"நானே நானா" ஈழத்துக் கவிஞர் நசீமாவின் புத்தக அணிந்துரை - வித்யாசாகர்!

.
இதோ, அவள் எழுதிடாத அந்நாட்கள்..

வ்வுலகம் எத்தனையோ மனிதர்களை தலையில் தாங்கிக்கொண்டுதான் இயங்கிக்கொண்டிருக்கிறது. என்றாலும், இந்த பூமிப்பந்தின்மேல் மலரும் எண்ணற்ற பூக்கள் அன்றன்றே உதிர்கின்றன. பல வண்ணத்துப்பூச்சிகள் சிறகின் வண்ணம் சிதறி உடைகிறது. பல வண்ணமயில்கள் காலுடைந்து ஆடாமல் அடங்கி நிற்கின்றன. பல குயில்கள் கூவாமலும், மைனாக்களும் சிட்டுக்குருவிகளும் பறக்கஇல்லாது விடியும் விடிகாலையும் அன்றாட வாழ்வில் நிகழ்ந்துக்கொண்டு தான் இருக்கிறது. அப்படியொரு பெண்ணின் மனதொடிந்த பொழுதில் சூரியன் அதே தனது மஞ்சள் வானத்தை விரித்துக்கொண்டு உதித்த பல நாட்களின் கண்ணீர் கதையிது.
மனதை இரத்தம் கசியவைக்கும் தாய்மை கதறும் வரிகள் ஒவ்வொன்றும். ஒரு சுயவரலாற்றை யாருடைய கதையினைப்போலவோ எழுதியிருக்கிறார் பேரன்பு சகோதரி திருமதி நசீமா அவர்கள் என்றே எண்ணத்தோன்றுகிறது. எங்கெங்கெல்லாம் நின்று யாருக்கும் தெரியாமல் அழுதிருப்பாரோ, எத்தனை இரவுகளில் தூக்கத்தை தொலைத்துவிட்டு தனது நனைந்த தலையணையோடு அழுது புலம்பியிருப்பாரோ, இன்னும் எந்த பிறப்பில் இந்தக் கதையின் நாயாகி "திவ்யா" தன் வாழ்வை முழுதாய் கண்ணீரற்று வாழ்ந்து தீர்ப்பாளோ என்றெல்லாம் மனது கிடந்து தவிக்கிறது. கனக்கிறது.
ஒரு பெண் எத்தகைய மகத்தானவள். ஒரு பெண் எத்தனை இடர்களை, வதைகளைக் கடந்து உயிர்வாழ்கிறாள். ஒரு பெண்ணின் மனதுள் எத்தனைப்பேருக்கான ஏக்கங்கள் கொட்டித் தீர்க்க இயலாமல் நிரம்பிக்கிடக்கின்றனவோ என்றெல்லாம் மனது கதைநாயகியை எண்ணி பாடாய் படுகிறது.



மொத்தத்தில், இந்த உலகம் தாய்மையை மறந்து வருகிறது. தோழிகளை சகோதரிகளை தானறிந்த விதத்தில் மட்டுமே மதித்தும் போற்றியும்கொள்கிறது. அறிதல் என்பதை கடந்தும் பெண் என்பவள் போற்றப்பட வேண்டியவள், மதிக்கப்படவேண்டியவள் என்பதை நாம் நமது பிள்ளைகளுக்கு நன்கு சொல்லிச் சொல்லி வளர்க்கவேண்டும்.
ஒரு மரம் கண்டால்; அது காய்த்திருப்பது கண்டால்; பூத்திருப்பது கண்டால், உடனே வாஞ்சையோடு சென்று பறித்துக்கொள்கிறோம். இந்த பிரபஞ்சமோ அல்லது மரங்களோ அதற்குவேண்டி நம்மிடம் தனியுரிமையை கோரி நிற்பதில்லை. அதுபோல் தான் நாமும் எங்கெல்லாம் ஒரு மலர் போல, நதி போல, தாய் போல, பெண்களை காண்கிறோமோ; அங்கெல்லாம் அவர்களையும் அவ்வாறே எதன் பொருட்டும் எந்தவொரு உரிமைகளையும் எதிர்பாராமல் நாடாமல் நேரிடையே தாய்மையோடு மதித்திடல் வேண்டும்.
பெண் தான் நமக்கு மூலம். பெண் தான் நமக்கு ஆதி. தாய் தான் நமக்கு வேர். வேரினை மதிக்காது பூக்களை பறிப்பதோ பழங்களை கொய்வதோ அறமற்ற செயலென்று நாம் நமது குழந்தைகளுக்கு சொல்லித்தரவேண்டும். அங்ஙனம் ஆண்களை மதிக்க பெண்களோடும் பெண்களை மதிக்க ஆண்களோடும் சொல்லி சொல்லி வளர்ப்பதன் மூலம் இக்கதை நாயகியைப்போன்ற பல திவ்யாக்களின் கண்ணீரை நம்மால் விரைந்து துடைத்திட முடியும் என்றெண்ணுகிறேன்.
நிச்சயம் இந்த படைப்பு பல பெண்களின் கண்ணீருக்கு சான்றாகவும், எங்கோ ஏதோ ஒரு யாருமற்ற வீட்டின் சன்னல்கம்பிகளைப் பிடித்துக்கொண்டு வானத்து பறவைகளை தனது பிள்ளைகளின் நினைவுகளோடு பார்த்து மனம் கனத்திற்குக்கும் ஒரு தாயின் சோகத்திற்கு சாட்சியாகவும் இருக்கிறதென்பதை மறுப்பதற்கில்லை.
கதை முழுவதும், குவைத்தின் வாகன நெரிசல்களைக் கடந்து, ஆங்காங்கே தெரியும் பச்சைவண்ண மரங்களினூடே, பளிச்சென்று எரியும் வண்ண விளக்குகளினூடே மிக ரம்யமாக தனக்கான அழகியலோடு பயணிக்கிறது. பக்கங்களை புரட்ட புரட்ட ஆசிரியரின் ஆழ்மன வலி நம்மை உறுத்தினாலும், பல கதை மாந்தர்களின் பின்னே நம்மை அழைத்துச்செல்ல சற்றும் தவறவில்லை என்பதும் உண்மை. மிக எளிய கதை நடையும், ஆழமான கதை மனிதர்களுமாய் மனதுள் பசுமரத்தாணியைபோல் இறுக ஒட்டிக்கொள்கிறது இந்த "நானே நானா". அதற்கு வாழ்த்து.
இதுவரை, குவைத்தின் தமிழ் நிகழ்வுகள் எங்கு நடக்கிறதென்று பாராது எங்கெல்லாம் மேடைகளில் கலைநிகழ்ச்சிகள் அரங்கேறி நிற்கிறதோ அங்கெல்லாம் மொழி குறித்தும், மதம் குறித்தும், இனம் குறித்தும் பாகுபாடற்று அவைகளின் நினைவுகளை காலத்துள் பதுக்கிவைக்கும் இனிய சகோதரத்துவம் மிக்க புகைப்பட கலைஞராக வளையவந்த எங்களின் நசீமா சகோதரி பிற்காலத்தில் மேடைதோறும் பல கவிதைகளை வாசித்து வசியம் மிக்க ஒரு கவிஞராக பரிணமித்திருந்தார். இப்போதோ இந்த கனம்மிகுந்த கதையின் வழியே தன்னையொரு நல்ல எழுத்தாளராகவும் அறிமுகப்படுத்திக் கொண்டார்.
என்றாலும் ஏதோ எழுதுகிறேன் என்றில்லாது, நல்லதொரு கைதேர்ந்த எழுத்தாளரின் கனிவான நடை இவரிடம் இருப்பதையெண்ணி வாழ்த்தி மகிழ்கிறேன். இன்னும் பல அரிய படைப்புக்களை இவர் வெளிக்கொணர்ந்து தமிழ்கூறும் நல்லுலகில் மிகச் சிறந்ததொரு வாழுங்கலைஞராகவும், கைத்தேர்ந்த படைப்பாளியாகவும் எல்லோராலும் அறியப்பட்டு பல்லாண்டு பல்லாண்டு சிறந்து வாழ வாழ்த்துவதோடு, மிகப் பேரன்புடன் விடைகொள்கிறேன்.
வணக்கத்துடன்..

No comments: