பயணியின் பார்வையில் - அங்கம் 10 வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையின் பின்னணியில் ஒரு பெண்ணின் கதை! சேலம் - வேலூர் பாதையில் நேர்ந்த இன்ப அதிர்ச்சி - முருகபூபதி


"காட்பாடியிலிருந்து கோயம்புத்தூருக்குச் செல்லவேண்டும்"  என்று எனது தம்பியின் குடும்ப நண்பரும் வாடகை வாகன சாரதியுமான ரெட்டி அங்கிளிடம் சொன்னேன்.
" பீகாரிலிருந்து ஆலப்புழை ( கேரளா) நோக்கிவரும் எக்ஸ்பிரஸ் அதிகாலை 4.20 மணிக்கு காட்பாடி சந்திக்கு வருகிறது. அதில் கோயம்புத்தூர் போகலாம்" என்றார்.
" அதற்கு டிக்கட் முன்பதிவுசெய்யவேண்டுமே" என்றேன்.
" அதெல்லாம் பார்த்துக்கொள்ளலாம். காலையில் ரெடியாக இருங்கள். வந்து அழைத்துச்சென்று ரயிலேற்றிவிடுகிறேன்" என்றார் ரெட்டி அங்கிள்.
நானும் தயாரானேன். சொன்ன வாக்குத்தவறாமல் அதிகாலையே துயில் எழுந்து தனது காரையும் எடுத்துவந்து காட்பாடி ரயில் நிலையத்திற்கு அழைத்துச்சென்றார். அப்பொழுது நேரம் காலை 4.00 மணி.
" ஒரு நூறு ரூபா கொடுங்கள்" என்று கேட்டுவாங்கிச்சென்றவர்,  சில நிமிடங்களில் திரும்பிவந்து,  ஒரு சிறிய அனுமதிச்சீட்டும் மிகுதியாக இருந்த 25 ரூபாவும் தந்தார். அவருக்குரிய கார் வாடகையை கொடுத்தேன்.
எனது பேக்கையும் அவரே எடுத்துவந்து காட்பாடி ரயில் நிலைய மேடைக்கு அழைத்துச்சென்றார்.
" எழுபத்தியைந்து ரூபாவில் கோயம்புத்தூர் செல்ல முடியுமா?" என்று வியப்புடன் கேட்டேன். அந்த வியப்பையே முறியடிக்கும் வகையில் மற்றும் ஒரு வியப்பை அவிழ்த்தார் ரெட்டி அங்கிள்!
" உங்களை முதல் வகுப்பு ஏ.ஸி. கொம்பார்ட்மென்டில் ஏற்றிவிடுவேன். செக்கர் வந்தால், அவசரத்தில் ஏறிவிட்டதாகச் சொல்லுங்கள். மேலதிகமாக எவ்வளவு செலுத்தவேண்டும் என்று கேட்டு, அதற்குரிய கட்டணத்தை கொடுத்து பயணத்தை தொடருங்கள்" என்றார்.
இந்த நடைமுறை எனக்கு அதிசயமாகப்பட்டது. ரயில் வந்தது. தயக்கத்துடன் ரெட்டி அங்கிளின் முகத்தைப்பார்த்துக்கொண்டே அந்த முதல் வகுப்பு குளிரூட்டப்பட்ட பெட்டியில் ஏறினேன்.
" ஒன்றும் யோசிக்காதீங்க. நீங்க நல்லா பேசுவீங்கதானே?" என்றார்.
" நல்லா பேசுவேன். அதற்கும் பயணத்திற்கும் என்ன சம்பந்தம்" என்று நான் சொல்வதற்கிடையில் ரயில் புறப்பட்டது. அவர் கையசைத்து விடைபெற்றார். அவர் வாங்கித்தந்த அந்த 75 ரூபா டிக்கட்டை மீண்டும் மீண்டும் புரட்டிப்பார்த்து யோசித்துக்கொண்டிருந்தேன். நான் அமர்ந்திருந்த அந்த முதல்வகுப்பு கொம்பார்ட்மென்ட் அறையில் வேறு எவரும் இல்லை. தனித்துவிடப்பட்டிருந்தேன்.
காட்பாடிவரையில் அந்த அறையில் இருந்து வந்தவர்கள் உறங்கியிருப்பதன் அடையாளமாக வெள்ளை நிற  படுக்கை விரிப்புகள் அலங்கோலமாக காட்சியளித்தன.
அவற்றை சுருட்டி ஒரு மூலையில் ஒதுக்கிவிட்டு, காலை நீட்டி அமர்ந்துகொண்டேன். டிக்கட் பரிசோதகர் வருமுன்னர் இன்சுலின் ஏற்றி தம்பியின் துணைவியார்  தந்துவிட்ட காலை ஆகாரத்தை முடித்துக்கொண்டேன்.  பதட்டத்துடன் நேரம் கழிந்தது. மனதில் இருப்புக்கொள்ளவில்லை. அருகில் யாரும் இல்லை. எழுந்துசென்று எவரிடமாவது கேட்கலாம் என்று பார்த்தால், அடுத்தடுத்த அறைகளிலிருந்து குறட்டை ஒலிதான் வந்துகொண்டிருந்தது.
கையிலிருந்த புத்தகத்தின் பக்கங்களை புரட்டினாலும் மனம் அவற்றில் ஒன்றவில்லை. டிக்கட் பரிசோதகருக்காக காத்திருந்தேன். இரண்டு மணிநேரம் கடந்து ஒருவர் வந்தார். எனக்கு முன்னால் அமர்ந்தார்.
என்வசம் இருந்த ரயில் டிக்கட்டை காண்பித்தேன். அது மூத்த பிரஜைகளுக்கானது என்பது அப்போதுதான் எனக்குப்புரிந்தது.
" சார், உங்கள் பெயரென்ன?" என்று கேட்டார். முகத்தில் எந்த சலனமும் இல்லை. எனது பெயரைச்சொல்லிவிட்டு, அவரது பெயரைக்கேட்டேன்.
" ஆறுமுகம் " என்றவர், " நாமெல்லாம் ஒரு குடும்பம்தான் சார்" என்றார். பின்னர், " சார், இந்த டிக்கட்டில் நீங்கள் இந்த வகுப்பு பெட்டியில் பயணிக்கமுடியாது, இன்னும் எழுநூறு ரூபா கொடுங்கள். மற்றும் ஒரு டிக்கட் தருகின்றேன்." என்றார்.
எனக்கு திக்கென்றது. " சார், மன்னித்துக்கொள்ளுங்கள். என்னை ரயிலேற்றிவிட்டவர், நீங்கள் வந்தால் சொல்லி வேறு ஆசனம் கேட்கலாம் என்றார்" எனச்சொன்னேன்.
" ஆமாம் சார். வேறு ஆசனம்  தேவையில்லை சார். இதிலேயே நீங்கள் பயணிக்கலாம். ஆனால், நீங்கள் எழுநூறு ரூபா செலுத்தவேண்டும்" என்றார்.
" இதனைவிட குறைந்த கட்டணத்தில் வேறு வகுப்புகள் இல்லையா? " எனக்கேட்டேன்.
" அடுத்த பெட்டிக்குச்செல்லுங்கள். அங்கு முன்னூறு ரூபாய்தான் ஆகும்" என்றார்.
 சரியென்று இந்திய ரூபாய் முன்னூறை எடுத்து நீட்டினேன்.
" அந்த டிக்கட்டை நான் தரமுடியாது சார். நீங்கள் அடுத்த பெட்டிக்குப்போங்கள். அங்கு வேறு ஒரு செக்கர் வருவார்.  அவரிடம் வாங்கிக்கொள்ளுங்கள்" என்று சொல்லிவிட்டு, என்னை கதவு திறந்து வழியனுப்பிவைத்தார் அந்த பரிசோதகர்.
அடுத்தபெட்டி மூன்றாம் வகுப்புக்குரியது. அங்கு பயணிகள் அதிகம். ஆயினும் அமருவதற்கு ஆசனமும் கிடைத்தது. இனிவரவிருக்கும் பரிசோதகருக்கா காத்திருந்தேன். நேரம் கடந்துகொண்டிருந்தது. தென்னிந்திய மொழிகள் பேசும் ஆண், பெண் சிறுவர்த்தகர்கள் தங்கள் விற்பனையில் ஈடுபட்டார்கள். அடிக்கடி அவர்கள் அந்தப்பெட்டிக்கு வந்து சென்றார்கள்.
தண்ணீர், குளிர்பானம், கோப்பி, தேநீர், சிற்றுண்டிகள், காப்பு, மற்றும் இமிடேஷன் நகைகள் , குழந்தைகள் விளையாட்டுச்சாமான்களை காண்பித்து பயணிகளை நாடினார்கள். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், உருது, இப்படி எத்தனையோ மொழிகள் அங்கு பரவியிருந்தன.
அந்த உச்சரிப்புகளை செவிமடுத்தவாறே நான் அமர்ந்திருக்கும் வகுப்பு பெட்டிக்கு வரவேண்டிய டிக்கட் பரிசோதகருக்காக  காத்திருந்தேன். அப்படி ஒரு காத்திருப்பு எனது வாழ்வில் அதற்கு முன்னர் அவ்வாறு நேர்ந்திருக்கவில்லை. இந்தப்பெட்டியிலும் சுமார் இரண்டு மணிநேரம் கழிந்தது.
ஒரு பரிசோதகர் வந்தார். பொக்கட்டிலிருந்த அந்த 75 ரூபா டிக்கட்டை காண்பித்தேன். ஏதோ சொன்னார் ! திரும்பி வருவதாக சைகையாலும் ஏதோ சொன்னார்!
அவர் எந்த மொழியில் பேசினார் என்பதும் புரியவில்லை. போனவர் போனவர்தான். திரும்பி வரவேயில்லை. கோயம்புத்தூர் ரயில் நிலைய சந்தி வந்தது. இறங்கினேன்.
எனது மைத்துனர் முருகானந்தன் மேடைக்கு வந்து அழைத்துச்சென்றார். ரயிலில் நடந்ததைச்சொன்னேன்.
அவர் சற்று நின்று, யோசித்தார். " என்ன 75 ரூபாய் கட்டணத்துடன் வந்து இறங்கிவிட்டீர்களா? பெரிய உலகமகா அதிசயம்தான்" என்றார். அவரது மொழி புரிந்தது.
" மீண்டும் காட்பாடிக்கு திரும்பிச்செல்வதற்கான ரயில் ஆசன முன்பதிவு செய்துவிடுவோம் " என்றேன்.  மீண்டும் பதட்டத்துடன் பயணிப்பதை தவிர்ப்பதற்காகத்தான் அவ்வாறு அவரிடம் சொன்னேன்.
ஆசனமுன்பதிவு செய்யுமிடத்தில் கூட்டம் அதிகம். வீட்டுக்குச்சென்று ஒன்லைனில் செய்யலாம் என்றார். காட்பாடியில் ஒரு ரெட்டி அங்கிள் போன்று கோயம்புத்தூரில் ஒரு மச்சான் இருக்கிறார் என்ற ஆறுதலுடன் அவரது இல்லத்திற்கு புறப்பட்டேன்.
அவருடைய மனைவியிடம், " பூபதி 75 ரூபா டிக்கட்டோட எங்கட கோயம்புத்தூருக்கு வந்து சேர்ந்திட்டார் " என்ற அதிசயத்தை சொல்லி சிரித்தார்.  இத்தகைய அதிசயங்களை ஆராயும் மனநிலை எனக்கு வருவதில்லை.
கோயம்புத்தூரில் இரண்டு நாட்கள் நின்றுவிட்டு மீண்டும் காட்பாடி செல்வதற்கு ஒன்லைனில் முயன்றோம். முன்பதிவு ஆசனம் கிடைக்கவில்லை. அங்கிருந்து பஸ் பயணமாக சேலம் வந்து,  அங்கிருந்து வேலூர் சென்று காட்பாடி வருவதற்கு தீர்மானித்தேன். நீண்ட பயணம்தான். முருகானந்தன் சேலம் பஸ்ஸில் ஏற்றிவிட்டார்.
காட்பாடியிலிருக்கும் எனது தம்பியின் துணைவியாருக்கு கைத்தொலைபேசி மூலம் நான் பஸ்ஸில் திரும்பும் தகவலை தெரிவித்தேன். எப்படியும் மாலையாகிவிடும் என்றேன்.
சில மணிநேரங்களில் சேலத்தில் இறங்கி,  வேலூர் செல்லும் பஸ்ஸில் ஏறினேன். கடந்துசென்ற நகரங்கள், கிராமங்களை ரசித்தவாறு பயணிக்கின்றேன்.
எனது கைத்தொலைபேசிக்கு ஒரு அழைப்பு வருகிறது.  " மாமா எங்கே நிற்கிறீர்கள்?"
"யார் " எனக்கேட்கிறேன்.
" சவூதியிலிருந்து குட்டியம்மா பேசுறேன். "  அப்பொழுது மதியம் ஆகிவிட்டது. மைத்துனரை " மாமா "  என்று அழைக்கும் பண்பாட்டை தமிழக திரைப்படங்களில் பார்த்திருக்கின்றேன். எனக்குப்  புரிந்துவிட்டது. அந்தக்குரல் எனது தம்பி மனைவியின் தங்கையுடையது.
" அம்பத்தூரை நெருங்கிக்கொண்டிருக்கின்றேன். " என்றேன்.
" இன்னும் சில நிமிடங்களில் நீங்கள் பயணிக்கும் பஸ் ஒரு ஊரில் லஞ்சுக்கு நிற்கும். மீண்டும் எடுக்கிறேன்" என்றாள் அந்த குட்டியம்மா.
அவள் சவூதியில் ஒரு மருத்துவமனையில் தாதியாக பணியாற்றுகிறாள் அவர்கள் குடும்பத்தில் பெண்கள் பலரும் தாதியர்கள்தான். வேலூர் சி.எம்.சி. யில் படித்தவர்கள். எனது தம்பியின் மனைவியும் முன்னர் சவூதியில்  தாதியாக பணியாற்றியவர் .
வேலூர் சி.எம்.சி. பற்றிய சில தகவல்கள் இணையத்திலிருந்து:
பெண்களுக்காக செயல்பட்ட முதல் மருத்துவக் கல்வி நிறுவனம் என்னும் பெருமையை தன்னகத்தே கொண்டது வேலூர் சி.எம்.சி. தொடக்க காலங்களில் 100 சதவிகித மருத்துவக் கல்வி இடத்தையும் பெண்களுக்கே வழங்கியது சி.எம்.சி. இதற்குக் காரணம், அந்தக் காலகட்டங்களில் ஆண்கள் பிரசவம் பார்ப்பதை சமூகம் அனுமதிக்கவில்லை. இதனால் ஏராளமான பிரசவ மரணங்கள் நிகழ்வதைக் கண்டு வெதும்பி, வெளிநாட்டில் மருத்துவப் படிப்பை முடித்துவிட்டு வேலூர் திரும்பினார் ஐடா ஸோஃபியா ஸ்கட்டர். பிரசவ மரணங்களைத் தடுக்க, அதிகளவிலான பெண்கள் மருத்துவர்கள் ஆக வேண்டும் என்ற நோக்கத்திலேயே 100 சதவிகித இடங்கள் அவர்களுக்கே ஒதுக்கப்பட்டது
நூற்றாண்டு கால பாரம்பரியம் கொண்ட இக்கல்வி நிறுவனத்தில் 1918-47 வரை பெண்களை மட்டுமே மருத்துவ மாணவர்களாக  இணைத்துக்கொண்டனர். 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில்  கணவன் இறந்தால்  பெண்கள் உடன்கட்டை ஏறுதல்!  அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு? என்பன போன்ற மூட நம்பிக்கைகள் உலவிய காலத்தில், ஏராளமான பெண் மருத்துவர்களை உருவாக்கிக் காட்டியது வேலூர் சி.எம்.சி
இந்திய சுதந்திரத்துக்குப் பின்னரே இருபாலர் பயிலும் கல்லூரியாக மாற்றப்பட்ட போதும், பெண்களுக்கு 50 சதவிகித இடங்களை ஒதுக்கியது இக்கல்லூரி. இன்றளவும் மாணவிகளே இங்கு அதிகம் படிக்கின்றனர்.  
ஐடாவின் பெற்றோர் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள்.  இவரின் தந்தையும் ஒரு மருத்துவர். அவர்கள் ராணிப்பேட்டையில் தங்கி மருத்துவத் தொண்டு புரிந்துகொண்டிருந்த காலகட்டத்தில் ஐடா 1870  இல் பிறந்தார். எட்டு வயதுவரை தமிழ்நாட்டின் ராணிப்பேட்டையில் வளர்ந்த ஐடா,  பிறகு தன் பெற்றோர்களுடன் தாயகமான அமெரிக்காவுக்குச் சென்றார். அதன்பின் சமயத் தொண்டுக்காக ஜப்பான் பயணமானார். அதனால் நார்த் ஃபீல்டில் உள்ள கிறித்துவப் பெண்கள் பள்ளியில் சேர்ந்து விடுதியில் தங்கியிருந்து படிப்பைத் தொடர்ந்தார். பள்ளி இறுதித் தேர்வெழுதிய நிலையில் உடல்நிலை சரியில்லாத தாயாரைப் பார்ப்பதற்காக இந்தியாவுக்குப் புறப்பட்டு வந்தார்.
அப்போது ஒருநாள் இரவு அந்தணர், முஸ்லிம், இந்து சமயத்தை சார்ந்தவர்கள் தங்கள் மனைவிகளின் பிரசவ உதவிக்காக அவர்கள் வீட்டுக்கு வந்து, ஐடாவை பெண் மருத்துவராக கருதி உதவி வேண்டினர். அவர்களிடம் தான் மருத்துவர் இல்லை என்றும், மருத்துவரான தன் தந்தையை அழைப்பதாகச் சொன்னார்.  ஆனால்,  அவர்கள் ஆண் மருத்துவரிடம் காண்பிக்க  விரும்பாமல் திரும்பிச் சென்றனர். மறுநாள் அந்த மூன்று பெண்களும் பிரசவத்தின்போது இறந்து,  அவர்களுடைய சவஊர்வலங்கள் சென்றதைக் கண்ட ஐடா வருந்தினார்.
இந்தியப் பெண்களின் அவலநிலை குறித்து ஆழமாகச் சிந்தித்த ஐடா,  மருத்துவம் படித்து மிஷனரி பணியில் ஈடுபட விரும்புவதாக தன் பெற்றோரிடம் தெரிவித்தார். பின்னர் மருத்துவம் படிக்க அமெரிக்கா சென்ற ஐடாவுக்கு  ,  மருத்துவப் படிப்பு முடிந்ததும், வேலூரில் பெண்களுக்கென மருத்துவமனை கட்ட வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. மருத்துவமனை தொடங்க எட்டாயிரம் அமெரிக்க டொலர்கள் தேவைப்பட்டது. நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டார். அப்போது ஷெல் என்ற முதியவர் 10 ஆயிரம் அமெரிக்க டொலர்களுக்கான காசோலையை ஐடாவிடம் தந்து, " என் அன்பு மனைவி மேரி டேபர் ஷெல்லின் நினைவாக, வேலூரில் பெண்கள் மருத்துவமனை அமைக்க நிதியுதவி அளிக்கிறேன். அவர் உயிரோடு இருந்திருந்தாலும் உதவி செய்திருப்பார் " என்று கூறினார்.
வேலூர் சி. எம்.சி.யின் இந்த வரலாறு,  செல்லும் இடங்கள் தோறும் கோயில்கள் கட்டிக்கொண்டிருக்கும் எம்மவருக்கும்,  அரசமரங்கள் காணும் இடங்களிலெல்லாம் புத்தருக்கு சிலை வைப்பவர்களுக்கும்   மனித உயிர்களை துச்சமாக மதித்து குழந்தைகளையும் கொல்லத் தயங்காத பயங்கரவாதிகளுக்கும்  அழுத்தமான செய்தியை தருகின்றது.
இனி எங்கள் குட்டியம்மா எதற்காக சவூதியிலிருந்து , தமிழ்நாட்டில்  அம்பத்தூர் - வேலூர்  மார்க்கமாகச்சென்று கொண்டிருக்கும் எனக்கு கோல் எடுத்தார் என்ற கதைக்கு வருகின்றேன்.
அம்பத்தூரில் ஒரு உணவுவிடுதிக்கு முன்பாக அந்த பஸ் நின்றது. சிரம பரிகாரத்திற்காகவும் மதிய உணவிற்காகவும் இறங்கினோம்.
நேரம் கணித்து, குட்டியம்மா மீண்டும்  கோல் எடுத்தார்.
" மாமா, அம்பத்தூர் வந்திட்டுதா..? உங்கட போனை கொஞ்சம் அந்த பஸ் ட்ரைவரிடம் கொடுங்கள்." என்றாள்.
" அவரைத் தெரியுமா? எப்படி? "
" தெரியாது மாமா. நீங்கள் கொடுங்களேன்."
அந்த முதிய வயதுடைய சாரதி தோளில் கிடந்த துண்டினால் முகத்தை துடைத்துக்கொண்டு எனக்கு முன்னால் அந்த உணவு விடுதியை நோக்கி நடந்துகொண்டிருந்தார்.
" சார், உங்களுக்கு ஒரு கோல்" என்றேன்.
அவர் திகைப்புடன் என்னைத்திரும்பிப்பார்த்தார். கைத் தொலைபேசியை அவரிடம் கொடுத்தேன். மறுமுனையில் சவூதியிலிருந்து  குட்டியம்மா அவரிடம் சொன்னதை அவர் மீண்டும் என்னிடம் சொன்னார்.
அதனைக்கேட்டதும், நான் எந்த உலகத்தில் இருக்கின்றேன் என்று ஒரு கணம் அதிர்ந்துவிட்டேன். இப்படியும் நடக்குமா?
" சார், நம்ம வண்டி அடுத்த ஊரில் நிற்கும்போது, உங்க மதினியின் வீட்டுக்காரர் வந்து சந்திப்பாராம். . அவர் உங்க பிள்ளைகளுக்கு பலகாரம் பட்சணம் கொண்டுவந்து தருவாராம். வாங்கிக்கொள்ளுங்கள். உங்களுக்காக வண்டியை சில நிமிஷங்கள் அங்கே  நிறுத்துறேன்."
" உங்களுக்கு அவுங்களை தெரியுமா..? " எனக்கேட்டேன்.
" இல்லை சார்." அவர் விடுதிக்குள் நுழைந்துவிட்டார்.
சில விநாடிகளில் குட்டியம்மா மீண்டும் இணைப்பில் வந்தாள். " என்ன மாமா? ஷொக்காகிப்போனீங்களா? உங்களைத்தான் பார்க்கமுடியவில்லை. ஊருக்குப்போகும்போது எங்க வீட்டுக்காரர் தருவதை வாங்கிப்போங்கள்" என்றாள்.
" உங்க வீட்டுக்காரரை எனக்குத் தெரியாதே? எப்படி கண்டு பிடிப்பார். ? " எனக்கேட்டேன்.
" உங்க படம் வாட்ஸ் அப்பில் அனுப்பிட்டேன். ஆமா, இப்ப  என்ன கலர் சேர்ட் போட்டிருக்கீங்க மாமா ? அதைச்சொல்லுங்க. "
சொன்னேன். " அடுத்த தடவை வரும்போது சந்திப்போம்"  என்றாள் அந்த முகம் தெரியாத குட்டியம்மா. அவளது கணவரும் குறிப்பிட்ட பஸ் தரிப்பிலிருந்து தொடர்புகொண்டு பேசினார். எனது சேர்ட் கலரின் அடையாளத்தை உறுதிப்படுத்திக்கொண்டார்.
சில நிமிடங்களில் பஸ் புறப்பட்டது. நடத்துனரும் சாரதியும் பலகார பட்சணத்தை நினைவூட்டினார்கள். அந்த ஊர் வந்ததும் பஸ் நின்றது.  சொல்லிவைத்தாற்போல் குட்டியம்மாவின் கணவர் காத்திருந்தார்.
பஸ்ஸிற்குள் வந்து என்னை அணைத்து வணங்கினார். அந்த பலகார பார்சலைத்தந்துவிட்டு கையசைத்து விடைபெற்றார்.  அதற்கு முன்னர் அறிந்திராத  உறவுகள் இப்படியும் முன்பின் தெரியாத வழிப்பயணத்தில் தேடி  வருமா?
எவருக்கும் பயணங்களில் இதுபோன்ற இன்ப அதிர்ச்சிகள் வந்தவண்ணமே இருக்கும்!
( தொடரும்) 


-->
No comments: