உலகச் செய்திகள்


வடகொரியா தனது விசேட தூதுவரை கொலைசெய்யவில்லை- சிஎன்என்

மலையேறச் சென்று காணாமல் போனவர்கள் சடலங்களாக மீட்பு

Spice (ஸ்பைஸ்) ரக குண்டுகள் வாங்குவதற்கு இஸ்ரேலிடம் இந்தியா ஒப்பந்தம்

அமெரிக்க- ரஸ்ய யுத்தகப்பல்கள் மோதிக்கொள்ளும் ஆபத்து தவிர்க்கப்பட்டது

லண்டன் பேருந்தில் பெண் ஓரினச்சேர்க்கையாளர்கள் மீது தாக்குதல்

பாகிஸ்தான் பிரதமர்,இந்திய பிரதமருக்கு கடிதம்

மசூதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் பலி: ஏமன் நாட்டில் சம்பவம்



வடகொரியா தனது விசேட தூதுவரை கொலைசெய்யவில்லை- சிஎன்என்

04/06/2019 அமெரிக்காவிற்கான வடகொரியாவின் விசேட பிரதி கிம் சொல் கொலை செய்யப்படவில்லை  சிறைவைக்கப்பட்டுள்ளார் என சிஎன்என் செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்க வடகொரிய ஜனாதிபதிகளிற்கு இடையிலான பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிவடைந்ததை தொடர்ந்து வடகொரியா அந்த பேச்சுவார்த்தைகளில் முக்கிய பங்களிப்பை வழங்கிய தனது விசேட பிரதிநிதியை  சுட்டுக்கொலை செய்துள்ளது என கடந்த வாரம் தகவல்கள் வெளியாகியிருந்தன.
அவருடன் வெளிவிவகார அமைச்சக அதிகாரிகள் சிலரும் கொல்லப்பட்டுள்ளனர், விமானநிலையத்தில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர் என தென்கொரிய ஊடகங்கள் தெரிவித்திருந்தன.
எனினும் அவர் தடுத்துவைக்கப்பட்டுள்ளார் தோல்வியில் முடிவடைந்த பேச்சுவார்த்தைகளில் அவரது பங்களிப்பு குறித்து விசாரணையை எதிர்கொண்டுள்ளார் என சிஎன்என் தெரிவித்துள்ளது.
அவரின் அதிகாரம் பறிக்கப்பட்டுள்ளது ஆனால் அவர் கடுழிய சிறைத்தண்டனையை  அனுபவிக்கவில்லை என சிஎன்என குறிப்பிட்டுள்ளது.   நன்றி வீரகேசரி










மலையேறச் சென்று காணாமல் போனவர்கள் சடலங்களாக மீட்பு

04/06/2019 இந்தியாவின் இமய மலைத்தொடரில் ஏறச் சென்ற போது காணாமல் போய் இருந்த எட்டு மலையேறிகளில் ஐவரின் சடலங்கள் தற்போது  கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் குறித்த 8 பேரை தேடும் பணியில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினர் குறித்த தகவலை உறுதிசெய்துள்ளனர்.
குறித்த காணாமல் போன குழுவினரில் 4 பிரித்தானியர்கள், 2 அமெரிக்கர்கள் மற்றும் 1 அவுஸ்திரேலியர் அடங்கிய இந்த குழுவினர் இரண்டு வாரங்களுக்கு முன்னர் நந்தாதேவி சிகரத்தில் ஏற முயற்சித்தநிலையில் காணாமல் போய் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து அவர்கள் பல்வேறு பனிச்சரிவுகளில் சிக்கி உயிரிழந்திருக்கலாம் என நம்பப்படும் நிலையில் அவர்களை தேடும் முயற்சியில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.   நன்றி வீரகேசரி 









Spice (ஸ்பைஸ்) ரக குண்டுகள் வாங்குவதற்கு இஸ்ரேலிடம் இந்தியா ஒப்பந்தம்

07/06/2019 இஸ்ரேலிடம் (ஸ்பைஸ்) SPICE  ரக குண்டுகளை வாங்குவதற்கு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளது.
பால்கோட் தாக்குதலுக்குப் பயன்படுத்தியதை போன்ற (ஸ்பைஸ்) SPICE ரக குண்டுகளை இஸ்ரேலிடம் வாங்கும் ஒப்பந்தத்தில் இந்திய விமானப்படை கையெழுத்திட்டுள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.
(Photo courtesy: YouTube/Rafael)
இந்த குண்டுகள் 60 கி.மீ., தூரம் வரையிலான இலக்கை தாக்கி அழிக்கக் கூடியது.
தொலைநோக்கு திறன் கொண்ட விமானத்தில் உள்ள கணினி மூலம் கட்டுப்படுத்தக் கூடியது. 
மேலும் SPICE 2000, போர்க் காலங்களில் பயன்படுத்தும் MK 84, BLU-109, APW, RAP-2000 ஆகிய ஆயுதங்களின் திறன்களை உள்ளடக்கிய வகையில் தயாரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  நன்றி வீரகேசரி 











அமெரிக்க- ரஸ்ய யுத்தகப்பல்கள் மோதிக்கொள்ளும் ஆபத்து தவிர்க்கப்பட்டது

07/06/2019 ஆபத்தான விதத்தில் பயணித்த அமெரிக்காவின் யுத்தக்கப்பல் காரணமாக இன்று பாரிய விபத்தொன்று ஏற்படவிருந்ததாக ரஸ்யா தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் போர்க்கப்பல் ரஸ்யாவின் கடற்படை கலமொன்றுடன் மோதும் நிலையேற்பட்டதாக  ரஸ்யாவின் பசுபிக்கிற்கான கடற்படை தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் யு எஸ். எஸ் சான்செல் லோர்ஸ்வில் என்ற ஏவுகணை கப்பல் ரஸ்யாவின் அட்மிரல் வினோகிரடொவ் என்ற நாசகாரி கப்பலிற்கு மிக அருகில் வந்தது என தெரிவித்துள்ள அதிகாரிகள்
மோதலை தவிர்ப்பதற்காக ரஸ்யாவின் நாசகாரி அவசர நடவடிக்கைகளை எடுத்தது எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
அமெரிக்க கப்பல் திடீரென தனது பயணப்பாதையை மாற்றிக்கொண்டு ரஸ்ய நாசகாரியின் குறுக்கே வந்தது என ரஸ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கிழக்கு சீன கடலில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம் குறித்த தனது எதிர்ப்பை அமெரிக்காவிடம் ரஸ்யா வெளியிட்டுள்ளது.  நன்றி வீரகேசரி 









லண்டன் பேருந்தில் பெண் ஓரினச்சேர்க்கையாளர்கள் மீது தாக்குதல்

08/06/2019 லண்டன் பேருந்தில் பெண் ஓரினச்சேர்க்கையாளர்கள் இருவர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் தொடர்பில் நான்கு இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
மெலெனியா கெய்மொனாட் என்ற யுவதியும் அவரது தோழியும் இரவு வேளையில் பேருந்தில் பயணித்துக்கொண்டிருந்தவேளை இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தாக்குதல் இடம்பெற்ற பின்னர் எடுக்கப்பட்ட படமொன்றை கெய்மொனாட் முகநூலில் பதிவு செய்துள்ளார். அந்த படத்தில் அவரும் அவரது நண்பியும் இரத்தக்காயங்களுடன் காணப்படுகின்றனர்.
தாங்கள் முத்தமிட்டதை பார்த்த நான்கு இளைஞர்கள் எங்களை துன்புறுத்த ஆரம்பித்தார்கள் என அவர் தெரிவித்துள்ளார். பின்னர் அவர்கள் ஆபாசமான வார்த்தை பிரயோகத்தில் ஈடுபட்டனர்,என தெரிவித்துள்ள அவர் எங்களை தங்களை முத்தமிடுமாறு அவர்கள் எங்களை கேட்டனர் நாங்கள் அதற்கு மறுத்தவேளை எங்களை மோசமாக தாக்கிவிட்டு  எங்கள் பணத்தை திருடிச்சென்றுவிட்டனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர்கள் காடையர்கள் போல நடந்துகொண்டனர், எங்களை லெஸ்பியன்கள் என அழைத்தனர் தங்களை முத்தமிடுமாறு வற்புறுத்தினர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆபத்தான நிலையை தணிப்பதற்காக நான் அவர்களுடன் வேடிக்கையாக பேசினேன் ஆனால் அவர்கள் தொடர்ந்தும் எங்களை துன்புறுத்தினார்கள் நாணயங்களை எங்கள் மீது வீசினார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதன் பின்னர் எனது நண்பி அவர்களுடன் மோத தொடங்கினார்,அவர்கள் எனது நண்பியை மோசமாக தாக்கினார்கள் அவளது முகத்திலிருந்து இரத்தம் பெருக்கெடுத்தது பின்னர் அவர்கள் என்னையும் தாக்கினார்கள் என மெலெனியா கெய்மொனாட் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இந்த சம்பவம் தொடர்பில் 15 முதல் 18 வயதுடைய நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த தாக்குதலை கடுமையாக கண்டித்துள்ள  லண்டன் மேயர் சாதிக்கான் இது அருவருப்பான தவறான கருத்துடைய சம்பவம் என குறிப்பிட்டுள்ளார்.
ஓரினச்சேர்க்கையாளர்களிற்கு எதிரான குற்றங்களை லண்டன் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது சகித்துக்கொள்ளாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரிட்டிஸ் பிரதமர் தெரேசா மேயும் இந்த சம்பவத்திற்கு தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.
இது வேதனை தரும் தாக்குதல் எனது எண்ணங்கள் பாதிக்கப்பட்டவர்கள் பற்றியதாக உள்ளன என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவரும் ஒருபோதும் தாங்கள் யார் என்பதையும் தாங்கள் யாரை நேசிக்கின்றார்கள் என்பதையும்  மறைக்ககூடாது என தெரிவித்துள்ள தெரேசா மே ஓரினச்சேர்க்கையாளர்களிற்கு எதிரான வன்முறைகளை முடிவிற்கு கொண்டுவருவதற்காக பாடுபடவேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.  நன்றி வீரகேசரி 









பாகிஸ்தான் பிரதமர்,இந்திய பிரதமருக்கு கடிதம்

08/06/2019 இரண்டாவது முறையாக பிரதமராக பொறுப்பேற்ற இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு பாகிஸ்தான் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அத்தோடு பாகிஸ்தான் பிரதமர்,இந்திய பிரமருக்கு வேண்டுகோள்  ஒன்றை விடுத்து கடிதம் எழுதியுள்ளார்.
வறுமை உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்போம் என அழைப்பு விடுத்துள்ளார்.
எதிர்வரும் 13 மற்றும் 14 ஆம் திகதிகளில்  நடைபெற உள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில், பாகிஸ்தான் பிரதமரை சந்தித்து பேசப் போவதில்லை என இந்தியா அறிவித்திருந்த நிலையில், இம்ரான்கான் இக் கடிதத்தை எழுதிவுள்ளமை குறிப்பிடத்தக்கது.  நன்றி வீரகேசரி 











மசூதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் பலி: ஏமன் நாட்டில் சம்பவம்

09/06/2019 ஏமன் நாட்டின் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தாலியா மாகாணத்தில் அசாரிக் மாவட்டத்தில், மசூதியொன்றில் நேற்று முன்தினம் தொழுகையிலீடுப்டோர் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஐவர் பலியாகியுள்ளனர்.  


ஏமனில் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தாலியா மாகாணத்தில் அசாரிக் மாவட்டத்தில், மசூதியொன்றில் தொழுகை இடம்பெற்று கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத நபர்கள் தானியங்கி துப்பாக்கிகளுடன் ஒரு வாகனத்தில் வந்து இறங்கியுள்ளனர். இறங்கிய வேகத்தில், மசூதியில் நுழைந்து, தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார்கள். இதில், தொழுகையில் ஈடுபட்டிருந்த 5 பேர் உயிரிழந்தனர்.




மேலும், அங்கிருந்தவர்கள் பதறியடித்து நாலாபுறமும் ஓடியுள்ளனர். இதற்கிடையே தாக்குதல்களை நடத்தியவர்களும், அங்கிருந்து ஓட்டம் பிடித்துள்ளனர். அத்துடன், அவர்கள் தங்களுடன் 3 பேரை கடத்தியும் சென்றுள்ளனர். 
மேலும், தாக்குதலின்போது ஸ்தலத்திற்கு விரைந்த பாதுகாப்பு படையினர்  படுகாயமடைந்த நிலையில் கிடந்தோரை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். 
இந்நிலையில், குறித்த தாக்குதல் தொடர்பில் தாக்குதலை நடத்தியவர்கள் யார் என்பது குறித்து கண்டறியும் தீவிர பணியை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.  நன்றி வீரகேசரி 








No comments: