13/09/2019 கொழும்பு (நியூஸ் இன் ஏசியா) ஜனாதிபதி தேர்தலை டிசெம்பர் 7 ஆம் திகதிக்கு முன்னதாக நடத்துவதற்கும் செப்டெம்பர் 30 ஆம் திகதிக்கு முன்னதாக நியமனப்பத்திரங்களை கோருவதற்கும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தீர்மானித்திருப்பதாக கூறப்படுகின்றது.
தேர்தல் களத்தில் நிற்கக்கூடிய வேட்பாளர்களில் முன்னிலையில் விளங்குபவர் குறித்து இதுவரையில் எந்தவிதமான தெளிவும் இல்லாத நிலையொன்று இருப்பது கவனிக்கத்தக்கது. குழப்பங்கள் நிறைந்ததாக இருக்கும் நாட்டில் சகல வற்றையும் நேர்த்தி செய்யக் கூடிய சிறந்த வேட்பாளர் என்று ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியால் கருதப்படுகின்ற கோதாபய ராஜபக்ஷ உட்பட எந்தவொரு வேட்பாளருக்கும் ஆதரவாகவோ அல்லது எதிராகவோ உய்த்துணரக் கூடிய அலையொன்று இல்லை.
பல்வேறு அரசியல் - இன ரீதியிலான அல்லது அரசியல் மதரீதியிலான வாக்காளர்கள் மனநிலையும் என்னவென்று புரியாது ஒரு மர்மமாகவே இருக்கின்றது. உதாரணமாக நாட்டின் வாக்காளர் தொகையில் 70 சதவீதமாக இருக்கின்ற சிங்கள பௌத்த வாக்காளர்கள் , சிங்கள பௌத்த தேசியவாத விக்கிரகம் போன்று பாறைச்சாற்றப்படுகின்ற பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோதாபய ராஜபக்ஷவின் பின்னால் அதிக பெரும்பான்மையாக அணித்திரள்வார்கள் என்பது நிச்சயமில்லை. சஜித் பிரேம தாசவிடமிருந்து கோதாபயவிற்கு பெரும் சவால் தோன்றுகின்றதா என்பதும் தெளிவாக தெரியவில்லை. பிரேமதாசவும் சிங்கள பௌத்த தேசியவாத அடையாளத்தை கொண்டிருக்கின்றார் என்பதையும் கவனத்திற் கொள்ள வேண்டும்.
சிங்கள பௌத்தர்களின் ஆதிக்கத்தில் உள்ள பிரதான தேசிய கட்சிகளான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி , ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஆளும் ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி)ஆகியவற்றை நம்பி ஏமாந்து போன சிறுபான்மை சமூகங்களான தமிழர்களும் , முஸ்லிம்களும் எந்தவொரு தீர்மானத்தையும் எடுக்காமல் அந்தரத்தில் நிற்கின்றார்கள். சிறுபான்மையின கட்சிகள் தங்களது மக்களின் சார்பிலான கோரிக்கைகளை முன்வைத்து பிரதான கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கின்றன . ஆனால் இந்த பிரதான கட்சிகளில் எந்த கட்சியினால் அந்த கோரிக்கைகளை பகிரங்கமாக ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும் என்பதும் தெளிவில்லாமல் இருக்கின்றது.
அமெரிக்க குடியுரிமையிலிருந்து கோதாபயவை விடுவிப்பது தொடர்பான நிச்சயமற்ற நிலைக்கு மத்தியில் தேர்தல் பணிகளை ஆரம்பித்த பொதுஜன பெரமுன இப்போது அந்த சிக்கலிலிருந்து விடுபட்டு விட்டது.ஆனால் இன்னமும் நான்கு பிரச்சினைகளை அவர் எதிர்நோக்கிய வண்ணம் இருக்கின்றார். முதலாவதாக , தனது சொந்த ஊரில் தந்தையார் டி.ஏ.ராஜபக்ஷவிற்காக நினைவாலயத்தை நிர்மாணிப்பதற்கு அரசாங்க பணத்தை முறைகேடாக பயன்படுத்தியதாக அவருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை இடம்பெற்று வருகின்றது. ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக கோதாபயவை அரசியல் ரீதியாக பலவீனப்படுத்துவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிப்பில் சட்டமா அதிபர் இந்த வழக்குகளை தீவிரமாக முன்னெடுக்கிறார். அதேவேளை எவன் கார்ட் நிறுவனத்திற்கு அனுமதியளித்து அரசுக்கு ஆயிரத்து 140 கோடி ரூபா நட்டத்தை ஏற்படுத்திய குற்றச் சாட்டின் பேரில் தொடுக்கப்பட்ட வழக்கில் கோதாபயவையும் மற்றைய 7 போரையும் விடுவிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் வியாழக்கிழமை மாதிஸ் கிராட் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டிருந்தது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
இரண்டாவதாக , கோத்தாபய சிறுபான்மையின சமுகங்களுடன் முரண்பாட்டை எதிர்நோக்குகிறார்.நான்காவது ஈழப்போரின் இறுதிக் கட்டத்தில் மிகவும் கொடூரமான முறையில் இராணுவ நடவடிக்கைகளை முன்னெடுத்ததாக அவரைக் குற்றச்சாட்டும் தமிழர்கள் 2006 -2009 போர்க் காலக்கட்டத்தின் போது , பயங்கரவாத சந்தேக நபர்களை வெள்ளை வேனில் கடத்துவதற்கு அவர் அனுமதி வழங்கியதாகவும் முறையிடுகிறார்கள். போருக்கு தலைமைதாங்கிய முன்னாள் தளபதிகள் கோதாபயவை சூழ்ந்திருப்பது தமிழர்களுக்கு வெறுப்பை ஏற்படுத்துகின்றது. இவர் ஜனாதிபதியாக வந்தால் ஒரு இராணுவக்காரன் போன்றே நடந்துக் கொள்வார் என்று தமிழர்கள் அஞ்சுகின்றார்கள்.அதிகார பரவலாக்களுக்கான தங்களது கோரிக்கைகளை அவர் நிராகரிப்பதினாலும் அவரை தமிழர்கள் வெறுக்கிறார்கள்.
முஸ்லிம்களை பொறுத்தவரை 2009 இல் விடுதலை புலிகளுக்கு எதிரான போரில் அரசாங்க படைகள் கண்ட வெற்றிக்கு பிறகு தங்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட அச்சுறுத்தலுக்கும் வன்முறைகளுக்கும் மூலகாரணம் கோதாபயவே என்றும் இவர் ஜனாதிபதியாக வந்தால் தங்களுக்கு எதிராக அடக்குமுறையை மேற்கொள்வார் என்றும் முஸ்லிம்கள் அஞ்சுகின்றனர். அதேவேளை , முஸ்லிம் தீவிரவாதிகளின் பயங்கரவாத தாக்குதல்களுக்கு எதிராக தங்களை பாதுகாக்க ஐக்கிய தேசிய கட்சி - ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கம் தவறியதையடுத்து கத்தோலிக்கர்களும் , ஏனைய கிறிஸ்தவர்களும் கோதாபய பக்கம் சாய்ந்திருக்கிறார்கள் போல் தெரிகிறது.
இலங்கையின் ஜனாதிபதி தேர்தலில் சிறுபான்மையின சமூகங்கள் முக்கியத்துவம் வாய்ந்தவையாக விளங்குகின்றன. ஏன்னென்றால் அவர்கள் நாட்டின் சனத்தொகையில் 30 சதவீதமாக இருக்கிறார்கள் . தேர்தலில் வெற்றிபெறுவதற்கு வேட்பாளர் ஒருவர் 50 சதவீதத்திற்கும் கூடுதலான வாக்குகளை பெற்றாக வேண்டும். கோதாபயவை பொறுத்தவரை அவருக்கு பலம் வாய்ந்த சிங்கள பௌத்த ஆதரவுத்தளம் இருக்கிறது. ஆனால் , அவர் சிறுபான்மையின சமூகங்களின் வாக்குகளில் 25 சதவீதத்தை பெறவேண்டியிருக்கிறது. குறிப்பாக இன்னொரு சிங்கள பௌத்த தேசிய வாதியான சஜித்பிரேமதாசவை ஐக்கியதேசிய கட்சி ஐக்கியப்பட்டு களமிறக்குமேயானால் கோதாபய வெற்றி பெறுவதற்கு இந்த சிறுபான்மையின் வாக்குகள் மிக அவசியம்.
பகிரங்கமாக பிரச்சாரம் செய்வதற்கு கோத்தபாய காட்டுகின்றதயக்கம் மூன்றாவது பிரச்சினையாகும். இதுவரையில் அவர் உயர்மட்டவர்த்தக சமூகம் மற்றும் புத்திஜீவிகள் மத்தியில் மூடிய கதவுக்குள் மாத்திரமே உரையாற்றி வருகின்றார்.மக்கள் செல்வாக்கு மிக்க அவரது மூத்த சகோதரரான , முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் கூட பிரசாரங்களை இன்னமும் ஆரம்பிக்கவில்லை.
ஜனாதிபதி சிறிசேன தலைமையிலான சுதந்திரக்கட்சியுடனான பொது ஜன பெரமுனவின் கூட்டணிபற்றி நிலவுகின்ற நிச்சயமற்ற தன்மை , கோதாபய எதிர்நோக்குகின்ற நான்காவது பிரச்சினையாகும். பொதுஜன பெரமுனவின் தாய்க்கட்சியான சுதந்திரக்கட்சி பாராளுமன்றத்தில் ஒரு சிறிய குழுவாக குறுகிவிட்டது. ஆனால் எண்ணிக்கையில் குறைவானவர்களாக இருந்தாலும் அந்த கட்சிக்கென்று விசுவாசமான வாக்காளர்கள் இருக்கிறார்கள் . பொதுஜன பெரமுனவின் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல கூறியிருப்பதைப்போன்று ஜனாதிபதி தேர்தலில் ஒவ்வொரு வாக்கும் பெறுமதியானது. ஆனால் பொதுஜனபெரமுனவின் தாமரை மொட்டு சின்னத்தில் அல்ல ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சின்னத்திலேயே தேர்தலில் போட்டியிட வேண்டும். என்று ஜனாதிபதி சிறிசேன தரப்பின் ஆரவாரமான கோரிக்கையை ஏற்றுக்கொள்வது பொது ஜன பெரமுனவிற்கு சிக்கலாகவிருக்கின்றது. 2018 பெப்ரவரியில் உள்ளுராட்சி தேர்தல்களில் சிங்கள பகுதிகளில் 47 சதவீத வாக்குகளை பெற்று தனது செல்வாக்கை நிரூபித்த தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் சின்னமான தாமரை மொட்டு இப்போது நன்கு அங்கீகரிக்கப்பட்ட ஒன்றாக இருப்பதாக பொதுஜன பெரமுன நம்புகின்றது. எது எவ்வாறாக இருப்பினும் அரசியல் ரீதியில் தப்பிப்பிழைப்பதற்காக சுதந்நதிரக்கட்சி இறுதியில் விட்டுக்கொடுக்கவேண்டிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
ஐக்கியதேசிய கட்சி
ஐக்கியதேசிய கட்சி அதன் தலைவரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் பிரதி தலைவரான வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர் சஜீத் பிரேமதாசவிற்கும் இடையே கடுமையாக பிளவுபட்டுக்கிடக்கின்றது. தலைவர் விக்கிரமசிங்கவின் நம்பிக்கையைப்பெறாமலும் வேட்பாளர் நியமனத்திற்கு கட்சிக்குள் வகுக்கப்பட்டிருக்கும் நடைமுறையைப்பின்பற்றாமலும் சஜித் பிரேமதாச ஜனாதிபதித்தேர்தலில் போட்டியிடப்போவதாக பிரசாரம் செய்திருக்கிறார்.
ஐக்கியதேசியக்கட்சியின் பெரும்பாண்மையான பாராளுமன்ற உறுப்பினர்கள் - விக்கிரமசிங்கவின் நெருங்கிய நம்பிக்கைக்குரியவர்களும் கூட - சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவாகவே நிற்கின்றார்கள். ஏன் என்றால் விக்கிரமசிங்கவை விடவும் சாதாரணமக்களின் உணர்வுகளுடன் ஒருமைப்பட்டு நிற்கக்கூடிய ஐக்கியதேசியக்கட்சியின் ஒரே உயர் தலைவர் சஜித் என்பதே அவர்களின் அபிப்பிராயமாக இருக்கின்றது. மேல் நிலை சமூகத்தை சேர்ந்தவரான விக்கிரமசிங்க சாதாரண மக்களின் வாக்குகளை கவரமுடியாதவர் என்று அவர்கள் கருதுகின்றார்கள். தனிப்பட்ட வசீகரம் என்று வருகின்ற பொழுது ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்த வரலாற்றை கொண்டவர் விக்கிரமசிங்க .
ஆனால் சஜித்தும் அவரை ஆதரிப்போரும் விக்கிரமசிங்கவின் மனதை மாற்றுவது கடினம் என்று காண்கிறார்கள். பெருமளவு அனுபவத்தையும் , கட்சி இயந்திரத்தின் மீது இறுக்கமான பிடியையும் கொண்ட விக்கிரமசிங்க ஐக்கிய தேசியக்கட்சியின் நன்கு அங்கீகரிக்கப்பட்ட தலைவராவார். சஜித் பிரேமதாசவை வேட்பாளராக அங்கீகரிப்பதை வலுவான மறுப்பதற்கு தனது இந்த உறுதியான தலைமைத்துவ அந்தஸ்தை விக்கிரமசிங்க பயன்படுத்திக்கொள்கிறார். இறுதியாக சஜித் பிரேமதாச தனது வீறாப்பான நிலையிலிருந்து இறங்கி விக்கிரமசிங்க மற்றும் பாராளுமன்ற சபாநாயகர் கரு ஜயசூரிய போன்ற மூத்த தலைவர்களின் ஆசீர்வாதத்துடனேயே தான் ஜனாதிபதியாக வர விரும்புவதாக பகிரங்கமாக அறிவிக்கவேண்டியிருந்தது.
இறுதியாக ஐக்கியதேசியகட்சி ஐக்கியப்பட்டு நின்றால் தான் தேர்தலில் வெற்றிபெறலாம் என்பதை சஜித்தும் விக்கிரமசிங்கவும் புரிந்து கொண்டிருக்கிறார்கள் . பிளவுபட்டு நின்றால் நிச்சயம் தோல்வி கிடைக்கும் . ஏன் என்றால் , எந்தவொரு வாக்காளர் பிரிவையும் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. என்பதையும் அவர்கள் விளங்கிக்கொண்டுள்ளார்கள். ஒவ்வொரு வாக்குக்காகவும் கடுமையாக பாடுபட வேண்டியிருக்கும்.
ஆனால் விக்கிரமசிங்க இன்னமும் கூட சஜித்தை ஐக்கியதேசியகட்சியின் சிறந்த வேட்பாளர் என்று நம்புவதாக இல்லை. வேட்பாளராக வருவதற்கு தனது ஆதரவைபெறவேண்டுமானால் சில நிபந்தனைகளை சஜித் நிறைவேற்றவேண்டுமென்று அவர் கூறுகின்றார். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழித்து அதற்கு பதிலாக வெஸ்ட்மினிஸ்டர் பாணியிலான பாராளுமன்ற ஆட்சி முறையைக் கொண்டுவர வேண்டும் என்பது முதலாவது நிபந்தனை. தன்னை பிரதமராக நியமிக்க வேண்டும் என்று விக்கிரமசிங்க விரும்புகிறார் இது அவரது இரண்டாவது நிபந்தனை. சிறுபான்மையினரின் ஆதரவை பெறவேண்டும் என்பது அவரது மூன்றாவது நிபந்தனையாகும்.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிக்கவேண்டும் என்ற கோரிக்கையை ஒரேயடியாக நிராகரிப்பது சஜித்பிரேமதாசவை பொறுத்தவரை சிக்கலாக இருக்கலாம். ஏன் என்றால் கடந்த ஜனாதிபதி தேர்தலில் மக்கள் முன்னிலையில் வைக்கப்பட்டு இன்னமும் நிறைவேற்றப்படாத ஒரு உறுதிமொழியாகவே அது இருக்கிறது. அதற்கு சிறுபான்மைக்கட்சிகளிடமிருந்தும் முற்போக்கு சக்திகளிடமிருந்தும் பரந்தளவு ஆதரவு இருக்கிறது.
சிறுபான்மையின கட்சிகளின் ஏனைய கோரிக்கைகளில் சிலவற்றை குறிப்பாக புதிய அரசியலமைப்பை வரைவதற்கென்று நியமிக்கப்பட்டகுழுக்களின் விதப்புரைகளுக்கு அமைவாக அரசியலமைப்புக்கான , 13 ஆவது திருத்தத்திற்கு அப்பால் அதிகாரப்பரவலாக்கத்தைச் செய்யவேண்டும் என்ற கோரிக்கையை ஏற்றுக்கொள்வதில் சஜித்துக்கு சிக்கலிருக்கும். மனிதவுரிமைகள் மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் என்று சொல்லப்படுகின்றவை தொடர்பான பிரச்சினைகளை கையாள்வதற்கு பொறுப்புக்கூறும் பொறிமுறையொன்று ஏற்படுத்தப்பட வேண்டும். என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு வலியுறுத்தும். சிங்கள பெரும்பான்மையினர் மத்தியில் இஸ்லாமிய சமூகம் தொடர்பான பீதியை கட்டுப்படுத்துவதற்கு உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும். என்று முஸ்லிம் கட்சிகள் கோரும். இந்த விவகாரங்களில் தீர்க்கமான வாக்குறுதியை சஜித் வழங்குவாரேயானால் சிங்களபௌத்த பெரும்பான்மையினர் மத்தியில் அவருக்கு இருக்கும் வாய்ப்புகளில் பாதிப்பு ஏற்படலாம். சஜித்தைவிடவும் விக்கிரமசிங்கவையே சிறுபான்மை கட்சிகள் விரும்புகின்றன. ஆனால் சஜித் ஒரு புதுப்பக்கத்தை புரட்டுவாரானால் அவரை அந்த கட்சிகள் ஏற்றுக்கொள்ளும்.
சஜித்தும் விக்கிரமசிங்கவும் மீண்டும் சந்திப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அச்சந்திப்பு விறைவாக நடக்குமா என்பது தெளிவில்லை . அதனால் நிச்சயமற்ற நிலை தொடர்கிறது.
ஜே.வி.பி ‘இவர்களும் போட்டியிடுகிறார்கள் “ என்ற வகைக்குள் வருகின்றது. பிரதான கட்சிகளின் குறைபாடுகள் காரணமாக விரக்தியுற்ற சில சிங்கள தேசிய வாத வாக்காளர்களின் ஆதரவை ஜே.வி.பி பெறக்கூடும். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி , ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுன மற்றும் ஐக்கியதேசியக்கட்சி மீதான வெறுப்பின் ஒரு அடையாளமாக முஸ்லிம்களில் ஒரு பிரிவினர் ஜே.வி.பி யின் அநுரகுமார திஸாநாயக்கவிற்கு வாக்களிக்க கூடும் என்று கூட ஒரு முஸ்லிம் தலைவர் சொன்னார். - பி.கே. பாலச்சந்திரன்- நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment