22/08/2019 கொழும்பு (நியூஸ் இன் ஏசியா) இலங்கையின் இராணுவத் தளபதியாக இருந்த லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க ஓய்வு பெற்றதையடுத்து கடந்த திங்கட்கிழமை புதிய இராணுவத் தளபதியாக லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டமை தொடர்பில் அமெரிக்கத் தூதரகத்திடமிருந்தும், ஐக்கிய நாடுகளிடமிருந்தும் கூர்மையான கருத்துக்கள் வெளிவந்திருக்கின்றன.
இலங்கையில் இனத்துவ நீதிக்கும், நல்லிணக்கத்திற்கும் பாதகமான விளைவுகளை இந்த நியமனம் ஏற்படுத்துமென்று அவை தெரிவித்துள்ளன.
பாரதூரமான மனித உரிமை மீறல்கள் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும் இராணுவ அதிகாரி ஒருவரை இலங்கை இராணுவத்தின் தளபதியாக நியமித்த செயல் இலங்கையில் அமெரிக்க இராணுவ ஒத்துழைப்பையும், முதலீட்டையும் பாதிக்கக்கூடும் என்று செவ்வாய்க்கிழமை அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள சிரேஷ்ட அதிகாரி ஒருவர் எச்சரிக்கை செய்ததாக ராய்ட்டர்ஸ் செய்தியொன்று தெரிவிக்கிறது.
இந்த நிலைவரம் தொடர்பில் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அந்த அதிகாரி, சவேந்திர சில்வாவின் நியமனம் இலங்கையின் நகர்ப்புறப் போக்குவரத்து முறைமையையும், உட்கட்டமைப்பையும் நவீனமயப்படுத்துவதை நோக்கமாகக்கொண்ட மிலேனியம் செலென்ஞ் கோப்பரேஷனின் 48 கோடி அமெரிக்க டொலர்கள் நிதியில் நீடித்த விளைவுகளைக் கொண்டிருக்கும்" என்று குறிப்பிட்டார்.
அந்த உதவி தொடர்பான உடன்படிக்கை இலங்கை அமைச்சரவையின் அங்கீகாரத்திற்காகக் காத்துக்கொண்டிருக்கிறது என்பது கவனிக்கத்தக்கது.
மிகவும் சூடேறியிருக்கும் அரசியல் சூழ்நிலையொன்றில் சில அரசியல் பிரிவுகள் தேசியவாத உணர்வுகளைக் கிளப்பக்கூடிய செயல்களின் மூலமாகப் பெருமளவு பயனடையலாம் என்று நம்புகின்றன. மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நன்கு விபரமாக ஆவணப்படுத்தப்பட்ட பதிவைக் கொண்டிருக்கும் இராணுவ அதிகாரி சவேந்திர சில்வாவை பதவியுயர்த்துவதன் மூலமாக தேசியவாத துருப்புச்சீட்டை பயன்படுத்துவது மிகவும் துரதிர்ஷ்டவசமானதாகும். நாம் மிகுந்த குழப்பமடைந்திருக்கிறோம்" என்றும் அந்த அதிகாரி குறிப்பிட்டார்.
இலங்கையின் உள்நாட்டுப் போரின் இறுதிக்கட்டங்களில் இராணுவத்தின் பிரிவொன்றுக்குத் தலைமை தாங்கி, விடுதலைப் புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளை வெற்றிகரமாக நடத்தியதாக சவேந்திர சில்வா புகழப்படுகின்றார். மோதல்களின் இறுதிக்கட்டங்களில் ஆயிரக்கணக்கான குடிமக்கள் கொல்லப்பட்டனர். வைத்தியசாலைகள் உட்பட அரசாங்கத்தினால் யுத்த சூனிய வலயங்கள் என்று பிரகடனப்படுத்தப்பட்ட பகுதிகளிலும் கூட இராணுவத்தின் விமான ஷெல் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
1984 ஆம் ஆண்டில் இலங்கை இராணுவத்தில் இணைந்த சவேந்திர சில்வா இந்தக் குற்றச்சாட்டுக்களை முற்றுமுழுதாக நிராகரித்துள்ளார். இராணுவத் தளபதிப் பதவியை ஏற்பதற்கு முன்னதாக கடந்த ஜனவரி தொடக்கம் இராணுவத்தின் அலுவலகப் பிரதானியாகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மனித உரிமைகளை மீறியவர் என்று நன்கு அறியப்பட்டவர் இராணுவத் தளபதியாக இருப்பாரேயானால், இலங்கையுடன் உறுதியான இராணுவ உறவுகளை வளர்த்திருக்கும் நாம் இனிமேல் செய்யக்கூடிய காரியங்களுக்கு ஒரு மட்டுப்பாடு இருக்கும்" என்றும் அந்த இராஜாங்கத் திணைக்கள அதிகாரி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
தலையீட்டை ஆட்சேபிக்கும் இலங்கை ஆனால் இலங்கையின் இராணுவத் தளபதி நியமனம் அரச தலைவரினால் மேற்கொள்ளப்பட்ட இறைமையுடைய ஒரு தீர்மானமாகும் என்று கூறியிருக்கும் இலங்கை வெளியுறவு அமைச்சு, இலங்கையின் அரசாங்க சேவையில் பதவியுயர்வு தொடர்பான உள்ளக நிர்வாக செயன்முறைகளிலும், தீர்மானங்களிலும் வெளியமைப்புக்கள் செல்வாக்குச் செலுத்த முயற்சிப்பது அநாவசியமானதும், ஏற்றுக்கொள்ள முடியாததுமாகும் என்றும் அமைச்சு கூறியிருக்கிறது.
இந்த நியமனம் தொடர்பில் குறிப்பிட்ட சில இருதரப்பு பங்காளிகளாலும், சர்வதேச அமைப்புக்களாலும் (குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில்) அக்கறை வெளிப்படுத்தப்பட்டிருப்பது கவலைக்குரியது: சர்வதேச சமூகத்தின் பொறுப்பு வாய்ந்த சகல உறுப்பினர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட இயற்கை நீதிக்கோட்பாடுகளுக்கு முரணானதாகும்" என்று வெளியுறவு அமைச்சினால் செவ்வாயன்று விடுக்கப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
சவேந்திர சில்வாவிற்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் முறைப்பாடுகள் மாத்திரமே என்பதை அவரது நியமனம் தொடர்பாக ஆட்சேபிக்கின்ற அமெரிக்காவும், ஏனைய தரப்பினரும் விளங்கிக்கொள்ள வேண்டும் என்று சுட்டிக்காட்டியிருக்கும் முன்னாள் கடற்படைத் தளபதியும், கடல்சார் பாதுகாப்புத்துறை நிபுணருமான அட்மிரல் கலாநிதி ஜயந்த கொலம்பகே, மேற்கத்தேய நீதி நியாயாதிக்கத்தில் முறைப்பாடுகள் நிரூபிக்கப்படாத பட்சத்தில் எந்த ஒருவரையும் குற்றப்பொறுப்புடையவர் என்றுகூற முடியாது.
இன்றுவரையில் எந்தவொரு விசாரணையையும் அடிப்படையாகக்கொண்டு சவேந்திர சில்வாவிற்கு எதிராகப் பிரத்தியேக குற்றச்சாட்டுக்கள் எவையும் முன்வைக்கப்படவில்லை. ஐ.நா.வில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் புலம்பெயர் தமிழர்களால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் ஆகும். மேற்கு நாடுகளின் அரசாங்கங்களின் ஆதரவைத் திரட்டுவதற்கான செயல்களில் ஈடுபடுவதன் மூலமாக சுதந்திர தமிழ் ஈழமொன்றுக்கான குறிக்கோளை அடையும் முயற்சிகளைத் தொடர்வதற்குப் புலம்பெயர் தமிழ் சமூகத்தவர்கள் விடுதலைப் புலிகளின் சார்பில் முன்னர் சேகரிக்கப்பட்ட பணத்தைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்" என்றும் கூறினார்.
ஜெனரல் சவேந்திர சில்வாவை இராணுவத் தளபதியாக நியமித்த மைத்திரிபால சிறிசேனவின் செயல் மிகவும் சரியானதே. ஏனென்றால் அவர் மிகவும் தகுதியானவர் என்பதுடன், பதவியுயர்வைப் பெறுவதற்கான வரிசையில் இருந்தார். 2006, 2009 போரின் போது ஜெனரல் சில்வா முன்னரங்க தளபதியாக இருந்ததுடன், போரை வெற்றிகரமாக முடிவிற்குக் கொண்டுவந்தவர்களில் ஒருவராகவும் விளங்கினார்.
விடுதலைப் புலிகள் இலங்கை ஆயுதப்படைகளினால் அழித்தொழிக்கப்பட்டதை அடுத்து இலங்கையில் உயிர் வாழ்வதற்கான உரிமை மீள நிலைநாட்டப்பட்டது என்பதை உலகம் புரிந்துகொள்ள வேண்டும். 1980 களில் போர் தொடங்கிய காலம் முதல் அது முடிவிற்கு வந்த 2009 வரை சகல இனங்களையும் சேர்ந்த குடிமக்கள், அரசாங்கத்துருப்புக்கள், தீவிரவாத இயக்கத்தின் உறுப்பினர்கள் உட்பட 200 இற்கும் அதிகமானவர்கள் ஒவ்வொரு மாதமும் உயிரிழந்து கொண்டிருந்தார்கள்.
ஆயுதப்படைகளின் வெற்றிகரமான நடவடிக்கைகள் காரணமாக சகல இனத்தவர்களும் இப்போது உயிர் வாழ்வதற்கான உரிமையை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த உரிமை மனித உரிமைகளை விடவும் கூடுதலான அளவிற்கு முக்கியமானதாகும். ஏனென்றால் மனித உரிமைகளை அனுபவிப்பதற்கு மக்கள் முதலில் உயிருடன் இருக்க வேண்டும் என்று அட்மிரல் கொலம்பகே கூறினார்.
ஜெனரல் சில்வாவிற்கு இராணுவத் தளபதி பதவி உகந்த வழிமுறைகளின் ஊடாகவே வந்திருக்கிறது. இராணுவத்தின் அலுவலகப் பிரதானி இராணுவத் தளபதியாகப் பதவி உயர்த்தப்படுவது வழமையான நடைமுறையாகும் என்றும் கொலம்பகே குறிப்பிட்டார்.
2010ஆம் ஆண்டில் ஜெனரல் சில்வா ஐ.நா.வில் இலங்கையின் பிரதி நிரந்தரப் பிரதிநிதியாக நியமிக்கப்பட்ட போது அவர் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படுகின்ற போர்க்குற்றங்கள் குறித்து அமெரிக்காவோ அல்லது ஐக்கிய நாடுகள் சபையோ பிரச்சினை கிளப்பாதது குறித்து முன்னாள் கடற்படைத் தளபதி ஆச்சர்யம் தெரிவித்தார். அப்போதைய ஐ.நா. செயலாளர் நாயகத்தினால் சவேந்திர சில்வா அமைதி காக்கும் நடவடிக்கைகள் தொடர்பான ஐ.நா. உயர்மட்ட ஆலோசனைக் குழுவில் ஒரு உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டிருந்தார்.
ஜெனரல் சில்வாவின் ஆக்கபூர்வமான ஆலோசனைகளின் விளைவாக அந்த நேரத்தில் ஐ.நா. அமைதிகாக்கும் படையினருக்கு சம்பள அதிகரிப்பொன்றும் வழங்கப்பட்டதாக இலங்கை இராணுவத்தின் இணையத்தளம் மூலம் அறியக்கூடியதாகவுள்ளது.
மேலும், உலகின் பல பாகங்களிலும் நிலவுகின்ற நிலப்பரப்பு ஆட்சியுரிமை தொடர்பான தகராறுகளையும், அமைதிகாக்கும் பணி விவகாரங்களையும் கையாள்கின்ற ஐ.நா.வின் விசேட அரசியல் மற்றும் காலனித்துவ நீக்க கமிட்டிக்கான இலங்கையின் மாற்றுப் பிரதிநிதியாகவும் அவர் நியமிக்கப்பட்டிருந்தார்.
ஜெனரல் சில்வாவின் முன்முயற்சியின் விளைவாகவே மத்திய ஆபிரிக்கக் குடியரசிலும், தென்சூடானிலும் இலங்கை கடற்படைக் கப்பல்கள் பயன்படுத்தப்பட்டதுடன், ஐ.நா. பணியகங்களில் இராணுவ வைத்தியசாலைகளும் அமைக்கப்பட்டன.
இவையெல்லாவற்றுக்கும் மேலாக ஜெனரல் சில்வா ஹார்வட் பல்கலைக்கழகத்தின் ஒரு பழைய மாணவர். தேசிய மற்றும் சர்வதேச பாதுகாப்பின் சிரேஷ்ட நிறைவேற்று அதிகாரிகளுக்கான செயற்றிட்டத்தை வெற்றிகரமாகப் பூர்த்தி செய்தார். மனிதவள முகாமைத்துவத்தில் டிப்ளோமா பட்டத்தைப் பெற்றிருக்கும் அவர், அமெரிக்காவில் உளவியல் நடவடிக்கைகள் தொடர்பான கல்வியில் தேர்ச்சி பெற்றார். ஜேர்ஜீனியா மாநிலத்தின் குவாண்டிகோவில் உள்ள புகழ்பெற்ற மரைன் கோப்ஸ் போர்க்கல்லூரியில் ஒரு வருகை விரிவுரையாளராகவும் இருந்தார்.
அமெரிக்காவின் ஆட்சேபனை இலங்கைக்குப் பாதகமாக அமையுமா என்று கேட்ட போது, அவ்வாறு அமையாது என்று அட்மிரல் கொலம்பகே கூறினார். இந்து சமுத்திரத்திலும், இந்தோ பசுபிக் பிராந்தியங்களிலும் அமெரிக்காவிற்கு இருக்கின்ற புவிசார் தேவைகளின் விளைவாக இலங்கைக்கு அமெரிக்கா தேவை என்பதையும் விட, கூடுதலான அளவிற்கு அமெரிக்காவிற்கே இலங்கை தேவைப்படும்.
அமெரிக்காவிற்கு சவாலாக இருக்கும் சீனாவின் ஈடுபாடுகளை இலங்கையில் தடுப்பதில் அமெரிக்கா அக்கறையுடன் இருக்கிறது என்று அவர் சொன்னார். கடற்பரப்பில் சமச்சீரற்ற போர்முறை என்ற நூலை எழுதிய அட்மிரல் கொலம்பகேயின் கூற்றின்படி, விடுதலைப்புலிகளுக்கு எதிரான இலங்கையின் இராணுவ நடவடிக்கையை முழுமையாக ஆதரிக்காமல், இலங்கை மனித உரிமைகளைப் பேணவேண்டும் என்று பகிரங்க நிலைப்பாடு ஒன்றை அமெரிக்கா விடுத்திருந்த போர்க்காலகட்டத்தில்கூட இலங்கைக்கும், அமெரிக்காவிற்கும் இடையிலான உறவுகள் யதார்த்தபூர்வமானதாகவே இருந்துவந்தது. அமெரிக்கா எமக்கு விமானங்களைத் தந்தது.
ஆனால் உதிரிப்பாகங்களைத் தரவில்லை. புஷ் மாஸ்டர் துப்பாக்கிகளை எமக்குத் தந்த அமெரிக்கா, அதற்கான வெடிபொருட்களைத் தரவில்லை. நாம் அவற்றை வேறு நாடுகளிடமிருந்து மிக உயர்ந்த விலைக்கு வாங்க வேண்டியிருந்தது. ஆனால் ஆழ்கடலில் விடுதலைப்புலிகளின் ஆயுதக்கப்பல் தொடர்பான துல்லியமான புலனாய்வுத் தகவல்களை அமெரிக்கா எமக்கு 2007 ஆம் ஆண்டில் தந்துதவியது.
அந்த ஆயுதக்கப்பல்கள் இலங்கைக் கடற்படையினால் நிர்மூலம் செய்யப்பட்ட பின்னர் போரின் நிலைவரம் முற்றுமுழுதாக மாறியது. இதை இலங்கையர்கள் ஒத்துக்கொள்ள வேண்டும்" என்றும் அட்மிரல் கூறினார்.
படைகளின் அந்தஸ்து தொடர்பான உடன்படிக்கையிலும் (சோபா), படைகளுக்கிடையிலான ஒத்துழைப்புச் சேவைகள் தொடர்பான உடன்படிக்கையிலும் (அக்ஸா), மிலெனியம் செலென்ஞ் கோப்பரேஷன் உடன்படிக்கையிலும் இலங்கையுடன் கைச்சாத்திட வேண்டுமென்று அமெரிக்காவே அக்கறையுடன் இருக்கிறதே தவிர, இலங்கை அக்கறை காட்டவில்லை என்றும் கொலம்பகே சுட்டிக்காட்டினார்.
இத்தகைய பின்புலத்தில் நோக்குகையில், சவேந்திர சில்வாவின் நியமனம் தொடர்பான அமெரிக்காவின் ஆட்சேபனை வெறுமனே ஒரு பாசாங்குதான். சிலோன் டுடே பத்திரிகை செவ்வாயன்று தீட்டிய ஆசிரியர் தலையங்கத்தில் அமெரிக்கா சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்திலிருந்து விலகியிருக்கவும், ஐ.நா. மனித உரிமைகள் பேரவையிலிருந்து வெளியேற எடுத்த தீர்மானத்தை நினைவுபடுத்தியிருக்கிறது.
அமெரிக்கா தனது இராணுவ அதிகாரிகளை வேறெந்தவொரு தரப்பினரதும் விசாரணையின் கீழ் வைப்பதற்கு முழுமையாக எதிர்ப்புத் தெரிவிக்கிறது என்று சிலோன் டுடே கூறியிருக்கிறது.
ஜெனரல் சில்வாவின் நியமனம் தொடர்பில் அமெரிக்காவினாலும், ஐக்கிய நாடுகளாலும் பகிரங்கப்படுத்தப்பட்ட நிலைப்பாடு சிங்கள பௌத்த தேசியவாத சக்திகளுக்கு, 2019 நவம்பர் - டிசம்பரில் நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர்களுக்கு, குறிப்பாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளரான போர்க்கால பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக் ஷவிற்கு உதவக்கூடும்.
கோத்தபாய தனது பிரதான தேர்தல் பிரசாரத் தொனிப்பொருட்களாக தேசியவாதம், இறைமை, சுயாதிபத்தியம், பாதுகாப்பு ஆகியவற்றையே முன்வைக்கிறார்.
ஆனால் அவையெதுவும் அமெரிக்காவைத் தடுத்து விடப்போவதில்லை. அமெரிக்கா கோத்தபாயவிற்கு எதிரானது என்று நினைப்பது தவறானது என்று அட்மிரல் கொலம்பகே கூறினார். இலங்கையில் போரை அமெரிக்கா ஆதரிக்கவில்லை.
ஆனால் போர் நடவடிக்கைகளை மிகுந்த உயர்மட்டத்திலிருந்து தனது பிரஜைகளில் ஒருவர் வழிநடத்திக் கொண்டிருந்ததை வாஷிங்டன் ஆட்சேபிக்கவில்லை. கோத்தபாய ராஜபக் ஷவிற்கு எதி ராக அந்த நேரத்தில் அமெரிக்கா குற்றச்சாட்டுக்கள் எவற்றையும் முன்வைக்கவில்லை என்று கூறி, கோத்த பாயவின் இரட்டைப் பிரஜாவுரிமையை நினைவுபடுத் தினார் அட்மிரல் கொலம்பகே.
அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த முன்னாள் அமெரிக்கத் தூதுவரும், உதவி இராஜாங்க செயலாளருமான ரொபேட் பிளேக், கோத்தபாயவின் ஒழுங்கமைக்கும் ஆற்றல்களை வெகு வாகப் பாராட்டியதுடன் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்கு இலங்கையுடனான இராணுவ உறவுகளை அமெரிக்கா துண்டித்தது குறித்து கவலை வெளியிட்டிருந்தார்.
இலங்கை யுடனும், பாகிஸ்தானுடனுமான இராணுவ உறவுகளைத் துண்டித்தமை இவ்விரு நாடுகளிலும் அமெரிக்கப் பாது காப்பு நலன்களுக்குப் பின்னடைவாக அமைந்தது. அவ்வாறு உறவுகள் துண்டிக்கப்பட்டதற்குப் பின்னரான கால கட்டத்தில் இலங்கையிலும், பாகிஸ்தானிலும் உயர் பதவி களை வகித்த ஒரு தலைமுறை இராணுவ அதிகாரிகள் முழுப்பேருடனுமான தொடர்புகளை அமெரிக்கா இழந்தது என்று பிளேக் அந்த இலங்கை விஜயத்தின்போது கூறி யிருந்தார்.
எனவே ஜெனரல் சவேந்திர சில்வாவின் நியமனம் தொடர்பில் தெரிவிக்கப்படுகின்ற ஆட்சேபனைகளினால் சிறு சச்சரவு உருவானாலும் கூட, இலங்கைக்கும் அமெரிக் காவிற்கும் இடையிலான உறவுகள் தொடர்ந்து நீடிக்கும் என்ற முடிவிற்கு வரமுடியும்.
பி.கே.பாலச்சந்திரன் - நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment