சட்டவிரோத குடிவாசிகளுக்கு வாய்ப்பு வழங்கப்பட மாட்டாது-அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சர்
பதவி துறந்த அமைச்சர்கள் விபரங்கள்!
முஸ்லிம் அரசியல்வாதிகள் ஏன் பதவி துறந்தனர் ; தமது அடுத்தகட்ட நகர்வு என்ன - ஹக்கீம் விளக்கம்
தமிழினியின் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்கிவைப்பு
சிறீதரனை சந்தித்த கனேடிய உயர்ஸ்தானிகர்
கடுவாபிட்டியவுக்கு சென்ற அவுஸ்த்திரேலிய வெளிவிவகார அமைச்சர்
ஹிஸ்புல்லாவுக்கு எதிராக வழக்கு தாக்கல்
நெருக்கடியில் இருந்து நாடு விடுபட 'ஒரே தேசம் ஒரே குரல்" ; 6 அம்ச திட்டம்
இலங்கைக்கான பயண அறிவுறுத்தல்களைத் தளர்த்த பிரிட்டன், கனடா
இலங்கைக்கு உதவும் 20 அவுஸ்திரேலிய புலனாய்வு அதிகாரிகள்
பதவி விலகிய முஸ்லிம் அமைச்சர்களின் அமைச்சுப்பொறுப்புகளுக்கு பதில் அமைச்சர்கள் நியமனம்
சட்டவிரோத குடிவாசிகளுக்கு வாய்ப்பு வழங்கப்பட மாட்டாது-அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சர்
04/06/2019 சட்டவிரோத குடியேற்றவாசிகள் தொடர்பான அவுஸ்திரேலியாவின் கொள்கைகள் முன்னரைப் போன்று தற்போதும் கடுமையானதாகவே காணப்படுவதாகவும், படகுகளின் மூலம் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவை வந்தடைவதற்கு இலங்கையர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட மாட்டாது என்றும் அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சர் பீட்டர் டட்டன் எச்சரித்துள்ளார்.
அச்சந்திப்பில் அவுஸ்திரேலிய எல்லை விவகாரங்களுக்கு பொறுப்பான கொமாண்டர் மேஜர் ஜெனரல் கிரெய்க் பியுரினியால் கடல் மார்க்க சட்டவிரோத பயணத்திற்கு எதிரான புதிய பிரசார செயற்திட்டம் அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டது. இப்பிரசார செயற்திட்டத்தின் ஊடாக இலங்கை உள்ளிட்ட பிராந்திய நாடுகளில் வாழ்வோருக்கு சட்டவிரோத ஆட்கடத்தல் என்பது குற்றச்செயல் என்பதைத் தெளிவுபடுத்துவதுடன், அவுஸ்திரேலியாவின் எல்லைகளைப் பாதுகாப்பதற்கும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஊடகவியலாளர் சந்திப்பில், சட்டவிரோத குடியேற்றவாசிகள் தொடர்பான அவுஸ்திரேலியாவின் கொள்கைகள் முன்னரைப் போன்று தற்போதும் கடுமையானதாகவே காணப்படுவதாகவும், படகுகளின் மூலம் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவை வந்தடைவதற்கு இலங்கையர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட மாட்டாது என்று அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சர் பீட்டர் டட்டன் தெரிவித்தார்.
செய்தியாளர் சந்திப்பில் தொடர்ந்து கருத்து வெளியிட்ட கொமாண்டர் மேஜர் ஜெனரல் கிரெய்க் பியுரினி மேலும் கூறியதாவது :
சட்டவிரோத படகின் ஊடாக வேறு நாடுகளுக்குச் செல்வதன் மூலம் ஏற்படும் ஆபத்துக்கள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்தப் புதிய பிரசாரம் அமையும். அத்தோடு ஆட்கடத்தல் மற்றும் பிராந்திய எல்லைப் பாதுகாப்பு என்பன குறித்து இதன்கீழ் அதிக கவனம் செலுத்தப்படும்.
கடந்த மாதம் 29 ஆம் திகதி இலங்கையிலிருந்து 20 சட்டவிரோதக் குடியேற்றவாசிகளுடன் அவுஸ்திரேலியா நோக்கிப் பயணித்த ஆட்கடத்தல் படகொன்று தடுத்து நிறுத்தப்பட்டதுடன், அவர்கள் அனைவரும் திருப்பி அனுப்பப்பட்டார்கள். அதனைத் தொடர்ந்து அவுஸ்திரேலியாவிற்குச் செல்ல முற்பட்ட 41 பேரைக் கொண்ட படகொன்றை இலங்கைக் கடற்படை மீட்டது.
இவையனைத்தும் சட்டவிரோதமானதும், ஆபத்தானதுமான ஆட்கடத்தலை தடுத்து நிறுத்துவதற்கு அவுஸ்திரேலியா ஏனைய பிராந்திய நாடுகளுடன் மிக நெருங்கிய ஒத்துழைப்புடன் செயற்பட்டு வருவதையே வெளிப்படுத்துகின்றன.
எமது பிராந்தியத்தில் ஆட்கடத்தலை முற்றாக இல்லாதொழிக்கும் விடயத்தில் இலங்கை மிக நெருங்கிய ஒத்துழைப்பை வழங்கிவரும் பங்காளி நாடு என்பதுடன், அந்த ஒத்துழைப்பு மேலும் தொடர வேண்டும். இத்தகைய குற்றங்களைக் கட்டுப்படுத்துவதற்கு இரு நாடுகளுக்கிடையிலும் தொழில்நுட்ப ரீதியான உதவிகளும் பறிமாறப்படுகின்றன.
கடந்த ஐந்து வருடகாலமாக அவுஸ்திரேலியா செல்வதற்கு முயற்சித்த அனைத்து ஆட்கடத்தல் படகுகளின் நடவடிக்கைகளும் தோல்வியிலேயே முடிவடைந்துள்ளன என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
04/06/2019 ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தில் பதவி வகித்த அனைத்து முஸ்லிம் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர்கள் தமது பதவிகளை நேற்று ராஜினாமா செய்தனர்.
அதன்படி அவ்வாறு ராஜினாமா செய்த அமைச்சர்களின் விபரம் வருமாறு
அமைச்சரவை அமைச்சர்கள்
1. ரவூப் ஹக்கீம் - நகர திட்டமிடல்
2. ரிஷாத் பதியுதீன் - கைத்தொழில் வாணிப அலுவல்கள் நீண்டகாலமாக இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றம்
3. கபீர் ஹாசிம் - நெடுஞ்சாலைகள்
4. அப்துல் ஹலீம் முஹம்மட் ஹசீம் - தபால் சேவைகள் முஸ்லிம் சமய அலுவல்கள்
இராஜாங்க அமைச்சர்கள்
1. பைசல் காசிம் - சுகாதார போசனை சுதேச மருத்துவத்துறை
2. அமீர் அலி - விவசாய நீர்ப்பாசன கிராமிய பொருளாதார அலுவல்கள்
3. ஏ.இசட்.எம். செயிட் - சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர்
4. எச்.எம்.எம். ஹரீஸ் - மாகாண சபைகள் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர்
பிரதியமைச்சர்
1. அப்துல்லா மஹரூப் - துறைமுகங்கள்
நன்றி வீரகேசரி
முஸ்லிம் அரசியல்வாதிகள் ஏன் பதவி துறந்தனர் ; தமது அடுத்தகட்ட நகர்வு என்ன - ஹக்கீம் விளக்கம்
04/06/2019 பயங்கரவாத தாக்குதலை நடத்தியவர்களை கண்டறிவதில் தடையாக உள்ளதாக அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் சிலர் மீது முன்வைகபட்ட குற்றச்சாட்டை அடுத்து அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சகல முஸ்லிம் அமைச்சர்களும் பதவி துறந்தனர். அத்துடன் குற்றவாளிகளை கண்டறிய நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற தெரிவுக்குழு மீது நம்பிக்கை இல்லாததால் குற்றப்புலனாய்வு பிரிவு விசாரணைகளை முன்னெடுத்து ஒரு மாதகாலத்தில் உண்மைகளை கண்டறிய வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.
அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் அமைச்சர்கள் சிலர் மீது தொடர்ச்சியாக அழுத்தம் பிரயோகிக்கப்பட்டு வருகின்ற நிலையிலும் அவர்கள் பதவிவிலக வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்ற நிலையில் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் பிரதிநிதிகள் அனைவரும் நேற்று காலையில் கூடி ஆராய்ந்ததுடன் நண்பகல் அளவில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து தமது நிலைப்பாட்டினை தெரிவித்துள்ளனர்.
அதன் பின்னர் முஸ்லிம் பிரதிநிதிகள் அனைவருமாக நேற்று பிற்பகல் அலரிமாளிகையில் ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தினர்.
இது குறித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹகீம் தெரிவிக்கையில்,
தற்போதுள்ள நெருக்கடி நிலைமையை அடுத்து முஸ்லிம் பிரதிநிதிகள் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்ற நிலையில் இது குறித்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அமைச்சரவை அமைச்சர்கள் அனைவருடனும் நீண்ட கலந்துரையாடல் ஒன்றினை நடத்தினோம்.
அதனை அடுத்து அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், இராஜங்க அமைச்சர்கள் என அனைவரும் எமது பதவிகளை துறக்க தீர்மானம் எடுத்துள்ளோம்.
இந்த தீர்மானம் எவரதும் அழுத்தத்தின் காரணமகாக எடுக்கவில்லை. மாறாக தற்போதுள்ள நிலைமையை கையாள எமக்கு உள்ள வழிமுறையையே நாம் கையாண்டுள்ளோம்.
அனைத்து முஸ்லிம் பிரதிநிதிகளும் ஒன்றிணைந்தே இந்த தீர்மானத்தை எடுத்துள்ளோம். குறிப்பாக கடந்த 21 ஆம் திகதி ஈஸ்டர் தாக்குதலை அடுத்து அது குறித்த விசாரணைகளை சுயாதீனமாக நடத்த விடாது தடுக்க அமைச்சர்கள் சிலர் தடையாக உள்ளதாகவும் இந்த செயற்பாடுகளில் முஸ்லிம் பிரதிநிதிகளின் தொடர்புகள் இருப்பதாகவும் ஒரு சில அமைப்புகள் குற்றம் சுமத்தி வருவதுடன் அதனை காரணமாக வைத்துக்கொண்டு குழப்பங்களை ஏற்படுத்தும் சூழ்சிகள் இடம்பெற்று வருகின்றது.
ஆகவே இதற்கு இடமளிக்காது சுயாதீனமாக உரிய விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்ற காரணத்திற்காகவே நாம் பதவி துறக்கின்றோம்.
இன்று நாடு பாரிய அனர்த்தத்திற்கு தள்ளப்படும் அபாயநிலை உருவாகியுள்ளது. எமது மக்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லாத அச்ச சூழல் உருவாகி வருகின்றதை எம்மால் தெளிவாக உணரக்கூடியதாக உள்ளது.
அதேபோல் உயிர்த்த ஞாயிறு தினத்தாக்குதலில் ஈடுபட்ட எமது சமூகத்தைச் சார்ந்த நபர்களை கண்டறிந்து அவர்களுக்கு தண்டனை பெற்றுகொடுக்க சகல உதவிகளையும் ஒத்துழைப்புகளையும் நாம் பூரணமாக வழங்கியுள்ளோம்.
குறிப்பாக கூறுவதாயின் 21 ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதல் எமது சமூகத்தை சார்ந்த சிலரால் முன்னெடுக்கப்பட்டாலும் அவர்களை கண்டறிந்து அவர்களுக்கு கடுமையான தணடனையை பெற்றுகொடுக்க வேண்டும் என்பதில் எமது சமூகம் உறுதியாக இருந்தது.
அவ்வாறு இருந்தும் கூட அடிக்கடி நெருக்கடிகளை கொடுத்து இந்த நாட்டில் மிக மோசமான இனவாத கருத்துக்களை பரப்பும் சக்திகள் வெறுப்பூட்டும் பேசுக்கள் என்பவற்றை பார்த்து நாம் அச்சப்படுகின்றோம்.
இந்த அச்ச சூழலில் இருந்து நாடு விடுபட வேண்டும். இந்த நாட்டில் உள்ள சகல மக்கள் இடையில் நல்லிணக்கம் உருவாக வேண்டும். சர்வதேச ரீதியில் உள்ள நன்மதிப்பு பாதிக்கப்படக்கூடாது. அவ்வாறு இருக்கையில் எமது தரப்பில் ஒரு சிலருக்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களின் உண்மைத்தன்மை முழுமையாக கண்டறியப்பட வேண்டும். அதற்கான அவகாசத்தை வழங்குவது எமது கடமையாகும்.
இன்று மிக சிறிய, பயங்கரவாதத்துடன் தொடர்பு இல்லாத எமது மக்கள் பலர் தடுப்புக்கவளில் உள்ளனர். அவர்களுக்கான நீதி நியாயம் கிடைக்க வேண்டும் என்பதில் அவதானமாக உள்ளோம். இது குறித்து அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விசாரணைகளை முடிவுக்கு கொண்டுவந்து பயங்கரவாதத்துடன் தொடர்பில் இல்லாத சகலரையும் விடுவிக்க வேண்டும், அதேபோல் மக்களுக்கு மத்தியில் பிளவுகளை ஏற்படுத்தும் சக்திகளை இனங்கண்டு அவர்களுக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பயங்கரவாதத்தில் ஈடுபடுபவர்களை மாத்திரம் தீவிரவாதிகள் என கூறிவிட முடியாது. இன்று பயங்கரவாதத்திற்கு எதிராக பேசும் நபர்கள் கூட தீவிரவாதத்தை தூண்டும் வகையில் செயற்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு எதிராகவும் அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதேபோல் எங்களில் ஒரு சிலருக்கு எதிராக ஏதாவது குற்றச்சாட்டுக்கள் இருந்தால் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து ஒரு நிலைபாட்டுக்கு வரவேண்டும். உண்மையில் எம்மில் சிலர் குற்றவாளிகள் என்றால் அதனை நிரூபிக்க முடிந்தால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதில் எமது தரப்பில் எந்த தடையும் ஏற்படாது. இந்த நாட்டில் முஸ்லிம் மக்கள் பலிக்கடாவாக ஆக்கபடுவது தடுக்கப்பட வேண்டும். அதேபோல் இந்த நாடு வெகு விரைவில் சமாதான பாதையில் பயணிக்க வேண்டும். அதற்கான நகர்வுகளுக்கு நாம் ஒத்துழைப்புகளை வழங்க தயாராக உள்ளோம். இந்த விசாரணைகள் ஒருமாத காலத்தில் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும். தொடர்ந்தும் இந்த சந்தேக நிலைமை இருந்தால் இந்த நாட்டினை குழப்பும் சக்திகளுக்கு நாட்டில் மிகப்பெரிய இரத்தக் களரியை உருவாகும் பின்புலம் உருவாக்கிவிடும்.
அந்த அச்சம் எல்லோர் மத்தியிலும் உள்ளது. அதேபோல் இந்த விசாரணைகளை நடத்துவதில் பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னெடுக்கும் விசாரணைகள் மீது எமக்கு நம்பிக்கையில்லை. ஆகவே இந்த விசாரணையை குற்றப்புலனாய்வு பிரிவுக்கு வழங்கி உடனடியாக ஒருமாத காலத்தில் விசாரணைகளை நடத்தி உண்மைகளை கண்டறிய வேண்டும்.
ஆகவே இந்த விசாரணைகளுக்கு எமது பூரண ஒத்துழைப்புகளை வழங்கி சுயாதீனமாக ஒரு தீர்வு எட்டப்பட நாம் இடமளித்துள்ளோம். அதேபோல் அரசாங்கதின் பின்வரிசையில் இருந்து இந்த அரசாங்கத்தை பலப்படுத்தும் வேலைத்திட்டத்தை நாம் முன்னெடுப்போம். அமைச்சுப்பதவிகளை நாம் துறந்தாலும் கூட அரசாங்கத்தை கொண்டுநடத்தும் சகல ஒத்துழைப்புகளையும் வழங்குவோம் என்றார். நன்றி வீரகேசரி
03/06/2019 உயிரிழந்த முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிகளின் மகளிர் அரசியல் துறைப் பொறுப்பாளர் தமிழினியின் தாயாருக்கு தமிழ் விருட்சம் அமைப்பினரால் நிதி உதவி வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
முன்னாள் அரசியல் துறைப் பொறுப்பாளர் தமிழினியின் தாயாரான திருமதி சுப்பிரமணியம் சின்னம்மாவிற்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள நிரந்தர வீடு அமைப்பதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைக்கான நிதி வழங்குமாறு கிளிநொச்சியிலுள்ள சமூக ஆர்வலர் ஒருவரின் ஊடாக வவுனியா தமிழ் விருட்சம் அமைப்பன் தலைவர் எஸ். சந்திரகுமாருக்கு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக இன்று வவுனியாவிலுள்ள தமிழ் விருட்சம் அமைப்பின் அலுவலகத்தில் வைத்து கல் மணல், பெற்றுக்கொள்வதற்கு ஒரு தொகை நிதி உதவி வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிகளின் மகளிர் அரசியல் துறைப் பொறுப்பாளர் தமிழினி இறுதி யுத்தத்தின்போது அரச படைகளிடம் சரணடைந்து புனர் வாழ்வு பெற்று சமூகமயமாக்கப்பட்டு ஒன்றரை வருடங்களின் பின்னர் சுவாசப் பையில் ஏற்பட்ட புற்று நோயினால் பீடிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் அவரது தாயார் தற்போது அடிப்படை வசதியற்ற தற்காலிக வீட்டில் வசித்து வருகின்றார். இந்நிலையில் அரசாங்கத்தினால் தற்போது அவருக்கு வழங்கப்பட்ட நிரந்தர வீடு அமைப்பதற்கான ஆரம்ப வேலை மேற்கொள்வதற்கு ஒரு தொகை பண உதவி கோரிய நிலையில் இன்று வழங்கிவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது நன்றி வீரகேசரி
03/06/2019 கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மக்கினன் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கும் இடையிலான சந்திப்பு இன்று பாராளுமன்ற உறுப்பினரின் காரியாலயத்தில் நடைபெற்றது.
இந்நிலையில் குறித்த சந்திப்பில் தற்போது தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், தமிழர்களின் தீர்வு விடயத்தில் அரசின் அசமந்தப்போக்கு, ஏப்ரல் 21க்கு பின்னர் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும் பாராளுமன்ற உறுப்பினர் கனேடிய உயர்ஸ்தானிகருக்கு சுட்டிக்காட்டினார்.
குறித்த சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினருடன் வடக்கு மாகாண முன்னாள் கல்வி அமைச்சர் த குருகுலராஜாவும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
03/06/2019 இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று இலங்கை வந்துள்ள அவுஸ்த்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பீட்டர் டட்டன், நீர்கொழும்பு கட்டுவப்பிட்டிய புனித செபஸ்தியார் தேவாலயத்துக்கு விஜயம் செய்தார்.
இந்நிலையில் தேவாலயத்தின் அபிவிருத்தி பணிகளை பார்வையிட்ட அவர் தேவாலய நிர்வாகத்தினருடனும் அங்கு கடமையிலிருந்த இராணுவ அதிகாரிகளிடமும் கலந்துரையாடினார்.
இதையடுத்து குண்டுத்தாக்குதலில் உயிர் நீத்தவர்களை நினைவுகூறி மலர் வைத்து மெளன அஞ்சலி செலுத்தினார்.
இதன் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,
குண்டு தாக்குதல்களில் பாதிக்க பட்ட தேவாலயங்கள் மிக விரைவாக திருத்தற்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதையிட்டு தாம் பெரிதும் மகிழ்ச்சி கொள்வதாகவும் அவுஸ்த்திரேலிய பிரதமர் உட்பட அரசியல் பிரதிநிதிகள் நாட்டுமக்கள் சார்பாக இலங்கையில் நடந்த துக்ககரமான சம்பவத்ததில் உயிர்நீத்த, காயமடைந்த குடும்பங்களுக்கு அனுதாபங்களை தெரிவித்து கொள்வதாகவும் தெரிவித்த அவர்,
இலங்கை அரசுக்கு அவுஸ்த்திரேலியா நீண்ட காலமாக நட்புறவுடன் ஆதரவாக செயற்பட்டு வருகின்றது என்றும், இனி வரும் காலங்களிலும் அவ்வாறே செயற்படும் என்றும் இலங்கையில் தற்போது பாதிக்கப்பட்டுள்ள சுற்றுலா துறையை அபிவிருத்தி செய்வதற்கு அவுஸ்த்திரேலியா பூரண ஒத்துழைப்பை வழங்குமென்றும் தெரிவித்தார். நன்றி வீரகேசரி
ஹிஸ்புல்லாவுக்கு எதிராக வழக்கு தாக்கல்
06/06/2019 முன்னாள் கிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் இவர் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்டத்தரணி இந்திரசிறி சேனாரத்ன இந்த வழக்கினை தாக்கல் செய்துள்ளார்.
நீதிபதி ஒருவருடைய இடமாற்றம் தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்தினை வெளிட்டார் எனத் தெரிவித்தே இவ்வாறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நன்றி வீரகேசரி
நெருக்கடியில் இருந்து நாடு விடுபட 'ஒரே தேசம் ஒரே குரல்" ; 6 அம்ச திட்டம்
06/06/2019 இலங்கையின் தற்போதைய நெருக்கடியில் இருந்து விடுபடவும், அனைத்து இனத்தவர்களை ஒன்றிணைக்கவும் தற்போதைய மற்றும் எதிர்கால ஆட்சியாளர்களை ஒன்றுபடுத்தவும் 'ஒரே தேசம் ஒரே குரல்" என்ற அமைப்பு 06 அம்சங்களை உள்ளடக்கிய மகஜரில் மக்களின் கையொப்பத்தினை பெறுவதற்கான செயற்பாட்டை ஆரம்பித்துள்ளதாக அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜானக ரத்னாயக்க தெரிவித்தார்.
கொழும்பு ரிலியம் ஹேட்டலில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது ஜானக ரத்னாயக்க கூறியதாவது,
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் நாட்டுமக்களுக்கு தமது தனிப்பட்ட பாதுகாப்பு , நாட்டின் பாதுகாப்பு மற்றும் நாட்டின் எதிர்காலம் பற்றிய சந்தேகம் எழுந்துள்ளது.
இந்த தாக்குதல் சம்பவம் நாட்டின் பொருளாதாரம், சுற்றுலாத்துறை மற்றும் அரசியலிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழ்நிலையை தணிப்பதற்கு அனைத்து மதகுருமார்களும் தமது பொறுப்பு வாய்ந்த செயற்பாடுகளையும் முன்னெடுத்ததுடன் எதிர்காலத்தில் நாட்டை முன்னெடுத்து செல்வதற்கான பல்வேற யோசனைகளை முன்வைத்திருந்தனர்.
இந்த சந்தர்ப்பத்தில் நாட்டில் உள்ள சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் அனைவரையும் இலங்கையர் என்ற ரீதியில் ஒன்றுபடுத்தவும் தற்போதைய, எதிர்கால ஆட்சியாளர்களை ஒன்றுபடுத்தவும் 06 அம்சக் குறிக்கோள்களை உள்ளடக்கிய மகஜரை உருவாக்கியுள்ளோம்.
01.ஜாதி, மதம், இனம் மற்றும் மொழி ஆகிய வேற்றுமைகளுக்கு அப்பால் அனைவருக்கும் பொதுவான ஒரு சட்டமுறைமையை உருவாக்கல்.
02.இலங்கையில் தற்போது காணப்படும் இன, மத, மொழியினை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளை இல்லாதொழித்து புதிய அரசியல் கலாசாரத்தை உருவாக்குதல்.
03.தேசிய பாதுகாப்பை பிரதானமாக கொண்ட பொதுவான தேசிய கொள்கையை உருவாக்குவதற்கான அரசியல் வழிமுறைகளை செயற்படுத்தல்.
04.மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அனைத்து அரசியல் வாதிகளையும் சாதாரண மனிதர்களாக பார்த்தல் மற்றும் அவர்கள் சம்பந்தமாக ஒரு பொதுவான ஒழுங்கு விதிகளை உருவாக்கல்.
05.அனைத்து இலங்கையரினதும் அடிப்படை உரிமைகள் மற்றும் சுதந்திரத்தினை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்தல்.
06.தீவிரவாதம் மற்றும் அடிப்படைவாதத்தினை முற்றாக நாட்டில் இருந்து இல்லாதொழிப்பதற்கான அவசியமான சட்டதிட்டங்களை முன்னெடுத்தல் என்ற குறிக்கோள்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இந்த குறிகோள்களை மகஜராகவும், சமூகவலைத்தளங்களின் மூலமாகவும் , பத்திரிகைகள் மூலமாகவும் மக்களுக்கு தெரிவித்து அவர்களின் கையெழுத்துடன் மக்கள் ஆணையாக அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கவுள்ளோம். இதன் முலமாக மக்கள் இந்த விடயங்களை ஏற்றுக்கொனண்டுள்ளனர் என்பதனை அரசாங்கத்திற்கு உணர்த்தி மாற்றத்தினை ஏற்படுத்தமுடியும்.
இலங்கையில் பிரச்சினைகள் காலத்திற்கு காலம் தோற்றம்பெற்று வந்துள்ள நிலையில் மீண்டும் இவ்வாறான சம்பவங்கள் உருவாகாமல் தடுக்கும் வகையிலான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். இந்தியா, சீனா, சிங்கபூர் அனைத்த இன, மத, மொழி மக்களையும் உள்ளடக்கியதான திட்டங்களை முன்னெடுத்து வளர்ச்சியடைந்துள்ளன.
ஆசியாவின் முத்து என்று அழைக்கப்படும் நம் நாட்டை உலக நாடுகள் கண்காணித்துக்கொண்டிருக்கின்றன. உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பின்னர் சுற்றுலாத்துறையானது மீண்டும் 10 ஆண்டுகள் பின்னோக்கி சென்றுள்ளது. இதன் மூலமாக பலர் தமது தொழில் வாய்ப்புக்களையும் இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. நன்றி வீரகேசரி
இலங்கைக்கான பயண அறிவுறுத்தல்களைத் தளர்த்த பிரிட்டன், கனடா
07/06/2019 உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நாட்டில் இடம்பெற்ற தொடர் குண்டுத்தாக்குதல்களை அடுத்து தமது நாட்டுப் பிரஜைகளுக்கு இலங்கை செல்வதற்கு விதித்திருந்த கடுமையான பயண எச்சரிக்கைகளை பிரிட்டன், கனடா ஆகிய நாடுகள் தளர்த்தியிருக்கின்றன.
மிக முக்கியமான சந்தர்ப்பங்கள் தவிர்ந்த ஏனைய சந்தர்ப்பங்களில் இலங்கைக்குப் பயணிப்பதை தவிர்த்துக்கொள்ளுமாறு எமது நாட்டைச் சேர்ந்த பிரயாணிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு விடுத்திருந்த பயண எச்சரிக்கையைத் தளர்த்தியிருப்பதாக பிரித்தினாய உயர்ஸ்தானிகரலாயம் தெரிவித்துள்ளது.
அதேபோன்று மிக முக்கியமான தேவையில்லை எனும் பட்சத்தில் இலங்கைக்குப் பயணிப்பதைத் தவிர்க்கும்படி கனடா தனது பிரஜைகளுக்கு விடுத்திருந்த பயண அறிவுறுத்தலை நீக்கியிருக்கிறது. எனினும் அவசரகால நிலைமை தொடர்வதுடன், பயங்கரவாதத்தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படும் வாய்ப்புக்களும் இருப்பதால் இலங்கைக்கு வருகைதரும் கனேடிய பிரஜைகள் உயர் முன்னெடுச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும் என்று கனடா தொடர்ந்தும் அறிவுறுத்தியுள்ளது. நன்றி வீரகேசரி
இலங்கைக்கு உதவும் 20 அவுஸ்திரேலிய புலனாய்வு அதிகாரிகள்
07/06/2019 ஈஸ்டர் ஞாயிறு தீவிரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்கு உதவுவதற்காக அவுஸ்திரேலியா 20 புலனாய்வு நிபுணர்களை இலங்கைக்கு அனுப்பியிருப்பதாக, அந்த நாட்டின் உள்துறை அமைச்சர் பீற்றர் டட்டன் தெரிவித்தார்.
இலங்கைக்கு பயணம் மேற்கொண்டிருந்த அவர், செவ்வாய்க்கிழமை கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பின்போதே இந்த தகவலை வெளியிட்டார்.
”தீவிரவாத தாக்குதல்கள் குறித்த விசாரணையில் ஈடுபட்டுள்ள ஸ்ரீலங்கா புலனாய்வுக் குழுக்களுக்கு உதவுவதற்காக அவுஸ்திரேலியா 20இற்கும் அதிகமான புலனாய்வு அதிகாரிகளைக்கொண்ட குழுவொன்றை இங்கு அனுப்பியுள்ளது.
அவர்கள் இப்போதும், இலங்கை அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றி வருகின்றனர். குறிப்பாக தடயவியல் பக்கத்தில் அவுஸ்திரேலிய அதிகாரிகள் உதவி வருகின்றனர்.
மிகவிரைவாக இலங்கை அரசாங்கத்துக்கு இந்த உதவியை வழங்கினோம். அவுஸ்திரேலிய காவல்துறையின் ஊடாக, கொழும்பில் உள்ள அவுஸ்திரேலிய தூதரகம் இதற்கான பணிகளை ஒருங்கிணைக்கிறது.
இரண்டு நாடுகளுக்குமிடையில் புலனாய்வுத் தகவல்களைப் பகிர்ந்து கொள்ளவும் நாங்கள் தயாராக இருக்கிறோம்” என்றும் அவர் தெரிவித்துள்ளார். நன்றி வீரகேசரி
பதவி விலகிய முஸ்லிம் அமைச்சர்களின் அமைச்சுப்பொறுப்புகளுக்கு பதில் அமைச்சர்கள் நியமனம்
10/06/2019 கடந்த சில தினங்களுக்கு முன்னர் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது அமைச்சுப்பொறுப்புக்களில் இருந்து இராஜினாமா செய்த நிலையில் குறித்த சில அமைச்சுக்களுக்கு இன்று பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டனர்.
அந்தவகையில், புதிய பதில் அமைச்சர்கள் மூவர் இன்று ஜனாதிபதி முன்னிலையில், ஜனாதிபதி மாளிகையில் அமைச்சுப் பொறுப்புக்களை பொற்றுக்கொண்டனர்.
நகர திட்டமிடல், நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர் லக்கி ஜயவர்த்தன ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் இன்று (10) நகர திட்டமிடல், நீர் வழங்கல், உயர்கல்வி பதில் கடமைபுரியும் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேநேரம் கைத்தொழில், வர்த்தக அலுவல்கள் பிரதியமைச்சர் புத்திக பத்திரன, கைத்தொழில், வர்த்தக அலுவல்கள், நீண்டகாலம் இடம்பெயர்ந்தவர்களை மீள்குடியேற்றுதல், கூட்டுறவு அபிவிருத்தி, தொழிற்பயிற்சி, திறன் விருத்தி பதில் கடமை புரியும் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பெற்றோலிய வள அபிவிருத்தி பிரதியமைச்சர் அனோமா கமகே, நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி, பெற்றோலிய வள அபிவிருத்தி பதில்கடமை புரியும் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவ் அமைச்சர்கள் இன்று (10) முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்தனர். நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment