பொன் விழா ஆண்டில் இந்த படங்கள் 1969 - 2019 ச சுந்தரதாஸ் - பகுதி 11


ஓளிவிளக்கு
வெற்றிப் பட நாயகனாக தமிழ்த்திரையில் கோலோக்கிய மக்கள் திலகம் எம் ஜி ஆரின் நூறாவது படம் ஒளிவிளக்கு.  புரட்சி நடிகரின் நூறாவது படத்தை யார் தயாரிப்பார்கள் என்ற கேள்வி திரையுலகில் நிலவி வந்த காலகட்டத்தில் பலர் எம் ஜி ஆரின் நூறாவது படத்தைத் தயாரிப்பதில் ஆர்வம் காட்டினார்கள். ஆனால் அந்த வாய்ப்பை எம் ஜி ஆர் ஜெமினி ஸ்டுடியோ அதிபர் எஸ் எஸ் வாசனுக்கே கொடுத்தார்.

ஏற்கனவே ஏவிஎம் விஜயா புரடக்ஷன்ஸ், மாடர்ன் தியட்டர்ஸ் என்று பல பிரபலமான படநிறுவனங்களில் நடித்திருந்த எம் ஜி ஆருக்கு ஜெமினி நிறுவனத்திலும் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் நீண்ட காலமாக இருந்து வந்தது. ஆனால் வாசன் எம் ஜி ஆரை இது தொடர்பாக அணுகாமலே இருந்து வந்தார். 
குடியிருந்த கோயில் படத்தின் சில காட்சிகளை ஜெமினி ஸ்டுடியோவில் படமாக்கும் படி பார்த்துக் கொண்ட எம் ஜி ஆர் அதன் மூலம் வாசைன எங்கு சந்திக்கும் சூழ்நிலையை ஏற்படுத்திக் கொண்டார். இதன் விளைவாக ஒளிவிளக்கு படத்தை அதிலும் எம் ஜி ஆரின் நூறாவது படத்தைத் தயாரிக்கும் வாய்ப்பு வாசனுக்கு ஏற்பட்டது. 

இந்தியில் தர்மேந்திரா மினாகுமாரி நடித்து வெற்றி கண்ட பூல் ஓர் பதார் படத்தை தமிழில் தயாரிப்பதற்கு இணக்கம் உருவானது. சந்தர்ப்ப சூழ்நிலையால் சிறுவயது முதல் திருடனாகும் முத்து கொள்ளையடிக்கப் போன இடத்தில் விதவையை பராமரிக்க வேண்டிய சூழ்நிலைக்கு உள்ளாகிறான். ஆனால் அவன் சார்ந்திருக்கும் கொள்ளைக் கூட்டமோ விதவைப் பெண் மூலம் அவன் திருந்தி விடக்கூடாது என பல சதிகளை தீட்டுகிறது. கொள்ளைக் கூட்டத்தில் இருக்கும் நடனப் பெண் கீதாவும் முத்துவை காதலிக்கிறான். இதற்கிடையில் தீ விபத்தில் சிக்கிய குழந்தையை காப்பாற்ற முனையும் முத்து தீயினால் காயப்படுகிறான்.

ஏராளமான மக்களின் பிரார்த்தனையால் உயிர் பிழைக்கும் முத்து புடம் போட்டட தங்கமாகிறான்.

இந்தக் கதையை அடிப்படையாக கொண்டு ஒளிவிளக்கு கதை உருவானது. மூலக் கதையான இந்திப்படத்தில் திருடனுக்கும் விதவைக்கும் இடையே உருவாகும் காதல் இறுதியில் கல்யாணத்தில் முடிவதாக காட்டியிருந்தார்கள்.  இதன் மூலம விதவை சீர்திருத்த மணம் திருடனுக்கு மறுவாழ்வு என்பன வலியுறுத்தப்பட்டிருந்தது. ஆனால் தமிழில் எம் ஜி ஆர் ஹீரோ என்பதால் கதையில் அவருக்கேற்றாற் போல் சில மாறுதல்கள் செய்யப்பட்டன. விதவைக்கும் கதாநாயகனுக்கும் இடையிலான உறவு சகோதர உறவாக சித்தரிக்கப்பட்டது.  அதற்கு பதில் நடனப் பெண்ணுக்கும் நாயகனுக்கும் இடையே காதல் என்பதாக காட்டப்பட்டது. விதவை வேடத்தை சௌகார் ஜானகி ஏற்று திறமையாக நடித்திருந்தார். நடனப் பெண்ணாக வரும் ஜெயலலிதா கவர்ச்சிப் பதுமையாக காட்சியளித்தார்.  


படத்தின் டைட்டிலில் தன் பெயர் தான் முதலில் வரவேண்டும் என்று சௌகார் ஜானகியும் ஜெயலலிதாவும் பிடிவாதம் பிடித்து இறுதியில் ஜெயலலிதாவே வெற்றி பெற்றார்.

படத்தில் நகைச் சுவையை சோ என்னெத்தே கன்னையா முத்துலஷ்மி ஆகியோர் ரசிக்கும்படி வழங்கியிருந்தார்கள். படத்தில் இரண்டு வில்லன்கள் அசோகன் தன்னுடைய பாணியில் நடித்திருந்தார். மனோகர் சண்டைக் காட்சியில் ஜொலித்தார். இவர்களுடன் மொட்டைத்தலை நடிகரான புத்தூர் நடராஜன் காட்சி விறுவிறுப்பாக இருந்தது.

சொர்ணம் எழுதிய வசனங்கள் கருத்தாழம் மிக்கதாக இருந்தன. வாலியின் பாடல்களுக்கு இசை எம் எஸ் விஸ்வநாதன். தைரியமாகச் சொல், ருக்குமணியே ஆண்டவனே உன் பாதங்களை நான்  நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடி போன்ற பாடல்கள் மிக பிரபலமடைந்தன.

பிற்காலத்தில் தமிழக முதல்வாரன எம் ஜி ஆர் சுகவீன முற்றபோது இப் படத்தில் இடம் பெற்ற ஆண்டவனே உன் பாதங்களை பாடல் தமிழகத்தில் பட்டி தொட்டி எங்கும் ஒலித்தன. ருக்குமணியே பப்பரபரபர பாடலில் இடையே ஒலிக்கும் ஆங்கிலச் சொற்களான please once again, look at me போன்றவற்றிற்கு விஸ்வநாதனின் உதவியாளர் ஜோசப் கிருஷ்ணா குரல் கொடுத்திருந்தார்.

படத்தை ஒளிப்பதிவு செய்தவர் ரவிகாந்த்நிகாய்ச் தைரியமாய் சொல் பாடலில் எம் ஜி ஆரை விதவிதமாகக் காட்டியிருந்தார். பிரபல இயக்குனர் சாணக்யாவின் டைரக்ஷனில் உருவான ஒளிவிளக்கு இலங்கையில் 69ம் ஆண்டு வெளிவந்து ஆறுமாதங்களுக்கு மேலாக ஓடி மாபெரும் வெற்றி கண்டது.
No comments: