திகழ்ந்திட்டால் சிறப்பன்றோ ! - மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா ..... மெல்பேண் .... அவுஸ்திரேலியா


                       
                          
         உலகிலின்று ஊடகங்கள் ஊற்றூப்போல் எழுகிறது 
                 அளவற்ற எழுத்தாளர் ஆக்குகிறார் அவர்படைப்பை 
        புவிமீது நடக்கின்ற பொருத்தமில்லா காட்சிகளை
                அவரெடுத்து தம்படைப்பால் அனைவருக்கும் காட்டுகிறார் 
        காட்டுகிறார் படைப்புக்கள் கண்ணியத்தை கைவிட்டு
                கருத்திலே இருத்தவொணா காட்சியினை காட்டுதற்கு
        ஊடகங்கள் ஒத்துழைப்பை நல்கிநிற்கும் நிலைகாண
                உள்ளமது வேதனையில் உழன்றபடி நிற்கிறதே  ! 


         ஊதிப் பெருக்குவதை ஊடகங்கள் உடன்பாடாய் 
               உள்ளிருத்தும் தன்மையதே உளம்வருந்தச் செய்கிறது 
         வருகின்ற செய்திகளை எடுக்கின்ற படைப்புக்களை
                தரமாகக் கொடுப்பதற்கு தாமதும் எண்ணவேண்டும் 
         எண்ணியெண்ணி தரவுகளை எடுத்துமே தரவேண்டும்
               கண்ணியத்தை நினைத்தபடி கருமத்தை ஆற்றவேண்டும் 
         மண்மீது மக்களிடம் மனமாசு எய்துததற்கு
                  வாய்க்கின்ற வம்புகளை வாங்கிடல் நல்லதல்ல  !         ஊடகத்தில்  வெள்ளித்திரை  ஊன்றியே  நிற்கிறது 
               சாதகத்தை பாதகத்தை காட்டுதற்கும் வருகிறது
         சாதிவெறி தடுக்கிறது நீதிபற்றி சொல்கிறது 
               ஊழல்பற்றி பலவற்றை உடைத்துடைத்துமே சொல்கிறது 
         ஆனாலும் வெள்ளித்திரை வியாபாரம் ஆகிறது
                  கண்ணாலே பார்க்கவொணா காட்சிகளை தருகிறது
          கண்ணியத்தை அழிக்கின்ற கருத்துக்களும் தருகிறது
                  கண்ணுக்குள் பதியும்படி காட்சிதரும் வெள்ளித்திரை
          கண்ணியமாய் மாறிவிட்டால் கருத்துமழை பெய்யுமன்றோ  !


          மதுகுடித்தால் உடல்கேடு அடையுமென்று சொல்கிறது
                 புகைபிடித்தால் புற்றுநோய் பற்றிவிடும் என்கிறது
          வெள்ளித்திரை நாயகரும் வெள்ளித்திரை வில்லன்களும்
                 மதுவருந்திப் புகைபிடிக்கும் காட்சிக்கோ குறைவிருக்கா 
           பொதுமக்கள் ஊடகமாய் திகழ்கின்ற வெள்ளித்திரை
                  பொறுப்பின்றி காட்டுமிந்த காட்சிகளைப் பார்க்கின்றார்
            எதையுமே எண்ணாமல் எடுத்தவற்றை மனமிருத்தி
                     இன்னல்பல காண்பதற்கு வெள்ளித்திரை வழிவகுத்தல்
            ஊடகத்தின் வழியினிலே ஊறுதரும் நிலையன்றோ   !


            ஊடகத்தில் வந்துவிட்டால் உண்மையென நினைக்கும்நிலை
                  நாடெல்லாம் இப்போது நன்றாகப் பரந்துளது 
           உண்மையெது பொய்மையெது என்பதற்கு யாவருமே
                    ஊடகத்தை நாடுவதே உகந்ததெனக் கருதுகிறார் 
           இந்தநிலை ஊடகத்தை நடத்துகின்றார் உணரவேண்டும் 
                  வெந்தழலை கொட்டுகின்ற வீண்நிலைகள் தவிர்க்கவேண்டும் 
            நற்கருத்தை நல்வழியை  நாகரிக வழியினிலே
                   செப்புகின்ற ஊடகமாய் திகழ்ந்திட்டால் சிறப்பன்றோ  ! 
                   image1.JPG
                    
                   
          

No comments: