உலகச் செய்திகள்


கருணாநிதி, ஜெயலலிதா மறைவுக்குப்பின்  இடம்பெறும் முதலாவது தேர்தல் -  எவ்வாறு அமையும் : ஓர் ஆய்வு

கனடாவில் தேவாலயத்திற்குள் துப்பாக்கிச்சூடு ; ஒருவர் பலி, ஒருவர் காயம்

கருணாநிதி, ஜெயலலிதா மறைவுக்குப்பின்  இடம்பெறும் முதலாவது தேர்தல் -  எவ்வாறு அமையும் : ஓர் ஆய்வு

15/04/2019 தமிழகத்தில் லோக்சபா தேர்தல் நடக்க இன்னும் இரு நாட்களே உள்ளன. தமிழகத்தை பொருத்தவரை, மிகப் பெரிய தலைவர்களாக திகழ்ந்த தி.மு.க தலைவர் கருணாநிதி, அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஆகியோரின் மறைவிற்கு பிறகு நடக்கவுள்ள முதல் தேர்தல் இது.இந்நிலையில், மத்தியில் அடுத்து எந்தக் கட்சி ஆட்சி அமைக்கும் என்பதை தமிழகம் தீர்மானிக்க உள்ளது. தமிழக அரசியல் நிலை மற்றும் லோக்சபா தேர்தல் நிலவரங்களை வைத்து, தமிழகத்தில் வரும் லோக்சபா தேர்தலில் வாக்குப்பதிவு எப்படி இருக்கும் என்பது குறித்து என்.டி.டிவி-யின் குழு ஆய்வு ஒன்றை நடத்தி உள்ளது.
அதன் விவரம் வருமாறு; 
இந்தியாவில் 1952 முதல் 2014 வரை அதிக வாக்குப்பதிவு நடந்து, தனிஒரு கட்சிக்கு அதிக இடங்கள் கிடைத்த மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. (தமிழகம் - 94 சதவீதம், பீகார் - 88 சதவீதம், மத்திய பிரதேசம் - 88 சதவீதம், கர்நாடகா - 81 சதவீதம், மகாராஷ்டிரா - 81சதவீதம்).
அதுபோல், கட்சிக்கு அதிக வாக்கு எண்ணிக்கை வித்தியாசத்தில் வெற்றியை பெற்றுத் தந்த ‘டாப் 5’ மாநிலங்களிலும் தமிழகம் இடம்பிடித்துள்ளது. (மகாராஷ்டிரா - 23 சதவீதம், அரியானா - 22 சதவீதம், கர்நாடகா - 20 சதவீதம், தமிழகம் - 20 சதவீதம், அசாம் - 19 சதவீதம்).
தமிழகத்தில், 1980 முதல் திராவிடக் கட்சிகளே ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. தேசியக் கட்சிகளான பா.ஜ.க மற்றும் காங்கிரஸுக்கு பதிவான வாக்குகள் சரிவடைந்து வந்துள்ளன. 
1980 மற்றும் 1990களில் 75 சதவீதம் வாக்குகள் தி.மு.க மற்றும் அ.தி.மு.க-விற்கே பதிவாகி உள்ளது. காங்கிரஸின் வாக்கு சதவீதம் 20ல் இருந்து 4 ஆக சரிந்துள்ளது. பா.ஜ.க வாக்கு சதவீதம் 2ல் இருந்து 3 ஆக அதிகரித்துள்ளது.
ஜெயலலிதா இருந்த வரை, 10 சதவீதம் பெண்கள் வாக்கிலேயே முன்னிலையில் இருந்துள்ளது அ.தி.மு.க. இதே போன்று, 2014 தேர்தலில் தி.மு.க 2 சதவீதம் ஆண்கள் வாக்கில் முன்னிலையில் இருந்தது. தென்னிந்தியாவை பொருத்தவரை, பெண்கள் வாக்கு அதிகம் பதிவாகும் மாநிலங்களில் தமிழகம்தான் முதலிடத்தில் உள்ளது.
இந்த முறை அ.தி.மு.க. பா.ஜ.க-வுடனும், தி.மு.க, காங்கிரஸுடனும் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்கின்றன. இவர்கள் தவிர, கமலின் மக்கள் நீதி மையம் கட்சி, தினகரனின் அ.ம.மு.க ஆகியவை தனித்து களம் காண்கின்றன. ரஜினி, கமல் வருகையால் அதிமுக - திமுக.,வுக்கு மாற்றாகவும், தமிழகத்தில் உள்ள அரசியல் வெற்றிடம் நிரப்பப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், இவர்களில் கமல் மட்டுமே தற்போது தேர்தலில் போட்டியிடுகிறார். அ.தி.மு.க - தி.மு.க தவிர, கமல் மற்றும் தினகரனின் கட்சிகளும் தனியாக போட்டியிடுவதால், முந்தைய தேர்தல்களை விட இந்தத் தேர்தலிலும் அதிக எண்ணிக்கையில் வாக்குப் பதிவு நடக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.  நன்றி வீரகேசரி 


கனடாவில் தேவாலயத்திற்குள் துப்பாக்கிச்சூடு ; ஒருவர் பலி, ஒருவர் காயம்

16/04/2019 கனடாவில் தேவாலயத்துக்குள் நுழைந்த இனந்தெரியாத நபர் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தவர்களை நோக்கி துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்டதில் சம்பவ இடத்திலேயே ஒருவர் பலியானார்.
கனடாவின் பிரிட்டிஸ் கொலம்பியா மாகாணத்தில் சால்மோன் ஆர்ம் நகரிலுள்ள தேவாலயமொன்றிலேயே குறித்த துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்றுள்ளது.
குறித்த தேவலாயத்தில் சிறப்பு ஆராதனை இடம்பெற்ற வேளை அங்கு ஏராளமான கிறிஸ்தவர்கள் ஒன்று கூடி பிரார்த்தனையில் ஈடுபட்டடிருந்த வேளையிலேயே துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பிரார்த்தனை இடம்பெற்றவேளை, தேவாலயத்துக்குள் நுழைந்த இனந்தெரியாத நபர், பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தவர்களை நோக்கி கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டார். 
இதில் 78 வயதான முதியவர் சம்பவ இடத்திலோய பலியானார். சம்பவத்தில் மேலுமெருவர் பாடுகாயமடைந்துள்ளார்.
இதையடுத்து, துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்ட நபர் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். ஆனால் தேவாலயத்தில் இருந்த அனைவரும் அவரை சுற்றி வளைத்து மடக்கிப்பிடித்துள்ளனர். பின்னர் பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த பொலிஸார், துப்பாக்கிதாரியை கைதுசெய்தனர்.
குறித்த தாக்குதல் சம்பவம் பயங்கரவாத தாக்குதல் இல்லை என்பதை உறுதிப்படுத்திய பொலிஸார், தாக்குதலுக்கான பின்னணி குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.   நன்றி வீரகேசரி 


No comments: