இலங்கைச் செய்திகள்


கிளிநொச்சியில் வாள்வெட்டு தாக்குதல்: நான்கு பேர் வைத்தியசாலையில்

ஆவா குழுவை சேர்ந்தவர்கள் என்ற சந்தேகத்தில் 8 பேர் யாழில் கைது


கிளிநொச்சியில் வாள்வெட்டு தாக்குதல்: நான்கு பேர் வைத்தியசாலையில்


16/04/2019 கிளிநொச்சி கல்லாறுப்பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற வாள் வெட்டுச்சம்பவத்தில் நான்கு பேர் காயமடைந்து கிளிநொச்சி பொதுவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.கிளிநொச்சி கல்லாறுப்பகுதியில் நேற்று இரவு இரண்டு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலையடுத்து,இடம்பெற்ற வாள் வெட்டுச்சம்பவத்தில் நான்குபேர் காயமடைந்துள்ளனர். 
காயமடைந்த நால்வரும் தர்மபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக கிளிநொச்சி பொதுவைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இதேவேளை இச்சம்பவம் தொடர்பில் ஒருவரை மாத்திரமே தர்மபுரம் பொலிசார் கைது செய்துள்ளதாகவும் இச்சம்பவத்தில் பொலிசார் ஏனைய சந்தேக நபர்களை கைது செய்வதில் பாரபட்சம் காட்டுவதாக தெரிவித்து பாதிக்கப்பட்டதரப்பு, பிரதிப்பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தில் தமது முறைப்பாட்டை செய்துள்ளதையடுத்து, குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.  நன்றி வீரகேசரி 

ஆவா குழுவை சேர்ந்தவர்கள் என்ற சந்தேகத்தில் 8 பேர் யாழில் கைது

15/04/2019 யாழ்ப்பாணம், மானிப்பாய் பகுதியில் பொலிசார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் ஆவா குழுவை சேர்ந்தவர்கள் எனும் சந்தேகத்தில் 8 இளைஞர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். 
மானிப்பாய் , உடுவில் பகுதிகளில் இன்றைய தினம் திங்கட்கிழமை அதிகாலை மானிப்பாய் பொலிசார் திடீர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர். 
அதன் போது கடந்த காலங்களில் மானிப்பாய் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் எனும் சந்தேகத்தில் , 8 பேரை மானிப்பாய் பொலிசார் கைது செய்தனர். 
கைதுசெய்யப்பட்டவர்களை மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.   நன்றி வீரகேசரி 

No comments: