சரண்யா தியாகராஜாவின் பரத நாட்டிய அரங்கேற்றம் - செ.பாஸ்கரன்

.

ஜூன் முதல் நாள் மாலை வேளை Reverside theatre Parramatta வில் செல்வி சரண்யா தியாகராஜாவின் பரத நாட்டிய அரங்கேற்றம். நடன முத்திரைகளுடன் அலங்கரிக்கப்படட  அலங்கார மேடையில் இசைக்கலைஞர்கள் அமர்த்திருக்க நடன ஆசிரியை கலாசூரி ஸ்ரீமதி ஜெயலக்சுமி  கந்தையா அவர்கள் தனது 80 தாவது அரங்கேற்றத்தை நிகழ்த்தக் காத்திருக்கின்றார். 

அறிவிப்பாளர்களாக இளம் சந்ததியினரான செல்வி கீர்த்திகா  நடராஜாவும் செல்வன் ஹரன் நடராஜாவும் அழகு தமிழிலும் ஆங்கிலத்திலும்  நிகழ்ச்சியை  தொகுத்து வழங்கியது சிறப்பாக இருந்தது . தொடர்ந்து தியாகராஜாவின் மகனும், சரண்ணியாவின்  குட்டித் தம்பியுமான  டிலன் தியாகராஜா வந்தவர்களை மழலைத் தமிழில்  திருக்குறளையும் கூறி வரவேற்றார்.

விளக்குகள் மெல்ல அணைந்தன பாடகர் நந்தகுமார் உன்னிக்கிருஷ்னனின் கணீர் என்ற குரலில் சரஸ்வதி ராகம்   அவையில் பரத்து விரிகிறது. நடன அஞ்சலி செய்ய சரண்ணியாவின் பாதங்கள் தாளங்களோடு அசைய முகத்தில் பாவங்கள் வெளித்தெரிய காலைத் தூக்கி நின்றாடும் நடராஜப் பெருமாளுக்கும், குருவுக்கும், இசைக் கலைஞர்களுக்கும், சபையோர்க்கும் நமஸ்காரம். 


மோகனராகத்தில் ஜதீஸ்வரம் தொடர்கிறது திரு கான  வினோதனின் குழல் இசையும் திரு பல்லவராஜனின் மிருதங்க இசையும் செல்வி சௌமியாவின் வீணை இசையும்  ஆடலை அழகு செய்கிறது. 

இடையில்   செல்வி சௌமியாவின் வீணை சாய் பாடலை அழகாய் தருகிறது 
கான  வினோதனின் குழல் பல அற்புதங்கள் புரிகிறது. வர்ணம் தொடர்கிறது மீண்டும் செல்வி சரண்யா தியாகராஜா பிரிந்தாவனி ராகத்தில் வந்த நந்தகோபன் மகனாய் பாடலுக்கு ஆடுகிறாள் தனி ஒருத்தியின் நாட்டிய நாடகம்போல் கிருஷ்ணனின் கதை கம்சனாக, கிருஷ்ணனாக, பாம்பாக, குட்டிக் கண்ணனாக அத்தனை பாவங்களையும் அற்புதமாக  தருகின்றார். நந்தகுமார் உன்னிக்கிருஷ்னனின் குரலில் பாடலும் ,  ஸ்ரீமதி ஜெயலக்சுமி  கந்தையா அவர்களின் நட்டுவாங்கமும் சபையை கட்டிப்போடடதென்றால் பல்லவராஜனின் மிருதங்கம் கண்ணன் கதை பேசியது. அற்புதமான ஆடல் நிகழ்விறகு இடைவேளை தரப்படுகிறது. 
காதிற்கு உணவு கிடைத்தபின் வயிற்றுக்கும் சுவையான உணவு நேர்த்தியாக ஒழுங்கமைக்கப் பட்டு வழங்கப்பட்டது. மீண்டும் நிகழ்வுக்கு செல்கின்றோம்.  பிரதம விருந்தினராக வருகை தந்திருந்த பேராசிரியர் ஞான குலேந்திரன் அவர்களின் உரை இடம்பெற்றது. நடனத்தில் ஆழ்ந்த அறிவு கொண்டவரல்லவா ஒரு நடன நிகழ்வுக்கு  பிரதம விருந்தினராக வந்திருக்கிறார் சொல்லவும் வேண்டுமா, மத பேதம் இல்லாமல் எந்த மதத்தை சார்ந்தவர்களும் நடன நிகழ்வுக்கு வருகின்ற போது ஏன் நடராஜருக்கு அஞ்சலி செய்துகொண்டு தொடங்குகிறார்கள் என்பதற்கு  ஆழமான விளக்கமும் கொடுத்து  செல்வி சரண்யாவின் ஆடலை வியந்து பாராட்டியதோடு அவரின் பாவங்களை பற்றியும் குறிப்பிடடார். நடன நிகழ்வுக்கு பொருத்தமான ஒருவர்  பிரதம விருந்தினராக வந்திருந்து உரையாற்றியது நிகழ்வை மேலும் மெருகூட்டியது.

தொடர்ந்து பல பாடல்கள் பல ராகங்கள் இசையோடு கலந்து இன்ப நிகழ்வாக இருந்தது. தொடர்ந்து தில்லானா  சபையை கட்டிப் போட்டது. தில்லானா அப்படியென்றால் தொடர்ந்து வந்த மல்லாரி கம்பீரநாடடை ராகத்தை தவில் நாதஸ்வரத்தில் ஸ்ரீ ராகவன் சண்முகநாதனும் ஸ்ரீ முருகதாஸ் சுப்ரமணியநும்  அருமையாக கொடுக்க கான  வினோதனின் குழல் இசையும் திரு பல்லவராஜனின் மிருதங்க இசையும் செல்வி சௌமியாவின் வீணை இசையும்  மீண்டும் இணைந்து ஆலய தரிசனத்தையே கொண்டுவந்து நிறுத்தியிருந்தார் சரண்யா தியாகராஜா சபையினரின் கரவோசை மண்டபத்தை அதிரவைத்தது. 
நிகழ்வு மங்களத்துடன் நிறைவு பெற்றது. கலந்து கொண்ட நானும் மிக அருமையான அரங்கேற்ற நிகழ்வை ரசித்து நிறைவுற்றேன். கலாசூரி ஸ்ரீமதி ஜெயலக்சுமி  கந்தையா அவர்கள் தனது 80 தாவது அரங்கேற்றத்தை திறமையான ஒரு மாணவி மூலம்  அருமையாக நடத்தியிருந்தார்.  சரண்யா தியாகராஜா பொருத்தமான குருவைப் பெற்று அருமையான நடன நிகழ்வை அரங்கேற்றியிருந்தார். நம் சமூகத்திற்கு இவர் பல நடன நிகழ்வுகளை தரவேண்டும். மேலும் கற்று சிறந்த நர்த்தகியாக வரவேண்டும் என வாழ்த்துகிறேன். அத்தனை இசைக் கலைஞர்களுக்கும் இவரை பெற்றெடுத்த   தியாகராஜா , சாந்தி இருவருக்கும் பாராட்டுக்கள். 


1 comment:

Dr.jayavidhya Narasimhan said...

very nice critis. i heard Gnanamma special speech. My best wishes to Saranya Tyagarajan.
Dr.Jayavidhya Narasimhan