உலகச் செய்திகள்


அமெரிக்காவின் இராணுவதளங்களை ஒரு சிலமணித்தியாலங்களில் சீனாவால் அழிக்கமுடியும் - புதிய அறிக்கை

 ஏமனில் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்க ஆளில்லா விமானம்..!

 பப்புவா சிறை சூறையாடல் - 250 கைதிகள் தப்பி ஓட்டம்

இந்திய முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கைது

நளினியின் பரோல் மேலும் 3 வாரங்களுக்கு நீட்டிப்பு

"இனப்படுகொலை குற்றவாளி இராணுவ தளபதியா..?” - வைகோ கண்டனம்

அவுஸ்திரேலியாவின் கொள்கைக்கு எதிராக இந்தோனேசியாவில் அகதிகள் போராட்டம்

இந்தியாவுக்கு மற்றொரு துயரம்; இரண்டு மாதத்தில் இரு பெரும் தலைவர்களை இழந்தது

2019ஆம் ஆண்டுக்கான G7 மாநாடு பிரான்ஸி­ல் ஆரம்பம்!

பிரான்சில் இன்று ஆரம்பமாகும் ஜி-7 மாநாடு



அமெரிக்காவின் இராணுவதளங்களை ஒரு சிலமணித்தியாலங்களில் சீனாவால் அழிக்கமுடியும் - புதிய அறிக்கை


20/08/2019 ஆசியாவிலுள்ள அமெரிக்காவின் இராணுவதளங்களை ஒரு சிலமணித்தியாலங்களில் அழிக்ககூடிய திறன் சீனாவிற்குள்ளது என அறிக்கையொன்று தெரிவித்துள்ளது.
அவுஸ்திரேலியாவின் சிட்னி பல்கலைகழகத்தின் அமெரிக்கா குறித்த கற்கை நிலையம் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.
ஆசியாவில் அமெரிக்கா மாத்திரம் தற்போது  வலிமையான சக்தியில்லை  என தெரிவித்துள்ள அவுஸ்திரேலிய அறிக்கை சீனாவின் ஏவுகணைகளால் ஓரிரு மணித்தியலாங்களில் அமெரிக்காவின் தளங்களை  அழிக்க முடியும் என குறிப்பிட்டுள்ளது.
இந்தோபசுவிக்கிற்கான அமெரிக்காவின்  பாதுகாப்பு தந்திரோபாயம் கடும் குழப்பநிலையிலுள்ளது எனவும் அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.
அமெரிக்கா சீனாவிடமிருந்து தனது சகாக்களை பாதுகாப்பதில் நெருக்கடியை சந்திக்கலாம் என அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக பிராந்தியத்திலுள்ள அமெரிக்காவின் சக நாடுகளான அவுஸ்திரேலியா ஜப்பான் போன்றவை தங்கள் படையணிகளை மீள கட்டியெழுப்பவேண்டும் , அமெரிக்காவுடனான உறவினை மேலும் பலப்படுத்தவேண்டும் எனவும் அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.
அமெரிக்கா அதன் சகாக்களைவ விட சீனா ஏவுகணை விடயத்தில் மிகவும் பலம் பொருந்தியதாக மாறி வருகி;ன்றது என  குறிப்பிட்ட அறிக்கை தெரிவித்துள்ளது.
சீனா அமெரிக்காவின் ஆதிக்கத்தை முறியடிப்பதற்காக ஆயிரக்கணக்கான துல்லியமாக தாக்ககூடிய ஏவுகணைகளை
நிறுத்தியுள்ளது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு பசுவிக்கில் உள்ள அமெரிக்காவினதும் அதன் சகாக்களினதும் தளங்களை மோதல் வெடித்த ஒரிரு மணித்தியாலங்களில் தனது துல்லியமான தாக்குதல் மூலம் அழிக்ககூடிய திறன் சீனாவிற்குள்ளது எனவும் அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.   நன்றி வீரகேசரி 









 ஏமனில் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்க ஆளில்லா விமானம்..!

22/08/2019 அமெரிக்க இராணுவத்துக்கு சொந்தமான பன்முக பயன்பாடு கொண்ட ‘எம்.கியூ.9’ ரக ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஏமனில் ஜனாதிபதி மன்சூர் ஹாதி தலைமையிலான அரசு படைக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர் களுக்கும் இடையே பல ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது.

இந்நிலையில், ஈரானின் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சவூதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படைகள் ஏமனில் வான்தாக்குதல்களை நடத்தி வருகின்றன. சவூதி அரேபியா தலைமையிலான இந்த கூட்டுப்படைக்கு அமெரிக்கா ஆதரவு அளித்து வருகிறது.
இந்நிலையில் அமெரிக்க இராணுவத்துக்கு சொந்தமான பன்முக பயன்பாடு கொண்ட ‘எம்.கியூ.9’ ரக ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஏமனின் மத்திய பகுதியில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ள தமர் மாகாணத்தின் வான்பரப்பில் அமெரிக்க ஆளில்லா விமானம் நுழைந்தபோது, ஏவுகணை மூலம் அதனை சுட்டு வீழ்த்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக சவூதி கூட்டுப்படைகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக ஹவுதி கிளர்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஏமனின் வான்வெளியில் படையெடுப்பதற்கு முன்பு ஆயிரம் முறை யோசிக்க வேண்டும், ஏனெனில் ஏமன் வானத்தில் அந்நிய விமானங்கள் தோன்றுவதை தடுக்க கிளர்ச்சியாளர்களுக்கு அதிகாரம் உள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.  நன்றி வீரகேசரி 









 பப்புவா சிறை சூறையாடல் - 250 கைதிகள் தப்பி ஓட்டம்


22/08/2019 இந்தோனேஷிய அரசுக்கு எதிரான போராட்டத்தில் பப்புவா சிறை சூறையாடலில்  250 கைதிகள் தப்பி ஓடியுள்ளதாக அந்நாட்டு ஊடகம் தகவலை வெளியிட்டுள்ளது. 
இந்தோனேஷியாவின் கிழக்கு பகுதியில் பப்புவா பிராந்தியம் அமைந்துள்ளது. முன்னர் டச்சு காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்து வந்த இந்த பிராந்தியம் 1963ஆம் ஆண்டு விடுதலை பெற்று தன்னை சுதந்திர நாடாக அறிவித்துக்கொண்டது. 
ஆனால்,  அண்டை நாடாக இருந்த இந்தோனேஷியா, எண்ணெய் மற்றும் தாதுக்கள் உள்ளிட்ட இயற்கை வளங்கள் மிகுந்த பப்புவா பிராந்தியத்தை தன்னோடு இணைத்துக்கொண்டது. அதே சமயம் பப்புவா பிராந்தியத்துக்கு இந்தோனேஷிய அரசு தன்னாட்சி அதிகாரத்தை வழங்கியது.

எனினும் பப்புவா பிராந்தியம் இணைக்கப்பட்ட நாள் முதலே அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தனிநாடு கோரி பிரிவினைவாத அமைப்புகள் போராட தொடங்கின. அதன்படி பல ஆண்டுகளாக பப்புவா பிராந்தியத்தில் இந்தோனேஷிய அரசுக்கு எதிரான போராட்டங்கள் நடந்து வருகின்றன.
இதனால் பப்புவா மற்றும் மேற்கு பப்புவா மாகாணங்கள் பதற்றம் நிறைந்த பகுதிகளாகவே இருந்து வருகின்றன. மேலும் அங்கு மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்வதாக இந்தோனேஷியா அரசு மீது குற்றம் சுமத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கடந்த 17ஆம் திகதி இந்தோனேஷிய சுதந்திர தின கொண்டாட்டத்தின் போது மேற்கு பப்புவா மாகாணத்தில் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் இந்தோனேஷிய தேசியக்கொடியை அவமதித்ததாக கூறப்படுகிறது.
இதில் தொடர்புடைய மாணவர்களை இந்தோனேஷிய பொலிஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இது பப்புவா மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து, அரசுக்கு எதிராக பெரிய அளவில் போராட்டம் வெடித்தது.
மேற்கு பப்புவா மாகாணத்தின் தலைநகர் மனோக்குவாரி, சோரோங், ஜெயபுரா உள்ளிட்ட நகரங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தின் போது போராட்டக்காரர்களுக்கும், பொலிஸாருக்கும் இடையே பெரும் கலவரம் வெடித்தது. போராட்டக்காரர்கள் பாராளுமன்ற கட்டடத்துக்கு தீவைத்தனர்.
இந்த நிலையில், இந்த போராட்டத்தின்போது சோரோங் நகரில் உள்ள சிறையை போராட்டக்காரர்கள் சூறையாடினர். சிறைக்காவலர்களை மீறி உள்ளே நுழைந்த போராட்டக்காரர்கள் சிறை கட்டடத்துக்கு தீவைத்தனர்.
இதனால் சிறைக்குள் மிகவும் பதற்றமான சூழல் உருவானது. பொலிஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் தண்ணீரை பீய்ச்சியடித்தும் போராட்டக்காரர்களை சிறையில் இருந்து விரட்டியடிக்க முற்பட்டனர். இதற்கிடையில் இந்த கலவரத்தை பயன்படுத்தி கைதிகள் சிறையில் இருந்து தப்பி ஓடினர். தடுக்க முயன்ற சிறைக்காவலர்களை கற்களை வீசியும், கூர்மையான ஆயுதங்களை கொண்டு தாக்கிவிட்டும் அவர்கள் தப்பி சென்றனர். இதில் சிறை அதிகாரிகள் உட்பட பலர் பலத்த காயம் அடைந்தனர்.
இந்த சம்பவம் குறித்து இந்தோனேஷிய நீதித்துறை அமைச்சகத்தின் செய்திதொடர்பாளர் மார்லியன் லாண்டே, “சிறையில் இருந்து 258 கைதிகள் தப்பிவிட்டனர். அவர்களில் 5 பேர் மட்டுமே மீண்டும் சிறைக்கு திரும்பினர்” என கூறினார்.
மக்கள் போராட்டத்தினால் ஏற்கெனவே பப்புவா பிராந்தியத்தில் பதற்றம் நீடித்து வரும் நிலையில், கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றவழக்குகளில் கைது செய்யப்பட்ட 250-க்கும் மேற்பட்ட கைதிகள் சிறையில் இருந்து தப்பியிருப்பது பொலிஸாருக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளதாக சர்வதேச ஊடகம் தகவலை வெளியிட்டுள்ளது.   நன்றி வீரகேசரி 












இந்திய முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கைது

22/08/2019 நிதியமைச்சராக பணியாற்றியவேளை ஐ.என்.எக்ஸ் ஊடக நிறுவனத்திற்கு முறைகேடாக அனுமதி வழங்கிய குற்றச்சாட்டின் கீழ் சி.பி.ஐ. அதிகாரிகளால் முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரம் கைசெய்யப்பட்டுள்ளார்.
ஐ.என்.எக்ஸ் ஊடக முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ப.சிதம்பரத்திடம் சி.பி.ஐ விசாரணையை  ஆரம்பித்துள்ளதாக அந்நாட்டு ஊடகம் தவலை வெளியிட்டுள்ளது. 
ஐ.என்.எக்ஸ். ஊடக முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரத்தின் முன் பிணை மனுவை டில்லி  உயர்நீதிமன்றம்  நேற்று முன்தினம் தள்ளுபடி செய்து தீர்ப்பு  வழங்கியது. இதைத்தொடர்ந்து, சி.பி.ஐ. மற்றும் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் ப.சிதம்பரத்தை கைது செய்வதற்காக டில்லி ஜோர் பாக் பகுதியில் உள்ள அவரது வீட்டுக்கு சென்றனர். ஆனால் அவர் அங்கு  இருக்கவில்லை.
இந்நிலையில், தேடப்படும் நபர் என்ற வகையில் ப.சிதம்பரத்துக்கு எதிராக சி.பி.ஐ. சார்பிலும், அமலாக்கப்பிரிவு சார்பிலும் ‘லுக் அவுட்’  மனு நேற்று பிறப்பிக்கப்பட்டது.
இதற்கிடையே, உயர் நீதிமன்றத்தின்  தீர்ப்பை எதிர்த்து ப.சிதம்பரம் சார்பில் உச்சநீதிமன்றில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு மீது உடனடியாக விசாரணை நடத்தப்படாததால் ப.சிதம்பரத்திற்கு மேலும் சிக்கல் ஏற்பட்டது. நேற்று இரவு காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் பேட்டி அளித்து விட்டு வீட்டுக்கு சென்ற  ப.சிதம்பரத்தை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர். 
ப.சிதம்பரத்திடம் இன்று காலை முதலே சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணைக்கு பிறகு இன்று பிற்பகல் டில்லியிலுள்ள ரோஸ் அவென்யூ  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது ப.சிதம்பரம் தரப்பில் பிணை மனு தாக்கல் செய்யப்படும். அதேசமயம், ப.சிதம்பரத்தை தங்கள் காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.ஐ. சார்பில் மனு தாக்கல் செய்யப்படலாம். 

சி.பி.ஐ. வழக்கில் ப.சிதம்பரத்திற்கு  பிணை  கிடைத்தாலும்,  அமலாக்கத்துறை தொடர்ந்துள்ள வழக்கில் அவரை கைது செய்ய அதிகாரிகள் தீவிரம் காட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.  நன்றி வீரகேசரி 










நளினியின் பரோல் மேலும் 3 வாரங்களுக்கு நீட்டிப்பு

22/08/2019 இந்தியாவில் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் பரோலில் வெளியே வந்திருக்கும் நளினிக்கு மேலும் 3 வாரங்கள் பரேலை நீட்டித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
30 நாள் பரோலில் வெளியே வந்துள்ள நளினி, தனது மகளின் திருமண ஏற்பாடுகளை கவனித்து வருகிறார். பரோல் முடிவதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அதனை உயர் நீதிமன்றம் நீட்டித்துள்ளது. 
இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதியாக பேரறிவாளன், முருகன், நளினி, ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன் உள்பட 7 பேர் கடந்த 27 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் தண்டனை அனுபவித்து வருகின்றனர். அவர்களை விடுதலை செய்யக்கோரி தமிழக கட்சிகள் போராட்டங்கள் நடத்தி வருகின்றன. மேலும் பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என நீதிமன்றத்திலும் வழக்குகள் தொடரப்பட்டது. 
இதையடுத்து நீதிமன்றம் அந்த 7 பேரை விடுவிக்கும் உரிமையை மாநில அரசிடம் ஒப்படைத்தது. இதன் பின்னர் தமிழக அரசு ஆளுநருக்கு கடிதம் எழுதியது. ஆனால் தமிழக ஆளுநர் இன்னும் முடிவெடுக்காததால், அவர்களை விடுதலை செய்வதில் தாமதமாகி வருகிறது.
இந்தநிலையில், ஏழு பேரில் ஒருவராகிய நளினி, தனது மகள் திருமணத்துக்காக 6 மாதங்கள் பரோல் வழங்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் அவருக்கு ஒரு மாதம் பரோல் வழங்கியது. இதையடுத்து கடந்த மாதம் 25 ஆம் திகதி நளினி வெளியே வந்தார்.
மகளின் திருமண வேலைகளை அவர் கவனித்து வரும் நிலையில் பரோலை இன்னும் ஒரு மாதம் நீட்டித்து தரும்படி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த நீதிமன்றம் இன்று அவருக்கு பரோலை 3 வாரங்கள் கூடுதலாக்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.  நன்றி வீரகேசரி 










"இனப்படுகொலை குற்றவாளி இராணுவ தளபதியா..?” - வைகோ கண்டனம்


22/08/2019 இலங்கை இராணுவத்திற்கு புதிய இராணுவ தளபதியாக சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளதற்கு ம.தி.மு.க. பொதுச்செயலாளர்  வைகோ கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 
“மனிதகுல வரலாற்றில் பல்வேறு காலகட்டங்களில் நடைபெற்ற கொடூரமான இனப்படுகொலைகளில், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையில் நடந்த ஈழத்தமிழர் படுகொலைதான் மிகக் கொடூரமானதாகும். அந்தப் படுகொலைகளை நடத்திய சிங்கள ராணுவத்தின் கமாண்டர் தான் சவேந்திர சில்வா.
கடந்த ஜனவரி மாதம், சிங்கள இராணுவத்தின் இரண்டாவது உயர் பதவிக்கு சவேந்திர சில்வாவை, அதிபர் மைத்ரிபால சிறிசேனா நியமித்தபோதே தமிழர்கள் தலையில் இடி விழுந்தது. இப்போது தலைமைத் தளபதியாக நியமித்துள்ளார். கொலைகார ராஜபக்ஷ அரசில் இராணுவ மந்திரியாக இருந்த சிறிசேனவும் இனப்படுகொலைக் குற்றவாளியே. இவர்கள் மூவருமே உலக நீதிமன்றத்தின் குற்றக்கூண்டில் நிறுத்தப்பட்டுத் தண்டிக்கப்பட வேண்டியவர்களே.
சவேந்திர சில்வா நியமனத்திற்கு அமெரிக்க அரசும் கண்டனம் தெரிவித்துள்ளது. பல நாடுகளின் பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஆனால், இந்திய அரசு கண்டிக்கவில்லை. காலம் மாறும், ஈழத்தமிழர் பிரச்னையின் பரிமாணமும் மாறும். இனப்படுகொலை குற்றவாளிகள் தப்ப முடியாத சூழ்நிலை ஏற்படும்” என அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.  நன்றி வீரகேசரி 











அவுஸ்திரேலியாவின் கொள்கைக்கு எதிராக இந்தோனேசியாவில் அகதிகள் போராட்டம்

23/08/2019 அவுஸ்திரேலியாவின் கடுமையான எல்லைக் கொள்கைகள் காரணமாக இந்தோனேசியாவில் தாங்கள் பல ஆண்டுகளாக தவித்து வருவதாக ஆவுஸ்திரேலிய தூதரகம் எதிரே அகதிகள் போராட்டம் நடத்தியிருக்கின்றனர். இதில் 600க்கும் மேற்பட்ட அகதிகள் பங்கேற்று இருக்கின்றனர். 
இலங்கை, ஆப்கானிஸ்தான், சோமாலியா, மியான்மர்,  உள்பட பல நாடுகளைச் சேர்ந்த சுமார் 14,000 அகதிகள் இந்தோனேசிய முகாம்களிலும் வீதிகளிலும் வசித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் ஆவுஸ்திரேலியாவில் மீள்குடியேற காத்திருக்கக்கூடிய அகதிகள். ஆனால், கடுமையான எல்லைப் பாதுகாப்பு கொள்கையின் அடிப்படையில் அகதிகள் விஷயத்தில் கடுமையான நிலைப்பாட்டை ஆவுஸ்திரேலிய அரசு பின்பற்றி வருகிறது.
இந்த சூழலில், மனிதாபிமானமற்ற விதிகளை ஆவுஸ்திரேலிய அரசு திரும்ப பெற வேண்டும் ஆவுஸ்திரேலிய அதிகாரிகளிடம் சமர்பித்த கடிதத்தில் அகதிகள் கோரி இருக்கின்றனர். 
“நாங்கள் இந்தோனேசியாவில் எந்த அடிப்படை உரிமையுமின்றி கிடக்கிறோம். மன ரீதியாகவும் அகதிகள் பாதிக்கபப்ட்டிருக்கின்றனர்னர்,” என அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
கடந்த 2013 முதல் கடுமையான எல்லைப்பாதுகாப்பு கொள்கையினை நடைமுறைப்படுத்தி வரும் ஆவுஸ்திரேலிய அரசு, படகில் வர முயற்சிக்கும் அகதிகளை முழுமையாக நிராகரித்து வருகின்றது.
 அதே சமயம், இந்தோனேசியாவில் 2014 ஜூலை 1 க்கு முன்னதாக  ஐ.நா.அகதிகள் ஆணையத்திடம் பதிந்த அகதிகள் மட்டுமே மனிதாபிமான திட்டத்தின் கீழ் பரிசீலிக்கப்படுவார்கள என ஆவுஸ்திரேலியா தெரிவித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.   நன்றி வீரகேசரி 














இந்தியாவுக்கு மற்றொரு துயரம்; இரண்டு மாதத்தில் இரு பெரும் தலைவர்களை இழந்தது

24/08/2019 டில்லி எய்ம்ஸ் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 


முன்னாள் மத்திய நிதியமைச்சரும் பா.ஜ.க. மூத்த தலைவருமான 66 வயதான அருண் ஜெட்லி, கடும் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 9ஆம் திகதி காலை டில்லியில் உள்ள எய்ம்ஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.



பின்னர் அவர், தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார். அவருக்கு, சுவாசக் கோளாறு ஏற்பட்டுள்ளதாகவும், இதயம் மற்றும் சிறுநீரக சிறப்பு வைத்தியர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வந்தனர்.


இதனிடையே, அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்ததையடுத்து அவருக்கு உயிர்காக்கும் கருவிகள் பொருத்தப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டது.


இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் இன்று உயிரிழந்துள்ளார்.   நன்றி வீரகேசரி 













2019ஆம் ஆண்டுக்கான G7 மாநாடு பிரான்ஸி­ல் ஆரம்பம்!

24/08/2019
2019ஆம் ஆண்டுக்கான G7 மாநாடு பிரான்ஸில் ஆரம்பமாகவுள்ளது.
பிரான்ஸின் பையாரிட்ஸ் நகரில் இன்றைய தினம் குறித்த மாநாடு ஆரம்பமாகவுள்ளது.
இன்றைய தினம் ஆரம்பமாகவுள்ள குறித்த மாநாடு எதிர்வரும் 26ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இந்த மாநாட்டில், அமெரிக்கா, கனடா, இத்தாலி, பிரித்தானியா, ஜேர்மனி, ஜப்பான் மற்றும் பிரான்ஸ் நாடுகளின் அரச தலைவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
இதேவேளை, குறித்த மாநாட்டினை முன்னிட்டு பிரான்ஸின் சில பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பிரான்ஸ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும் குறித்த பாதுகாப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக 13 ஆயிரத்து 200 இற்கும் மேற்பட்ட பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.  நன்றி வீரகேசரி 










பிரான்சில் இன்று ஆரம்பமாகும் ஜி-7 மாநாடு

25/08/2019 ஜி-7 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள பல நாட்டுத் தலைர்வகள் பிரான்சில் கூடியுள்ளனர். 
பிரான்ஸ் நாட்டை அண்டியுள்ள பிஸ்கே விரிகுடா பகுதியில் அமைந்துள்ள பையாரிட்ஸ் என்ற இடத்தில் 45 ஆவது ஜி - 7 உச்சி மாநாடு இன்று ஆரம்பமாகவுள்ளது. 
மூன்று நாட்களுக்கு நடைபெறும் இந்த மாநாட்டில் பிரான்ஸ், அமெரிக்கா, ஜப்பான், ஜெர்மனி, பிரிட்டன், கனடா, இத்தாலி ஆகிய நாட்டுத் தலைவர்கள் கலந்துகொள்ள உள்ளனர். 
உலக பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான வழிமுறைகள், அந்நிய வர்த்தகத்தில் சுதந்திரங்கள், பாதுகாப்பு, பாலின பாகுபாடு போன்றவற்றை குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளன. 
அத்துடன் அமேசான்  காட்டுத் தீ பற்றி எரிந்தது குறித்து பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான் விவாதிக்க திட்டமிட்டுள்ளார். இது சர்வதேச பிரச்னையாக அறிவிக்கப்பட இருக்கிறது.
சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் ஜி-7 மாநாட்டில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சுற்றுச்சூழல் மாசடைவதில் இருந்து தடுக்க நகரம் முழுவதும் ஹைட்ரஜன் பைக் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. கார்பன்-டை-ஆக்சைடை குறைவாக வெளியேற்றும் இந்த ஹைட்ரஜன் பைக்களை பயன்படுத்த செய்தியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஒரு பக்கம் சுற்றுச்சூழலை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தாலும் மாநாட்டையொட்டி சில கவன ஈர்ப்பு போராட்டமும் நடைபெற்று வருகிறது. பையாரிட்ஸ் நகரில் இயங்கிவரும் அமெரிக்காவின் புகழ்பெற்ற Monsanto எனப்படும் ரசாயண உரம் தயாரிக்கும் தொழில்சாலையை மூட வேண்டும் என்ற போராட்டம் வலுத்துள்ளது. விவசாய நிலங்கள் தொழிற்சாலையாக மாற்றப்பட்டு வருவதை எதிர்க்கும் விதமாக சாலையில் மணலைக் கொட்டி செடிகளை நட்டனர். போராட்டம் தொடரும் என்பதால் பையாரிட்ஸ் நகரம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
நன்றி வீரகேசரி







No comments: