உலகச் செய்திககளும் கட்டுரைகளும்


ஹொங்கொங்கை காப்பாற்றுங்கள் - ட்ரம்பிடம் வலியுறுத்திய போராட்டக்காரர்கள்

சீனாவின் 'ஒரு நாடு, இரு சமூக அமைப்பு முறைகள்" கொள்கை என்றால் என்ன?

ஈரான் விவகாரத்தில் முன்னைய கடும்போக்கிலிருந்து தளர்வை வெளிப்படுத்தும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்

சீனாவுடனான வர்த்தகப் போரில் இருந்து அமெரிக்கா படிக்கவேண்டிய நான்கு பாடங்கள்

றொபேர்ட் முகாபேயின் முரண்நிலையான மரபு 

இந்திய அரசியலமைப்பின் உறுப்புரை 370 தொடர்பில் சீனாவின் நிலைப்பாடு

மூன்று செயற்கை கோள்களை விண்ணில் செலுத்தியது சீனா

கடும் கட்­டுப்­பா­டு­களை விதிக்கும் ட்ரம்பின்  திட்­டத்திற்கு அனு­மதி


ஹொங்கொங்கை காப்பாற்றுங்கள் - ட்ரம்பிடம் வலியுறுத்திய போராட்டக்காரர்கள்

09/09/2019 குற்றவாளிகளை சீனாவுக்கு நாடு கடத்தும் சட்டமூலத்தை ஹொங்கொங் அதிபர் திரும்பப் பெற்றபோதிலும் பிற நிபந்தனைகளை நிறைவேற்றக் கோரி போராட்டக்காரர்கள் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிடம் வலியுறுத்தி வருகின்றனர்.

இங்கிலாந்தின் காலனி ஆதிக்கத்தில் இருந்து ஹொங்கொங் விடுவிக்கப்பட்ட பின்னர் கடந்த 1997 ஆம் ஆண்டு சீனாவின் நிர்வாகப் பகுதிகளில் ஒன்றானது ஹொங்கொங்.சீனாவின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருந்தாலும், ஹொங்கொங் நாட்டுக்கென தனி சட்டம், அரசியலமைப்பு எல்லாம் உள்ளன.
இந்நிலையில், ஹொங்கொங்கில் குற்றம் சாட்டப்பட்ட குற்றவாளிகளை சீனாவுக்கு அழைத்துச் சென்று விசாரிக்கும் சட்டமூலத்தை கடந்த ஜூன் மாதம் ஹொங்கொங் கொண்டு வந்தது. 
இந்த சட்டமூலத்துக்கு எதிராக ஹொங்கொங்கில் தீவிரப் போராட்டங்கள் நடந்தன. லட்சக்கணக்கான மக்கள் வீதிகளில் திரண்டு புதிய சட்டத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாணவர்களும் போராட்டத்தில் குதித்தனர். கைதும் செய்யப்பட்டனர்.
இந்தப் போராட்டங்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் உள்ளிட்ட பலரும் ஆதரவு தெரிவித்தனர். தொடர் போராட்டம் காரணமாக ஹொங்கொங்கின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டது. ஹொங்கொங் தலைமைச் செயல் அதிகாரி கேரி லேம் பதவி விலக வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன.
இந்நிலையில், போராட்டக்காரர்களுக்கு அடிபணிந்து சீனாவுக்கு குற்றவாளிகளை அழைத்துச் சென்று விசாரிக்கும் புதிய சட்ட திருத்த சட்டமூலத்தை திரும்பப் பெறப்படும் என்று கேரி லேம் கடந்த வாரம் அறிவித்தார். 
எனினும் போராட்டக்காரர்கள் வைத்த பிற நிபந்தனைகளையும் நிறைவேற்றுமாறு தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை அங்குள்ள அமெரிக்கத் தூதரகத்தில் ஹொங்கொங்கை காப்பாற்றுங்கள் என்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்திக்கொண்டு கையில் அமெரிக்கக் கொடியுடன் பேரணி சென்றனர். மேலும், சீனாவிடமிருந்து தங்களை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை போராட்டக்காரர்கள் ட்ரம்ப்பின் முன் வைத்தனர்.
அத்துடன் இன்று பாடசாலை மாணவர்கள் பலரும் போராட்டக்காரர்களுக்கு ஆதரவு தெரிவித்து சாலையில் மனிதச் சங்கிலியில் ஈடுபட்டனர்.
இந் நிலையில் ஹொங்கொங் விவகாரத்தில் வெளிநாட்டினர் யாரும் தலையிட வேண்டாம் என்று சீனா கூறியுள்ளது. ஹொங்கொங்கின் முடிவுகளுக்கு மதிப்பும், ஆதரவும் அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.   நன்றி வீரகேசரி 


சீனாவின் 'ஒரு நாடு, இரு சமூக அமைப்பு முறைகள்" கொள்கை என்றால் என்ன?

10/09/2019 ஹொங்கொங்கில் 13 ஆவது வாரமாகத் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆர்ப்பாட்டங்கள், மக்கள் சீனக்குடியரசின் 'ஒரு நாடு, இரு சமூக அமைப்பு முறைகள்" என்ற பல தசாப்தக் கொள்கை மீது கவனத்தைக் குவித்திருக்கின்றன.
ஹொங்கொங்கின் அரசாங்கம் சர்ச்சைக்குரிய நாடு கடத்தல் சட்டமொன்றைக் கொண்டுவர முயற்சித்ததையடுத்து ஏப்ரலில் ஆர்ப்பாட்டக்காரர்கள் நகரின் வீதிகளை ஆக்கிரமிக்கத் தொடங்கினார்கள். ஹொங்கொங்கின் சுயாட்சியை அவமதிப்பதன் மூலம் இந்தக் கொள்கையை மீறுவதற்கு பெய்ஜிங் முயற்சிக்கிறது என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றஞ்சாட்டுகின்றார்கள். சீனா அதன் தலையீட்டை நிறுத்த வேண்டுமென்று ஆர்ப்பாட்டக்காரர்கள் விரும்பும் அதேவேளை, அவர்களைப் பயங்கரவாதிகளுடன் ஒப்பிட்டிருக்கும் பெய்ஜிங் ஹொங்கொஹ் மீதான அதன் சுயாதிபத்தியத்திற்கு வரக்கூடிய எந்தவொரு சவாலையும் பொறுத்துக்கொள்ளப் போவதில்லை என்று கூறியிருக்கிறது.
 எனவே 'ஒரு நாடு, இரு சமூக அமைப்பு முறைகள்" என்ற இந்த அணுகுமுறை என்ன என்பதைப் பார்ப்போம்.
கொள்கையின் தோற்றுவாய்
இதனைச் சுலபமாகச் சொல்வதென்றால், முன்னாள் காலனிகளான ஹொங்கொங் மற்றும் மக்காவூ விசேட நிர்வாகப் பிராந்தியங்கள் மக்கள் சீனக்குடியரசின் அங்கமாக இருக்கின்ற அதேவேளை சீனப்பெருநிலப்பரப்பில் இருக்கின்றதையும் விட வேறுபட்ட பொருளாதார மற்றம் அரசியல் முறைமைகளைக் கொண்டிருக்கலாம் என்பதே அர்த்தமாகும்.
ஒரு நாடு, இரு சமூக அமைப்பு முறைகள் கொள்கை 1970 களின் பிற்பகுதியில் சீனாவின் ஆட்சியதிகாரத்தைத் தன்கையில் எடுத்துக்கொண்ட உடனடியாக டெங் சியாவோபிங்கினால் முதலில் முன்வைக்கப்பட்டது. ஒரு நாடு, இரு சமூக அமைப்பு முறைகள் கொள்கையின் கீழ் சீனாவையும், தாய்வானையும் ஒன்றிணைப்பதே டெங்கின் திட்டமாக இருந்தது. தாய்வானுக்கு உயர்ந்த சுயாட்சியை வழங்குவதாக அவர் உறுதியளித்தார். பிறகு சீனாவின் தேசியவாத அரசாங்கம் (ஷியாங்கே ஷேக் தலைமையிலானது) உள்நாட்டுப்போரில் 1949 இல் கம்யூனிஸ்டுக்களால் தோற்கடிக்கப்பட்டதையடுத்து தாய்வானுக்குத் தப்பியோடி அங்கிருந்து செயற்பட்டார்.
டெங்கின் திட்டத்தின் கீழ் தாய்வான் தீவு அதன் முதலாளித்துவப் பொருளாதார அமைப்பு முறையைத் தொடர்ந்து பின்பற்றலாம், தனியான நிர்வாகமொன்றை நடத்தி சொந்த இராணுவத்தையும் வைத்திருக்கலாம். ஆனால் அவற்றைச் சீனாவின் சுயாதிபத்தியத்தின் கீழேயே செய்யவேண்டும். கம்யூனிஸ்ட் கட்சியின் இந்த யோசனையை தாய்வான் நிராகரித்துவிட்டது. தாய்வான் மீதான தனது உரிமைகோரலை பெய்ஜிங் ஒருபோதும் கைவிடவில்லை என்ற போதிலும் அந்தத் தீவு சீனப் பெருநிலப்பரப்பிலிருந்து தனியானதொரு ஆட்சி நிர்வாகமாகவே இயங்கிக்கொண்டு வருகிறது.
 காலனிப் பிராந்தியங்களின் மீள்வருகை
ஹொங்கொங்கையும், மக்காவூவையும் முறையே நிர்வகித்து வந்த பிரிட்டனுடனும், போர்த்துக்கல்லுடனும் பெய்ஜிங் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்த போது, ஒரு நாட்டிற்குள் இரு சமூக அமைப்பு முறைகள் என்ற யோசனை மீண்டும் வெளிக்கிளம்பியது.
 முதலாவது அபினி யுத்தத்திற்குப் பிறகு 1842 ஆம் ஆண்டில் பிரிட்டன் ஹொங்கொங்கை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தது. 1898 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசாங்கமும், சீனாவின் ஜிங் அரசவம்ச ஆட்சியும் இரண்டாவது பீக்கிங் சாசனத்தில் கைச்சாத்திட்டன. 
அந்த சாசனம் புதிய பிராந்தியங்கள் என்று அறியப்பட்ட ஹொங்கொங்கை சூழவுள்ள தீவுகள் 99 வருடக் குத்தகைக்கு பிரிட்டனின் கட்டப்பாட்டின் கீழ் வருவதற்கு அனுமதித்தது. இந்தக் குத்தகை 1997 இல் காலாவதி யாகும் போது தீவுகளை சீனாவிற்குத் திருப்பிக் கையளிப்பதாக பீக்கிங்கிற்கு லண்டன் வாக்குறுதி அளித்தது. மறுபுறத்தில் மக்காவூ 1557 ஆம் ஆண்டிலிருந்து போர்த்துக்கேயரினால் ஆட்சி செய்யப்ப ட்டுவந்தது. 1970 களின் நடுப்பகுதியில் அவர்கள் படைகளை வாபஸ்பெற ஆரம்பித்தார்கள்.
 1980 களில் டென் சியாவோபிங்கின் சீனா இரு பிராந்தியங்களினதும் பொறுப்பைக் கைப்பற்றிக் கொள்வதற்காக பிரிட்டனுடனும், போர்த்துக்கல்லுடனும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்தது. ஒரு நாடு, இரு சமூக அமைப்பு முறைகள் யோசனையின் கீழ் பிராந்தியங்களில் சுயாட்சி முறையை மதிப்பதாக பெய்ஜிங் உறுதியளித்தது. 1984 டிசம்பர் 19 ஆம் திகதி பெய்ஜிங்கில் சீனாவும், ஐக்கிய இராச்சியமும் சீன – பிரிட்டிஷ் கூட்டுப்பிரகடனத்தில் கைச்சாத்திட்டன. இந்தப் பிரகடனம் பிரிட்டனின் குத்தகை காலாவதியாவதைத் தொடர்ந்து 1997 இல் சீனாவிற்குக் கையளிக்கப்பட்டதன் பின்னர் ஹொங்கொங்கில் நடைமுறையிலிருக்க வேண்டிய சுயாட்சிக்கும் சட்ட, பொருளாதார மற்றும் அரசாங்க முறைமைகளுக்கான நிபந்தனைகளை வகுத்திருந்தது.
அதேபோன்றே 1987 மார்ச் 26 ஆம் திகதி மக்காவூ விவகாரம் தொடர்பில் சீனாவும் போர்த்துக்கல்லும் கூட்டுப்பிரகடனம் ஒன்றில் கைச்சாத்திட்டது. பெய்ஜிங்கிற்கு மக்காவூ கையளிக்கப்பட்ட பிறகு அந்தப் பிராந்தியத்துக்கான நிர்வாக அமைப்பு முறைகள் தொடர்பில் அதேபோன்ற உறுதிமொழிகளை சீனா வழங்கியது.
 ஹொங்கொஹ் 1997 ஜுலை முதலாம் திகதி சீனாவின் கட்டுப்பாட்டின் கீழ் மீண்டும் வந்தது. மக்காவூவின் சுயாதிபத்தியம் 1999 டிசம்பர் 20 இல் கைமாற்றப்பட்டது. இரு பிராந்தியங்களும் சீனாவின் விசேட நிர்வாகப் பிராந்தியங்களாக மாறின. அவை தமக்கென சொந்த நாணயத்தையும், பொருளாதார மற்றும் சட்ட முறைகளையும் கொண்டிருக்கலாம். ஆனால் பாதுகாப்பும், இராஜதந்திரமும் பெய்ஜிங்கினாலேயே தீர்மானிக்கப்படும். அவற்றின் மினி அரசியலமைப்புக்கள் 50 வருடங்களுக்கு, அதாவது ஹொங்கொங்கிற்கு 2047 ஆம் ஆண்டு வரையும், மக்காவூவிற்கு 2049 வரையும் செல்லுபடியாகும். அதற்குப் பிறகு என்ன நடக்கும் என்பது தெளிவில்லை.

தற்போதைய நெருக்கடிக்குக் காரணம்
 அண்மைய வருடங்களில் ஹொங்கொங் நகரின் சுயாட்சியை பலவீனப்படுத்துவதற்கு சீனா மேற்கொள்வதாகக் கூறப்படும் முயற்சிகளுக்கு எதிராக ஹொங்கொங்கின் ஜனநாயக ஆதரவு சிவில் சமூகத்திடமிருந்து எதிர்ப்புக்கள் கிளம்பி வளர ஆரம்பித்தன. இது பெய்ஜிங்கினால் தெரிவு செய்யப்படும் ஹொங்கொங் அரசாங்கத்திற்கும், இளைஞர்களுக்குமிடையே பதட்டத்தை உருவாக்கியது.
2016 – 2017 இல் பெய்ஜிங்கை கண்டனம் செய்த 6 சட்டசபை உறுப்பினர்கள் தடை செய்யப்பட்டார்கள். 2018 இல் பெய்ஜிங்கை கண்டனம் செய்துவந்த உள்ளுர் கட்சியான ஹொங்கொங் தேசிய கட்சி தடை செய்யப்பட்டது. இவ்வருடம் ஹொங்கொங்கின் பிரதம ஆட்சியாளர் கெரி லாம் உத்தேச நாடு கடத்தல் சட்டமூலத்தைப் பிரேரித்தார். இந்தச் சட்டமூலம் ஹொங்கொங் நாடு கடத்தல் உடன்படிக்கைகளைக் கொண்டிராத பகுதிகளுக்கு ஹொங்கொங்வாசிகளை நாடு கடத்துவதை நோக்கமாகக் கொண்டு இந்தச் சட்டமூலம் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சிக்கு அடிபணிந்து செயற்படுகின்ற நீதித்துறை காணப்படுகின்ற சீனப் பிரதான நிலப்பரப்பிற்கு பெய்ஜிங்கை விமர்சிப்பவர்களை ஹொங்கொங் அரசாங்கம் நாடு கடத்துவதற்கு அனுமதிக்குமென அதனை எதிர்ப்பவர்கள் கூறுகின்றார்கள்.
 இதனாலேயே ஆர்ப்பாட்டங்கள் மூண்டன. உத்தேச நாடு கடத்தல் சட்டமூலத்தை இடைநிறுத்துவதற்கு கேரி லாம் தீர்மானித்த பின்னர் கூட ஆர்ப்பாட்டங்கள் தொடர்ந்த வண்ணமேயுள்ளன. பொலிஸாருடன் அடிக்கடி மோதல்களில் ஈடுபடும் ஆர்ப்பாட்டக்காரர்கள் சட்டமூலம் முறைப்படி வாபஸ் பெறப்பட வேண்டுமென்றும், கேரி லாம் பதவியிலிருந்து விலக வேண்டுமென்றும், கைது செய்யப்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் விடுதலை செய்யப்பட வேண்டுமென்றும், ஹொங்கொங்கின் தேர்தல்முறை மறுசீரமைக்கப்பட வேண்டும் என்றும் இப்போது கூறுகின்றார்கள். (த இந்து)  நன்றி வீரகேசரி 


ஈரான் விவகாரத்தில் முன்னைய கடும்போக்கிலிருந்து தளர்வை வெளிப்படுத்தும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்

10/09/2019 பிரான்ஸின் பையாரிட்ஸ் நகரில் அண்மையில் நடைபெற்ற ஜி-7 உச்சிமாநாட்டின் போது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது நாடு ஈராக்கில் ஒரு தலைமைத்துவ மாற்றத்தை எதிர்பார்க்கவில்லை என்று பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனிடம் கூறியிருந்தார். இந்த நாட்டில் முன்னரும் பல தடவைகள் தலைமைத்துவ மாற்றம் இடம்பெற்றிருந்தது.
அதனால் பயனேற்படவில்லை என்று ட்ரம்ப் கூறினார். பல மாதகால பதற்ற அதிகரிப்பிற்குப் பிறகு வாஷிங்டனுக்கும், தெஹ்ரானுக்கும் இடையே உத்தேச பேச்சுவார்த்தை ஒன்றுக்கான நம்பிக்கையான சமிக்ஞையாக அவரின் இந்தக் கூற்று அமைந்திருக்கிறது.
ஈரானின் ஏற்றுமதிகளை முற்றுமுழுதாகத் துண்டிக்க முன்னர் நாட்டம் கொண்டிருந்த அமெரிக்க ஜனாதிபதி, புதிய அணு உடன்படிக்கை ஒன்றை எட்டுவதற்கான ஊக்குவிப்பாக அமெரிக்காவும் அதன் நேசநாடுகளும் ஈரானுக்கு கடன் உதவிகைள அல்லது சில தவணை அடிப்படையிலான கடன்களை வழங்கலாம் என்ற யோசனைகளையும் கூடத் தெரிவித்திருந்தார்.
நேசக்கரம் நீட்டுதல்
ட்ரம்பிடமிருந்து வெளிப்பட்டிருக்கும் இந்த நல்லெண்ண சமிக்ஞைகள் கடந்த காலத்தில் ஈரான் தொடர்பில் அவர் கொண்டிருந்த நிலைப்பாட்டிலிருந்து குறிப்பிடத்தக்க ஒரு விலகலாக அமைந்திருக்கிறது. ஈரானுக்கும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச்சபையின் நிரந்தர உறுப்பு நாடுகளுக்கும், ஜேர்மனி மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றுக்கும் இடையே 2015 இல் கைச்சாத்திடப்பட்ட அணு உடன்படிக்கையிலிருந்து 2018 மே மாதத்தில் அமெரிக்கா விலகிக்கொண்டது. அந்த உடன்படிக்கையை ட்ரம்ப், முன்னொருபோதும் இல்லாத படுமோசமான உடன்படிக்கைரூஙரழவ் என்று ஏளனம் செய்திருந்தார். உடன்படிக்கை பயனுடையதாக இருக்கிறது என்று சர்வதேச அணுசக்தி நிறுவனமும் தனது சொந்த உயர்மட்ட ஆலோசகர்களும் கூறிய அபிப்பிராயங்கள் அனைத்தையும் அலட்சியம் செய்தே ட்ரம்ப் அதிலிருந்து வெளியேறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அண்மையில் ட்ரம்ப் தெரிவித்த கருத்துக்களைத் தொடர்ந்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டிருப்பதால் அமெரிக்க தடைவிதிப்புகளிலிருந்து ஈரானுக்கு நிவாரணத்தைப் பெற்றுக்கொடுப்பதற்கும் யூரேனியத்தை வளப்படுத்தும் செயற்பாடுகளை மீண்டும் ஆரம்பிக்காதிக்க தெஹ்ரானை வழிக்குக் கொண்டுவருவதற்கும் மேற்கொண்டுவரும் முயற்சிகள் பலம் பெற்றிருக்கின்றன.
ட்ரம்பின் கருத்துக்கள் ஈரானிய ஜனாதிபதி ஹஸன் ரொஹானி மனதில் படியவில்லை. உடன்படிக்கையை மீளக்கட்டியெழுப்புவதிலும் உள்நாட்டில் தனது நிலைப்பாட்டை முன்னிலைப்படுத்துவதிலும் பெருமளவு நலன்கள் அவருக்கு இருக்கின்ற போதிலும், சகல தடைகளும் நீக்கப்படும்வரை பேச்சுவார்த்தைகளை நடத்த முடியாது என நிராகரித்துவிட்டது. மேலும் புகைப்படத்திற்குப் பாவனைகாட்டும் வாய்ப்புக்களில் தனக்கு அக்கறையில்லை என்றும் அவர் கூறியிருந்தார். இந்தக் கூற்று உருப்படியான எந்த விளைவுகளையும் தராத உச்சிமாநாடுகளை ட்ரம்பும், வடகொரிய ஜனாதிபதி கிம்-ஜொங்-உன்னும் நடத்தியதையே குத்தலாகச் சுட்டிக்காட்டியது.
எவ்வாறெனினும் பேச்சுவார்த்தைகளுக்கு ஈரான் ஜனாதிபதி விதிக்கின்ற நிபந்தனைகள் விளங்கிக்கொள்ளக் கூடியவை. ஈரானைத் தண்டிக்கும் நோக்கிலான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதை ஐரோப்பிய ஒன்றியம்ரூபவ் ரஷ்யாரூபவ் சீனா ஆகியவை எதிர்த்த போதிலும்கூட தடைகள் சம்பந்தப்பட்ட விவகாரத்தில் ஈரானுக்கு எந்த நிவாரணமும் கிடைக்கவில்லை. அமெரிக்கத் தடைகளைத் தவிர்ப்பதற்கு மறைமுகமான வழிமுறைகளை ஐரோப்பிய கொடுப்பனவுகள் ஏற்பாட்டு நிறுவனம் இன்ஸ்டெக்ஸ் (The European Payments Channel) மிகவும் காலந்தாமதித்து மேற்கொண்ட நடவடிக்கைகள் மட்டுப்படுத்தப்பட்ட பயன்களையே தந்தது. ஏனென்றால் ரூடவ்ரானின் வெளிநாட்டு அந்திய செலாவணி வருவாயில் பிரதானமானதொரு மூலாதாரமாக இருக்கும் எண்ணெய் விற்பனைகளை இன்ஸ்டெக்ஸ் முறைமை உள்ளடக்கவில்லை. அண்மைய மதிப்பீடுகளின்படி 2-18 ஏப்ரல் அளவில் தினமொன்றுக்கு 25 இலட்சத்திற்கும் அதிகமான பீப்பாய்களாக இருந்த தெஹ்ரானின் மசகு ஏற்றுமதிகள், இப்போது தினமொன்றுக்கு 3 இலட்சம் பீப்பாய்களாக வீழ்ச்சியடைந்திருக்கின்றது. ஈரானுடன் வர்த்தகத்தைத் தொடர்ந்து செய்யும் கோப்பரேட் நிறுவனங்கள் டொலர் முறைமையிலிருந்து துண்டித்து விடப்படும் ஆபத்தை எதிர்நோக்கியிருக்கிறது.
ஈரான் மீது உச்சபட்ச நெருக்குதலை பிரயோகிக்கும் அமெரிக்கத் தந்திரோபாயத்தில் இதுவரையில் எந்தவொரு ஓய்வையும் காணக்கூடியதாக இருக்கவில்லை. இம்மாத ஆரம்பத்தில் ட்ரம்ப் நிர்வாகம் ஈரானிய வெளியுறவு அமைச்சர் ஜாவாத் சரீஃபுக்கு எதிராகத் தடைகளை விதித்தது. ஜுன் மாதத்தில் ஈரானிய அதியுயர் தலைவர் ஐயதுல்லா அலி கார்மெனிக்கு எதிராக விதிக்கப்பட்ட தடைகளை ஈரான் கொடுமையானதும் முட்டாள்தனமானதும் என்று ஆத்திரத்துடன் வர்ணித்திருந்தது. ஏப்ரல் மாதம் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவலர் படையை பயங்கரவாத அமைப்பு என்று அமெரிக்கா பட்டியலிட்டது.
இந்த நடவடிக்கைகளுக்கான பதிலடியாக ஜேர்மன் நீரணையில் எண்ணெய் தாங்கிக் கப்பல்களைக் கைப்பற்றியதன் மூலமாக மேற்கு நாடுகளின் கடற்போக்குவரத்து நடவடிக்கைகளை முடங்கச்செய்வதில் தனக்கிருக்கம் ஆற்றலை ஈரான் வெளிக்காட்டியது. அமெரிக்க ஆளில்லா வேவு விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியதைத் தொடர்ந்து பதிலடி கொடுப்பதிலிருந்து ட்ரம்ப் பின்வாங்கிய அதேவேளை அந்த ஏவுகணைத் தாக்குதல் எந்த நேரத்திலும் மோதல் மூளக்கூடிய ஆபத்தைப் பிரகாசமாக வெளிப்படுத்தியது.
முன்நோக்கி நகர்தல்
ரூடவ்ரானில் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தும் திட்டம் எதுவும் அமெரிக்காவிடம் இல்லை என்று ஜனாதிபதி ட்ரம்ப் கூறியதை வெளியுறவு அமைச்சர் மைக் பொம்பியோவோ அல்லது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜோன் வோல்ற்றனோ எளிதில் விளங்கிக்கொள்ளப் போவதில்லை.
ஆனால் தனது நிர்வாகத்தில் இருக்கக்கூடிய கடும்போக்காளர்களுக்கு எதிராக நகர்வுகளைச் செய்யும் சில நடவடிக்கைகளை எடுக்க முனைவது இது முதற்தடவையும் அல்ல. அமெரிக்க ஜனாதிபதியினால் தெரிவிக்கப்பட்ட யோசனைகளைத் தொடர்ந்து வாஷிங்டன் அங்கீகாரத்திற்கு உட்பட்ட வகையில் 1500 கோடி டொலர்கள் கடனுதவியைப் பூர்த்தி செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதை பிரான்ஸ் உறுதி செய்திருக்கிறது. மேற்கு நாடுகளின் நோக்கங்களில் ரூடவ்ரானின் நம்பிக்கையை மேம்படுத்தக் கூடியவையாக இந்த முன்முயற்சிகள் அமைந்திருக்கின்ற அதேவேளை, இறுதி இலக்கு 2015 அணு உடன்படிக்கைக்குப் புத்துயிர் அளிப்பதாகவே இருக்க வேண்டும்.
ஈரானில் கடும்போக்காளர்கள் தங்களைப் பெருமளவிற்கு முன்நிலைப்படுத்திக்கொண்டு செயற்பட ஆரம்பித்திருப்பதிலிருந்து ஜனாதிபதி ரொஹானியின் நிலை பலவீனமடைந்திருக்கிறது. அவரால் கடும்போக்காளர்களைத் தனிமைப்படுத்த இயலாத பட்சத்தில் அணு உடன்படிக்கையில் முன்நோக்கி நகர்வதென்பது சாத்தியமில்லாமல் போகும்.  நன்றி வீரகேசரி 
(இந்தக் கட்டுரை “இந்து” பத்திரிகையின் ஒரு பிரதி ஆசிரியர் கரமெல்லா சுப்ரமணியம் எழுதியது)
சீனாவுடனான வர்த்தகப் போரில் இருந்து அமெரிக்கா படிக்கவேண்டிய நான்கு பாடங்கள்

10/09/2019 பெய்ஜிங்,( சின்ஹுவா ) உலகின் பல பாகங்களிலும் இப்போது மாணவர்கள் கல்வியாண்டின் புதிய பருவத்துக்கு பாடசாலைகளுக்கு சென்றுகொண்டிருக்கிறார்கள். அவர்களைப் போன்றே வாஷிங்டனில் உள்ள கடும்போக்கு வர்த்தகக் கொள்கையாளர்கள்  சீனாவுடனான தங்களது பயனற்ற வர்த்தகப் போரில் இருந்து குறைந்தது நான்கு பாடங்களை படிக்கத் தொடங்கவேண்டிய நேரமாகவும் இது அமைந்திருக்கிறது.  
 அமெரிக்காவின் உச்சபட்ச நெருக்குதல் தந்திரோபாயத்துக்கு முன்னால் சீனா வளைந்துகொடுக்காமல் நிமிர்ந்து உறுதியாக நிற்கிறது என்பது முதலாவது பாடம்.
30,000 கோடி டொலர்கள் பெறுமதியான சீன இறக்குமதிகள் மீது அமெரிக்க அரசாங்கத்தினால் விதிக்கப்படுகின்ற புதிய மேலதிக வரிகளின் ஒரு பகுதி செப்டெம்பர்  முதலாம் திகதி நடைமுறைக்கு வந்திருக்கிறது. எஞ்சிய பகுதி வரிகள் டிசம்பர் 15 நடைமுறைக்கு வரும்.
ஆனால், பெய்ஜிங்கிடமிருந்து நியாயத்துக்கு ஒவ்வாத சலுகைகளை கறந்தெடுக்கும் நோக்கில் வாஷிங்டன் தொடர்ந்து தீவிரப்படுத்திவருகின்ற வர்த்தகத் தாக்குதல் வீழ்ச்சியையே சந்தித்திருக்கிறது.அது மட்டுமன்றி, அமெரிக்காவின் பொருளாதாரப்போர் வெறிக்கு எதிரான எதிராக சீனாவின் மனவுறுதி மேலும் மேலும் அதிகரித்திருக்கிறது ; அதன் எதிர் நடவடிக்கைகள் தீர்க்கமானவையாகவும் நன்கு சிந்தித்து நிதானத்துடன் மேற்கொள்ளப்படுபவையாகவும் இருக்கின்றன. பெய்ஜிங் கைவசம் இன்னும் போதுமான நடவடிக்கைகள் இருக்கின்றன.
சீனாவின் பொருளாதாரம் வலிமையானதாகவும் தற்போதைய வர்த்தகப் போரின் விளைவான நெருக்குதலுக்கு தாக்குப்பிடிக்கக்கூடியளவுக்கு உறுதியானதாகவும் இருக்கிறது என்பது வெள்ளைமாளிகையின் வரி அதிகாரிகள் படிக்கவேண்டிய இரண்டாவது பாடமாகும்.
சீனாவுக்கு மாற்றீடான நாடுகளைக் கண்டறியுமாறு அமெரிக்கக் கம்பனிகளை தூண்டும் முயற்சிகளில் அமெரிக்காவில் உள்ள சிலர் அண்மைக்காலமாக ஈடுபட்டிருக்கின்றார்கள்.என்றாலும் கூட அமெரிக்க முதலீடுகள் சீனாவில் இன்னமும் அதிகரிக்கின்றன என்பதே உண்மையாகும்.
இந்த வருடத்தின் முதல் அரைப்பகுதியில் அமெரிக்க கம்பனிகள் 680 கோடி டொலர்களை முதலீடு செய்தன ; அது முன்னைய இரு வருடங்களிலும் இதே காலப்பகுதியில் செய்யப்பட்டிருக்கக்கூடிய அமெரிக்க முதலீட்டை விடவும் 1.5 சதவீத அதிகரிப்பாகும் என்று ' றொங்டிங் கொன்சல்ரிங் ' என்ற நியூயோர்க் பொருளாதார ஆராய்ச்சி நிறுவனத்தின் தரவுகளில் இருந்து அறியக்கூடியதாக இருக்கிறது. அந்த முதலீட்டு முயற்சிகளில் ஒன்று ' ரெல்சா ' கம்பனி ஷங்காயில் தொடங்கிய அதன் உலக ' சூப்பர் ஃபாக்டரி' யாகும்.
இவ்வாறாக அமெரிக்க முதலீடுகள் தொடர்ந்து அதிகரிப்பதற்கு காரணம் சீனா உலகின் மிகவும் குடிநெருக்கமான பாவனையாளர் சந்தையைக் கொண்டிருப்பதேயாகும். சீனாவின் சனத்தொகையில் 40 கோடி மக்கள் நடுத்தர வருமானத்தைக் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.
ஐக்கிய நாடுகளினால் வகைப்படுத்தப்பட்ட சகல கைத்தொழில்து றை வகைகளையும் கொண்ட உலகின் ஒரே நாடு என்ற வகையில், பல்தேசியக் கம்பனிகளுக்கு முழுநிறைவான கைத்தொழில் சங்கிலித்தொடரையும் விநியோகச் சங்கிலித் தொடரையும் சீனாவினால் வழங்கக்கூடியதாக இருக்கிறது ; தொழில் முயற்சிகளுக்கான செலவும் சீனாவில் குறைவாகவே இருக்கிறது.முன்னுணரக்கூடிய எதிர்காலத்தில்  வேறு எந்த நாட்டினாலுமே வழங்க இயலாத ஒரு அனுகூலமாக இது அமைந்திருக்கிறது.
தற்சமயம் சீன அரசாங்கம் புலமைச்சொத்துடமை உரிமைகளை பாதுகாப்பதற்கும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு சமமான வாய்ப்புநிலையை ஏற்படுத்திக்கொடுப்பதற்கும் சீனச் சந்தைகளை முதலீட்டாளர்கள் அடையக்கூடிய வாய்ப்புக்களை விரிவுபடுத்துவதற்குமான நடவடிக்கைகளை தீவிரப்படுத்துதிலேயே நாட்டம் காட்டுகின்றது.இந்த புதிய சீர்திருத்தங்களும் திறந்தபோக்கு நடவடிக்கைகளும் சீனாவில் தொழில்முயற்சிகளில் ஈடுபடுபவர்களுக்கு உலகம் பூராவுமிருந்து கூடுதல் வர்த்தக வாய்ப்புக்களைக் கொண்டுவரும்.
தங்களது வர்த்தகப் போர் அமெரிக்க மக்களையும் வர்த்தகத்துறையையும் பாதிக்கவில்லை என்று கூறுவதை வாஷிங்டனின் வர்த்தக கடும்போக்காளர்கள் நிறுத்திக்கொள்ளவேண்டும்.இதுவே அவர்கள் படிக்கவேண்டிய மூன்றாவது பாடமாகும்.
சீன இறக்குமதிகள் மீது இறுதியாக விதிக்கப்பட்ட வரிகள் முன்னர் நேரடியாக இலக்குவைக்கப்பட்டிராத பொருட்களை முதற்தடவையாக தாக்கப்போகின்றன ; அமெரிக்கா துவக்கிவைத்த வர்த்தக மற்றும் வரி தகராறு துணிவகைகள், உடுப்புகள், காலணிகள், பொம்மைகள் மற்றும் விளையாட்டுப் பொருட்கள் போன்ற குடும்ப பாவனைப் பொருட்களின் விகைளை நேரடியாகவே அதிகரிக்கக்கூடிய சாத்தியம் இருக்கிறது.
புதிய வரிகள் நடைமுறைக்கு வந்தபிறகு சீனப்பொருட்களின் மீதான சகல வரிகளின் காரணமாகவும் அமெரிக்க குடும்பங்கள் வருடாந்தம் சுமார் 1000 டொலர்களை மேலதிக செலவிடவேண்டியிருக்கும் ; வரிகளை மேலும் அதிகரிக்கப்போவதாக விடுத்துவரும் அச்சுறுத்தலை வாஷிங்டன் நடைமுறைப்படுத்தினால், அந்த மேலதிக செலவு வருடாந்தம் 1500 டொலர்களாக இருக்கும் என்று ஜே.பி.மோர்கன் ஆராய்ச்சியாளர்கள் அண்மையில் மதிப்பிட்டிருக்கிறார்கள்.
சீனாவுடனான தற்போதைய வர்த்தகப்போர்  வணிக முதலீட்டையும் தயாரிப்பையும் ஊக்கங்கெடச் செய்துகொண்டுமிருக்கிறது.இவ்வருடத்தின் இலண்டாவது காலாண்டில் அமெரிக்கப் பொருளாதாரத்தின் வளர்ச்சியை மறு ஆயவுசெய்து 2 சதவீதத்துக்கு மாற்றியமைத்ததாக அமெரிக்க வர்த்தக திணைக்களம் கடந்த வாரம் கூறியிருந்தது. கடந்த மாதம் செய்த மதிப்பீடு 2.1 சதவீதமாக இருந்தது.
இறுதியாகச் சொல்லக்கூடியது என்னவென்றால், பொறுப்புவாய்ந்த ஒரு உலக வல்லரசாக எவ்வாறு  நடந்துகொள்வது என்பதை அமெரிக்கா கற்றுக்கொள்ளவேண்டும்.அத்துடன் பாடசாலைகளில் மற்றைய மாணவர்களுடன் வீறாப்புத்தனமாக நடந்துகொள்ளும் பெருத்த உருவம் கொண்ட மாணவனைப் போன்று நடந்துகொள்வதை வாஷிங்டன் நிறுத்தவேண்டும். உலகின் ஒரே வல்லரசு என்ற வகையில் அமெரிக்கா தனக்கேயுரிய பொறுப்புக்களை தோளில் சுமக்கவேண்டியது அவசியமாகும் ; உலகை கூடுதல் சுபிட்சம் நிறைந்ததாக மாற்றுவதில் ஏனைய நாடுகளுடன் இணைந்துகொள்ளவேண்டும். அப்போது தான் அமெரிக்கா மீண்டும் மகத்தானதாக வரமுடியும்.  நன்றி வீரகேசரி 

றொபேர்ட் முகாபேயின் முரண்நிலையான மரபு 

ஸ்ரான்லி ஜொனி 10/09/2019
கடந்தவாரம் ( 6/9 ) தனது 95 வயதில் மரணமடைந்த சிம்பாப்வேயின் முன்னாள் ஜனாதிபதி றொபேர்ட் கபிரியேல் முகாபே முரண்நிலையான ஒரு மரபை விட்டுச்செல்கிறார்.சிம்பாப்வேயின் சுதந்திரப் போராட்டத்தின்போது முக்கியமான கெரில்லாக்கள் பிரிவொன்றின் தலைவராக அவர் இருந்தார்.பிரிட்டிஷ் காலனியாதிக்கவாதிகளுக்கு எதிராகப் போராடி நாட்டில் பிரிட்டனின் ஆதரவுடனான சிறுபான்மை வெள்ளையரின் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவந்து அவர்  சிம்பாப்வேயின் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட முதலாவது பிரதமராக வந்தார்.ஆனால், அவரின் ஆட்சிக்காலத்தில் நாட்டின் பொருளாதாரம் படுமோசமான வீழ்ச்சியைக் கண்ட அதேவேளை,அவர் கட்டியெழுப்பிய அரசாங்கம், ஒரு கட்சி ஒடுக்குமுறை ஆட்சியை நிறுவியது. முகாபேயின் மரபை பற்றிய எந்தவொரு ஆய்வும் அவரின் இந்த பல முகங்கள் மீதான அவதானிப்புகளை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கவேண்டும்.
விடுதலை வீரர்
1960 களின் முற்பகுதியில் முகாபே அரசியலில் இணைந்தபோது ஜோஷுவா தலைமையிலான தேசிய ஜனநாயக கட்சியே (National Democratic Party) தென் ரொடீஷியாவில் ( சிம்பாப்வே அப்போது அவ்வாறே அழைக்கப்பட்டது ) காலனித்துவ ஆதிக்கத்துக்கு  எதிரான பிரதான சக்தியாக விளங்கியது.கானாவின் சுதந்திர தலைவர் குவாமே என்குருமாவினதும் மார்க்சியம் -- லெனினிசத்தினதும் செல்வாக்கிற்கு ஆட்பட்ட முகாமே தேசிய ஜனநாயக கட்சிக்குள்  முற்போக்கான ஒரு பிரிவில் இணைந்துகொண்டார். பின்னர் அந்த பிரிவு  கட்சியல் இருந்து பிளவுபட்டு சிம்பாப்வே ஆபிரிக்க தேசிய  ஒன்றியத்தை( Zimbabwe African National Union -- ZANU)  ) அமைத்தது. அரசாங்கத்துக்கு எதிரான பேரணிகளை ஏற்பாடு செய்ததயைடுத்து வெள்ளையர் அரசாங்கம்  முகாபேயை 1964 ஆம் ஆண்டில் தேசத்துரோக குற்றச்சாட்டில் கைது செய்தது.ஒரு தசாப்தத்துக்கு பிறகு விடுதலை செய்யப்பட்ட அவர் நாட்டை விட்டு தப்பியோடினார்.ஆனால், இயக்கத்தை விட்டு ஒருபோதும் வெளியேறவில்லை.மொசாம்பிக்கில் இருந்த வண்ணம் விடுதலைப் போரில்   'சானு' வின் இராணுவப் பிரிவான சிம்பாப்வே ஆபிரிக்க தேசிய விடுதலை இராணுவத்துக்கு தலைமைதாங்கி வழிநடத்தினார். 
அந்த போரில் இயன் சிமித்தின் காலனித்துவ அரசாங்கத்துக்கு இரு பிரிவுகள் --  எதிராக முகாபேயின் சானுவும் அவரின் நேச அணியாக இருந்து பிறகு போட்டியாளராக மாறிய ஜோஷுவா என்கோமோ தலைமையிலான கட்சியான சிம்பாப்வே ஆபிரிக்க மக்கள் ஒன்றியத்தின் ( Zimbabwe African People's Union -- ZAPU) ஆயுதமேந்திய பிரிவும் -- சண்டையிட்டன.
1970 களின் பிற்பகுதியில், போரில்  வெற்றியடையமுடியாது என்பது வெளிப்படையாகத் தெரிய வந்ததும்  அரசாங்கம் சர்வஜன வாக்குரிமை உட்பட அரசியல் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த ஆரம்பித்தது.1979 பிற்பகுதியில் பிரிட்டிஷ் அரசாங்கமும் சிம்பாப்வேயில் இருந்த அதன் நேச சக்திகளும் கெரில்லாக்களும் லங்காஸ்ரர் மாளிகை ( Lancaster House Agreement ) உடன்படிக்கையில் கைச்சாத்திட்டதை அடுத்து விடுதலைப்போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.1980 மார்ச்சில் நடத்தப்பட்ட தேர்தலில் முகாபேயின் சானு கட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியது ; அவர் பிரதமராக வந்தார். முகாபே பதவியேற்ற வைபவம் இனவெறிக்கும் காலனித்துவ ஆதிக்கத்துக்கும் எதிரான ஆபிரிக்க இயக்கத்தின் வரலாற்றில் ஒரு புரட்சிகரமான தருணமாக நோக்கப்பட்டது.கெரில்லாக்கள் மத்தியில்  செல்வாக்குமிகுந்தவராக இருந்த பொப் மார்லே ஹராரேக்கு பயணம் செய்து ஹோட்டல் ஒன்றில் இரவோடிரவாக தங்கியிருந்து அந்த  பதவியேற்பு வைபவத்தில் பாடினார்.
சீர்திருத்தவாதி 
முகாபே ஆரம்பத்தில் பல நலன்புரி திட்டங்களை --  குறிப்பாக சுகாதாரப் பராமரிப்பு மற்றும் கல்வித் துறைகளில் நடைமுறைப்படுத்தினார்.வெள்ளை சிறுபான்மையினத்தவர்களுடன் இணக்கப்போக்கை கடைப்பிடித்த அவர் நாட்டை விட்டு அவர்கள் வெளியேறுவதை ஊக்கப்படுத்தவில்லை.சமத்துவமின்மை பிரச்சினையைக் கையாளுவதை நோக்கமாகக்கொண்டு அவர் தனது பேரார்வத்துக்குரிய நிலச்சீர்திருத்த திட்டத்தை முன்னெடுத்தார்.தொடக்கத்தில் அந்த திட்டம் " விரும்பி விற்பனை செய்பவரும் விரும்பி வாங்குபவரும் " என்ற ஒரு கோட்பாட்டின் அடிப்படையிலேயே அமைந்தது.ஆனால், உறுதியளிக்கப்பட்டது போன்று அத்திட்டம் வெற்றியளிக்கவில்லை.சுதந்திரத்துக்கு பிறகு இரு தசாப்தங்கள் கடந்த நிலையிலும் கூட நாட்டின் அரைவாசி நிலங்கள் வெள்ளைச் சிறுபான்மையினத்தவரின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்ததே அதற்கு காரணமாகும்.
2000 ஆம் ஆண்டில் ஜனாதிபதியின் தீவிரவாத ஆதரவாளர்களும் ஆளும் கட்சி உறுப்பினர்களும் பலவந்தமாக விவசாய நிலங்களை கைப்பற்ற ஆரம்பித்தார்கள்.முகாபே அதை விவசாய நிலங்களை பகிர்ந்தளிப்பதற்கும் நாட்டின் அதிகப்பெரும்பான்மையான மக்கள் மத்தியில் கடுமையான  வறுமையையும் நிலமின்மையையும் கையாளுவதற்குமான முற்போக்கான ஒரு திட்டமாகவே பார்த்தார்.ஆனால், அந்த திட்டம் சரியான முறையில் சிந்தித்து நடைமுறைப்படுத்தப்படவில்லை.அதனால், எதிர்விளைவுகளை ஏற்படுத்தியது.கைப்பற்றப்பட்ட நிலங்களில் விவசாயத்தை மேம்படுத்துவதற்கு செம்மையான திட்டமொன்று அரசாங்கத்திடம் இருக்கவில்லை.வன்முறையுடனான நிலச்சீர்திருத்தம் நாட்டின் விவசாய உற்பத்தித்திறனை குன்றச்செய்தது.அதன் விளைவாக உணவுத்தட்டுப்பாடும் பொருளாதார அவலமும் ஏற்பட்டது. 1998 தொடக்கம் 2008 வரை நாட்டின் விவசாய விளைபயன் 60 க்கும் அதிகமான சதவீதத்தினால் வீழ்ச்சிகண்டது.
சர்வாதிகாரி
முகாபே கட்டியெழுப்பிய முறைமை அவரைச்சுற்றி செயற்பட்டுக்கொண்டிருந்தது.முதலில் அவர் தன்னை சானு கட்சியின் கேள்விக்கிடமின்றிய தலைவராக நிலைநிறுத்திக்கொண்டார்.தனக்கு போட்டியாக  வரக்கூடியவர்களை களையெடுக்கத் தொடங்கிய அவர் சாபு கட்சியின் தலைவரான என்கோமோவை அமைச்சரவையில் இருந்து வெளியேற்றினார் ; பிறகு தனது சானு கட்சியையும் சாபு கட்சியையும்  ' சானு -- மக்கள் முன்னணி ' (ZANU  PF ) என்று புதிய ஒரு அமைப்பாக ஒன்றிணைத்தார்.
1988 ஆம் ஆண்டில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியை அறிமுகப்படுத்துவதற்காக அரசியலமைப்பை மாற்றியமைத்த முகாபே சிம்பாப்வேயின் முதலாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக வந்தார்.அதற்கு பின்னர் எப்போதுமே தான் மீண்டும் மீண்டும் ஜனாதிபதியாக தெரிவாவதை உறுதிப்படுத்திக்கொண்டார்.2002 ஆம் ஆண்டில் மாத்திரமே அவர் எதிர்க்கட்சி தலைவர் மோர்கன் சவாங்கிராயிடமிருந்து பாரதூரமான தேர்தல் சவாலுக்கு முகங்கொடுக்கவேண்டியிருந்தது. முதலாவது சுற்று தேர்தலுக்கு பிறகு கைதுசெய்யப்பட்ட சவாங்கிராய் தடுப்புக்காவலில் கடுமையாக தாக்கப்பட்டார்.அதையடுத்து அவர் தேரதல் போட்டியிலிருந்து விலகிக்கொண்டார்.அதனால் மீண்டும் முகாபே " வெற்றி " பெற்றார்.2016 ஆம் ஆண்டில் அவருக்கு 92 வயது. அப்போது அவர் சாகும்வரை ஆட்சியதிகாரத்தில் இருப்பதற்கான தனது விருப்பத்தை வெளிக்காட்டினார்.
நாசகாரர்
முகாபேயின் ஆட்சியின் பின் அரைவாசிக்காலத்தில்  சிம்பாப்வேயின் பொருளாதாரம் துரித வீழ்ச்சியைக் கண்டது.பணவீக்கம் 20 கோடி வீதமாக இருந்தது.சிம்பாப்வே மக்களில் சுமார் 80 சதவீதமானவர்கள் வேலை வாய்ப்பில்லாமல் இருக்கிறார்கள்.யுனிசெப் வெளியிட்ட தகவல்களின்படி ஐந்து வயதுக்கு உட்பட்ட சிம்பாப்வே சிறுவர்களில் சுமார் 2.1 சதவீதமானவர்கள் 2016 ஆம் ஆண்டளவில்  கடுமையான போஷாக்கின்மையால் பாதிக்கப்பட்டிருந்தார்கள் ; சுமார் 37 சதவீதமான குடும்பங்கள் உணவுத்தட்டுப்பாட்டினால் அவலப்பட்டுக்கொண்டிருந்தார்கள். சிம்பாப்வே மக்களின் சராசரி ஆயுட்காலம் 61 வருடங்களாக இருக்கிறது.இது போரினால் சின்னாபின்னமான கொங்கோ ஜனநாயக குடியரசின் மக்களின் ஆயுட்காலத்தை விடவும் இரு வருடங்கள் அதிகமானதாகும்.2002 ஆம் ஆண்டில் எதிர்க்கட்சிகள் மீது  முகாபே கட்டவிழ்த்துவிட்ட அடக்குமுறையை அடுத்து மேற்கு நாடுகளினால் சிம்பாப்வே மீது விதிக்கப்பட்ட தடைகள் இந்த பொருளாதாரப் பிரச்சினைகளை மேலும் மோசமாக்கின என்பது உண்மையே.ஆனால், சுமார் நான்கு தசாப்த காலமாக ஆட்சியதிகாரத்தில் இருந்த முகாபேயே அந்த நாட்டின் இன்றைய நெருக்கடிகளுக்கு பெரிதும் பொறுப்பானவர்.
அதிகார மாற்றத்தை உறுதிப்படுத்த முகாபே தவறினார் ; பதிலாக தனது கைகளில் அதிகாரத்தைக் குவிப்பதில் அதீத  பிரமைகொண்டு அவர் செயற்பட்டதையே காணக்கூடியதாக இருந்தது. மாபெரும் மக்கள் ஆர்ப்பாட்டங்களை அடுத்து 2017 நவம்பரில் இராணுவமும் சானு -மக்கள் முன்னணியும் அவருக்கு எதிராக திரும்பின ; முகாபேயின் துணை ஜனாதிபதி எமர்சன் நங்காக்வா  அதிகாரத்தைப் பொறுப்பேற்றார்.அதை  இராணுவம் சதிப்புரட்சி என்று அழைக்கவிரும்பவில்லை. ஆனால், முகாபேயை பதவியில் இருந்து தூக்கியெயறிந்த இராணுவம் அவரை சிம்பாப்வேயில் வசிப்பதற்கு அனுமதித்தது ; உத்தியோகபூர்வ அறிவிப்புகளில் அவர் தொடர்ந்தும் தேசபிதா என்றே குறிப்பிடப்பட்டார்.தனது முன்னாள் ஆசானின் மரணத்தை கடந்தவாரம் நங்காக்வா தான் உலகிற்கு அறிவித்தார் ; " சிம்பாப்வேயின் தாபகத்தந்தையும் முன்னாள் ஜனாதிபதியுமான தோழர் றொபேர்ட் முகாபே காலமானார் என்பதை மிகுந்த கவலையுடன் அறிவிக்கிறேன் " என்று அவர் வெள்ளிக்கிழமை ருவிட்டரில் பதிவிட்டார்.
( த இந்து )  நன்றி வீரகேசரி 
இந்திய அரசியலமைப்பின் உறுப்புரை 370 தொடர்பில் சீனாவின் நிலைப்பாடு

பி.ஆர்.தீபக்
10/09/2019 ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தை இரு யூனியன் பிரதேசங்களாக பிரிப்பதற்கு மோடி அரசாங்கம் கொண்டுவந்த பிரேரணையை பாராளுமன்றத்தின் இரு சபைகளும் நிறைவேற்றியதை அடுத்து அந்த மாநிலத்துக்கு இதுவரை விசேட அந்தஸ்தை வழங்கிய இந்திய அரசியலமைப்பின் 370 வது உறுப்புரை  6 ஆகஸ்ட் 2019 இந்திய ஜனாதிபதியால்  ரத்துச் செய்யப்பட்டது. இந்த நடவடிக்கைக்கு பாகிஸ்தானிடமிருந்தும் சீனாவிடமிருந்தும் கடுமையான எதிர்ப்புக் கிளம்பியது.
ஆகஸ்ட் 6 பெய்ஜிங்கில் செய்தியாளர் மகாநாட்டில் இது குறித்து கருத்து தெரிவித்த சீன வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் ஹுவா ஷுன்யிங், " சீன - இந்திய எல்லையின் மேற்குப் பிரிவில் உள்ள சீனப் பிராந்தியத்தை இந்தியா தனது நிருவாக நியாயாதிக்கத்திற்குள் கொண்டுவந்ததை சீனா எப்போதுமே எதிர்த்து வந்திருக்கிறது. இந்த நிலைப்பாடு நிலையானது ; ஒருபோதும் மாறவில்லை. அண்மையில் உள்நாட்டுச் சட்டத்தை ஒருதலைப்பட்சமாக மாற்றியமைத்ததன் மூலம் இந்தியத் தரப்பு சீனாவின் ஆட்புல ஒருமைப்பாட்டை தொடர்ந்து சேதப்படுத்தியிருக்கிறது. இந்த நடைமுறை ஏற்புடையதல்ல. எந்தப் பயனும் கிடைக்கப்போவதில்லை. எல்லை விவகாரத்தில் நிதானத்துடனும் முன்மதியுடனும் செயற்படுமாறும் இரு தரப்புகளுக்கும் இடையில் காணப்பட்ட பொருத்தமான இணக்கப்பாடுகளை கண்டிப்பான முறையில் பின்பற்றுமாறும் எல்லை விவகாரத்தை மேலும்  சிக்கலாக்கக்கூடிய நடவடிக்கைகளைத் தவிர்க்குமாறும் இந்திய தரப்பை நாம் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம் " என்று குறிப்பிட்டார்.
வெளியுறவு அமைச்சின் அறிக்கையுடன் எல்லாமே முடிந்துவிடவில்லை. " 7 ஷங்காய்களுக்கு சமமான சீனப்பிராந்தியமான லடாக்கை இந்தியா ஒருதலைப்பட்சமாக இந்திய அரசியல் வரைபடத்திற்குள் இணைக்கிறது " என்று சீன ஊடகங்கள் பரபரப்பாக செய்தி வெளியிட்டன. சில ஊடகங்கள் லடாக்கை 40 ஹொங்கொங்களுக்கு சமமானது என்று கூறின.
சீன கல்விமான்கள் கூட விழுந்தடித்துக்கொண்டு வேறுபட்ட விளக்கங்களை தந்தார்கள். " வலிமையான கட்டுப்பாட்டை பலப்படுத்திக்கொள்வதையும் இந்தியா  பலம்பொருந்தியது என்ற  கருத்துரு ஒன்றை ஏற்படுத்திக்கொள்வதையும் இந்து தேசியவாத மறுமலர்ச்சியை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டதே ஜம்மு -- காஷ்மீரில் புதுடில்லி மேற்கொண்ட நடவடிக்கை " என்று சமகால சர்வதேச உறவுகளுக்கான சீன நிறுவனத்தைச் சேர்ந்த ஹூ ஷிசெங் கூறினார்.
தங்களது உரிமைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டிருப்பதை உணர்ந்த சில அரசியல்வாதிகளும் உயர்ந்தோர் குழாமும் வன்செயல்களில் ஈடுபடுமாறு மக்களைத் தூண்டியிருக்கக்கூடும் ; மிதவாதிகள் தீவிரவாதிகளுடன் இணைந்துகொண்டிருக்கக்கூடும் ;சுதந்திரத்தை நாடும் சில தீவிரவாதச் சக்திகள் பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்தியிருக்கக்கூடும் என்ற அபிப்பிராயத்தைக் கொண்டிருக்கும் ஹூ, எவ்வாறெனினும் இறுதியில் வழமை நிலை மீண்டும் ஏற்படுத்தப்படும் என்று நம்பிக்கை வெளியிட்டார்.
சர்வதேச கற்கைகளுக்கான ஷங்காய் நிறுவனத்தின் ஆய்வாளரான ஷாவோ கான்ஷெங் எழுதிய கட்டுரையொன்றில் சற்று கடுநந்தொனியில் கருத்துத் தெரிவிக்கிறார்." இந்திய அரசாங்கம் ஜனரஞ்சக அரசியலுக்கு வசப்பட்டுவிட்டது என்று கூறியிருக்கும் அவர் " சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான சர்ச்சைக்குரிய எல்லையின் மேற்குப்பிரிவில் இதுகாறும் இருந்துவந்த நிலையை  ஜம்மு -- காஷ்மீரில் இந்தியாவின் நடவடிக்கை மலினப்படுத்திவிட்டது.இது சீனாவுக்கு பெரும் விசனத்தை ஏற்படுத்தியிருக்கிறது " என்று தெரிவித்திருக்கிறார்.அவர் சீன அரசாங்கத்தின் நிலைப்பாட்டையே மீளவலியுறுத்தியிருக்கிறார்.
லடாக் முழுவதையும் சீனப்பிராந்தியம் என்று ஷாவோ குறிப்பிடவில்லை.ஆனால், அப்பிராந்தியம் வரலாற்றில் திபெத்தின் ஒரு துணைப்பிராந்தியமாக இருந்தது என்று கூறுகிறார். அத்துடன் 33,000 சதுரகிலோ மீட்டர் பரப்பளவுடைய சர்ச்சைக்குரிய அக்சாய் ஷின் சீனாவின் நியாயாதிக்கத்தின் கீழானது என்றும் அவர் கூறுகிறார்.அவரின் அபிப்பிராயத்தின்படி அரசியலமைப்பை திருத்தியதன் மூலமும் லடாக் யூனியன் பிரதேசத்தை உருவாக்கியதன் மூலமும் மேற்குப்பிரிவில் சர்ச்சைக்குரிய எல்லையோரம் இதுகாறும் இருந்துவந்த நிலைவரத்தை இந்தியா உண்மையில் ஒருதலைப்பட்சமாக மாற்றிவிட்டது.
இந்திய - பாகிஸ்தான் மோதலைத் தொடர்ந்து காஷ்மீரின் சில பகுதிகளை இந்தியா இணைத்துக்கொண்டது என்று கூறும்போது ஷாவோ பிராந்தியத்தின் வரலாற்றைத் தெரியாதவராகவும் காஷ்மீர் இணைப்பு உடன்படிக்கையை வேண்டுமென்றே அலட்சியம் செய்பவராகவும் நடந்துகொள்கிறார் என்றே கூறவேண்டியிருக்கிறது .அவரைப் பொறுத்தவரை, புதிய யூனியன் பிரதேசத்தை உருவாக்கிய செயல் சீனாவுக்கு ஒரு அவமதிப்பேயாகும். இதே முறையிலேயே 1987 ஆம் ஆண்டில் இந்திய அரசாங்கம் அருணாச்சல பிரதேசத்தையும் உருவாக்கிக்கொண்டது என்று அவர் கூறுகிறார்.
சர்வதேச கற்கைகளுக்கான சீன நிறுவனத்தைச் சேர்ந்த லாங் ஜயாங்ஸு ஆகஸ்ட் 15 சைனா டெயிலி பத்திரிகையில் எழுதிய இன்னொரு கட்டுரையில் " 370 உறுப்புரையை ரத்துச் செய்ததன் மூலமாக இந்தியா பல பிரச்சினைகள் கிளம்பக்கூடிய சூழ்நிலையை தோற்றுவித்துவிட்டது.பிராந்தியத்தின் நிருவாகப்பிரிவை ஒருதலைப்பட்சமாக  மாற்றியமைத்து, பாகிஸ்தானிய, சீனப் பிராந்தியங்களை கைப்பற்றிய இந்தியாவின் நடவடிக்கை இரு அயல்நாடுகளுக்கும் கடுமையான ஆத்திரத்தை ஏற்படுத்தியிருக்கிறது.இரு தரப்புகளில் இருந்தும் வலிமையான எதிர்வினையை சந்திக்கவேண்டியிருக்கும் " என்று குறிப்பிட்டிருக்கிறார்.
இந்தியாவின் செயல் பிராந்தியத்தின் குடிப்பரம்பலை மாற்றியமைக்கும் என்று காஷ்மீரிகளுக்கு ஏற்பட்டிருக்கும் கவலை பற்றி குறிப்பிட்ட அவர் இந்தியா தவறுக்கு இடங்கொடுக்கக்கூடியதாக அசட்டையாக நடந்துகொண்டுள்ளது என்று குறைகூறினார். அவ்வாறு கூறும்போது அவர் சின்ஜியாங் மாகாணத்திலும் 1950 களில் தொடங்கி திபெத்திலும் குடிப்பரம்பலை மாற்றியமைக்கும் நோக்கில் சீனா மேற்கொண்டுவருகின்ற காரியங்களை மறந்தவராக நடந்துகொள்கிறாார்.
காஷ்மீரின் தற்போதைய நிலைவரம் அமைதியின்மைக்குள்ளாகியிருக்கும் அந்த பிராந்தியத்தில் புதிய சுற்று வன்செயல்களை மூளவைக்கக்கூடும்.அதன் விளைவாக தோனறக்கூடிய இடர்மிகு பாதுகாப்பு நிலைவரம் தெற்காசியாவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தக்கூடும் என்பது லான்  ஜயாங்ஸுவின் அபிப்பிராயமாக இருக்கிறது.
வீறாப்பான தேசியவாதபோக்குடைய ' குளோபல் ரைம்ஸ் ' பத்திரிகையில் வெளியான கட்டுரைகளையும் அதன் ஆசிரியர் ஹூ சிஜின் தெரிவித்த " காஷ்மீரின் சுயாட்சியை  முற்றாக நீக்குவதற்கு இந்தியா எவ்வாறு துணிச்சல் கொண்டது என்று எமக்கு தெரியவில்லை " என்பன போன்ற கருத்துக்களையும் பற்றி பேசத்தேவையில்லை.காஷ்மீருக்கு ' விசேட அந்தஸ்தை ' கொடுத்தது இந்தியாவே தவிர, வேறு எந்த நாடும் அல்ல என்பதையும் அந்த விசேட அந்தஸ்து தற்காலிக தன்மை கொண்டதே என்பதையும் சீன ஊடகங்களும் கல்விமான்களும் தெரிந்துகொள்ளவேண்டும். சீனாவுக்கு ஐக்கிய நாடுகள் சபை மீது நம்பிக்கையில்லாமல் இருந்த ஒரு நேரத்தில் அந்த சபைக்கு காஷ்மீர் பிரச்சினையைக் கொண்டுசென்றது இந்தியா தான். பாகிஸதானிய ஆக்கிரமிப்புக்குள்ளான காஷ்மீரில் இருந்து பாகிஸ்தான் படைகள் வெளியேற்றுவதற்கு உதவுவ ஐ.நா. தவறிய காரணத்தினால், இந்தியா இருதரப்பு அணுகுமுறையில் பெருமளவுக்கு நம்பிக்கைவைக்கத் தொடங்கியது.அந்த நம்பிக்கை 1972 சிம்லா உடன்படிக்கையின் மூலமாக வெளிக்காட்டப்பட்டது.
இரு தரப்புத் தீர்வொன்றை காண்பதற்கு முயற்சிப்பதை விடுத்து பாகிஸ்தான் ஜாய்ஷ் -- ஈ -- முஹம்மத், லக்ஷர் - ஈ- தாய்பா , ஜமாத் - உத் - தாவா போன்ற பயங்கரவாத அமைப்புக்களை உருவாக்கியதன் மூலம் அரச கொள்கையின் கருவியாக பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்தது. இந்த பின்னணியிலேயே, காஷ்மீரில் விரும்பத்தக்க விளைபயனைத் தராத கொள்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதே பொருத்தமானது என்று இந்தியா தீர்மானித்தது.  இதே பின்னணியில்தான் ( கலாசார மற்றும் மக்களுக்கிடையிலான பரிமாற்ற ஏற்பாடுகள் தொடர்பான இரண்டாவது உயர்மட்ட கூட்டத்தில் கலந்துகொள்ளச் சென்றிருந்தவேளையில் ) வெளியுறவு அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர் சீன வெளியுறவு அமைச்சரிடம் 370 வது உறுப்புரையை ரத்துச்செய்வது இந்தியாவின் உள்விவகாரம் என்றும் அதனால் வெளி எல்லைப்புறத்துக்கோ அவ்லது சீனாவுடனான கட்டுப்பாட்டு எல்லைக்கோட்டுக்கோ எந்த தாக்கமும் ஏற்படப்போவதில்லை என்றும் கூறினார்.
இந்தியா அளித்த பதிலினால் திருப்திப்படாத சீனா, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷியினால் எழுதப்பட்ட கடிதத்தை ஐ.நா. பாதுகாப்புச் சபையி்ல் மூடிய கதவுகளுக்குள் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது  முன்வைத்தது.ஆனால், அதனால் எந்த பயனும் ஏற்படவில்லை.
இருந்த போதிலும் அந்த கூட்டத்துக்குப் பிறகு ஐ.நா.வுக்கான சீனத்தூதுவர் ஷாங் யுன் ' ஜம்மு -- காஷ்மீர் நிலைவரம் குறித்தும் அங்கு மனித உரிமைகள் மீறப்படுவது குறித்தும் பாதுகாப்புச் சபையின் உறுப்பினர்கள் கடுமையான கவலை வெளியிட்டதாக ' ஊடகங்களிடம் கூறினார்.  ஜம்மு -- காஷ்மீர் நெருக்கடி சர்வதேசரீதியாக அங்கீகரிக்கப்பட்ட ஒரு தகராறு என்றும் அதனால் அதற்கு பொருத்தமான பாதுகாப்புச்சபை தீர்மானங்கள், ஐ.நா. சாசனம் மற்றும் இரு தரப்பு உடன்படிக்கைகளின் பிரகாரம் தீர்வுகாணப்படவேண்டும் என்று பெய்ஜிங்கில் வைத்து குரேஷி சீன வெளியுறவு அமைச்சர் வாங் ஜியிடம் கூறியதை ஷாங் யுன்னும் திரும்ப வலியுறுத்தினார்.இந்தியாவின் ஒருதலைப்பட்சமான நடவடிக்கை இதுகாறும் இருந்த நிலைவரத்தை மாற்றிவிட்டது என்றும் அதனால் பதற்றம் அதிகரிக்கும் என்றும் அவர் கூறினார்.
ஐ.நா.வுக்கான  இந்தியாவின் தூதுவரும் பாதுகாப்பு சபைக்கான நிரந்தர  பிரதிநிதியுமான சயீத் அக்கருதீன் மிகவும் சரியாக சுட்டிக்காட்டியதைப் போன்று ' இரு அரசுகள் ( சீனாவும் பாகிஸதானும் ) அவற்றின் சொந்த கருத்துக்களை சர்வதேச சமூகத்தின் விருப்பமாக காண்பிக்க முயற்சிக்கின்றன '.
இந்தியாவுக்கும் பாகிஸதானுக்கும் இடையிலான குரோதத்தை சீனா தனக்கு அனுகூலமான முறையில் 1965, 1971, 1999, 2019 ஆண்டுகளின் பயன்படுத்திக்கொண்டது என்பது வெளிப்படையானது. இப்போது உறுப்புரை 370 ரத்துச்செய்யப்பட்ட பின்னர் தோன்றியிருக்கும் நிலைவரத்தையும் அவ்வாறே பயன்படுத்த முயற்சிக்கிறது.அணுத்தொழில்நுட்பம் உட்பட பெருமளவில் ஆயுதங்களை பாகிஸ்தானுக்கு சீனா வழங்குவதன் நோக்கம் ஒரு புறத்தில் இந்தியாவை உபகண்டத்துக்குள் மடக்கிவைத்திருப்பதும் மறுபுறத்தில் தன்னை ' ஒரு உயர்ந்த ஒழுக்கப்பண்புடைய ' நாடாகக்காட்டி மத்தியஸ்த பங்கை வகிப்பதற்குமாகும்.
சீனா எதிர்காலத்திலும் இவ்வாறு தொடர்ந்து செய்யக்கூடும்.ஆனால், ஐ.நா.விலும் காஷ்மீரிலும் தனக்கு ஒரு இடைவெளியைத் தந்த 370 வது உறுப்புரை இனிமேல் இல்லை என்பதையும் சீனா அறியும். இப்போது இது இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் ; அதில் தலையிட சீனா முயற்சிக்குமேயானால், திபெத், சின்ஜியாங் நெருக்கடிகள் தொடர்பில் இந்தியாவின் நிலைப்பாட்டை அது  கூர்ந்து கவனித்துக்கொண்டிருக்கவேண்டும்.
இறுதியாக, கன்பூசியஸின் வார்த்தைகளிலேயே கூறுவதானால், " உனக்குச் செய்யவிரும்பாதவற்றை மற்றவர்களுக்கு செய்யக்கூடாது".
( பி.ஆர்.தீபக் புதுடில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் சீன ஆய்வுகளுக்கான பேராசிரியராக பணியாற்றுகிறார் )   நன்றி வீரகேசரி மூன்று செயற்கை கோள்களை விண்ணில் செலுத்தியது சீனா

13/09/2019  சீனா  மூன்று செயற்கை கோள்களை விண்ணில் ஏவியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றது.
அந்நாட்டில் தாயரிக்கப்பட்ட லாங் மார்ச் - 4 பி (March-4B) எனும் விண்கலத்தை நேற்றைய தினமான வியாழக்கிழமை விண்ணில் ஏவியுள்ளது. 
சீனாவின் ஷாங்க்ஸி மாகாணத்திலுள்ள தையுவான் ஏவுதளத்தில் இருந்து இவ்வாறு 3 செயற்கை கோள்களை ஏவியுள்ளது.
இச் செயற்கை கோள்களில் ஒன்றான இஸ்ட் ஓய் - 1  02 டி என்னும் செயற்கைக்கோலானது பூமியை வளம் வந்து துல்லியமான தகல்களை வழங்குமென அந்நாட்டு விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
அத்தோடு மேலும் இரு சிறியவகை செயற்கோள்களை  லாங் மார்ச் - 4 பி (March-4B)  விண்கலம் வெற்றிகாமாக விண்ணில் செலுத்தியுள்ளதாக ஜின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்மை குறிப்பிடத்தக்கது.   நன்றி வீரகேசரி 


கடும் கட்­டுப்­பா­டு­களை விதிக்கும் ட்ரம்பின்  திட்­டத்திற்கு அனு­மதி

13/09/2019 அமெ­ரிக்­காவில் குடி­யேற்­ற­வா­சிகள் புக­லிடம் கோரு­வ­தற்கு கடு­மை­யான  வரை­ய­றை­களை விதிப்­பதை நோக்­காகக் கொண்டு  ஜனா­தி­பதி ட்ரம்­பி­னது அர­சாங்­கத்தால் முன்­வைக்­கப்­பட்ட திட்­டத்தை முன்­னெ­டுப்­ப­தற்கு அந்­நாட்டு உச்ச நீதி­மன்றம் அனு­ம­தி­ய­ளித்­துள்­ளது.  மேற்­படி திட்­டமானது பிர­காரம் மூன்றாம் நாடொன்­றி­லி­ருந்து வரும் குடி­யேற்­ற­வா­சிகள் அமெ­ரிக்க எல்­லையை வந்­த­டை­வ­தற்கு முன்னர்  அந்த மூன்­றா­வது நாட்டில் புக­லிடம் கோரு­வதை வலி­யு­றுத்­து­கி­றது.  இந்த  நீதி­மன்றத் தீர்ப்­புக்கு எதி­ரான சட்ட ரீதி­யான சவால்கள் தொடரும் நிலை காணப்­ப­டு­கின்ற போதும்  தற்­ச­மயம் இந்தத் தீர்ப்பை  நாட­ளா­விய ரீதியில் அமுல்­ப­டுத்த முடியும் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.  இது தொடர்பில் டொனால்ட் ட்ரம்ப் டுவிட்டர் இணை­யத்­த­ளத்­தில் வெளியிட்ட செய்­தியில், எல்லைப் பிராந்­திய புக­லி­டக்­கோ­ரிக்கை குறித்து   அமெ­ரிக்க உச்ச நீதி­மன்­றத்தில் எட்­டப்­பட்ட பெரும் வெற்­றி­யாக இது உள்­ள­தாகக் குறிப்­பிட்­டுள்ளார்.
டொனால்ட் ட்ரம்பின் 2020ஆம் ஆண்டு ஜனா­தி­பதித் தேர்­த­லுக்­கான  மீள் தேர்தல் பிர­சா­ரத்தில் குடி­யற்­ற­வா­சி­களைக் கட்­டுப்­ப­டுத்­து­வது முக்­கிய இலக்­காக உள்­ளது. குடி­யேற்­ற­வா­சிகள் புக­லி டம் கோரு­வதை கடு­மை­யாக்கும் மேற்­படி திட்டம் கடந்த ஜூலை மாதம் டொனால்ட் ட்ரம்பால் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்ட போது அதற்கு உட­ன­டி­யாக முட்­டுக்­கட்டை போடப்­பட்­டது. 
இந்­நி­லையில் பிந்­திய உச்ச நீதி­மன்றத் தீர்ப்­பா­னது ட்ரம்பின் அர­சாங்­கத்தைப் பொறுத்த வரை வெற்­றி­யொன்­றாக நோக்­கப்­ப­டு­கி­றது. ஹொண்­டூரஸ், நிக்­ர­குவா, எல் சல்­வடோர் ஆகிய  மத்­திய அமெ­ரிக்க நாடு­க­ளி­லி­ருந்து வன்­முறை மற்றும் வறுமை கார­ண­மாக இடம்­பெ­யர்ந்து மெக்­ஸிக்கோ ஊடாக அமெ­ரிக்க எல்­லையை பெருந்­தொ­கை­யான குடி­யேற்­ற­வா­சிகள் தினமும் வந்­த­டைகின்­றனர்.
புதிய திட்­டத்தின் பிர­காரம் அந்தக் குடி­யேற்­ற­வா­சிகள்  அமெ­ரிக்க  எல்­லையை வந்­த­டை­வ­தற்கு முன்னர் தமது நாட்­டுக்கு அய­லி­லுள்ள  ஒரு நாட்­டிலோ அன்றி மெக்­ஸிக்­கோ­விலோ புக­லிடம் கோரு­வது கட்­டா­ய­மாகும்.  
ஆனால் அந்த அயல் ­நா­டு­களும்  மெக்­ஸிக்­கோவும் வன்­மு­றைகள் மற்றும் வறு­மையால்  பாதிக்­கப்­பட்­டுள்ள நிலையில்   குடி­யேற்­ற­வா­சிகள் அங்கு புக­லிடம் கோரு­வது அவர்கள் தொடர்ந்து பாதிப்பை எதிர்­கொள்­ளவே வழி­வகை செய்யும் என மனித உரிமைக் குழுக்கள் குற்­றஞ்­சாட்­டு­கின்­றன. மேற்­படி உச்ச நீதி­மன்றத் தீர்ப்பு புக­லிடம் கோரு­வ­தற்­கான தகை­மையை  கடு­மை­யாக வரை­யறை செய்­வ­தாக உள்­ள­தாக  அமெ­ரிக்க குடி­யியல் விடு­தலை ஒன்­றியம் தெரி­விக்­கி­றது.   நன்றி வீரகேசரி 


மோடியை கோழை என வர்ணித்தார் இம்ரான்கான்

13/09/2019   காஸ்மீரில் இந்தியாவால் முன்னெடுக்கப்படும் ஒடுக்குமுறை நடவடிக்கைகள் உலக நாடுகளில் உள்ள முஸ்லீம்கள் தீவிரவாதத்தை நோக்கி  ஈர்க்கப்படும் நிலையை உருவாக்கும் என பாக்கிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
பாக்கிஸ்தானின் கட்டுப்பாட்டில் உள்ள ஆசாத்காஸ்மீரின் தலைநகர் முஜாபராபாத்தில் ஆற்றிய கடுமையான உரையில் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
காஸ்மீர் மக்களிற்கான ஆதரவை வெளிப்படுத்துவதற்காக அந்த பகுதிக்கு சென்றுள்ள இம்ரான்கான் பாரிய பேரணியில் உரையாற்றியுள்ளார்.
அநீதிகள் உச்சகட்டத்தை அடையும்போது கௌரவமற்ற வாழ்வை விட மக்கள் மரணமே சிறப்பானது என கருத தொடங்குவார்கள் என இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.
நீங்கள் ஆயிரக்கணக்கானவர்களை தடுத்துவைத்திருப்பதன் மூலம் மக்களை தீவிரவாதத்தை நோக்கி தள்ளுகின்றீர்கள் என இந்தியாவிற்கு நான் தெரிவிக்கவிரும்புகின்றேன் என இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
மக்கள் இந்தியாவிற்கு எதிராக கிளர்ந்தெழுவார்கள்,இது வெறுமனே இந்திய முஸ்லீம்கள் தொடர்பான விடயம் மாத்திரமல்ல உலகம் முழுவதும் உள்ள 1.25 மில்லியன் முஸ்லீம்மக்கள் இந்தியாவை உற்றுநோக்கிக்கொண்டுள்ளனர் என இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.
இந்திய பிரதமரை  கோழை எனவும்  இம்ரான்கான்  வர்ணித்துள்ளார்.
காஸ்மீரில் 9 இலட்சம் இந்திய படையினரை நிலை கொள்ளச்செய்து அநீதிகளை இழைத்து வரும் கோழை என பாக்கிஸ்தான் பிரதமர் தெரிவித்துள்ளார்.
காஸ்மீர் பள்ளத்தாக்கில் இந்திய படையினர் அநீதிகளில் ஈடுபட்டுள்ளனர் என குறிப்பிட்டுள்ள இம்ரான் கான் துணிச்சலான மனிதர்கள் அப்பாவி மக்களிற்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுவதில்லைஎனவும் குறிப்பிட்டுள்ளார்.   நன்றி வீரகேசரி 

No comments: