தமிழ் கலை மற்றும் பண்பாட்டுக் கழகம் நிகழ்த்திய தமிழ இலக்கியச் சந்திப்பில் “ஓவியத் தமிழ்” - கானா பிரபாஇன்றைக்குச் சாமியறையில் இருக்கும் சுவாமிப் படங்களில் இருந்து, ஒரு அரசர் காலத்துப் படம் வரை ஏராளம் நகை நட்டுகள் அணிந்து, பட்டுப் பீதாம்பரங்கள் கொண்டதொரு அமைப்பிலேயே எங்கள் வழிபாட்டு முறை வீட்டுக்குள் இருக்கிறது. ஆனால் தமிழர் பண்பாட்டுக்கும், வாழ்வியலுக்கும் முற்றும் முரணானதொரு கலாசாரப் படிமத்துடனேயே வாழ்ந்து பழகி விட்டோம் என்ற உண்மையை மீண்டும் ஒருமுறை சுருக்கென்று ஊசி தைத்தாற் போல சொல்லி வைத்தார் ஓவியர் ட்ராஸ்கி மருது. நேற்று சிட்னியில்
தமிழ் கலை மற்றும் பண்பாட்டுக் கழகம் நிகழ்த்திய தமிழ இலக்கியச் சந்திப்பில் “ஓவியத் தமிழ்” என்ற கருப்பொருளில் உரையாற்றிய போதே மேற் கண்ட தொனியில் பேசினார்.

அன்றைய காலத்தில் அரசனும் சரி, குடி மக்களும் சரி மிகவும் எளிமையானதொரு தோற்றத்தில் வெற்றுடலும், இடுப்பில் அரைத் துண்டுமாகவே தம் தோற்ற வெளிப்பாடுகளை வெளிப்படுத்தியிருந்தனர். இதனையே நாடு காண் பயணி மார்க்கோ போலோவும் இந்தியாவில் இம்மாதிரியானதொரு வாழ்வு முறையைக் கண்டு அதிசயத்து மன்னனும் மக்களும் ஒருவர் ஆயினர் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

ஆனால் இந்த மாதிரி இடாம்பீகமான, படோபகரமானதொரு அமைப்பில் மன்னரையும், சூழவும் இராணி, மந்திரிமரையும் பட்டுடை, ஆபரணங்கள் கொண்டதொரு தோற்றப்பாடு எப்படி வளர்ந்தது என்பதற்கும் ஓவியர் மருது விளக்கம் சொன்னார். அரச பரம்பரையில் உதித்த ரவிவர்மா மேற்குலகத் தொடர்பால் தன் ஓவியக் கலையில் மேலும் தேர்ச்சி பெற்று அன்றைய கடல் வழி வர்த்தகப் பட்டினமாக வளர்ந்த பம்பாய்க்குச் செல்கிறார். அங்கே ஓவியக் கல்லூரியும் பிரிட்டிஷாரால் நிறுவப்பட அங்கு பணி புரிந்து கொண்டே அந்தக் காலத்து ஜமீன்கள், பிரபுக்கள் போன்றோரை வரையத் தொடங்குகிறார். அப்போது பம்பாயில் நாடகம் போட்டுக் கொண்டிருந்த பார்ஸி இனத்தாரிடம் நாடகத்தில் பயன்படுத்திய விரிப்புகளையும், ஆபரணங்கள், உடைகளையும் பெற்று அவற்றையே தான் ஓவியம் வரையும் மனிதர்களுக்கு அணிவித்து அந்தக் காட்சியியலில் படம் வரைந்தாரம். ஓவியர் ரவிவர்மாவின் சுவாமிப் படங்களும் இத்தகு பாங்கிலேயே இருக்கின்றன.
மெல்ல மெல்ல அச்சு இயந்திர முறைமைக்கு மாறும் சூழலுக்குத் தன்னை உள்வாங்கிக் கொண்ட ரவிவர்மா தன்னுடைய அச்சுப் பதிவிலேயே அந்த ஓவியங்களைக் கடைக் கோடிக்கும் கொண்டு சேர்க்கிறார். அவருடைய உதவியாளராக இருந்தவர் தான் இந்திய சினிமாவின் சிற்பி என்று சொல்லக் கூடிய தாதா சாகிப் பால்கே. எனவே தாதா சாகிப் பால்கேயும், அவரை அடியொற்றிய இயக்குநர்களுமாக சினிமாவிலும் இந்த பார்ஸி இன மக்களின் அடையாளத்தை ஊடுருவ வைத்து விட்டனர். இது குறித்த நீண்டதொரு ஆய்வை இன்னும் விரிவாகப் பார்க்க முடியும். ஆனால் நேற்று ஓவியர் மருது இவற்றைக் குறிப்பிட்டு நம் தமிழரின் அடையாளம் மறைந்து போனதைக் குறிப்பிட்டிருந்தார்.

அண்மையில் இணையத்தில் உலா வரும் கருத்த் தேகம் கொண்ட எளிமையான முருகனைக் கண்ட போது எனக்கும் இந்தச் சிந்தனை வந்தது. தமிழனின் அடையாளம் கருப்பு கூட நிறமிழந்த சூழலில் தான் நம் கலை வடிவங்கள் அமைந்திருக்கின்றன. 18 ஆம் நூற்றாண்டில் தென்னிந்தியாவில் வாழ்ந்த மனிதர்களை பிரிட்டிஷ் ஆவணங்களில் இருந்து 
தொகுத்து ட்விட்டரில் நண்பர் நரகாசுரன் இங்கே பகிர்ந்திருந்தார் https://twitter.com/aravindan_v_007/status/1162241620118388736?s=21
இதில் எமது வாழ்வியல் எப்படி இருந்தது என்பதை வெள்ளிடை மலையாகக் காட்டும். 18 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தோமஸ் டேனியல் இந்தியா முழுக்கவும், இலங்கையைத் தொட்டும் எல்லா இடங்களையும் பயணம் மேற்கொண்டு சித்திரங்களாகக் காட்சிப்படுத்திய பின்பே மேற்குலகுக்கு இந்தியாவின் பெருமை இன்னும் பரவலாகப் போய்ச் சேர்ந்ததையும் மருது குறிப்பிட்டார்.

ஓவியர் மருதுவின் ஓவியங்களிலும் மன்னராட்சியையோ, அல்லது அரசனையோ சித்தரிக்கும் போது இந்த எளிமையை உணரலாம். அவரின் பேச்சு முடிந்ததும் இந்தத் தாக்கத்தில் தானா மருது பணி புரிந்த தமிழ்ப் படமான தேவதையில் மன்னராட்சியின் காட்சிப் புலத்தை எளிமைப்படுத்தியதை உதாரணம் காட்டி அவரிடம் பேச இருந்தேன். ஆனால் தன் பேச்சில் அவர் தேவதை படத்தில் பணியாற்றிய அனுபவத்தையும் தொட்டுச் சென்று விட்டார். படத்தின் இயக்குநர் நாஸர் தனக்கு முழுச் சுதந்திரம் கொடுத்ததோடு, கோடம்பாக்கத்தில் இருந்து எந்த வித ஆடை, அணிகலனும் வாடகைக்கு எடுக்கக் கூடாது என்று நாஸர் வேண்டுகோள் வைத்ததைச் சிரிப்புடன் சொல்லி வைத்தார். 

தேவதை படம் பார்த்த போது அந்த அரசர் காலக் களச் சூழல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருந்தது. பின்னாளில் ஆயிரத்தில் ஒருவன் படம் இன்னும் வலிமையாக அந்த எளிய அரசன் தோற்றத்தைக் காட்டி நின்றது. பின்னர் தனிப்பட்ட ரீதியில் ஓவிவர் மருதுவுடன் பேசிய போது இதைக் குறிப்பிட்டேன்.  ஆயிரத்தில் ஒருவன் படத்தின் கலை இயக்குநர் சந்தானம். இந்தப் படம் பேசப்பட்ட அளவுக்கு யதார்த்த பூர்வமாக அணுகிய அந்த அரசர் காலத்துக் காட்சித் திறன் அதிகம் பேசப்படவில்லை. இந்த இடத்தில் இயக்குநர் செல்வராகவனின் நேர்த்தியான உழைப்பைப் போற்றாமல் இருக்க முடியாது.

ஏராளம் தங்க ஆபரணங்கள் கிலுகிலுக்க, பட்டுப் பீதாம்பரங்களோடு வெள்ளைத் தோல் அரசர் காலத்தைக் காட்சியில் கண்ட நம் தமிழரும், வேர்த்து விறுவிறுத்த வெறுந்தோள் கொண்ட கருந்தோக மன்னனை ஏற்கவில்லை. தேவதை, ஆயிரத்தில் ஒருவன் ஆகியவை தமிழனின் அடையாளத்தை இன்னது இன்னதாகக் காட்டி வர்த்தக ரீதியில் தோல்வி கண்டவை. நிஜம் தோல்வி கண்டு கற்பனை உலகமும் நமக்கு அந்நியமான பண்பாடும் தான் நெருக்கமாக இருக்கிறது.  ‪ஈழத்துக் கூத்து மரபில் எழும் மேடை முயற்சிகளில் பண்டைய பாரம்பரிய ஆடை, அணிகளுக்கே முக்கியம் கொடுப்பதையும் இங்கே சொல்லி வைக்க வேண்டும். 
‪தலைமுறையாய்க் கொண்டாடிய கிராமத்துக் காவல் தெய்வங்கள் மங்கி விட்டன.‬
இன்றைக்கு நம் கல்யாண வீடுகளில் மெஹந்தி கலாசாரம் வரை பரவி நிற்க, வழிபாட்டு முறைகளிலும் நம் சுய அடையாளத்தைத் தொலைத்துக் கொண்டே போகிறோம். இதுவும் ஒருவகை கலாச்சாரச் சூறை தான்.

கானா பிரபா
19.08.2019No comments: