிக்கை  என்னவென்றால்  மகளிடம்  இது பற்றி மூச்சு  விடாமல் இருந்து விட்டு கடைசியில் சொல்லாலாமென்றிருந்த  அதே நாளிலேயே டொக்டர் மகள் தன்  காதலனுடன் வந்து பெற்றோருக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கிறாள். 
காதலனின் பெயரை  பூடகமாக டேவிட் என்று கதையில் சொல்லி விட்டு   அவர் வெள்ளையினத்தவரா?  நம்மினத்தவரா? என்று மக்களையே முடிவெடுக்கும் படியாக விட்டுவிட்டு 'நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்' என்ற பாடலை இசைத்து வில்லுபாட்டை மங்களம் பாடி முடித்து விட்டனர்.

இன்றைய உலகில் பெண்கள் உயர் கல்வி கற்று மிகச் சிறந்த தொழில்களை புரிவதுடன், பல தலைமைத்துவ பண்புகளை  கொண்ட  தலைவர்களாகவும், ஏன் நாட்டுக்கே தலைவர்களாயும் விளங்குகின்ற பல உதாரணங்கள் உள்ளன. தமிழ்பெண்களும் இதில் விதி  விலக்கல்ல. மருத்துவக் கல்வியிலும் பல பெண்கள் அதி சிறந்து விளங்குவதைக் காண்கிறோம்.  இந்த வில்லுப் பாட்டு அவர்களை மட்டும் இலக்கு வைத்து எழுதப்பட்டதென்று எடுத்துக்கொள்ளாமல் பொதுவாக  உயர் கல்வி கற்ற பெண்களுக்குத் திருமணம் என்று வரும் போது சில தமிழர் எதிர்பார்க்கும் மாப்பிள்ளையின் அவர்களின் குடும்பங்களின் அந்தஸ்து மற்றும் குலம், கோத்திரம் போன்ற பொருத்தப்பாடுகள்   இதனாலேற்படும் இயலாமைகள் இவற்றைக் கிண்டலடிப்பதாகவே கொள்ள வேண்டும்.

இந்த சில தமிழர்களின் கண்கள் இந்த வில்லுப்பாட்டின்  மூலம் திறக்கப்படுமா? இதைவிட பிள்ளைகளைகளின் விருப்பத்தையறியாது தம் விருப்பதைத் திணிக்க முயலும் பெற்றோரின் கண்களும் திறக்கப்படுமா என்பதும் இன்னொரு  கேள்வி. 

ஆனால் ஒரு சிலரைத் தவிர இன்றைய யதார்த்தத்தை  பெரும்பாலான தமிழர்கள் புரிந்து கொண்டு விட்டனர் என்றுதான் சொல்ல வேண்டும். அன்று பிள்ளைகளைப்
'படி படி' என்று மட்டுமே சொல்லிக் கொண்டிருந்த பெற்றோரெல்லாம் இப்போது
'பிடி பிடி' ( மாப்பிள்ளையையோ, அல்லது பெண்ணையோ) என்று சொல்லிக் கொள்வதிலிருந்து இது புரிகிறதல்லவா?

இந்த  வில்லுப்பாட்டில் வில்லடித்துக் கதை  சொல்லிய  சாம்பசிவம்(சாம்), மற்றும் ரிச்சர்ட் ஜோசப் ,  யோகன் , சுகுமார், Dr அபிராமி,  ஆழியாள் (மதுபாஷினி ), ஜெயந்தி,  ஜெயகௌரி  ஆகியோர்  பங்கு பற்றியதுடன்    இவர்களுடன் இணைந்து சுகுமார் தபேலாவும்   ரதினி வயலினும் இசைத்தனர்.  

-->








No comments: