தெற்காசியாவின் உயரமான கோபுரம் ஞாயிறன்று திறப்பு
படகுவழி ஆட்கடத்தலை தடுக்க அவுஸ்திரேலியா - இலங்கை தொடர்ந்து நடவடிக்கை
எழுக தமிழ் நிகழ்வில் தமிழர் அனைவரும் அணி திரள தமிழர் மரபுரிமைப் பேரவை அழைப்பு
திருமண பந்தத்தில் இணைகிறார் நாமல் : படங்கள் இணைப்பு
“புலதிசி” கடுகதி புகையிரத பயணத்தை ஆரம்பித்து வைத்த ஜனாதிபதி
ஜனநாயகத்தால் எதனையும் வெற்றி கொள்ள முடியும் - பிரதமர்
பயங்கரவாத தாக்குதலுக்கு இலக்காகி மீளக் கட்டியெழுப்பப்படும் சியோன் தேவாலயத்திற்கு டக்ளஸ் விஜயம்!
இலங்கையின் எதிர்காலம் கேள்விக்குறியாகலாம் : ஐ. நா. பிரதிநிதி ஹனா சிங்கர
அவன்கார்ட் விவகாரம் : கோத்தபாய உட்பட 8 பேரையும் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவு!
ஆலய வழிபாட்டின் போது சிவிலுடை தரித்த பொலிஸாரினால் மக்கள் அச்சம் !
பலாலி விமான நிலையத்திற்கு பெயர் மாற்றம்
சு.க உறுப்பினர்கள் ஐவரின் கட்சி உறுப்புரிமை நீக்கம்
கிளிநொச்சியில் சட்டவிரோதமாக அமைக்கப்படும் தென்னிலங்கையரின் உப்பளம்
தெற்காசியாவின் உயரமான கோபுரம் ஞாயிறன்று திறப்பு
09/09/2019 தெற்காசியாவின் உயரமான கோபுரமான தாமரை கோபுரம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் திறந்து வைக்கப்படவுள்ளது.
இலங்கைத் தொலைத் தொடர்பு ஆணைக்குழுவின் தேவைகளுக்காக நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த தாமரை கோபுரத்தின் நிர்மாண பணிகள் 2008 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. எனினும் அரசியல் சர்ச்சைகள் காரணமாக 2012 ஆம் ஆண்டே சீன நிறுவனத்துடன் இணைந்து நிர்மாண பணிகள் தொடங்கப்பட்டன.
குறித்த தாமரை கோபுரத்தில் ஐம்பது வானொலி அலைவரிசைகளும் , 20 தொலைகாட்சிகளுக்கான அலைவரிசைகளுக்குமான வசதிகள் உள்ளன. தலைநகரின் அடையாளச் சின்னமாக திகழப்போகும் இந்த கோபுரம் உள்நாட்டு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை கவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
சீரான காலநிலையின் போது சிவனொலிபாதமலையை இந்த கோபுரத்திலிருந்து காணக்கூடிய அரிய சந்தரப்பம் கிடைக்கும்.ஐந்து மின் தூக்கிகளை கொண்டுள்ளது. செக்கனுக்கு 7 மீட்டர் உயரும் இலங்கையின் முதலாவது மின் தூக்கிகளாகும்.
இந்த கோபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள சுழலும் உணவகத்திலிருந்து கொழும்பு நகரையே முழுமையாக காணமுடியும்.
ஆயிரம் பார்வையாளர்கள் அமரக் கூடிய மண்டபம் , ஆயிரத்து 500 வாகனங்களை நிறுத்தி வைக்கக் கூடிய தரிப்பிட வசதிகள் , மற்றும் ஹோட்டல்கள் ஆடம்பர அறைகள் ஆகியவற்றை தன்னகத்தே கொண்டுள்ளது.
பிரான்ஸின் ஈபில் கோபுரம் , டுபாயில் புரூக் கலீபா கோபுரம், மலேசியாவில் தெற்ரோணர் இரட்டை கோபுரம் , அமெரிக்காவில் எம்பையர் கோபுரம் ஆகிய நகர சின்னங்களுடன் இலங்கையின் தாமரை கோபுரத்தின் பெயரும் இடம்பெறபோகின்றது. நன்றி வீரகேசரி
09/09/2019 படகு மூலம் நடக்கும் ஆட்கடத்தல் முயற்சிகளை தடுக்க இலங்கை மற்றும் ஆவுஸ்திரேலியா தொடர்ந்து இணைந்து செயற்படும் என இலங்கை வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. கடந்த மே மாதம் முதல் ஆட்கடத்தல் முயற்சிகள் அதிகரித்திருப்பது தொடர்பாக நடந்த சந்திப்பின் பிறகு இக்கருத்தை தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கடல் பகுதியில் நடக்கும் ஆட்கடத்தல் பயணங்களை தடுக்க இலங்கை முழு ஒத்துழைப்பை வழங்கும் என இலங்கை வெளியுறவுச் செயலாளர் ரவிநாத ஆரியசிங்க கூறியுள்ளார். இக்கூட்டத்தில் இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர் ஆணையர் டேவிட் ஹோலி, எல்லைப் பாதுகாப்பு நடவடிக்கைகளின் கட்டளை தளபதி கிராக் புர்னி உள்ளிட்ட பல அதிகாரிகள் பங்குப்பெற்றுள்ளனர்.
ஆட்கடத்தல் (People Smuggling) மற்றும் மனித கடத்தல் (Human Trafficking) சிக்கல்களை விவாதிக்கும் இலங்கை-அவுஸ்திரேலியா இடையேயான ஆட்கடத்தல் மற்றும் நாடுகடந்த குற்றம் தொடர்பான கூட்டு செயல் குழு கடந்த ஆண்டு அக்டோபரில் இலங்கையில் கூடியிருந்தது. இந்த ஆண்டு வரும் அக்டோபர் 11 அன்று அவுஸ்திரேலியாவில் கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, நீர்கொழும்பு மீன்பிடி துறைமுகத்தை பார்வையிட்ட அவுஸ்திரேலிய எல்லைப் பாதுகாப்பு நடவடிக்கைகளின் கட்டளை தளபதி கிராக் புர்னி, “அவுஸ்திரேலியாவில் உள்ள அரசியல் சூழல், தேர்தல் மற்றும் இலங்கையில் நிகழ்ந்த துயர்நிறைந்த குண்டுவெடிப்பு சம்பவங்கள் படகு வழியாக வர முயல்பவர்களின் எண்ணிக்கையை சற்று அதிகரித்திருக்கலாம்” எனக் கூறியிருந்தார்.
கடந்த 2013ம் ஆண்டு எல்லைப்பாதுகாப்பு நடவடிக்கை நடைமுறைக்கு வந்தது முதல் இதுவரை அவுஸ்திரேலியாவை அடைய முயன்ற 37 படகுகளில் வந்த 865 பேர் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. அதில் இலங்கையைச் சேர்ந்த 204 பேர் நாடுகடத்தப்பட்டுள்ளனர். நன்றி வீரகேசரி
எழுக தமிழ் நிகழ்வில் தமிழர் அனைவரும் அணி திரள தமிழர் மரபுரிமைப் பேரவை அழைப்பு
12/09/2019 தமிழ் மக்கள் பேரவையால் எதிர்வரும் திங்கட்கிழமை காலை 9.00 மணிக்கு யாழ் முற்றவெளியில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள எழுக தமிழ் நிகழ்வில் தமிழர் அனைவரும் அணி திரள தமிழர் மரபுரிமைப் பேரவை வேண்டி நிற்கின்றது.
இது தொடர்பில் தமிழர் மரபுரிமைப் பேரவை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது
தமிழர் தம் மரபுசார் வாழ்நிலங்கள் விளைபுலங்கள் வன்கவர்வு செய்யப்பட்டு தமிழர் மரபில் அந்நிலங்களிற்கு வழங்கப்பட்டு வந்த காரண இடுகுறி பெயர்கள் மாற்றப்பட்டு சிங்கள புனை பெயர்கள் இடப்பட்டு திட்டமிடப்பட்ட சிங்களக்குடியேற்றங்கள் கேட்பாரற்று மேற்கொள்ளப்பட்டு இதன் மூலம் இலங்கைத்தீவின் தமிழர் தாயகப் பிரதேசத்தில் தமிழரின் இனப்பரம்பல் கோலம் இன விகிதாசாரம் என்பவை திட்டமிடப்படடு சிதைக்கப்படுகின்றன.
தமிழர்களின் தொன்மை வரலாற்றின் சாட்சிகளான வணக்கத்தலங்கள் தகர்க்கப்பட்டு பௌத்த விகாரைகள் நிர்மாணிக்கப்படுவதை தடுக்க முடியாத அரசியல் கையறு நிலையில் தமிழினம் தவிக்கின்றது.
தமிழர் தாயகப் பிரதேசத்துடன் இணைந்த கடற்பரப்பில் அத்துமீறி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபடும் சிங்கள மீனவர்களின் தான்தோன்றித்தனத்தை கட்டுப்படுத்தாது அதற்கு தூபமிடுவதாகவே அரசியந்திரம் செயற்பட்டு வருகின்றது. இதனால் தமிழ் மீனவர்களின் அன்றாட வாழ்வு வினாக்குறியாகியுள்ளது.
அரசியல் கைதிகள் கேட்பாரற்று தசாப்தங்கள் கடந்தும் சிறைக்கூடங்களில் சித்திரவதைகளை அனுபவித்து வர இறுதி யுத்தத்தின் இனப்படுகொலைஞர்கள் தண்டனைகள் எதுவுமின்றி ஆட்சி பீடத்தின் அதிகாரக் கதிரைகளை அழகுபடுத்துகின்றனர். வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான போராட்டங்கள் 931 நாட்களைக் கடந்துவிட்ட போதும் காத்திரமான முடிவுகள் எதுவும் கிடைத்து விடாத கையறு நிலையில் இலங்கைத்தீவின் இரண்டாம் தரப் பிரஜைகளாக கட்டமைக்கப்பட்ட இன அழிப்பொன்றிற்கு உட்படுத்தப்பட்டு தான் வாழும் தன் மரபுசார் நிலத்தில் மெல்ல மெல்ல இல்லாமல் போய்க் கொண்டிருக்கின்ற அபாய நிலையின் விளிம்பில் தமிழினம் வாழ்ந்து கொண்டிருக்கின்றது.
நிரந்தரமான, காத்திரமான அரசியல் தீர்வொன்று வழங்கப்பட்டாலன்றி இலங்கைத்தீவில் தமிழர்களின் இருப்பு வரிதாக்கப்பட்டு விடும் என்பது அரசியல் பொது .வெளியில் அனைவராலும் உணரப்பட்ட போதிலும் ஒரு தீர்வுத்திட்டம் தொடர்பில் போர் ஓய்ந்து போன கடந்த ஒரு தசாப்தம் ஆறப்போடல்கள், இளுத்தடிப்புக்கள் உடன் கடந்து போயிற்று.
எனவே தமிழர்களாகிய நாம் அனைவரும் தமிழினம் வீழ்ந்து விடாது விழ விழ எழும் என்பதை சிங்கள பேரினவாத சக்திகளிற்கு உணர்த்தவும். தமிழ் இனத்தின் நிலையையும் கோரிக்கைகளையும் சர்வதேசத்திற்கு இடித்துரைக்கவும், அனைத்து வேறுபாடுகளையும் கடந்து தமிழினம் இவ் எழுக தமிழில் ஒன்றுபட வேண்டும் என்றுள்ளது. நன்றி வீரகேசரி
திருமண பந்தத்தில் இணைகிறார் நாமல் : படங்கள் இணைப்பு
12/09/2019 எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் மகனும் ஹம்பாந்தோட்டை பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ இன்று திருமண பந்தத்தில் இணையவுள்ளார்.
திலக் வீரசிங்க தம்பதியினரின் மகளான 22 வயதுடைய லிமினி வீரசிங்கவை இன்றைய தினம் (12.09.2019) 33 வயதான நாமல் ராஜபக்க்ஷ கரம்பிடிக்கின்றார்.
கொழும்பு கங்காராம விகாரையில் நாமல் ராஜபக்ஷ மற்றும் லிமினி வீரசிங்க ஆகியோரின் திருமணம் இடம்பெறுகின்ற நிலையில், திருமண வரவேற்பு நிகழ்வு வீரகெட்டியவிலுள்ள கால்டன் இல்லத்தில் இடம்பெறுக்கின்றமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
“புலதிசி” கடுகதி புகையிரத பயணத்தை ஆரம்பித்து வைத்த ஜனாதிபதி
11/09/2019 கொழும்பு கோட்டையிலிருந்து பொலன்னறுவை வரை பயணிக்கும் “புலதிசி” நகர் சேவை கடுகதி புகையிரதம் இன்று (11) பிற்பகல் தனது பயணத்தை ஆரம்பித்தது.
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவும் இந்த பயணத்தில் இணைந்துகொண்டதோடு, அவர் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து மருதானை புகையிரத நிலையம் வரை பயணித்தார்.
தினமும் பிற்பகல் 3.00 மணிக்கு கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து பயணத்தை ஆரம்பிக்கும் புகையிரதம் இரவு 7.45 மணிக்கு பொலன்னறுவையை சென்றடையும்.
மறுநாள் அதிகாலை 3.45 க்கு பொலன்னறுவையிலிருந்து மீண்டும் புறப்படும் புகையிரதம் மு.ப. 9.06 க்கு கோட்டை புகையிரத நிலையத்தை வந்தடையும்.
இப்புதிய கடுகதி புகையிரதம் பொலன்னறுவை, குருணாகல், மஹவ, கெக்கிராவ, ஹபரண, ஹிங்குரக்கொட ஆகிய புகையிரத நிலையங்களில் நிறுத்தப்படும்.
இலங்கை புகையிரத சேவைக்கு புதிதாக இணைக்கப்பட்டுள்ள புலதிசி நகர் சேவை கடுகதி புகையிரதம் எஸ் 13 சார்ந்த அதிநவீன சொகுசு புகையிரதமாகும்.
கொழும்பு கோட்டை மற்றும் பொலன்னறுவை நகரங்களுக்கிடையிலான விசேட புகையிரத சேவை கடந்த சில தசாப்தங்களாக இடம்பெறவில்லை என்பதுடன், அந்த குறையை நிவர்த்திக்கும் வகையிலேயே ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலையீட்டில் பொலன்னறுவை கடுகதி புகையிரத சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே மருதானை புகையிரத நிலையத்தின் கட்டுப்பாட்டு அறையையும் ஜனாதிபதி இன்று பார்வையிட்டார்.
அமைச்சர் அர்ஜுன ரணதுங்க, இராஜாங்க அமைச்சர் அசோக அபேசிங்க மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் உள்ளிட்ட அதிதிகள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர். நன்றி வீரகேசரி
ஜனநாயகத்தால் எதனையும் வெற்றி கொள்ள முடியும் - பிரதமர்
13/09/2019 நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாதவர்களே சர்வாதிகார பாதையை தேர்ந்தெடுப்பார்கள். சர்வாதிகாரத்தால் எந்த முன்னேற்றமும் கிடைக்க போவதில்லை. சர்வாதிகாரத்தால் எதனையும் சாதிக்கலாம் என்று ஒருசிலர் நம்புகிறார்கள். அதற்கு மாறாக பாராளுமன்றத்தில் பெரும்பான்மைப் பலம் இல்லாவிட்டாலும் ஜனநாயகத்தால் எதனையும் வெற்றிக் கொள்ள முடியும் என்பதை கடந்த நான்கரை வருடங்களில் நிரூபித்து காட்டியுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
குறைந்த வருமானம் பெரும் 3300 குடும்பங்களுக்கு வீடுகளை கையளிக்கும் நிகழ்வு இன்று கொழும்பு சுகததாச உள்ளக விளையாடரங்கில் பிரதமர் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்றது.
மாநகரங்கள் , மேற்கு அபிவிருத்தி அமைச்சின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அமைச்சர்களான பாட்டலி சம்பிக்க ரணவக்க, ரவி கருணாநாயக்க , மனோ கணேசன், எரான் விக்ரமரத்ன ஆகியோரும் பாராளுமன்ற உறுப்பினர்களான முஜிபூர் ரஹூமான், ஹிருணிகா பிரேமச்சந்திர, எஸ்.எம். மரிக்கார் ஆகியோரும் கருந்துக்கொண்டார்கள்.
பாராளுமன்றத்தில் பெரும்பான்மையின்றி பல்வேறு பணிகளை எம்மால் முன்னெடுக்க முடியுமாக இருந்தால் பெரும்பான்மை கிடைத்தால் இதனை இதனைவிட பல வேலைத்திட்டங்களை முன்னெடுக்க முடியும் .
வெள்ளை வேன் கலாசாரதினூடாக ஜனநாயக இலக்குகளை அடைய முடியாது. சகலருடனும் ஒற்றுமையாக செயற்படுவதினூடாகவே இலக்குகளை அடைந்துக்கொள்ள முடியும்.
கட்டட நிர்மாணங்களை மேற்கொண்டது போன்று மறுபுறம் ஜனநாயகத்தையும் படிபடியாக கட்டியெழுப்பியுள்ளோம். கடந்த அரசாங்கத்தால் இந்த அரசாங்கத்துக்கு அதிகளவான கடன் சுமையையே கொடுக்க முடிந்தது. சுமைகளின் மத்தியில் ஆட்சியை பொறுப்பேற்று கொண்டிருந்தாலும் சவால்களை பொருட்படுத்தாமல் சிறந்த வெற்றி இலக்குகளை அடைந்துக்கொள்ள கூடியதாக இருக்கிறது என்றும் இதன்போது கூறினார். நன்றி வீரகேசரி
பயங்கரவாத தாக்குதலுக்கு இலக்காகி மீளக் கட்டியெழுப்பப்படும் சியோன் தேவாலயத்திற்கு டக்ளஸ் விஜயம்!
13/09/2019 கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்டத்தில் பயங்கரவாத தாக்குதலுக்கு இலக்காகி பல நூறு அப்பாவி மக்கள் பலியான சியோன் தேவாலயத்தின் மீள் கட்டுமாணப் பணிகளை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.
ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இன்றையதினம் (13) மட்டக்களப்பு மாவட்டத்திற்கு சிறப்புப் பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
இவ் விஜயத்தின் போது குறித்த மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு சென்று நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்தறியவுள்ளதுடன் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் செயற்பாட்டாளர்களை சந்தித்து கலந்துரையாடல்களையும் மேற்கொண்டு வருகின்றார்.
இந்நிலையில் கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு இலக்கான மட்டக்களப்பு சியோன் தேவாலயத்திற்கு நேரில் சென்று பாதிப்புக்களை பார்வையிட்டதுடன் தாக்குதலின் பின்னரான கட்டுமாண பணிகளையும் பார்வையிட்டுள்ளார்.
அத்துடன் தேவாலய நிர்வாகத்தினரையும் சந்தித்து தாக்குதலின் பின்னரான நிலைமைகள் தொடர்பில் கலந்துரையாடியமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
இலங்கையின் எதிர்காலம் கேள்விக்குறியாகலாம் : ஐ. நா. பிரதிநிதி ஹனா சிங்கர
13/09/2019 இலங்கை கடந்த காலங்களில் வெள்ளப்பெருக்கிற்கும், கடுமையான வறட்சிக்கும் முகங்கொடுத்து வந்திருக்கின்றது. இத்தகைய நிலைமைகள் காலநிலை மாற்றத்தினால் வெகுவாகப் பாதிக்கப்படக்கூடிய நாடாக இலங்கையை மாற்றியிருக்கின்றன.
இப்பிரச்சினைக்குத் தீர்வுகாணும் வகையில் தற்போது உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதிலேயே இலங்கையின் எதிர்காலம் தங்கியிருக்கிறது.
ஏனெனில் காலநிலை மாற்றத்தின் விளைவாக ஏற்படத்தக்க பாதிப்புக்களினால் இலங்கையின் வாழ்க்கைத்தர மட்டம் 5 – 7 சதவீதம் வீழ்ச்சியடையும் நிலையேற்படும் என்று இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிடப் பிரதிநிதி ஹனா சிங்கர எச்சரித்திருக்கிறார்.
பொருளாதாரம் மற்றும் வாணிப விஞ்ஞானத்தில் மாணவர்களுக்கான சர்வதேச அமைப்பின் கூட்டத்தொடரில் இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிடப் பிரதிநிதி ஹனா சிங்கர் 'இளைஞர்களை மாற்றியமைத்தல், இலங்கையை மாற்றியமைத்தல்' என்ற தலைப்பில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். நன்றி வீரகேசரி
அவன்கார்ட் விவகாரம் : கோத்தபாய உட்பட 8 பேரையும் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவு!
12/09/2019 அவன்கார்ட் நிறுவனத்துக்கு மிதக்கும் ஆயுத களஞ்சியத்தை முன்னெடுத்து செல்ல அனுமதியளித்ததன் ஊடாக அரசாங்கத்துக்கு 1,140 கோடி ரூபா நட்டதை ஏற்படுத்தியதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தாக்கல் செய்துள்ள வழக்கை ஆட்சேபித்து கோத்தபாய ராஜபக்ஷ தாக்கல் செய்துள்ள மனுவின் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டுள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம், அவ் வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள கோத்தபாய ராஜபக்ஷ உள்ளிட்ட 8 பேரையும் விடுவிக்க கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றுக்கு உத்தரவிட்டுள்ளது.
மேன் முறையீட்டு நீதிமன்றின் நீதிபதிகளான அச்சல வெங்கப்புலி மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழாமே இந்த உத்தரவைப் பிறப்பித்தது.
இலஞ்ச ஊழல் ஆணைக் குழுவின் முன்னாள் பணிப்பாளர் டில்ருக்ஷி டயஸ் விக்ரமசிங்க, ஆணைக் குழுவின் எழுத்து மூல அனுமதியைப் பெறாமலேயே தான் உள்ளிட்ட 8 பேருக்கு எதிராகவும் வழக்கு தாக்கல் செய்துள்ளதாகவும், எனவே அப்படி தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதிவான் நீதிமன்றம் எடுத்த தீர்மானத்தை ரத்து செய்து தான் உள்ளிட்ட 8 பேரையும் அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுவிக்குமாறும் கோத்தபாய ராஜபக்ஷவின் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் முன்வைத்த வாதங்களை ஏற்றுக்கொண்டு நீதிமன்றம் இந்த உத்தர்வைப் பிறப்பித்தது.
எனினும் இலஞ்ச ஊழல் சட்டத்தின் 78 (1) ஆம் பிரிவின் கீழ் ஆணைக் குழுவின் எழுத்து மூல அனுமதியைப் பெற்றுக்கொண்டு, இந்த விவகாரத்தில் சந்தேக நபர்களாக பெயரிடப்பட்டுள்ளவர்களுக்கு எதிராக புதிதாக வழக்கொன்றினை தாக்கல் செய்த எந்த தடையும் இல்லை என மேன் முறையீட்டு நீதிமன்றின் தீர்ப்பில் சுட்டிக்கடடப்பட்டுள்ளது. நன்றி வீரகேசரி
ஆலய வழிபாட்டின் போது சிவிலுடை தரித்த பொலிஸாரினால் மக்கள் அச்சம் !
14/09/2019 நெடுங்கேணி வெடுக்குநாரி மலை மற்றும் அதனை அண்டிய பகுதிகள் தொல்பொருள் திணைக்களத்திற்கு சொந்தமானது என தெரிவித்து ஆலயத்தில் பொதுமக்கள் வழிபடுவதற்கு தடை ஏற்படுத்தப்பட்டது. இந்நிலையில் பொதுமக்களின் முயற்சியால் வழிபடுவதற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டதுடன் ஆலயவளாகத்தில் கட்டுமானங்களை ஏற்படுத்துவதற்கு தொல்பொருள் திணைக்களம் மற்றும் பொலிசாரால் தடைவிதிக்கப்பட்டது.
இந்நிலையில் கடந்த 4ஆம் திகதி ஆரம்பமாகிய வருடாந்த பொங்கல் விழா தொடர்ச்சியாக 9 நாட்கள் நடைபெற்று இன்றுடன் நிறைவு பெற்றுள்ளது. இந்நிலையில் நேற்றையதினம் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றதுடன், ஒலு மடு பிள்ளையார் ஆலயத்தில் இருந்து காவடிகள் வந்திருந்தன.
இந்நிலையில் நேற்று இரவு மடப்பண்டம் எடுக்கும் நிகழ்வு இடம்பெற்று இன்று அதிகாலை சூரியன் உதிப்பதற்கு முன்னர் பொங்கல் பொங்கி நிகழ்வுகள் அனைத்தும் நிறைவு பெற்றுள்ளது.
நேற்றைய இறுதி நாள் நிகழ்வில் பெருமளவான பொதுமக்கள், மற்றும் யாழ்பல்கலைகழக மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
இதேவேளை ஆலயத்தின் உச்சிப்பகுதிக்கு செல்வதற்கான படிக்கட்டுகள் இரும்பினால் அமைக்கபட்ட நிலையில் அதனை மலையில் பொருத்துவதற்கு பொலிசார் மற்றும் தொல்பொருட்திணைக்களத்தினால் அனுமதி மறுக்கபட்டிருந்தது. இந்நிலையில் நேற்றுமுந்தினம் இரவு அப்பகுதி மக்களால் குறித்த ஏணிபடிக்கட்டுகள் மலையில் பொருத்தபட்டது. ஆலயத்திற்கு சிவில் உடையில் வருகை தந்திருந்த நெடுங்கேணி பொலிசார் ஏணிப்படிக்கட்டுகள் பொருத்துவதற்கு அனுமதி அளித்தது யார் என ஆலயத்தின் நிர்வாகத்தினரிடம் விசாரித்ததுடன் திருவிழா நிறைவு பெற்ற பின்னர் இன்றையதினம் ஏணிபட்படிக்கட்டுகளை அகற்ற வேண்டும் என தெரிவித்துவித்துடன் பொலிஸ் நிலையத்திற்கு வருமாறும் கூறிவிட்டு சென்றனர்.
இந்நிலையில் படிக்கட்டுகள் அமைப்பதற்கு அனுமதி வழங்கபட வேண்டும் என கடந்த முறை இடம்பெற்ற வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவில் தீர்மானிக்க பட்டிருந்தது. அப்படி இருக்கும் பொழுது நீங்கள் ஏன் தடை ஏற்படுத்துகிறீர்கள் என பொலிசாரிடம் ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்ததுடன் ஒருங்கிணைப்பு குழுவின் முடிவும் பொய்த்து போய்விட்டதா என விசனம் தெரிவித்திருந்தனர்.
பலாலி விமான நிலையத்திற்கு பெயர் மாற்றம்
14/09/2019 விரைவில் பிராந்திய விமான சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ள பலாலி விமான நிலையத்துக்கு யாழ்ப்பாண விமான நிலையம் (JAF) என்று பெயரிடப்படவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
தி.மு.கவின் துணைத் தலைவர் கனிமொழி, நேற்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்துப் பேசிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இந்தியாவுக்கான பயணிகள் கப்பல் சேவையை மீண்டும் ஆரம்பிப்பதில் இலங்கை அக்கறை கொண்டிருப்பதாகவும் இதன் போது ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பில் பங்கேற்ற பிரதமர் செயலக அதிகாரி சுதர்சன குணவர்த்தன இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
2011ஆம் ஆண்டு தூத்துக்குடிக்கும் கொழும்புக்கும் இடையில் பயணிகள் கப்பல் சேவை ஆரம்பிக்கப்பட்ட போதும், போதிய வரவேற்பு இல்லாமையால் அது நிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
சு.க உறுப்பினர்கள் ஐவரின் கட்சி உறுப்புரிமை நீக்கம்
14/09/2019 பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.பி.திஸாநாயக்க, டிலான் பெரேரா, விஜித் விஜயமுனி சொய்சா, ஏ.எச்.எம்.பௌசி மற்றும் லக்ஷ்மன் யாபா அபேவர்தன ஆகியோரது கட்சி உறுப்புரிமை நீக்கப்பட்டுள்ளது.
சுதந்திர கட்சியின் மூலம் தேசிய பட்டியலூடாக பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட இவர்களில் டிலான் பெரேரா, மற்றும் எஸ்.பி.திஸாநாயக்க ஆகியோர் அண்மையில் பொதுஜன பெரமுனவின் அங்கத்துவத்தைப் பெற்றிருந்தனர்.
அதனைத் தொடர்ந்து சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசகரவினால் மேற்குறிப்பிட்ட ஐந்து பேருக்கும் எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை தொடர்பில் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். நன்றி வீரகேசரி
கிளிநொச்சியில் சட்டவிரோதமாக அமைக்கப்படும் தென்னிலங்கையரின் உப்பளம்
15/09/2019 கிளிநொச்சியின் உருத்திரபுரம் பகுதியின் செருக்கன் பகுதியில் தென்னிலங்கையைச் சேர்ந்த நிறுவனத்தால் சட்டவிரோதமான முறையில் உப்பளம் அமைக்கப்பட்டு வருகின்றது.
இந்த விடயம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
தென்னிலங்கையைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று சட்டவிரோதமான முறையில் உப்பளம் ஒன்று அமைக்கப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கு பொது மக்களால் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் அங்கு சென்றார்.
குறித்த பகுதியில் அமைக்கப்படும் உப்பளமானது பிரதேச செயலாளர் பிரதேச சபை மற்றும் மாவட்ட செயலாளர் ஆகியோரின் அனுமதி இன்றி அமைக்கப்பட்டு வருகின்றது. குறித்த உப்பளம் குறித்த பகுதியில் அமைக்கப்பட்டு வருவதால் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் வயல் நிலங்கள் பாதிக்கப்படும் நிலையிலும் செருக்கன், பெரியபரந்தன் சாலம்பன் நீவில் பொறிக்கடவை உருத்திரபுரம் சிவநகர் இன்னும் பல கிராமங்களின் நீர் உவர் நீராகும் நிலையிலும் சுமார் 3000 மக்களின் வாழ்வு பாதிக்கப்படும் நிலையிலும் உள்ளது.
ஏற்கனவே கிளிநொச்சியில் ஆணையிறவு சர்வதேச தரத்தில் வெள்ளை உப்பிற்கு பெயர் பெற்ற குறிஞ்சா தீவு உப்பளம் போன்றவை உள்ள நிலையில் இந்த உப்பளம் இந்தப் பகுதிக்கு தேவையற்ற வகையில் அமைக்கப்பட்டு வருகிறது.
இந்த விடயம் தொடர்பாக அங்கு வேலை செய்யும் மக்களிடம் வினாவியபோது குறித்த வேலைகள் ஆரம்பிக்கப்படும் முன்பு யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் குறித்த நிறுவனத்தின் தலைவர்களுடன் வருகை தந்து கிராமத்தில் கூட்டம் ஒன்றை நடத்தியதாகவும் அந்த கூட்டத்தில் 35 பேருக்கு வேலைவாய்ப்பு தருவதாகவும் தமக்கு வழங்கிய வாக்குறுதியின் படியே தாங்கள் வந்து வேலை செய்வதாகவும் குறிப்பிட்டனர்.
கிராம மக்களின் முறைப்பாட்டை அடுத்து பாராளுமன்ற உறுப்பினர் அந்த கிராம மக்கள் கரைச்சி பிரதேச சபையின் தவிசாளரும் கலந்து கொண்டார். நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment