பயணியின் பார்வையில் - அங்கம் 03 - முருகபூபதி

.


மயில்வாகனத்தில்  பவனிவந்த  மயில்வாகனனார்
" நினைவு நல்லது வேண்டும் - நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்-
கனவு மெய்ப்பட வேண்டும் - கைவசமாவது விரைவில் வேண்டும் "
                                                                 மகாகவி பாரதி
     
                                                                                       
தமிழர்கள் புதிதாக குடியேறும் எந்தவொரு தேசத்திலும் முதலில் தங்களுக்கென மதம்சார்ந்த வழிபாட்டிடங்களை உருவாக்குவார்கள். அதன்பின்னர் ஒன்றுகூடுவதற்காக ஒரு சங்கம் அமைப்பார்கள். கோயில்கள் பெருகும். அமைப்புகள் உருவாகும். வர்த்தக நிலையங்கள் தோன்றும்.
தமிழ்நாட்டில் இருக்கும்  சாதிச்சங்கங்கள் போன்று, ஊர்ச்சங்கங்கள் மலரும்.  பழையமாணவர் மன்றங்கள் உதயமாகும். கலை, இலக்கிய சங்கங்கள் துளிர்க்கும். அவற்றின் நிகழ்ச்சிகள் வருடாந்தம் நடக்கும்.
மக்களின் பெருக்கத்திற்கு ஏற்பவும் அவர்களின் கருத்துக்களுக்கு ஏற்றவாறும் சங்கங்கள், கோயில்கள், அமைப்புகள் உருவாகிக்கொண்டுதானிருக்கும்.
பனிக்குள் நெருப்பாக அன்றாடம் இயங்கிவரும் பிரான்ஸ் வாழ் தமிழ் மக்களும் இதற்கு விதிவிலக்கு அல்ல. அங்கு வாழ்ந்துவரும் வடபுலத்தைச்சேர்ந்த மக்கள் மத்தியில் வட்டுக்கோட்டை, சித்தங்கேணி ஊர்ச்சங்கங்களும் உருவாகி பல சமய பொதுப்பணிகள் பிரான்ஸிலும் அவர்களின் ஊர்களிலும் தொடருகின்றன.
அவர்களின் பேராதரவு பின்னணியில்தான் புலவர்மணி பண்டிதர் .மயில்வாகனனாரின் நூற்றாண்டுவிழா வெகுகோலாகலமாக நடந்தது.
எனது பாரிஸிற்கான  பயணமும்  புலவர்மணி பண்டிதர் .மயில்வாகனனாரின் நூற்றாண்டு விழாவுக்கானது என்பதை முதல் அங்கங்களில் குறிப்பிட்டுள்ளேன்.  பண்டிதர் பன்னூலாசிரியர். இவர் குறித்து யாழ். பல்கலைக்கழக முன்னாள் மாணவியும் தற்போது யாழ். அராலி சரஸ்வதி வித்தியாலய ஆசிரியையுமான லயந்தினி பகீரதன், 2014 ஆம் ஆண்டில் ஆய்வுசெய்துள்ளார்.
பண்டிதர் எங்கள் ஊரில் எனது முதல் தமிழ் ஆசான் என்பதுடன் என்னையும் தனது பிள்ளைகளில் ஒருவனாக நேசித்ததும்தான்   அவர் மீதான மதிப்புக்கு முக்கிய காரணம். ஆனால், அவர் தான் பிறந்து வாழ்ந்து சமய சமூக தமிழ்ப்பணிகள் புரிந்த பிரதேசத்தில் பொக்கிஷமாகத்திகழ்ந்திருப்பவர்.
அன்றைய விழாவில் வெளியிடப்பட்ட பண்டிதர் நூற்றாண்டு மலரில் இடம்பெற்றுள்ள   லயந்தினி பகீரதனின் கட்டுரையிலிருந்து சில பகுதிகளை இங்கு சமர்ப்பிக்கின்றேன்.
" ஈழவள நாட்டில் சிகரமாகவும் தமிழரின் தாயகமாகவும் விளங்குகின்ற திருநகரம் யாழ்ப்பாணம்.  இந்நகரின் மேற்குப் பக்கமாக வலிகாமம் மேற்குப் பிரதேசத்தில் தனித்துவம் மிக்க இடமாகத் திகழும் வட்டுக்கோட்டை என்னும் பதியிலே சிந்துபுரம் என்னும் கிராமத்தில் கதிரேசன் வள்ளியம்மையார் தம்பதிகளின் இளைய மகனாக 1919 ஆம் ஆண்டு தை மாதம் இருபத்தைந்தாம் திகதி (1919.01.25) பண்டிதர் மயில்வாகனனார் பிறந்தார்.
கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கிய இவர், பலதரப்பட்ட ஆளுமையாளர்களிடம் கல்வி கற்றார். இவர் இயல்பாகவே எல்லோரையும் முகமலர்ச்சியுடன் வரவேற்று அன்பாகவும் பண்பாகவும் பழகி மற்றவர்களின் நிலையை உணர்ந்து தானாகவே முன்வந்து வேண்டிய உதவிகளைத் தன் வல்லமைக்கு ஏற்றவாறு செய்பவர். இலங்கையில் பல பாகங்களில் இவர் பல்வேறு அனுபவங்களைப் பெற்றவர். நல்லது செய்தல் அற்றீராயினும் அல்லது செய்தல் ஓம்புமின் என்று அடிக்கடி கூறுவார் என இவருடன் பழகியவர்கள் குறிப்பிடுவார்கள்.
மேலும் பண்டிதர் பற்றி பண்டிதர் பொன். பாக்கியம் அவர்கள் குறிப்பிடுகையில், “அகத்தியரைப் போன்ற சிறிய உருவம், அட்சரங்களைத் தெளிவுபட உச்சரிக்கும் பேச்சு, தமிழ் மரபு நிலையினின்றும் வழுவக்கூடாது என்ற கண்டிப்பான நோக்கு, எடுத்த கருமத்தைத் தொடுத்து முடிக்க வேண்டுமென்னும் மனவுறுதி, யாரிடமும் மண்டியிடக்கூடாது என்ற தன்மான உணர்வு இவை நிரம்பியவர்தான் பண்டிதர் மயில்வாகனனார்.” என அழகாக பண்டிதரின் தனித்துவங்களைப் பதிவுசெய்துள்ளார்.
இவரது எழுத்துக்கள் சுத்த செந்தமிழாலானவை. ஆசிரியர் மற்றும் அதிபர் பணிக்காகப் பல ஆண்டுகள் தென்னிலங்கையில் வாழ்ந்தவர். ஆசிரியப்பணி புரிந்து பல மாணாக்கர்களை வாழ்க்கையில் முன்னேற்றம் அடையச் செய்தவர். ஆழ்ந்த ஆராய்ச்சித் திறனுடையர். இவர் தென்னிலங்கையை விட்டு ஊரோடு வந்து சில ஆண்டுகளின் பின் சைவ ஆசாரங்கள் தவறாதவராக வாழ்ந்து பல சமயப் பிரபந்தங்களை எழுதியதோடு சிறுவர்களுக்கான செந்தமிழ் கட்டுரைகள் மற்றும் சில நூல்களுக்கும் உரை எழுதியுள்ளார். சஞ்சீவியில் சிகண்டியர் என்ற பெயரில் பல கட்டுரைகளை எழுதி வந்தார்.


இலக்கண இலக்கிய அறிவை உயிர்ப்புடன் நிலைநாட்டுதல் ஒன்றே எல்லா உலகும் பெறும் என்று பண்டிதர் கொண்டிருந்த உறுதியை அவரது கற்பித்தல் பணிகள் உணர்த்தி நிற்கின்றன. தாம் பணியாற்றிய பெரும்பாலான நகரங்களில் செந்தமிழ்க் கழகங்கள் கூடி தமிழ் இலக்கண இலக்கியங்களை இளைஞர்களுக்கும், ஆர்வலர்களுக்கும் இனிது ஊட்டினார்.
 இவர் எழுதியிருக்கும் விசுவேசர் புராணம் யாழ்ப்பாணத்தில் தலபுராணங்களினூடாக வரலாற்று நிகழ்வுகளைப் பதிவு செய்துள்ளமையானது மிகவும் உன்னதமான செயற்பாடாகும். ஏனெனில் தமிழர்களின் வரலாறுகள் அழிக்கப்பட்டும் சிதைக்கப்பட்டும் உருமாற்றம் செய்யப்பட்டும் வருகின்ற வேளையில்,  இவரது படைப்புக்கள் தமிழர்களின் இருப்பை நிலைநாட்டும் சான்றாதாரங்களாகத் திகழ்கின்றன. யாழ்ப்பாணத்தை ஆண்ட மன்னர்களின் சிறப்பு குறிப்பாகச் செகராசசேகரன், பரராசசேகரன், சங்கிலி மன்னன் ஆகியோரின் ஆட்சி சிறப்புக்கள் அழகாகச் சித்திரிக்கப்பட்டுள்ளன. ஐயனார் புராணத்தில் யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்ட நூலகம் யமுனா ஏரி போன்றவற்றின் உருவாக்கம் பதிவு செய்யப்பட்டுள்ளன.
ஆதிக்குடிகளான இயக்கர், நாகரின் செயற்பாடு, இந்திய உபகண்டத்திலிருந்து இலங்கை கடல்கோளால் பிரிவுபட்டுத் தனித்தீவாகியமை போன்ற விடயங்களும் போர்த்துக்கே, ஒல்லாந்தர், ஆங்கிலேயரின் வருகை,  இதனால் ஏற்பட்ட விளைவுகள் குறிப்பாக சைவமக்கள் எதிர் நோக்கிய இன்னல்கள், ஆலயங்களின் அழிவு, ஆறுமுகநாவலரின் எழுச்சி போன்ற பல விடயங்களைப் பதிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. விசுவேசர் புராணத்தின் சிறப்பினைஈழத்து மரபுவழித் தமிழ்ப் புலமை பற்றி ஆராய்வோர் பண்டிதர் அவர்களின் விசுவேசர் புராணத்தைக் குறிப்பிடாமல் ஆய்வு செய்ய முடியாது.” எனப் பேராசிரியர் எஸ்.சிவலிங்கராஜா அவர்கள் சுட்டியுள்ளமை இங்கு நோக்கத்தக்கது."
-----
பாரிஸில் நடந்த நூற்றாண்டு விழாவுக்கு பலர் வெளிநாடுகளிலிருந்து வந்திருந்தாலும், அவர்களில் இலங்கையிலிருந்து வந்திருந்த  பேராசிரியர் சிவலிங்கராஜா,  லண்டனிலிருந்து வந்திருந்த பேராசிரியர் பாலசுகுமார் ஆகியோர் மாத்திரமே எனக்கு நன்கு தெரிந்தவர்கள். இவர்களையும் அன்றைய தினம் நீண்ட இடைவெளிக்குப்பின்னர்தான் பார்க்கின்றேன். பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோ? என்பார்கள். அன்று விழா நிகழ்ச்சிகள் தொடங்கும்வரையில் பேசிக்கொண்டிருந்தோம்.

தமிழறிஞரான சிவலிங்கராஜா, வடபுலத்தில் கரவெட்டியைச்சேர்ந்தவர். வடமராட்சியின் வரம் என போற்றப்படும் பண்டிதர் க. வீரகத்தியின் மாணாக்கர். பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள் வித்தியானந்தன், கைலாசபதி, சிவத்தம்பி, சண்முகதாஸ் ஆகியோரின் மாணவர்.


 வித்துவ சிரோமணி கணேசையரின் வாழ்வும் பணியும், சி. வை. தாமோதரம்பிள்ளை வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கம், தமிழியல் கட்டுரைகள், ஈழத்து இலக்கிய செந்நெறி, யாழ்ப்பாணத்து வாழ்வியல் கோலங்கள், யாழ்ப்பாணத்து தமிழ் உரை மரபு, 19 ஆம் நூற்றாண்டில் யாழ்ப்பாணத்துத் தமிழ் கல்வி  முதலான ஆய்வு நூல்களை எழுதியிருப்பவர்.
ஏற்கனவே சில நாடுகளில் நடந்த தமிழியல் ஆய்வு மாநாடுகளிலும் கலந்துகொண்டவர். இறுதியாக கொழும்பில் 2011 இல் நாம் நடத்திய மாநாட்டின் பின்னர்,  அன்றுதான் அவரை பிரான்ஸில் மீண்டும் சந்திக்கின்றேன்.

பேராசிரியர் பாலசுகுமார், திருகோணமலை மூதூர் சேனையூரைச்சேர்ந்தவர். யாழ்ப்பாணம் பல்கலைக்கழக பட்டதாரியான இவர், ஆசிரியராகவும் அதிபராகவும் கடமையாற்றி, கிழக்கு பல்கலைக்கழகத்தின் நுண்கலைத்துறை விரிவுரையாளராக, கலைப்பீடாதிபதியாக, பதில் உபவேந்தராக பணியாற்றி தனது ஆளுமையை வெளிப்படுத்தியவர்.
தனிப்பட்ட வாழ்விலும், கல்வி சார்ந்த பொதுவாழ்விலும் சோதனைகள், வேதனைகளை சந்தித்தவர். செல்வக்குழந்தை அநாமிகாவை , 2004 இல் சுநாமி கடல்கோள் அநர்த்தத்தில் பறிகொடுத்தவர். இன்றும் அவள் நினைவாகவே ஒவ்வொரு தருணத்தையும் கடந்துகொண்டிருப்பவர். அநாமிகா பற்றி சுஜாதாவும் ஒரு சிறுகதை எழுதியிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தகுந்தது.
பாலசுகுமார், தனது மகள் நினைவாக எழுதியிருந்த " ஒரு தேவதையின் சிறகசைப்பு " என்ற நூலை அன்றைய தினம் எனக்குத்தந்தார். கடந்த 2008 ஆம் ஆண்டு லண்டனில் நடந்த ஒரு இலக்கியசந்திப்பிலும் இவரை சந்தித்துவிட்டு வந்து, கொழும்பு தினக்குரலில் வட்டத்துக்கு வெளியே என்ற தலைப்பில் நான் எழுதிய தொடரிலும் எழுதியிருக்கின்றேன்.
அநாமிகா இன்றும் அவரது நினைவிலும் இலக்கியபதிகைகளிலும் தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறாள். மட்டக்களப்பு மகுடம் கலை இலக்கிய இதழ் வெளியீடாக ஒரு தேவதையின் சிறகசைப்பு வரவாகியுள்ளது.
பண்டிதரின் நூற்றாண்டு விழா நடந்த மண்டபம் பெரும் திரளான மக்களினால் திருவிழாக்கோலம்போன்று களை கட்டியிருந்தது. அன்னாரின் உருவப்படத்தை ஒரு பெரிய மயில்வாகனத்தில் வைத்து ஊர்வலமாக எடுத்துவந்தார்கள்.


தப்பாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம் முன்தொடர நாம் பின்தொடர்ந்தோம். அந்தக்காட்சி பரவசமூட்டியது. இலங்கையின் வடபுலத்தில் எங்கோ ஒரு மூலையில் நூறு ஆண்டுகளுக்கு முன்னர் பிறந்த ஒருவருக்கு  பாரிஸ் மாநகரில் இத்தகைய கொண்டாட்டம் நடப்பதை நேரில் கண்டு வியந்தேன்.
அவர் பிறந்து வாழ்ந்து பணிசெய்த சொந்த ஊரில் அதனை நடத்தவாய்ப்பு வசதிகள்  இருந்தும், வெளிநாட்டில் அவரது சந்ததியினரும் சொந்த பந்தங்களும்  முன்னின்று நடத்தியிருக்கிறார்கள்.
அதற்கான எண்ணக்கரு எவ்வாறு தோன்றுகிறது? என்பது ஆராயப்படவேண்டியது.
200 ஆண்டுகால பழைமை வாய்ந்த யாழ்ப்பாணம் தெல்லிப்பழை யூனியன் கல்லூரியின் வரலாறு பேசும் தங்கத்தாரகை வெளியீட்டுக்கு மூலகாரணமாக விளங்கியவர் கனடாவில் வதியும் அக்கல்லூரியின் முன்னாள் அதிபர் திரு. கதிர் பாலசுந்தரம். அதன் வெளியீட்டுவிழாக்கள்  தமிழர் புலம்பெயர்ந்த பல நாடுகளில் வெகு சிறப்பாக நடந்தேறியிருக்கின்றன.
வெளிநாடுகளில் இயங்கும் இக்கல்லூரியின் பழைய மாணவர் சங்கங்கள் இந்தப்பணியை முன்னெடுத்து,  இலங்கைக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்தன. அதுபோன்று வட்டுக்கோட்டை சிந்துபுரம்  நகர் பண்டிதர் மயில்வாகனனார் அவர்களின் நூற்றாண்டு விழாவையும் பிரான்ஸ் வாழ் வட்டுக்கோட்டை சிந்துபுரம் நகர மக்கள் முன்னெடுத்து, நூற்றாண்டு மலரும் வெளியிட்டுள்ளனர்.
இலங்கையில் நீடித்தபோர் முடிந்து பத்து ஆண்டுகளாகிவிட்டன. எனினும் வடபுலத்தில் தமிழ் சமூகத்திற்காக வாழ்ந்த பெருந்தகைகள் குறித்து  நினைவு விழாக்களை நடத்துவதற்கான காலம் இன்னமும் கனியவில்லையா? இத்தகைய நினைவு நிகழ்வுகள் வெறுமனே அந்தியேட்டி கிரியைகள் அல்ல!
சமகால இளம் தலைமுறைக்கு நினைவுபடுத்தவேண்டிய வரலாற்றுக்கடமை.
ஆனால், ஒன்றுமாத்திரம் உண்மை. அதாவது போருக்குப்பின்னர், வடபுலத்தில் பத்திற்கும் மேற்பட்ட தமிழ் அரசியல் கட்சிகள் தோன்றியிருக்கின்றன! அவற்றின் தலைவர்கள் நடத்தும் பட்டிமன்றங்கள் நாளாந்தம் ஊடகங்களில் தலைப்புச்செய்தியாகியிருக்கின்றன!
பாரிஸில் நடந்த பண்டிதர் நூற்றாண்டில்,  ஆறாம்திணை வாழ் தமிழர்களின் அயராத உழைப்பையும் அவர்களின் மத்தியிலிருந்து வெளிப்படும் கலை, இலக்கிய ஆளுமைப்பண்புகள்  குறித்தும், விபரித்து எனது உரையை நிகழ்த்தினேன்.
பேராசிரியர்கள் சிவலிங்கராஜா, பாலசுகுமார் ஆகியோர் உட்பட சிலர் உரையாற்றினார்கள். பண்டிதர் விபரணப்படக்காட்சி, இணையத்தளம்அறிமுகம்,   இன்பத்தமிழ் பாடல்கள் இறுவட்டு வெளியீடு  குழந்தைகளுக்கான சித்திரக்கதைக்காணோளி, ழகரம் செயலி அறிமுகம் முதலான நிகழ்ச்சிகளும் இவ்விழாவில் குறிப்பிடத்தகுந்தன.
எனது பயணத்தில் இறுதியாக இலங்கை வரும்போது பண்டிதருக்காக எங்கள் ஊரிலும் ஒரு விழா எடுக்கவேண்டும் என்ற எண்ணக்கருவை அன்றைய பாரிஸ் விழா எனது மனதில் விதைத்தது.
(தொடரும்) 


No comments: