மழைக் காற்று ( தொடர்கதை ) அங்கம் - 06 - முருகபூபதி


 அந்த வீட்டின் எஜமானி ஜீவிகா மாதாந்தம்  தனக்குத்தரவிருக்கும்  இருபத்தியைந்தாயிரம் ரூபா  வேதனத்தில் தனக்கிருக்கும் செலவுகளை மனக்கணக்கில் வரிசைப்படுத்திப்பார்த்தாள் அபிதா.
அப்பா, அம்மாவுடன்  வாழ்ந்த காலமும், கணவன் பார்த்திபனின் சிறிய வருமானத்தில் காலத்தை கடத்திய கணங்களும் அடிக்கடி நினைவுக்கு வந்துகொண்டிருக்கின்றன.
வீட்டுச்செலவுக்கு வைத்திருந்த சொற்ப பணத்தில், அயலில் சீட்டுப்போட்டு, போர்க்காலத்தில் இடப்பெயர்வினால் அதனையும் மீள எடுக்கமுடியாமல் அவதிக்குள்ளானவேளையிலும் பார்த்திபன் எதுவும் சொன்னதில்லை.
இந்த வீட்டில் மூன்றுவேளையும் வயிறாற உணவிருக்கிறது. உடுத்துக்கொள்ள அவ்வப்போது உடைகளும் கிடைக்கின்றன. மருத்துவச்செலவுகளும் இல்லை. ஆரோக்கியத்திலும் குறைபாடுகள் இல்லை.
இவர்கள் என்னை நெத்தலி என்று அழைத்தாலும் கவலை இல்லை. அவ்வாறு இருப்பதும் ஆரோக்கியமானதுதான்.  உடல்பருமனைக்குறைப்பதற்காக மஞ்சுளாவும் சுபாஷினியும் தினமும் தேகப்பயிற்சி செய்கிறார்கள்.
விடுமுறை நாட்களில் கடற்கரை வரையில் நடைப்பயிற்சியில் ஈடுபடுகிறார்கள்.
ஜீவிகா தன்னுடன் பேசிய பிரகாரம் தரப்போகும் மாதாந்த வேதனம் சேமிப்பாகத்தான் மாறிவிடும்.  இனிமேல் யாருக்காக நான் சேமிக்கவேண்டும்…?
பார்த்திபனுடன் வாழ்ந்த அந்த சொற்பகாலத்தில் சேமிப்பதற்கு சிறந்த வழிமுறையாக இருந்தது அந்தச் சீட்டு மாத்திரம்தான்.
  சீதனம் கொண்டுவருவதற்கு வக்கில்லை. சீட்டுப்போடுறாளாக்கும்  “ என்று சுடுவார்த்தைகள் சொன்ன மாமியார் -  பார்த்திபனின் தாயார் போர் உக்கிரமடைவதற்கு முன்பே, ஜெர்மனியிலிருக்கும் மகளிடம் – பார்த்திபனின் தங்கை மாலினியின் முதல் பிரசவத்திற்கு உதவியாக அழைக்கப்பட்டவள்.
அங்கே அந்த மாமி நிரந்தரமாகிவிடுவதற்கு போரும் பார்த்திபனும் குழந்தை தமிழ்மலரும் கொலைகாரப்பாவிகளிடம் சிக்கியது வசதியாகிப்போனது.
 “ போரில் மகனையும் பேத்தியையும் பறிகொடுத்துவிட்டேன். அங்கு திரும்பிச்சென்றால் தனது உயிருக்கும் ஆபத்து  “ எனச்சொல்லி ஜெர்மனியில் அடைக்கலம் பெற்றுவிட்ட மாமியாலும் அவள் மகள் மாலினியாலும் அபிதாவுக்கு எந்தப்பயனும் இல்லை.
தங்களுக்குத் தெரியாமல் தங்கள் மகன் பார்த்திபனை காதலித்தது முதல் குற்றம்! தடுத்தும் சொல்கேளாமல் திருமணம் செய்தது இரண்டாவது குற்றம்!  சீதனம் கொண்டுவராதது மூன்றாவது குற்றம்!  தங்களைவிட குறைந்த சாதி என்பது நான்காவது குற்றம்.  
இவ்வாறு நீதிமன்றத்தில் முன்னிலையாக முடியாத குற்றங்களுக்கு தண்டனையாகத்தான் அபிதா மீது புறக்கணிப்பு நாடகத்தை பார்த்திபனின் தாய் அரங்கேற்றினாள்.
அவர்களுக்கு வேண்டாதவளாகிவிட்ட நிலையிலும் அவர்களது உறவினர்களது புறக்கணிப்புகளையடுத்தும், தனிமரமாகிவிட்ட அபிதா, இனிமேல் தான் யாருக்காக சேமிக்கவேண்டும்… ? என்றும் யோசித்துப்பார்த்தாள்.
அந்த வீட்டுக்கு வந்த சிலநாட்களில் அங்கிருப்பவர்களின் இயல்புகளை ஓரளவு புரிந்துகொண்டு, அதற்கேற்ப தன்னை தகவமைத்துக்கொள்வதில் கவனம் செலுத்தினாள்.
முகநூல் பார்த்துக்கொண்டிருந்த சுபாஷினி, அட்டகாசமாக சிரித்துக்கொண்டு விரைந்துவந்தாள்.
இன்றும் அவளுக்குச்சொல்வதற்கு ஏதோ ஒரு சுவாரசியம் கிடைத்திருக்கிறது. அவளது சிரிப்பிற்கான காரணத்தை கேட்டறிவதில் ஜீவிகாவுக்கும் மஞ்சுளாவிற்கும் கற்பகம் ரீச்சருக்கும் ஆர்வம் வந்தது.
அபிதா, சப்பாத்திக்கு மாவு பிசைந்துகொண்டு, அந்த சுவாரசியத்தை கேட்பதற்காக காதை கூர்மையாக்கிக்கொண்டாள்.
  “ இதோ… கேளுங்கோ…   காதலுக்கும் கள்ளக்காதலுக்கும் என்ன வித்தியாசம்…?  கைத்தொலைபேசியில் முகநூலிலிருந்ததை சுபாஷினி சொல்லத் தொடங்கியதும், இப்படியான விடயங்களும் முகநூலில் வருகிறதா..? என்று அபிதா ஆச்சரியப்பட்டாள்.
  சரி…. சரி…. சொல்லு. “  என்று ஜீவிகா தனது ஆர்வத்தை காண்பித்தாள்.
  காதல் -  போயிட்டு வாங்கோ எனச்சொல்லும். கள்ளக்காதல் – போயிட்டார் வாடா…. “ எனச்சொல்லும். என்று சுபாஷினி சொன்னதும்,  அனைவரும் வாய்விட்டுச்சிரித்தனர்.
உடனே, மஞ்சுளா – தான் முன்னர் முகநூலில் படித்த ஒரு நகைச்சுவைத்துணுக்கை சொன்னாள்.
 “ இரண்டு இளம்பெண்கள் சந்தித்துக்கொண்டார்கள்.  ஒருத்தி சொல்கிறாள்:   ‘ எனது காதலன் என்னை உயிருக்குயிராக  காதலிக்கிறார்.  கட்டிய புடவையுடன் வந்தாலும் ஏற்றுக்கொள்வேன்   என்கிறார்.
அதற்கு மற்றவள்,  “ இதென்ன புதுமை. எனது காதலர் என்ன சொல்கிறார் தெரியுமா..? கட்டிய புருஷனுடன் வந்தாலும் ஏற்றுக்கொள்வாராம்….!  
இது எப்படி இருக்கு…? எனச்சொல்லிவிட்டு மஞ்சுளாவும் அட்டகாசமாகச் சிரித்தாள். அங்கிருந்த கலகலப்புக்கு மத்தியில், கற்பகம் ரீச்சர் அபிதாவிடம்,  “ சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள என்ன செய்யப்போகிறாய்..?  “ என்று கேட்டாள்.  
 “ பன்னீர் கறியும் கத்தரிக்காய் பிரட்டலும்  “ என்றாள் அபிதா.
 “ உனக்கு பன்னீர்க்கறியும் செய்யத்தெரியுமா..? “ 
  ஓம் ரீச்சர் “
  எனக்கும் சொல்லித்தாவேன். “ 
  ஏன்…. நீங்க யாருக்குச் சமைக்கப்போறீங்க…  “ என்று கிண்டலாக கேட்டாள் மஞ்சுளா.
அதனால் எரிச்சலுற்ற கற்பகம் ரீச்சர் அவளை முறைத்துப்பார்த்துக்கொண்டு தனது அறைக்குள் சென்றுவிட்டாள்.
அந்த வீட்டிலிருப்பவர்கள் ஒவ்வொருவருக்கும் பின்னால் ஏதோ ஒரு கதை இருப்பதாகவே அபிதா உணர்ந்துகொண்டாள். நிலையற்ற இந்த வாழ்வில்தான் எத்தனை கனவுகள்…? எத்தனை எதிர்பார்ப்புக்கள்….?  தனக்கிருக்கும் அகப்போராட்டங்களை பகிர்ந்துகொள்வதற்கே நாதியில்லை! இவர்களுக்கும் அகப்போராட்டங்கள் இருக்கலாம்! ஜீவிகா, கற்பகம் ரீச்சர், சுபாஷினி, மஞ்சுளா இதுவரையில் திருமண பந்தத்தில் ஈடுபடாமல் தனிமரமாகவே வாழ்கிறார்களா..?
இவர்கள் எவரது கழுத்திலுமோ நெற்றியிலுமோ அதற்கான அடையாளங்களோ  தடயங்களோ இல்லை.
“மாங்கல்யம் தந்துனானே மம ஜீவன ஹேதுனா
கண்டே பத்னாமி சுபாகே த்வம் சஞ்சீவ சரத சதம்”
இவர்கள் நால்வரும் அய்யர் இவ்வாறு மந்திரம் ஓதி தாலி கட்டிக்கொண்டவர்களா…? இல்லையா…?
வற்றாப்பளை அம்மன்கோயிலில் வைத்து அபிதாவின் கழுத்தில் பார்த்திபன் அன்று கட்டிய ஏழு பவுண் தாலிக்கொடியும்,  பின்னாளில், போராட்டத்திற்கு இயக்கம் நிதிசேகரிக்கும்போது கழற்றிக்கொடுத்துவிட்டவள்தான் அபிதா. இறுதியில் தாலிச்சரடு மாத்திரம் ஒரு மஞ்சள் நூலில் தொங்கிக்கொண்டிருந்தது. தற்போது அதுவும் அவளிடத்தில் இல்லை. 
இருபது – இருபத்தியைந்து பவுணில் தாலிக்கொடி செய்து மணம்முடித்து புலம்பெயர்ந்து சென்றவர்கள், பாதுகாப்புக்காக காப்புறுதி செய்தும் வங்கிகளில் லொக்கரில் வைத்தும் காப்பாற்றுவதாக அபிதா கேள்விப்பட்டிருக்கிறாள்.
அப்பா, அம்மாவுடன் சிறுவயத்தில் ஒரு உறவினர் வீட்டுத்திருமணத்திற்குச்சென்றபோதுதான் அய்யர் உச்சரிக்கும் மந்திரத்தின் அர்த்தம் கேட்டாள் அபிதா.
அதற்கு அப்பா,   மாங்கல்யம் தந்துனானே மம ஜீவன ஹேதுனா – மாங்கல்யத்தை கணவனிடமும் கள்வரிடமிருந்தும் . இயக்கங்களிடமிருந்தும் காப்பாற்றிக்கோ …  என்பதுதான் அர்த்தம் என்று கிண்டலாகப்பேசினார்.
அம்மா அவரது தோளில் இடித்து “  வளரும் பிள்ளைகளுக்கு இப்படியா சொல்லிக்கொடுப்பது..?   என்று ஏசத்தொடங்கிவிட்டார்.
அம்மா சொன்ன விளக்கம்:  “ அபிதா, திருமணம் என்பது  விதிப்பயன்.  அது எவ்வாறு அமையும் என்பதை எவராலும் சொல்லமுடியாது. இறைவனையோ தேவதூதனையோ நினைத்து  அவர்களை மனம்உருகி வேண்டி  சொல்லப்படும் மந்திரம் இல்லை அது. ஒருவனுக்கு மனைவியாக வருபவள் அவனது வாழ்வில் எவ்வளவு முக்கியமானவள் என்பதை உணர்த்தும் மந்திரம். ஒரு மனிதன் எது எதெல்லாமோ தேடிவிடுவான். சொத்து, சுகம், பதவி, அந்தஸ்து, செல்வாக்கு… இப்படி எத்தனையோ தேடிவிட்டாலும், ஒரு கட்டத்தில் அவை அனைத்தையும் அவன் இழக்கநேர்ந்தாலும், இறுதிவரையில் அவனுடன் நிலைத்திருக்கும் சொத்து அவனது மனைவி மாத்திரமே.  அதனைத்தான் அந்த மந்திரம் சொல்கிறது. அதனால்தான் தாயை இழந்தால் அன்பு போய்விடும், தந்தையை இழந்தால் அறிவு போய்விடும், மனைவியை இழந்தால் யாவுமே போய்விடும் என்கிறார்கள். அதன் பிறகு அவன் நடைப்பிணம்தான்.  
இறுதியில் அபிதாவுக்கு அப்பா சொன்னதும் நடந்தது! அம்மா சொன்னதும் நிகழ்ந்தது. அம்மா இறந்த பின்னர் அப்பா நடைப்பிணமாகத்தான் மாறிப்போனார்.  அப்பா சொன்னவாறு ஒரு கட்டத்தில் பார்த்திபன் கேட்டு,  தனது தாலிக்கொடியை இயக்கத்தின் தேவைக்கும் அபிதா கொடுக்க நேர்ந்தது.
அபிதாவுக்கு  அனைத்துமே  நிலையற்றுப்போய்விட்டன. அப்பா, அம்மா, பார்த்திபன், அவன் அணிவித்த தாலி, சீதனம் கொண்டுவரவில்லை என்று புறக்கணித்த மாமி, என்றைக்குமே தொடர்புகொண்டு பேசியிராத ஜெர்மனியில் வாழும் மச்சாள் மாலினி… அனைத்தும் இன்று அவளருகில் இல்லை. அதற்கெல்லாம் அப்பால், அபிதா நினைத்து நினைத்து ஏங்குவது செல்ல மகள் தமிழ்மலரின் மழலைக்குரலுக்காகத்தான்.
அன்று அந்த காட்டுப்பிரதேசத்தில் தஞ்சமடைந்து,  ஒரு மரநிழலில் அடைக்கலமாகியிருந்த வேளையில் அந்தக்கோரம் நடந்தது. அம்மரத்தில்  சேலையால் கட்டியிருந்த தொட்டிலில்  தமிழ்மலர் உறங்கிக்கொண்டிருந்த வேளையில் எங்கிருந்தோ வந்த எறிகணை வீச்சில் அந்த மரமும் அதில் கட்டியிருந்த தொட்டிலில் ஆழ்ந்த உறக்கத்திலிருந்த குழந்தையும் கருகிப்போன காட்சியை அபிதாவால் எவ்வாறு மறக்கமுடியும்.
காலைக்கடன் கழிக்கசெல்லாதிருந்தால் தானும் குழந்தையுடன் கருகியிருக்கலாம்.  அப்படி நடக்காமல் என்னை மாத்திரம் ஏன் இப்படி அனாதையாக்கிவிட்டாள் அந்த வற்றாப்பளை அம்மாளாச்சி…?
அம்மாளாச்சியின் முற்றத்திலும் உள்ளேயும் தாங்கள்  இடுப்புக்கு மேல் அணியும் சீருடைகளை கழற்றிவிட்டவாறு வணங்கிக்கொண்டிருக்கும் அவர்கள் யாருக்காக கும்பிடுகிறார்கள்..?
காணாமலாக்கப்பட்ட உறவுகளின் போராட்டம் இன்னும்தான் தொடருகிறது. கண்துடைப்பு நாடகங்களுக்கு மத்தியில் தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்ளாமல், அங்கு நடந்துவரும் அரங்கேற்றங்களை காணச் சகியாமல்தான் அபிதா, ஊர் விட்டு ஊர்வந்து சப்பாத்திக்கு பன்னீர்க்கறி செய்துகொண்டிருக்கிறாள்.
சரணடைந்த பார்த்திபனும் இனிமேல் வரப்போவதில்லை தேர்தல்கால வாக்குறுதிகள் மாத்திரம் வந்துகொண்டேயிருக்கும்.
தேர்தல் திருவிழா வரும் சமயத்தில் நிகும்பலைக்கு வந்து சேர்ந்துள்ள அபிதா, அந்த வீட்டில் வேலை செய்துகொண்டே முகநூல்  திருவிழாக்களை  வேண்டா வெறுப்பாக சகித்தவாறு கடந்த காலத்தை நனவிடை தோய்ந்துகொண்டிருக்கிறாள்.
( தொடரும் )

-->


No comments: