சிட்னி தமிழர் மண்டபத்தில் சிலப்பதிகாரப் பேச்சுப்போட்டி 01/09/2019


தமிழ் மொழியின் மகத்தான இலக்கியக் கருவூலம் சிலப்பதிகாரம். தமிழரின் முதல் காப்பியம், முத்தமிழ் காப்பியம், தமிழரின் கலாசாரத்தை உலகிற்கு கொண்டுவந்துள்ள தமிழரின் வரலாற்றுக் காப்பியமாகும் சிலப்பதிகாரத்திற்கு சிட்னியில் முதலாவது அனைத்துலக சிலப்பதிகார மகாநாடு 27, 28, 29 செப்டம்பர் 2019 ஆகிய திகதிகளில் நடைபெறவுள்ளது.

முதலாவது அனைத்துலக சிலப்பதிகார மகாநாட்டை முன்னிட்டு,  சிலப்பதிகாரத்தின் பெருமைகளையும் சிறப்புக்களையும் மாணவர்களும் அறியும் பொருட்டுப் பேச்சுப்போட்டிகள் 6 – 18 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கும் இளையோருக்கும் நடாத்தபடவுள்ளன. தயாரிக்கப்பட்ட பேச்சுக்கள் ஒவ்வொரு பிரிவினருக்கும் இத்துடன் தரப்பட்டுள்ளது. பேச்சுப் போட்டிகளில் ஒவ்வொரு பிரிவிலும் முதலாம் பரிசு பெறுபவருக்குத் தங்கப் பதக்கம் மகாநட்டில் வழங்கப்படவுள்ளது.

பிரிவுகளும் வயதெல்லைகளும்

கீழ்ப்பிரிவு  01.08.2013 க்கும் 31.07.2010 க்கும் இடையில் பிறந்தவர்கள்

மத்தியபிரிவு 01.08.2010 க்கும் 31.07.2006 க்கும் இடையில் பிறந்தவர்கள்

மேற்பிரிவு 01.08.2006 க்கும் 31.07.2001 க்கும் இடையில் பிறந்தவர்கள்


இப் போட்டிகள் சிட்னி துர்க்கை அம்மன் கோயில் வளாகத்தில் அமைந்துள்ள தமிழர் மண்டபத்தில் 01 September 2019 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணியிலிருந்து  நடைபெறவுள்ளது.



மேலதிக விபரங்களையும் விண்ணப்பப் படிவங்கள், பேச்சுக்கள் ஆகியவற்றையும் எமது இணையத்தில் (www.tikmsydney.org) பெற்றுக் கொள்ளலாம்.

போட்டிகள் பற்றித் தொடர்வு கொள்ள வேண்டியவர்கள்:

1. திரு கு கருணாசலதேவா 0418 442 674
2. திருமதி க ஜெகநாதன் 0434 098 842

விண்ணப்பப் படிவங்களை (இத்துடன் தரப்பட்டுள்ளது) பூர்த்தி செய்து 31 ஆகஸ்ட் 2019 க்கு முன்பாக கிடைக்கக் கூடியதாக 
--> tikmsydney@gmail.com     என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும் ஓருவர் அந்தந்த வயதிற்கேற்ற போட்டிகளில் பங்குபற்றலாம். பங்குபற்றுவர்களின் வயது கணிக்கப்படும் திகதி 31/07/2019. ஒரு நபருக்கு போட்டிக்கான நுழைவுக்கட்டணமாக  $5 (போட்டி நடைபெறும் தினத்தில்) பெறப்படுகின்றது. 

-------------------------------------------------------------------------------------------
சிலப்பதிகாரப் பேச்சுப்போட்டி – கீழ்ப்பிரிவு 01.09.2019 பிற்பகல் 2 மணி


அனைவருக்கும் எனது அன்பான வணக்கம்
             
சிலப்பதிகாரம்

ஐம்பெரும் காப்பியங்கள் நமக்குக் கிடைத்த சிறந்த பழைய இலக்கியங்கள் ஆகும். அவற்றுள் சிலப்பதிகாரம் ஈடு இணையற்ற காவியமாக விளங்குகிறது. சிலப்பதிகாரத்தில் 'சிலம்பு' என்னும் அணிகலன் சிறப்பிக்கப்படுகிறது. இளங்கோ அடிகளால்  இயற்றப்பட்டதே இந்த அரிய காப்பியமாகும். 

இது தமிழரின் வாழ்வைச் செதுக்கி அமைக்க வந்த அற்புத நூல் எனலாம். உலகம் முழுவதும் பரவி வாழும் தமிழர்களின் இதயங்களில் இக்காப்பியம் வாழ்கிறது. அதற்கு முக்கிய காரணம் எல்லாக் காலத்திற்கும் ஏற்ற வாழ்வியல் முறையை இது கொண்டிருப்பதே ஆகும்.

தமிழரின் வாழ்வியல் வரலாற்றைக் காட்டும் கண்ணாடியாகச் சிலப்பதிகாரம் நிலைத்துள்ளது. சோழநாட்டிலுள்ள பூம்புகார்ப் பட்டினத்தில் வாழ்ந்த கோவலன் கண்ணகியின் கதையைச் சிலப்பதிகாரம் சித்தரிக்கிறது. 

சிலப்பதிகாரம் உன்னதமான கலை கலாசாரங்களைத் தன்னகத்தே கொண்டு விளங்குகின்றது. அவற்றுடன் நீதி நிலைநாட்டல், அறம், அஞ்சாமை, மன உறுதி ஆகிய மேன்மைகளையும் விளக்கி நிற்கிறது.

சிலப்பதிகாரத்தின் காவியத் தலைவியான கண்ணகியை பத்தினித் தெய்வமாக மக்கள் கொண்டாடி அவளுக்குக் கோயில்கள் எழுப்பிச் சிறப்பித்துள்ளனர். நாமும் சிலம்பின் சீரிய வழி நடந்து சிறப்புடன் வாழ்வோம். 

நன்றி
வணக்கம்


-------------------------------------------------------------------------------------------
 சிலப்பதிகாரப்   பேச்சுப்போட்டி  -  மத்தியபிரிவு
                
01.09.2019   பிற்பகல்   2.30 மணி

அனைவருக்கும் எனது அன்பான வணக்கம்

சிலப்பதிகாரம் கூறும் அறம்

ஐம்பெரும் காப்பியங்களிலே முதலில் தோன்றியதாகச் சிலப்பதிகாரம் விளங்குகின்றது. சிலப்பதிகாரத்தை இளங்கோ அடிகள் எழுதினார். இது தமிழ்மொழியின் மகத்தான இலக்கியக் கருவூலம் ஆகும். மன்னனும் மக்களும் அறவழியில் வாழ்ந்தால் தான் அந்த நாடு சிறந்த நாடாக இருக்க முடியும் என்று அரசியல் அறத்தைச் சிலப்பதிகாரம் வலியுறுத்துகின்றது.

'அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்' என்பதே சிலப்பதிகாரத்தின் அடிப்படை அறமாகும். சோழநாட்டின் பூம்புகார் என்னும் ஊரில், வணிகர் குலத்தில் பிறந்த கோவலன், கண்ணகியோடு ஆடல் நங்கையாகிய மாதவியையும் முக்கிய பாத்திரமாகக் கொண்டு சிலப்பதிகாரம் இயற்றப்பட்டுள்ளது. கோவலன் தன் மனைவி கண்ணகியைப் பிரிந்து, மாதவி வீட்டில் வாழ்ந்து தனது செல்வம் முழுவதையும் இழந்து திரும்புகிறான். மீண்டும் வணிகம் செய்யும் நோக்குடன், கண்ணகியின் காற்சிலம்பை விற்றுப் பணம் பெற இருவரும் பாண்டியநாடு சென்றனர்.

கோவலன் கண்ணகியின் சிலம்பை விற்கச் சென்றபோது, பாண்டிமாதேவியின் சிலம்பைத் திருடிய கள்வன் எனக் குற்றம் சுமத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்டான். கண்ணகி ஓற்றைச் சிலம்புடன் கண்ணீர் சோரத் தலைவிரி கோலமாகப் பாண்டிய மன்னனின் அரண்மனைக்குச் சென்றாள். ' தேரா மன்னா' என்று சீற்றத்துடன்; விளித்துக் கோவலன் கள்வனல்லன் என்பதைத் தான் வைத்திருந்த சிலம்பை உடைத்து நிரூபித்தாள்.

அறம் தவறியதை உணர்ந்த பாண்டிய மன்னன் ' யானோ அரசன் யானே கள்வன்' என்று கூறித் தன்னுயிர் நீத்தான். கோடிய செங்கோல் நிமிர்ந்தது, அரசியல் அறம் காக்கப்பட்டது என்று சிலப்பதிகாரம் காட்டுகின்றது. அறம் வாழ்க்கைக்குப் பெருந்துணை என்பதை நாமும் போற்றி வாழ்வோம்.

நன்றி
வணக்கம்
  


------------------------------------------------------------------------------------------------------------------------

சிலப்பதிகாரப் பேச்சுப்போட்டி – மேற்பிரிவு
               
01.09.2019 பிற்பகல் 3 மணி

அனைவருக்கும் எனது அன்பான வணக்கம்

நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம்

பாட்டுக்கொரு புலவன் பாரதியைக் கவர்ந்த சிலப்பதிகாரம் இந்தப் பாரினையும் கவர்ந்துவிட்டது. இதனால் தான் சிலம்பு ஒப்பற்ற தமிழ்க் காவியமாக உன்னத இடத்தில் அமர்ந்திருக்கிறது.

மேட்டுக்குடிகளை மட்டுமல்லாது நாட்டுக்குடிகளையும் மனதில் இருத்தி வெளிவந்தது சிலப்பதிகாரம். ஆளும் வர்க்கத்தில் பிறந்து, ஆளும் அரசுரிமையைத் துறந்து, அறத்தோடு அரசியல் அமையவேண்டும் என்ற ஆணித்தரமான தன் அகக்கருத்தை வெளிக்கொணர்ந்து இளங்கோ அடிகளால்  படைக்கப்பட்ட காவியம் சிலப்பதிகாரம். வள்ளுவத்தின் கருத்துக்களைச் சிலப்பதிகாரம் பல நிலைகளில் வலியுறுத்தி நிற்கிறது. சிலம்பும் திருக்குறளும் தமிழரின் பெருமைமிகு சொத்துக்கள் அல்லவா!

நாட்டில் நல்ல ஆட்சி நிலவ வேண்டுமானால் அங்கு நல்லறம் நிலை பெறவேண்டும், அரசியல் பிழைக்கவே கூடாது என்பது சிலம்பின் அடிப்படையாகும். அரசியல் பிழைத்தால் அறம் நிச்சயம் தண்டனை வழங்கும் என்று சிலப்பதிகாரம் உரைத்தது, அக்காலத்துக்கு மட்டுமல்ல எக்காலத்துக்கும் பொருந்தும் உண்மை எனலாம். 

அடங்குவது மட்டும் பெண்மை அல்ல, நீதி தவறும்போது ஆர்ப்பரிப்பதும் ஆவேசம் கொள்வதும் பெண்மைக்கு வேண்டும் என்று சிலம்பு காட்டுகிறது. அடங்கும் இடத்தில் அடங்கி வாழ்ந்த கண்ணகி அடங்கா இடத்தில் ஆவேசம் கொண்டாள். ' தற்காத்துத் தற்கொண்டான் பேணித் தகைசான்ற
  சொற்காத்துச் சோர்விலாள் பெண்'
என்று வள்ளுவர் காட்டிய பெண்மைக்கு இலக்கணமாகித் தன் கணவன் கள்வன் அல்லன் என்பதை அரசன் முன்னிலையில் நிரூபித்து நின்றாள் கண்ணகி. என்னே பெண்ணின் பெருமை! என்னே கற்பின் உறுதி!

சிலப்பதிகாரம் பல வாழ்வியல் படிப்பனைகளை நமக்கு வழங்கி நிற்கின்றது. நெஞ்சில் நிலைக்கும் பல தத்துவங்களைக் கூறுகின்றது. முத்தமிழ் இலக்கியமாகி, சேர சோழ பாண்டிய நாடு, மன்னர், மக்கள் அனைவரையும் உள்ளடக்கி எழுந்த காவியம். பாரதி கூற்றுப்போல் நெஞ்சை அள்ளும் நிலையில் சிலப்பதிகாரம் என்றும் இருக்கும் என்று கூறுவதில் பெருமையும் பெருமிதமும் அடைகிறேன்.

நன்றி 
வணக்கம்  


--------------------------------------------------------------------------------------------------------------------------














No comments: