மணிவிழா நாயகன் அருணாசலம் ஶ்ரீதரன் - முருகபூபதி


எந்தவொரு சமூகமும் ஒரு சிலரால்தான் இயங்கிவிருகிறது. அவ்வாறு சமூகத்திற்காக
இயங்குபவர்கள் பல தரத்தினர். பதவிகள், அந்தஸ்துகள், தகுதிகள் , மதிப்பீடுகள் எதனையும் எதிர்பார்க்காமல் சமூகத்திற்காக தன்னால் முடிந்ததை அயற்சியின்றி செய்துவருபவர்களை எம்மத்தியில் காண்து அரிது.
அத்தகையவர்கள் யார் எனத்தேடினால் எமது தெரிவுக்குள் வருபவர்கள் ஒரு சிலர்தான். அந்த ஒரு சிலருள் ஒருவராகத்தான் உடன்பிறவாத சகோதர் திரு. அருணாசலம் ஶ்ரீதரனை நீண்டகாலமாகப் பார்க்கின்றேன்.
நான் அவுஸ்திரேலியாவுக்கு வந்து மூன்று (1987 -2019) தசாப்தங்களாகிவிட்டன. இக்காலப்பகுதியில் கலை, இலக்கியம், ஊடகம், சமூகம், கல்வி சார்ந்த தன்னார்வத்தொண்டுகளில் ஈடுபட்டுவந்தபோது, தன்னளவிலும் முடிந்ததை செய்வதற்காக எந்தவொரு நிபந்தனையுமின்றி எம்மோடு இணைந்து இயங்கியிருப்பவர்தான் அருணாசலம் ஶ்ரீதரன்.
நாம் வதியும் மெல்பனில் ஒரே பெயரில் பலர் இருக்கிறார்கள். அதனால், அழைப்பதற்கு ஏற்றவகையில் அவர்களது இயற்பெயருக்கு முன்பாக மற்றும் ஒரு துணைப்பெயரையும்  இணைத்துக்கொள்வோம்.
ஶ்ரீதரன் என்ற பெயரிலும் பலர் இருப்பதனால், தாடி வளர்த்திருக்கும் இவரை தாடி ஶ்ரீ என்றே செல்லமாக  அழைப்போம். அதுவே அவரது அடையாளமாகிவிட்டது!
இந்தப்பதிவில் நான் எழுதவிருக்கும் அருணாசலம் ஶ்ரீதரனுக்கு கடந்த ஜூன் 06 ஆம் திகதி 60 வயதாகின்றது. இந்த மணிவிழா நாயகன் பற்றி, எப்போதோ நான் எழுதியிருக்கவேண்டும்.
அதற்கான காலம் கனிந்திருப்பது இக்காலத்தில்தான். இவரை அவுஸ்திரேலியா வந்தபின்னர்தான் அறிவேன்.   மெல்பனில் உருவான தமிழ்ச்சமூகம் சார்ந்த   அமைப்புகளின் நிகழ்ச்சிகளிலெல்லாம் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு துரிதமாகச்செயற்படும் இயல்புகொண்டிருக்கும் ஶ்ரீதரன்,  மக்களை மாத்திரமல்ல, தாவரங்களையும் ஆழ்ந்து நேசிப்பவர்.
ஒருவருடைய இயல்புதான் அடிப்படை அழகு என்பார்கள். அந்த இயல்பு, குடும்பத்திலிருந்தும் கற்ற ஆசிரியர்களிடமிருந்தும் நண்பர்களிடமிருந்தும்தான் உருவாகும்.  அந்தவகையில் இவரிடமிருந்து தோன்றிய  இயல்புகள் எளிமையானது. அதே சமயம் உணர்ச்சிமயமானது.
1959 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 07 ஆம் திகதி, யாழ்ப்பாணம் கொக்குவிலில், அருணாசலம் - பொன்னம்மா தம்பதியரின் ஆறாவது பிள்ளையாகப்பிறந்திருக்கும் ஶ்ரீதரன், கரம்பன் ஆரம்பப் பாடசாலையிலும், அதன்பின்னர், முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், கொழும்பு  ஆகிய நகரங்களில் சில கல்லூரிகளிலும் தனது கல்வியைத் தொடர்ந்து, வடபுலத்தில் மருதனாமடம் விவசாய பயிற்சிக்கல்லூரியில் இணைந்து, குண்டசாலை விவசாய பயிற்சிக்கல்லூரியில் தனது கல்வியை நிறைவுசெய்துகொண்டவர்.

அதனால், இளமைக்காலம் முதலே இவர் நேசித்தது தாவரங்களையும்தான். முல்லைத்தீவு விவசாய திணைக்களத்தில் உதவி ஆராய்ச்சியாளராக ( Field officer ) களப்பணியில் இறங்கினார். இதுவே இவர் தனது தொழில்துறையில் முதல் முதலில் தொடங்கிய வேலை. கல்வி கற்கின்ற காலத்திலேயே சமூகப்பணிகளிலும் ஈடுபட்டவர். இளம் விவசாயிகள் கழகம், கொக்குவில் இந்திரா சனசமூக நிலையம், ரோட்டரி கழகம் முதலானவற்றிலும் அங்கம் வகித்திருந்தவர்.
1983 தென்னிலங்கையில் நிகழ்ந்த இனவாத வன்முறைகளையடுத்து யாழ்ப்பாணத்திற்கு  இடம்பெயர்ந்துவந்த அகதிகளுக்கு தங்குமிடங்களை தெரிவுசெய்தல், அவர்களின் தேவைகளை கவனித்தல் முதலான  தொண்டூழியங்களில் ஈடுபட்டார்.
இவரது வாழ்வில் பல  சுவாரசியமான சம்பவங்களும் நடந்துள்ளன.
1978 ஆம் ஆண்டு, இவர் இரத்மலானை இந்துக்கல்லூரி விடுதியில் தங்கியிருந்து படித்துக்கொண்டிருந்த காலப்பகுதியில் அருகிலிருந்த விமான நிலையத்தில் இலங்கையை அதிரவைத்த ஒரு சம்பவம் நடந்தது. 1978 செப்டெம்பர் மாதம் 07 ஆம் திகதி, இலங்கை அரசு வெளிநாடொன்றிலிருந்து கொள்வனவு செய்திருந்த அவ்ரோ 748 விமானத்தை சுபநேரம் பார்த்து பலாலிக்கு வெள்ளோட்டம் விட்டது. அது மீண்டும் திரும்பிவந்து, கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையம் சென்று,  அங்கிருந்து மும்பாய் பறக்கவிருந்தது.
இரத்மலானைக்கு அந்த அவ்ரோ வந்ததும், ஊழியர்கள் அதனை சுத்தம்செய்யும்போது அதிலிருந்த குண்டுவெடித்து சேதமுற்றது. குறிப்பிட்ட விமானம் அச்சமயம் காலிமுகத்திடலில் அமைந்திருந்த அன்றைய நாடாளுமன்றத்திற்கு மேலாக பறக்கும் வேளையில் வெடிக்கத்தக்கதாக இருந்திருக்கவேண்டும் என்று பின்னர் புலனாய்வாளர்கள் ஆராய்ந்திருந்தனர்.
தென்னிலங்கையை பரபரப்படைய வைத்திருந்த இந்தச்செய்தி பரவியிருந்த வேளையில், இரத்மலானையில் தங்கியிருந்த தமிழ்மாணவர்கள் பெரும் பதட்டத்திலிருந்தனர்.
அவர்களை ஆசுவசப்படுத்துவதற்காகவும் அவர்களின் பாதுகாப்பு குறித்து ஆராய்வதற்காகவும் அன்றைய ஜனாதிபதி ஜே.ஆரும், பிரதமர் பிரேமதாசவும் கல்லூரிக்குச்சென்றனர்.
மாணவர்களுடன் இன்முகத்துடன் பேசிய தலைவர்கள், அவர்களை உற்சாகப்படுத்தவும் விரும்பினர். மாணவர் ஶ்ரீதரனைப்பார்த்து, ஒரு பாடல் பாடும்படி கேட்டிருக்கிறார் பிரேமதாச.
உடனே எந்தத் தயக்கமும் இன்று ஶ்ரீதரன் பாடிய பாடல் பட்டிக்காடா பட்டணமா படத்தில் வரும் " என்னடி ராக்காம்மா" அந்தப்பாடல் சிங்களத்திலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு பட்டி தொட்டி எங்கும் பிரபலமாகியிருந்தது.
தனக்கும் அந்தப்பாடல் பிடிக்கும் என்று சொன்ன பிரேமதாச மாணவர்களுடன் சேர்ந்து தானும் கைதட்டி பாடி ஆடி உற்சாகப்படுத்தியிருக்கிறார்.
அக்காலத்து ஜனாதிபதியும் பிரதமரும் தங்கள் தேர்தல் மேடைகளில் இசை நிகழ்ச்சிகளுக்கும் முன்னுரிமை கொடுத்திருந்ததை அறிவேன்.
முல்லைத்தீவில் ஶ்ரீதரன், விவசாய திணைக்களத்தில் பணியாற்றிய காலத்தில் இளைஞர் விவகார மற்றும் கல்வி அமைச்சராக இருந்தவர் ரணில் விக்கிரமசிங்கா. அவ்வேளையில் முல்லைத்தீவில் ஶ்ரீதரனும் சம்பந்தப்பட்ட எக்ஸ்போ 87 கண்காட்சி நடைபெற்றது.
அதனைப்பார்வையிட வந்துள்ள அமைச்சர், அந்தக்கண்காட்சியை விதந்து  பாராட்டியுள்ளார். தனதும் மற்றவர்களினதும் உழைப்புக்கு கிடைத்த அந்த பாராட்டுதல்களை மறக்கமுடியாது என்று ஶ்ரீதரன் ஒரு சந்தர்ப்பத்தில் என்னிடம் குறிப்பிட்டுள்ளார்.
எந்தவொரு பொதுவேலைகளும் சிறந்த ஒருங்கிணைப்பினால்தான் சாத்தியமாகும். அதற்காக அமையப்பெறும் குழுக்களில் தன்முனைப்பற்றவர்களின் பணிகள்தான் கவனத்தில் கொள்ளப்படவேண்டியது. அவ்வாறு எந்தவொரு பொது வேலைகளிலும் தன்னை  ஒரு தொண்டனாக்கிக்கொண்டு  அர்ப்பணிப்புடன் இயங்கும் இவருடை இயல்பை தொடர்ந்து அவதானித்து வந்துள்ளேன்.  அதனால் எனக்கு மட்டுல்ல பலரதும் நெஞ்சத்திற்கு நெருக்கமானவர்.
1989 ஆம் ஆண்டில் மெல்பனுக்கு வருகைதந்த ஶ்ரீதரன், இங்கு அக்காலப்பகுதியில் தொடங்கப்பட்ட தமிழ் அகதிகள் கழகம், தமிழர் ஒன்றியம், தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, தமிழர் மருத்துவ நிதியம்,  தமிழர் புனர்வாழ்வுக்கழகம், அதற்கு முன்னரே தொடங்கியிருந்த அன்றைய இலங்கைத் தமிழ்ச்சங்கம் முதலான அமைப்புகளின் நிகழ்ச்சிகள் நடக்கும்வேளைகளில் மண்டபத்திற்கு வந்து தாமாகவே வேலைகளை இழுத்துப்போட்டுக்கொண்டு உற்சாகம் குன்றாமல்  துரிதமாகவும் இயங்குவார்.
சுநாமி கடற்கோள் அநர்த்ததின்போது இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான பொருட்களை சேகரிப்பதிலும், செஞ்சோலை குழந்தைகள் தொடர்பான புனர்வாழ்வுப்பணிகளிலும், கண்பார்வையற்றவர்களுக்கு பிரம்புகள் அனுப்பும் பணிகளிலும் ஈடுபட்டிருந்த மெல்பன் வாழ் அன்பர்கள் பலருடன் அர்ப்பணிப்புடன் இயங்கியவர்.
மெல்பனில் எனது நண்பர்கள் பலரது வீடுகளில் வளர்ந்து நிற்கும் தாவரங்களின் பின்னால் ஶ்ரீதரனின் கதையும் இருக்கும். தாவரங்கள், கனிமரங்கள், பூமரங்கள் குறித்து ஆழ்ந்த அறிவும் அவற்றின் வளர்ச்சிக்கு பொருத்தமான பருவகாலங்கள் பற்றியும் நுட்பமான அறிவு மிக்கவர்.
அமைப்புகளின் பொது நிகழ்ச்சிகளில் மாத்திரமின்றி, மரணச்சடங்குகள், இறுதி  நிகழ்வுகள் நடக்கும் தருணங்களிலும் அங்கு தோன்றி,  தன்னால் இயன்றதை செய்து கொடுக்கும் பண்பும் கொண்டவர். அதனால் பலருக்கும் இவர் தேவையானவராகிவிட்டார்.
இசையிலும் நாட்டம் கொண்டிருக்கும் ஶ்ரீதரன், தனது பிள்ளைகளான நரேன், ஹரினி ஆகியோரையும் இந்தத்துறையில் ஈடுபடுத்தி அரங்கேற்றம் வரையில் கரைசேர்த்திருப்பவர்.
இந்தக்குழந்தைகளின் அரங்கேற்றத்தின்போது பிரபல பின்னணிப்பாடகி ஜானகி அம்மா, அரங்கத்தில் ஸ்கைப்பில் தோன்றி வாழ்த்துக்கூறியவர்.
தமிழக பின்னணி பாடகி ஹரினி ஶ்ரீதரன், விக்ரோரியா தமிழ் கத்தோலிக்க சங்கம் நடத்திய இசைவிழாவுக்கு வருகை தந்திருந்தபோது, எமது இல்லத்தில் சில நாட்கள் தங்கியிருந்தார். இவருடனான நேர்காணலையும் அக்காலப்பகுதியில் மெல்பனில் வெளியான உதயம் மாத இதழில் எழுதியிருக்கின்றேன். ஹரினியின் இனிய குரலினால் கவரப்பட்ட ஶ்ரீதரன் தனக்குப்பெண்குழந்தை பிறந்தால் அந்தப்பெயரையே சூட்டுவதற்கும் விரும்பினார்.
அவ்வாறே அக்காலப்பகுதியில் தனக்கு  இரண்டாவது குழந்தையாகப்பிறந்த பெண் மகவுக்கு தமிழக பாடகி ஹரினியின் பெயரையே சூட்டியதுடன் இசைத்துறையிலும் ஊக்குவித்தார்.
பொதுவாழ்க்கை, இசை, தாவரவியல் முதலானவற்றிலே தனது கவனத்தை குவித்திருக்கும் ஶ்ரீதரன் அவர்கள் அருமைத்துணைவியார் அகிலா, அன்புச்செல்வங்கள் நரேன், ஹரினி ஆகியோருடன் பல்லாண்டு வாழவேண்டும் என்று அவரது மணிவிழாக்காலத்தில் வாழ்த்துகின்றோம்.






-->












No comments: