அவுஸ்திரேலியா - இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் உதவிபெற்ற நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரி மாணவர்கள்


அவுஸ்திரேலியாவிலிருந்து கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கிவரும் தன்னார்வத் தொண்டு நிறுவனமான இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் உதவியைப்பெறும் நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரி மாணவர்களுக்கான இவ்வாண்டின் இறுதிக்கட்ட நிதிக்கொடுப்பனவுகள் அண்மையில் வழங்கப்பட்டது.
கல்லூரி அதிபர் திரு. புவனேஸ்வரராஜா அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் நடப்பாண்டு தலைவர் திரு. லெ. முருகபூபதியும் கலந்துகொண்டார்.
மாணவர்களின் தொடர்பாளரும் கல்வி நிதியத்தின் புலமைப்பரிசில் திட்டத்தினால் பயனடைந்த முன்னாள் மாணவியுமான தற்போது இதே கல்லூரியில் பணியாற்றும் ஆசிரியை செல்வி நிலோஜினியும் கல்லூரி அபிவிருத்திச்சங்க பொருளாளர் ஆசிரியை திருமதி ஶ்ரீகுமார், ஆசிரியர் திரு. சுதாகரன் மற்றும் இங்கிலாந்திலிருந்து வருகை தந்திருந்த கல்லூரியின் முன்னாள் மாணவி திருமதி ஜெயசித்ரா இந்திரதாஸ ஆகியோரும், உதவிபெறும் மாணவர்களின் தாய்மாரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
அவுஸ்திரேலியாவிலிருந்து இயங்கும் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் உதவியை கடந்த காலங்களில் பெற்று கல்வியை இடை நிறுத்தாமல் தொடர்ந்த மாணவிகள் செல்விகள் ரேணுகா, நிலோஜினி ஆகியோர் பல்கலைக்கழக பட்டதாரிகளாகி  தற்போது பாடசாலைகளில் ஆசிரியப்பணியை மேற்கொண்டிருப்பதையும், மற்றும் ஒரு முன்னாள் மாணவியான செல்வி பாமினி செல்லத்துரையும் பட்டதாரியாகி தற்போது நுவரேலியா கல்வி வலயத்தில் பிரதிக்கல்விப்பணிப்பாளராகியிருப்பதையும் சுட்டிக்காண்பித்து உரையாற்றிய அதிபர் திரு. புவனேஸ்வரராஜா, அவர்கள் போன்று தற்போது கல்வி நிதியத்தின் உதவிகளை பெற்றுவரும் மாணவர்களும் எதிர்காலத்தில் திகழவேண்டும். நமது கல்லூரிக்கு பெருமை சேர்க்கவேண்டும் என்றும் தெரிவித்தார்.
உதவிபெறும் மாணவர்கள் மற்றும் அவர்களின் தாய்மாருடனும் கலந்துரையாடல்  இடம்பெற்றது.
இலங்கை மாணவர் கல்வி நிதியம் இவ்வாண்டு இறுதிவரைக்குமான நிதிக்கொடுப்பனவுகளை இதர பிரதேச மாணவர் தொடர்பாளர்கள் ஊடாக அனுப்பிவைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
---0---
-->








No comments: