விடை தேட வேண்டிய வேளை


24/08/2019 ஜனா­தி­பதி தேர்­த­லுக்­கான தேர்தல் அறிக்­கை­களை (தேர்தல் விஞ்­ஞா­பனம்) தயா­ரிப்­ப­தற்கு அவ­சி­ய­மான தேர்தல் முன்­கள நிலைமை இன்னும் கனி­ய­வில்லை. ஆனால் வேட்­பா­ள­ராகக் கள­மி­றங்­கி­யி­ருப்­ப­வர்­களும், வேட்­பா­ளர்க­ளா­வ­தற்குத் தயா­ராகி வரு­ப­வர்­களும் தேர்தல் கால வாக்­கு­று­தி­களை அள்ளி வீசத் தொடங்­கி­விட்­டார்கள். 
அவர்­க­ளு­டைய வாக்­கு­று­தி­களில் சிறு­பான்மை இன மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு என்ன தீர்வு என்­பது குறித்து தெளி­வான உறு­தி­யான நிலைப்­பாட்டைக் காண முடி­ய­வில்லை. அது­கு­றித்து அவர்கள் தமது அதி­கா­ர­பூர்­வ­மான தேர்தல் உறு­தி­மொ­ழிகள் தொடர்­பான அறிக்­கையில் தெளி­வாகக் கூறு­வ­தற்­காகக் காத்­தி­ருக்­கின்­றார்­களோ தெரி­ய­வில்லை.
வேட்­பா­ள­ராக முத­லா­வது அறி­விக்­கப்­பட்ட பொது­ஜன பெர­மு­னவைச் சேர்ந்த கோத்தபாய ராஜ­பக் ஷ தேசிய பாது­காப்­புக்கு முக்­கி­யத்­துவம் கொடுக்­கப்­படும். நாட்டின் இறை­மைக்குள் வெளிச் சக்­திகள் எதுவும் தலை­யிட முடி­யாது என்று மிகத் தெளி­வாகக் கூறி­யுள்ளார். 
தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காணப்­படும் என அவர் தெரி­வித்­துள்ள போதிலும் அர­சியல் தீர்வு குறித்து கருத்து வெளி­யி­ட­வில்லை. அர­சியல் விட­யங்­களை தனது சகோ­தரர் மஹிந்த ராஜ­பக் ஷ பார்த்துக் கொள்வார் என்ற நிலைப்­பாட்­டையும் அவர் வெளி­யிட்­டுள்ளார்.
ஜே.வி.பி. சார்பில் வேட்­பா­ள­ராக அறி­விக்­கப்­பட்­டுள்ள அந்தக் கட்­சியின் தலைவர் அனு­ர­கு­மார திசா­நா­யக்­காவும் இனப்­பி­ரச்­சி­னைக்குத் தீர்வு காண்­பது பற்­றியோ அல்­லது தமிழ் மக்கள் எதிர் நோக்­கி­யுள்ள ஏனைய பிரச்­சி­னைகள் குறித்தோ கருத்து கூறாமல் தவிர்த்­துள்ளார். இது சிங்­கள மக்­களின் வாக்­கு­களைப் பெறு­வ­தற்­காக அவர் கையாண்­டுள்ள ஓர் உத்­தி­யா­கவே நோக்­கப்­ப­டு­கின்­றது.
புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்­கத்­திற்­காக நிய­மிக்­கப்­பட்ட அர­சியல் பேரவை ஏற்­றுள்ள அதி­காரப் பகிர்வுக் கோட்­பாடே தமிழ் மக்கள் அர­சியல் தீர்­வுக்­காகக் கொண்­டுள்ள எதிர்­பார்ப்பு தொடர்பில் ஐக்­கிய தேசிய கட்­சியின் நிலைப்­பாடு என பிர­த­மரும் அந்தக் கட்­சியின் தலை­வ­ரு­மா­கிய ரணில் விக்­கி­ர­ம­சிங்க கூறி­யுள்ளார்.
ஐக்­கிய தேசிய கட்­சியின் நிலைப்­பாடு
இலங்கை ஜன­நா­யகக் குடி­ய­ரசு என்ற அர­சியல் கட்­ட­மைப்­புக்குள் சமத்­துவம், சுய­ம­ரி­யாதை, கௌர­வத்­துடன் தங்­க­ளு­டைய விட­யங்­களைத் தாங்­களே முடி­வெ­டுத்துக் கையாளும் வகையில் வாழ வேண்டும் என்­பதே தமது எதிர்­பார்ப்பு என்றும் அவர் கூறி­யுள்ளார். 
ஆனால் அவர் யாழ்ப்­பாண விஜ­யத்­தின்­போது, நிகழ்­வொன்றில் தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் பேச்­சாளர் சுமந்­திரன் தமிழ் மக்­களின் அர­சியல் அபி­லா­சைகள் தொடர்பில் ஐக்­கிய தேசிய கட்­சியின் நிலைப்­பாடு என்ன என வின­வி­ய­தற்குப் பதி­ல­ளித்­த­போதே அவர் இதனைத் தெரி­வித்­துள்ளார். 
தேர்­தல்கள் நெருங்கி வரு­கின்ற ஒரு சந்­தர்ப்­பத்தில் தமிழ்ப்­பி­ர­தே­ச­மா­கிய வட­ப­கு­திக்கு விஜயம் செய்த பிர­தமர் தமிழ் மக்­களின் எதிர்­பார்ப்­புக்கள் குறித்தும், அவர்கள் எதிர்­கொண்­டுள்ள பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு பற்­றியும் தாமா­கவே தமது கவ­னத்தைக் குவிக்­க­வில்லை என்­பது இதன் மூலம் தெளி­வா­கி­யுள்­ளது. 
அபி­வி­ருத்தி தொடர்­பான விட­யங்­களில் அவர் காட்­டிய அக்­க­றையும் ஆர்­வமும், தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­களைத் தீர்ப்­ப­திலும் அவர்­களின் அர­சியல் நலன்­க­ளிலும் காட்­டப்­ப­ட­வில்லை என்றே கூற வேண்டும். 
சுமந்­தி­ர­னு­டைய கேள்­விக்குப் பதி­ல­ளித்த ரணில் விக்­கி­ர­ம­சிங்க, தமிழ் மக்கள் சமத்­துவம், சுய­ம­ரி­யாதை, ஆட்சி உரி­மைக்­கான அதி­காரப் பகிர்வு என்­ப­வற்­றுடன் வாழ வழி செய்­யப்­பட வேண்டும் என்ற நிலைப்­பாட்டை ஐக்­கிய தேசிய கட்சி கொண்­டி­ருந்த போதிலும், அதனை நிறை­வேற்­று­வ­தற்கு அவ­சி­ய­மான அறுதிப் பெரும்­பான்மை பலம் தமது கட்­சிக்கு இன்னும் கிடைக்­க­வில்லை. அத்­த­கைய அர­சியல் பலம் கிடைத்தால் இந்த நிலைப்­பாட்டின் அடிப்­ப­டையில் அர­சியல் தீர்வு காணப்­படும் என்று ரணில் விக்­கி­ர­ம­சிங்க கூறி­யுள்ளார்.
உண்­மையில் தமிழ் மக்­களின் அர­சியல் ஆத­ரவை உளப்­பூர்­வ­மாகத் தேடு­கின்ற மனப்­பாங்­குடன் இந்தக் கருத்து அவ­ரிடம் இருந்து வெளி­வந்­த­தாகத் தெரி­ய­வில்லை. எப்­ப­டி­யா­வது வரு­கின்ற ஜனா­தி­பதி தேர்­த­லிலும், அதனைத் தொடர்ந்து வர­வுள்ள பொதுத் தேர்­த­லிலும் தாங்கள் பெரும்­பான்மை பலத்­துடன் வெற்றி பெற்­று­விட வேண்டும் என்ற அர­சியல் உள்­நோக்­கத்தை அடிப்­ப­டை­யாகக் கொண்டே இந்தக் கருத்­தினை அவர் வெளி­யிட்­டுள்ளார் என்று உய்த்­து­ணர முடி­கின்­றது. 
சிக்­க­லான நிலை­மைகள்
ஏனெனில் 2015ஆம் ஆண்டு ஜனா­தி­பதி தேர்­த­லிலும், பொதுத் தேர்­த­லிலும், ஐக்­கிய தேசிய கட்­சியும் சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சியும் இணைந்து வர­லாற்றில் முதற் தட­வை­யாக தேர்­தலை எதிர்­கொண்டு வெற்­றி­யீட்­டி­யி­ருந்த போதிலும், தமிழ் மக்­க­ளு­டைய பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காணும் வகையில் உளப்­பூர்­வ­மாக நட­வ­டிக்­கை­களை எடுப்­ப­தற்கு ஐக்­கிய தேசிய கட்சி தவ­றி­விட்­டது. 
ஜனா­தி­ப­தியின் நிறை­வேற்று அதி­கா­ரங்­களை வெட்டிக் குறைப்­ப­தற்கு அர­சி­ய­ல­மைப்பில் மிகவும் சாது­ரி­ய­மாகத் திருத்தச் சட்­டத்தைக் கொண்டு வந்து நிறை­வேற்­றிய அவர் தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­களைக் குறைப்­ப­தற்குத் தனது அரச அதி­கார சக்­தியைப் பயன்­ப­டுத்­த­வில்லை. 
சிறு­பான்மை இன மக்­களின் பிரச்­சி­னை­களைக் கையா­ளும்­போது எதிர்ப்பு தெரி­விக்­கின்ற போக்கைக் கடைப்­பி­டிக்­கின்ற ஸ்ரீ­லங்கா சுதந்­திரக் கட்­சி­யுடன் இணைந்து ஆட்சி அமைத்­தி­ரு­ந்த அபூர்­வ­மான சந்­தர்ப்­பத்தைப் பயன்­ப­டுத்தி, அவர் அந்தப் பிரச்­சி­னை­களைக் குறைத்­தி­ருக்க வேண்டும். ஆனால் அதனை அவர் செய்­ய­வில்லை. செய்யத் தவ­றி­விட்டார். 
பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காண்­ப­தற்­காகக் கிடைத்­தி­ருந்த சந்­தர்ப்­பத்தைக் கைந­ழுவ விட்­டுள்ள பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க குழப்­ப­க­ர­மான ஓர் அர­சியல் இரா­ணுவ சூழலில் வரப்­போ­கின்ற ஜனா­தி­பதி தேர்­த­லிலும், பொதுத் தேர்­த­லிலும் எந்த அள­வுக்கு சக்­தி­யுள்­ள­வ­ராக வெற்றி பெறப் போகின்றார் என்­பது தெரி­ய­வில்லை. நிச்­ச­ய­மற்ற அந்த அர­சியல் எதிர்­பார்ப்பில் பிரச்­சி­னை­க­ளுக்கு அவர் தீர்வு காண்பார் என்­பதை எந்த வகையில் வரை­ய­றுத்து மக்கள் நம்­பிக்கை கொள்ள முடியும் என்று தெரி­ய­வில்லை.
ஐக்­கிய தேசிய கட்­சிக்­குள்ளே சஜித் பிரே­ம­தா­ச­வுக்கும் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கும் இடையில் எழுந்­துள்ள கட்சி அர­சியல் அந்­தஸ்து தொடர்­பி­லான கருத்து முரண்­பாடு முக்­கிய பிரச்­சி­னை­யாக மேல் எழுந்­துள்­ளது. இந்த முரண்­பாடு கட்­சியின் கட்­டுக்­கோப்­பையே குலைத்­து­வி­டுமோ என்று அஞ்­சும் அள­வுக்குத் தீவி­ர­ம­டைந்­துள்­ளது. 
அதே­வேளை, தேர்­தலில் போட்­டி­யி­டு­வ­தற்கு அவ­சியம் என அடிப்­ப­டையில் கரு­தப்­ப­டு­கின்ற சிறு­பான்மை அர­சியல் கட்­சி­களை இணைத்து ஜன­நா­யக தேசிய முன்­னணி என்ற அணியை உரு­வாக்­கு­வதில் ஏற்­பட்­டுள்ள முட்­டுக்­கட்­டைகள், தாமதம் என்­ப­னவும் ஐக்­கிய தேசிய கட்­சியை தேர்­தலின் முன்­கள நிலையில் பல­வீ­ன­மு­டை­ய­தாக்கி உள்­ளது. 
இத்­த­கைய பின்­பு­லத்தில் ஐக்­கிய தேசிய கட்சி, நாட்டு மக்கள் அனை­வ­ரையும் கவர்ந்­தி­ழுக்­கத்­தக்க வகையில் தன்னை எவ்­வாறு பல­முள்ள ஓர் அர­சியல் அணி­யாக உரு­வா­கிக்கிக் கொள்ளப் போகின்­றது என்­பது தெரி­ய­வில்லை. இது சிக்­கல்கள் நிறைந்த ஒரு நிலை­மை­யா­கவே காணப்­ப­டு­கின்­றது.
2015 உம் 2019 உம் 
நல்­லாட்சி அர­சாங்­கத்தை உரு­வாக்­கிய 2015ஆம் ஆண்டு தேர்தல் கால நிலை­மை­யையும் அந்த ஆட்­சியின் இறுதித் தரு­ண­மா­கிய 2019ஆம் ஆண்டின் இப்­போ­தைய நிலை­மை­யையும் ஒப்­பிட்டு நோக்க வேண்­டிய அவ­சியம் இயல்­பா­கவே எழுந்­துள்­ளது. 
கடந்த தேர்­த­லா­னது ஓர் அர­சியல் மாற்­றத்தை நோக்­கி­ய­தாக, அந்த நோக்­கத்தைத் தவிர்க்க முடி­யாத தேவையை முன்­னி­றுத்­தி­ய­தாக அமைந்­தி­ருந்­தது என்­பதை நாட்டு மக்கள் நன்­க­றி­வார்கள். 
சர்­வா­தி­காரப் போக்கைக் கொண்­டி­ருந்த மஹிந்த ராஜ­பக் ஷ ஆட்­சிக்கு ஒரு முடிவு காண வேண்டும் என்ற அர­சியல் தேவையும் நோக்­கமும் தமிழ்த் தரப்பைப் போலவே சிங்­களத் தர­ப்­பிலும் அப்­போது காணப்­பட்­டது. தற்­போது அத்­த­கைய நிலை­மையைக் காண முடி­ய­வில்லை.
தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்­புக்கும், ஆட்சி மாற்றம் தேவையை உணர்ந்­தி­ருந்த நாட­ளா­விய பொது அமைப்­புக்கள் மற்றும் ஜன­நா­யக சக்­தி­க­ளுக்கும் 2015 ஆம் ஆண்டு ஜனா­தி­பதி தேர்தல் தங்­க­ளு­டைய நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்துச் செல்­வ­தற்கு வாய்ப்­பா­னதோர் அர­சியல் கள­நி­லைமை காணப்­பட்­டது. 
சர்­வா­தி­காரப் போக்­கையும் இரா­ணுவ மனப்­பாங்கில் ஊறிய கடும் போக்­கையும் கொண்­டி­ருந்த மஹிந்த ராஜ­பக் ஷவின் கடும்­போக்­கி­லான நிலையில் அர­சுக்கும் அவ­ருக்கும் எதி­ராகச் செயற்­ப­டு­ப­வர்கள் பல்­வேறு ஆபத்­துக்­களை எதிர்­கொள்ள வேண்­டிய சூழல் காணப்­பட்ட போதிலும், ஆட்சி மாற்­றத்­திற்­கான செயற்­பா­டு­களை அவர்கள் உறு­தி­யாக முன்­னெ­டுத்­தி­ருந்­தனர். 
ஆனால் 2019ஆம் ஆண்டின் ஜனா­தி­பதி தேர்தல் என்­பது முற்­றிலும் முன்­னைய தேர்­த­லுக்கு எதிர்­மா­றான நிலை­மை­யையும் அர­சியல் சூழ­லையும் கொண்­டி­ருப்­பதைக் காண முடி­கின்­றது. நாட­ளா­விய பொது அமைப்­புக்­களும், ஜன­நா­ய­கத்தை நேசிப்­ப­வர்­களும், அதற்­காகத் துணிந்து செயற்­ப­டத்­தக்க ஜன­நா­யக சக்­தி­க­ளையும் இந்தத் தேர்தல் களத்தில் காண முடி­ய­வில்லை. 
இங்கு தேர்­தலின் ஊடான ஆட்­சி­மாற்றம் என்­பது இயல்­பான ஒன்­றா­கவே காணப்­ப­டு­கின்­றது. கடந்த தேர்­தலைப் போன்று ஆட்சி மாற்றம் என்­பது ஓர் அர­சியல் தேவை­யாக - அர­சியல் நிர்ப்­பந்­த­மாகக் காணப்­ப­ட­வில்லை. இது நல்­லாட்சி ஒன்றை உரு­வாக்க வேண்டும் என்று விருப்பம் கொண்­டி­ருப்­ப­வர்­க­ளுக்கு சாத­க­மான ஒரு நிலை­மை­யாகத் தோற்­ற­வில்லை. 
உறு­தி­யற்று தள்­ளாடிக் கொண்­டி­ருக்­கின்ற அர­சாங்கம் அதற்­கு­ரிய பரு­வ­காலம் முடி­வ­டை­வ­தற்கு முன்பே குலைந்து கலைந்து போகக் கூடிய தள்­ளாட்­ட­மான நிலை­மையே தொடர்ந்து கொண்­டி­ருக்­கின்­றது. இதில் ஆட்­சியில் உள்ள ஜனா­தி­ப­தியை மீண்டும் பத­வியில் இருத்த வேண்டும் என்ற தேவை நாட்டு மக்­க­ளுக்கு இல்லை என்றே சொல்ல வேண்டும். 
திருத்தச் சட்­டத்தின் நோக்கம்
நல்­லாட்சி அர­சாங்கம். ஊழல்கள், முறை­கே­டான நட­வ­டிக்­கை­களை முடி­வு­றுத்தி ஜன­நா­ய­கத்­திற்கு உயி­ரூட்டி மக்கள் நலன்­க­ளுக்­காகச் செயற்­படும் என்று எதிர்­பார்த்த  ஜனா­தி­ப­தி­யும்­சரி, பிர­த­ம­ரும்­சரி நாட்டு மக்­களின் மனங்­களைக் கவர்ந்­தி­ழுக்­கத்­தக்க வகையில் ஆட்­சியைக் கொண்டு நடத்­த­வில்லை. 
அர­சியல் போட்­டி­யிலும், அதி­காரப் போட்­டி­யி­லுமே ஆட்­சி­யா­ளர்­களின் கவனம் கூடு­த­லாகச் செலுத்­தப்­பட்­ட­தா­கவே மக்கள் உணர்­கின்­றார்கள். தேர்­தலில் தோற்­க­டிக்­கப்­பட்ட மஹிந்த ராஜ­பக் ஷ மீள் எழுச்சி பெற்று அர­சி­யலில் பல­முள்ள ஒரு­வ­ராகத் திரும்பி வந்­து­விடக் கூடாது என்­பதில் இந்த நல்­லாட்சி அர­சாங்கம் கூடுதல் கவனம் செலுத்­தி­யி­ருந்­தது. 
அதன் வெளிப்­பா­டா­கவே 19 அர­சி­ய­ல­மைப்புத் திருத்தம் கொண்டு வரப்­பட்­டது. அதில் ஜனா­தி­ப­தியின் நிறை­வேற்று அதி­கா­ரங்­களை வெட்டிக் குறைக்கும் அதே­வேளை, மஹிந்த ராஜ­பக் ஷ மூன்­றா­வது தட­வை­யா­கவும் அதி­கா­ரத்தைக் கைப்­பற்­றி­விடக் கூடாது என்ற எண்ணம் மேலோங்கி இருந்­ததைக் காண முடி­கின்­றது. 
நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­ப­தி­யாக எவரும் இரண்டு தட­வை­க­ளுக்கு மேல் ஆட்சி அதி­கா­ரத்தைக் கொண்­டி­ருக்க முடி­யாது என்­பது ஜனா­தி­பதி ஆட்­சி­மு­றையின் உரு­வாக்­கத்தில்
 இருந்த நிய­தி­யாகும். அதனை 18 ஆவது திருத்தச் சட்­டத்தின் மூலம் மாற்­றி­ய­மைத்­த­துடன் தனது அதி­கா­ரங்­க­ளையும் அதி­க­ரித்துக் கொண்ட மஹிந்த ராஜ­பக் ஷவின் செயற்­பாட்டைத் தகர்த்து, முன்­னைய நிலை­மையை மீண்டும் நிலை­நாட்டும் நோக்­கத்­து­ட­னேயே 19ஆவது திருத்தச் சட்டம் கொண்டு வரப்­பட்­டது. 
எனினும் அர­சியல் நோக்­கத்தைக் கொண்­ட­தாக ஜனா­தி­பதி தேர்­தலில் இரட்டைக் குடி­யு­ரிமை கொண்ட எவரும் போட்­டி­யிட முடி­யாது என்ற நிய­தியும் அந்த திருத்தச் சட்­டத்தில் உள்­வாங்­கப்­பட்­டுள்­ளது. இரட்டைக் குடி­யு­ரி­மை­யுடன் அர­சி­ய­லிலும், அதி­கா­ரத்­திலும் கோலோச்­சிய ராஜ­பக் ஷக்­களை இலக்­காகக் கொண்டே இந்த அம்சம் உள்­ள­டக்­கப்­பட்­டி­ருப்­பதைத் தெளி­வாக உணர முடி­கின்­றது என்று அர­சியல் அவ­தா­னிகள் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளார்கள்.  
ராஜபக் ஷக்கள் அர­சி­யலில் ஆதிக்கம் செலுத்­து­வ­தற்கு இட­ம­ளிக்கக் கூடாது என்ற மறை­முக நிகழ்ச்சி நிர­லாகக் கொண்டு ஐக்­கிய தேசிய கட்சி தனது நகர்­வு­களை மேற்­கொண்­டுள்ள போதிலும், அவர்­க­ளு­டைய மீள்­வ­ருகை தவிர்க்க முடி­யா­த­தா­கவே அமைந்­துள்­ளது. 
இரா­ணுவ வெற்­றி­வா­தத்­தையும், இன­வா­தத்­தையும், யுத்­தத்தை முடி­வுக்குக் கொண்டு வந்த இரா­ணு­வத்தின் மீது ராஜ­பக் ஷக்கள் காட்டி வரு­கின்ற அதீத அக்­க­றையும் அர­சி­யலில் அவர்­க­ளது மீள் வரு­கைக்குக் களம் அமைத்துக் கொடுத்­துள்­ளது என்றே கூற வேண்டும்.
தமிழ்த்­த­ரப்பின் நிலைப்­பாடு   
சிங்­களப் பேரி­ன­வா­தத்­தையும், சிங்­கள மக்­களின் ஆத­ர­வையும் இலக்­காகக் கொண்டு பேரின கட்­சிகள் தங்­க­ளது தேர்­தல்­கால அர­சியல் நகர்­வு­களை முன்­னெ­டுத்­துள்ள இந்தத் தரு­ணத்தில் தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பு தமிழ் மக்­களின் சார்பில் உறு­தி­யா­னதோர் அர­சியல் நிலைப்­பாட்டைக் கொண்­டி­ருக்­க­வில்லை. 
ஐக்­கிய தேசிய கட்சியைச் சார்ந்த ஒரு நிலைப்­பாட்டை நோக்­கி­ய­தா­கவே கூட்­ட­மைப்புத் தலை­வர்­களின் கருத்­துக்கள் அமைந்­தி­ருக்­கின்­றன. எனினும் எத்­த­கைய அடிப்­ப­டையில் அந்தக் கட்­சிக்கு ஆத­ரவு தெரி­விக்க முடியும் என்ற குழப்­ப­க­ர­மான நிலைமை அந்தக் கருத்­துக்­களில் தொக்கி நிற்­பதைத் தெளி­வாகக் காண முடி­கின்­றது. 
ஏனெனில் அதீத அர­சியல் நம்­பிக்­கையைக் கொண்டு ஐக்­கிய தேசிய கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி ஆகிய இரண்டு கட்­சி­களும் இணைந்­ததோர் ஆட்­சியை உரு­வாக்­கு­வதன் ஊடாக அப்­போ­தைய கடு­மை­யான அர­சியல் சூழ­லுக்கு முடிவு காண்­கின்ற அதே­வேளை இரு கட்­சிகள் இணைந்த தேசிய அர­சாங்கம் அல்­லது நல்­லாட்சி அர­சாங்­கத்தின் ஊடாக இனப்­பி­ரச்­சி­னைக்கு ஒர் அர­சியல் தீர்வைக் காண வேண்டும் என்ற நோக்­கத்தைத் தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பு கொண்­டி­ருந்­தது.
ஒரே கல்லில் இரண்டு மாங்­காய்­களை வீழ்த்­து­வது போன்ற தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் இந்த அர­சியல் தந்­தி­ரோ­பாயச் செயற்­பாடு மைத்­திரி – ரணில் தலை­மை­யி­லான அர­சாங்­கத்தில் தோல்­வி­யையே தந்­துள்­ளது. அர­சியல் ரீதி­யான தோல்­வியை மட்­டு­மல்­லாமல் பெரும் ஏமாற்­றத்­தையும், மோச­மான அதி­ருப்­தி­யை­யுமே ஏற்­ப­டுத்தி உள்­ளது. 
தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் தலை­வர்கள், கூட்­ட­மைப்பின் பங்­காளிக் கட்­சி­க­ளுக்கு மட்­டு­மல்­லாமல் தமிழ் மக்­களும் இந்த அர­சியல் உணர்­வு­க­ளுக்கு ஆளா­கி­யி­ருக்­கின்­றார்கள். இந்த நிலையில் வரப்­போ­கின்ற ஜனா­தி­பதி தேர்­தலில் யாரை ஆத­ரிப்­பது எந்த அடிப்­ப­டையில் ஆத­ரிப்­பது, எத்­த­கைய நம்­பிக்­கையில் ஆத­ரிப்­பது என்ற குழப்ப நிலை­மையில் தமிழ்த்­த­ரப்பு காணப்­ப­டு­கின்­றது.
நம்­பிக்­கையின் அடிப்­ப­டையில் நிபந்தனையற்ற ஆதரவை வழங்கி ஆட்சிக்கு ஆபத்து வந்தபோதெல்லாம் உறுதியாகக் கைகொடுத்துத் தூக்கிவிட்ட போதிலும் நல்லாட்சி அரசாங்கம் தமிழ்த்தரப்பின் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றத்தக்க வகையில் நடந்து கொள்ளவில்லை.
தமிழ் மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதிலும் அரச தரப்பினர் உரிய அக்கறை செலுத்தவில்லை. பொறுப்பு கூறுதல், நிலைமாறுகால நீதியை நிலைநாட்டுதல் உள்ளிட்ட ஐ.நா. மற்றும் சர்வதேச நிர்ப்பந்தத்தைக் கொண்ட விடயங்களிலும் கூட அரசாங்கம் தமிழ் மக்களின் அரசியல் நலன்சார்ந்து நடவடிக்கைகளை இதயசுத்தியுடன் மேற்கொள்ளத் தவறிவிட்டது. 
இத்தகைய நிலையில் என்ன செய்வது என்ற கேள்விக்குறியே தமிழ்த்தரப்பின் முன்னால் விஸ்வரூபம் எடுத்து எழுந்து நிற்கின்றது. அரசியலில் மீள் எழுச்சி கொண்டுள்ள ராஜபக் ஷக்களின் சார்பில் வேட்பாளராகக் களமிறக்கப்பட்டுள்ள கோத்தபாய ராஜபக் ஷவை ஆதரிப்பதற்கு முன்னைய ஆட்சிக் காலத்து கசப்பான துன்பகரமான அனுபவங்கள் இடம் கொடுக்கவில்லை. 
அதேவேளை, ஐக்கிய தேசிய கட்சியை எந்த அடிப்படையில் ஆதரிப்பது என்ற கேள்வியும் எழுந்து நிற்கின்றது. மறுபுத்தில் ஜே.வி.பி. ஆரம்ப காலம் தொட்டே தமிழ் மக்களுடைய அரசியல் விவகாரத்தில் நம்பிக்கைக்குரிய சமிக்ஞைகளைக் காட்டத் தவறியுள்ளதனால், அந்தக் கட்சியை நம்ப முடியுமா? எவ்வாறு அவர்களை நம்புவது என்ற கேள்விகள் எழுந்து நிற்கின்றன. 
மொத்தத்தில் தமிழ்த்தரப்பினர், இந்தத் தேர்தல் காலச் சூழலில் எதிர்கால அரசியல் குறித்து பல்வேறு கேள்விகளுக்கு விடை காண வேண்டியவர்களாகவும், அந்த விடைகளின் அடிப்படையில் முடிவுகளை மேற்கொள்ள வேண்டியவர்களாகவுமே காணப்படுகின்றனர்.
பி.மாணிக்­க­வா­சகம் - நன்றி வீரகேசரி No comments: