எலி வேட்டை - யோகன்- கன்பெரா


எலிகளை அவ்வளவு இலகுவாகப் பிடிக்கவும் முடியாது அல்லது தடியால் அடித்துக் கொல்லவும் முடியாது. அதுவும் சுண்டெலி என்றால் இன்னும் மோசம்.
எலியைப் பிடிக்க  ஒரு பொறி ஒன்று செய்து  விற்கிறார்கள். ஆனால் அப்படி யாதொன்றையும் பாவிக்காமலே எலியை பிடித்து விடலாமென்று எண்ணிக்  கொண்டிருக்கும் அதி புத்திசாலிகள் நாங்கள்.
ஊரில் தருமன்  பொறி , வீமன் பொறி என்றெல்லால் இருந்தது. ஒன்று உயிரோடு எலியைப் பிடித்து வைத்திருக்கும், மற்றையது கழுத்தை துண்டாடி  விடும்.

இரவு சமையலறை விளக்கைப் போட்டதும்  ஒரு சுண்டெலி  குளிரூட்டிக்கு கீழிருந்து அலுமாரிக்குப் பின்னும், பிறகு அங்கிருந்து பாத்திரங்கழுவிக்கு அடியிலுமாக என்று ஒரு சங்கீதக் கதிரை விளையாட்டு விளையாடி வருகிறது. அது ஓடுகையில் வெளித்தெரியும் இந்த இடைவெளியில்தான் நான் கையில் வைத்திருக்கும் துடைப்பக்  கட்டைக்கு அது பலியாகவேண்டும் அல்லது பிளாஸ்டிக் வாளியுடன்  நிற்கும் உஷாவிடம்  சிறைப்படவேண்டும்.
நான் உயிருடனோ அல்லது பிணமாகவோ மீட்க நினைக்கும் அந்த சனியனை வாளியைக் கவிழ்த்து மூடி உயிரோடேயே பிடித்து விடலாமென்று உஷா நினைத்துக் கொண்டிருக்கிறாள்.
மேலும் நாங்கள் முட்டாள்தனமாக நம்பிக்கொண்டிருந்தது ஒரே ஒரு எலிதான் எங்கள் வீடு முழுக்க ஓடிக்கொண்டிருந்ததென்பதை. இதைப்  பிடித்து விடடால்  இன்னொன்று வந்து விடாதா?

'அதை  கொன்று விடாதே. துடைப்பத்தால்  சுவர் மூலைக்குள் அமுக்கிப் பிடி நான் வந்து வாளியால் மூடுகிறேன்.


'நான் கொலையே செய்வதில்லை  உனக்குத் தெரியாதா?'
ஆனால்  நான் துடைப்பத்தால் அதைக் கொல்லத்தான் போகிறேன் என்று  இவளுக்கு இப்போ சொல்வானேன். ?
எலி மருந்தை வைத்துக் கொல்லவும் வேண்டாமென்றவள் இவள்தான்.

இப்போது ஒரு அமைதி நிலவியது. அக்கணத்தில் எலி அமைதியாக பாத்திரங்கழுவிக்கு அடியில் இளைப்பாறிக்கொண்டிருந்தது போலும். இனி நான் போய் பாத்திரங் கழுவி இழுக்க வேண்டும்.  அது நேரே என் காலை நோக்கித்தான் வரும். அதுவே ஒரு பயத்தைக் கொடுத்தது. 

இதற்கிடையில் எனது தயக்கத்தைப் பார்த்து  உஷா என்னை பார்த்துச் சிரிக்க ஆரம்பித்தாள்.
' எலிக்கு பயப்பிடுகிற ஆளை பாருங்கோ'  
எனக்கு கோபம் பத்திக் கொண்டு வந்தது. ஒரு வீரத்துடன் பாத்திரம்  கழுவியை இழுக்க அது வெகு லாவகமாக  என் காலுக்கு மேலால்  ஏறி ஓடியது.  நான் அலறிக்  கொண்டு பின்னகர்ந்து குளிரூட்டியில் மோதிக் கொண்டேன் ஆனால் ஒன்றை அவதானித்தேன். உஷாவுக்கு அது எந்த பயத்தையும் கொடுக்கவில்லை. அவள் நிதானமாகவே வாளியால் மூட முயன்றாள்,  ஆனாலும்  அது தப்பி விட்டது.

எலி ஏறி  சென்ற திசையை பார்த்தேன். அது வரவேற்பறையினூடே ஓடி சுவர் அலுமாடிக்குள் புகுந்து விட்டது.
வாளியை உயர்த்தியபடி நின்ற உஷாவிடம்

‘எலியை வாளியால் அமுக்கிப் பிடித்து என்ன செய்து விடப்  போகிறாய். வெட்டிப் பரிசோதனை செய்யப் போகிறாயா?’ என்றேன். 

' தெருவில் இருக்கும் மழை நீர் ஓடும் குழிக்குள் போட்டு விடுவேன். அது ஒடித் தப்பி விடும். அது சரி என்ன பரிசோதனை என்றா சொன்னாய்’?

அன்று ஒரு காலை நேரம் என்பது மட்டும் நினைவிருக்கிறது. எனக்கு அப்போது ஒன்பது அல்லது பத்து வயதிருக்கும். முற்றத்தில் நின்ற மாமரக் கோப்பில் தொங்கும்  கிளிக்கூட்டுக்குள் ஒரு எலி நிற்கிறது.
அதை வெட்டிப் பரிசோதனை  செய்து  அக்கா படிக்க வேண்டுமாம். அந்தக் காலத்தில் உயிரியல் அதுவும் விலங்கியல் பாடம் படித்துகொண்டிப்பவர்களுக்கு இப்படி எலி, தவளை  வெட்டும்படியாகி விடும். அடுத்த நாள் அக்காவுக்குப் செய்முறை பரீட்சையில் அதுதான், அதுக்காகவே அது கிளிக்கூட்டுக்குள் அடைபட்டுக் கிடக்கிறது.  அதை யார் அக்காவுக்கு கொண்டு வந்து கொடுத்ததென்று எனக்கு தெரியாது.
நாளைக்கு அதன் உயிர் போய்விடும்.  பாவமாக இருந்ததால் கூட்டுக்குள் கிட்டப்  போய் அதன் கம்பியில் கையை வைத்தேன். இமைப்பதற்குள் எலி என் சுட்டு விரலைக் கடித்து விரலிலிருந்து ரத்தம் பெருகத் தொடங்கியது. பசியில் இருந்த அது ஏதோ உணவென்று நினைத்திருக்குமோ?  அல்லது கோபத்திலிருந்ததோ?

விரலுக்கு கட்டுப் போட்டபடி சைக்கிளில் ஏற்றி பொன்னர் பரியாரியிடம் கூடிச் சென்றான் அண்ணன்.
அவருக்கு காது கேட்பதில்லை.  அவரை  விட்டால்  அரசாங்க ஆஸ்பத்திரிக்கோ அவ்வளவு இலகுவாகப் போய் விட முடியாது.  வெள்ளை சட்டை, வேட்டி அணிந்து கட்டையாக  இருப்பார் பொன்னர்.
என்ன நடந்தது என்று பரியாரி கேட்க, எலி கடித்தது என்று அவருக்கு விளங்கப் படுத்துவதற்கு மேலே அவர் வீட்டுக்  கூரையை  எல்லாம்  காட்டி கூரையில் ஓடும் எலி என்று அண்ணன் விளங்கப்படுத்த முயன்றான். எலி கடித்ததையும் மறந்து சிரித்தேன்.

வீட்டுக்கு வந்த பின்தான் வேறொரு பயம் பிடித்தது. அயலிருந்த செல்வராசா  எலி கடிதத்தைக் கேள்விப்பட்டு பார்க்க வந்தான்.  அவன் சொல்லிவிட்டுப் போன ஒரு விடயம்தான் பயத்துக்கு காரணம்.
எலி கடித்தால் தோலெங்கும் வெண் புள்ளிகள் ஒரு படர் தேமல் போலத் தோன்றிப் பரவி மூடிவிடும் என்பதுதான். இப்படி புள்ளி விழுந்த ஒருவர் ஊரில் இருந்தார். அவரும் இப்படித்தான் எலிக்கூட்டில் கையை வைத்திருப்பாரா?
நான் அம்மாவிடமும் இதை சொல்லவில்லை. ஆனால்  ஒவ்வொரு நாளும்  காலையில் எழுந்ததும் அந்த வெள்ளைப் பொட்டுக்கள் தோலில் எங்காவது வந்து  விட்டதா என்று தவறாது பார்த்துக் கொள்வேன்.
அப்படி ஏதும் வந்ததாகக் காணோம். சில ஆண்டுகள் கழித்து வந்துவிடுமோ?
அது பொய்த் தகவல்தான் என்று பல ஆண்டுகளுக்குப் பிறகே தெரிந்தது.

நினைவுகளிருந்து விடுபட்டு எலி ஏறிச் சென்ற என் காலைப் பார்த்தேன். 

-->




No comments: