தமிழ் சினிமா - தடம் திரை விமர்சனம்

தடம்

தமிழ் சினிமாவில் ஒரு சில இயக்குனர்கள் படங்கள் என்றால் நம்பி போகலாம். அப்படி ஒரு இயக்குனர் தான் மகிழ்திருமேணி. ஆனால், அவருக்கான இடம் தமிழ் சினிமாவில் இன்னும் அழுத்தமாக கிடைக்கவில்லை, அவரின் மூலம் அருண் விஜய்க்கு தடையற தாக்கவில் கிடைத்த அங்கிகாரம், இந்த முறை மகிழ்திருமேணிக்கு தடம் படத்தில் கிடைத்ததா? பார்ப்போம்.

கதைக்களம்

அருண் விஜய் எழில், கவின் என்று இரண்டு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார், எழில் ஒரு சிவில் இன்ஜினியர். சொந்தமாக சைட் பார்க்கும் அளவிற்கு வளர்ந்துள்ளார். அதே நேரத்தில் கவின் பல திருட்டு வேலைகளை செய்து சம்பாதிப்பவர்.
ஒருநாள் எழில் மிகவும் மனவேதனையில் இருக்கின்றார், அதே நேரத்தில் கவினுக்கு ரூ 9 லட்சம் வரை பணத்தேவை ஏற்படுகின்றது. இரண்டு பேருமே ஒரு இரவு தங்களுக்கான ஒரு தேவையை நிறைவேற்ற செல்கின்றனர்.
அப்போது ஒரு பணக்கார இளைஞரை அருண் விஜய் கொலை செய்கின்றார், அடுத்தநாள் போலிஸ் இந்த கேஸை கையில் எடுக்க, இதில் அருண் விஜய் புகைப்படம் அந்த வீட்டில் இருப்பது தெரிகின்றது.
ஆனால், இரண்டு அருண் விஜய் இருப்பதால், இவர்கள் யார், இவர்களில் யார் அந்த கொலையை செய்தார்கள்? என்பதை போலிஸ் துப்பறிய ஆரம்பிக்கின்றது, அதன் பிறகு நடக்கும் விறுவிறுப்பான டுவிஸ்ட் அண்ட் டர்ன்ஸே இந்த தடம்.

படத்தை பற்றிய அலசல்

அருண் விஜய் இரண்டு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார், தோற்றத்திற்காக பெரிதும் மெனக்கெடவில்லை, கொஞ்சம் வாய்ஸ் மெதுவாக பேசினால் எழில், வேகவேகமாக பேசினால் கவின் அவ்வளவு தான் என்றாலும், எந்த ஒரு இடத்திலுமே குறை சொல்லவே முடியவில்லை.
அதிலும் இரண்டு பேரையும் விசாரிக்கும் போது அவர்கள் மாறி மாறி தங்கள் கதையை சொல்லும் இடம் மிகவும் ஈர்க்கின்றது, படத்தின் அருண் விஜய் தாண்டி நம்மை மிகவும் கவர்வது இவர்கள் கேஸை விசாரிக்கும் பெண் போலிஸாக வித்யா ப்ரதீப் தான்.
இந்த கேஸை முடித்தே ஆகவேண்டும் என்று அவர் அலைவதை கண்டு நமக்கே அட இப்ப கண்டுப்பிடித்துவிட மாட்டாரா? என்று நினைக்கவைக்கின்றது, இந்த புகழ் அனைத்து மகிழ்திருமேணிக்கே சேரும். ஆம், இரண்டாம் பாதியில் எல்லாம் யார் கொலை செய்துள்ளார் என்று அறிய சீட்டின் நுனிக்கு கொண்டு வந்துவிடுகின்றார்.
படத்தின் முதல் பாதி கதைக்குள் செல்லும் வரை கொஞ்சம் மெதுவாக சென்றாலும், கதைக்கள் சென்றவுடன் நம்மையும் திரைக்கதையுடன் அழைத்து செல்கின்றது, அதேவேளையில் இரண்டாம் பாதியில் வரும் சோனியா அகர்வால் அம்மா கதாபாத்திரம் தான் ஏதோ படத்திற்கு செட் ஆகாத பீல். அதிலும் அவர் அழும் காட்சி கொஞ்சமாது டப்பிங்கில் லிப் சிங் பாத்திருக்கலாம், மிகவும் செயற்கை. யோகி பாபு கூட படத்தில் இருக்கின்றார், அவ்வளவுதான் என்பது போல் இருக்கின்றது.
படத்தின் இசை மற்றும் ஒளிப்பதிவு ஒரு கிரைம் படத்திற்கான வேலையை சரியாக கொடுத்துள்ளனர், படத்தின் மிகப்பெரும் பலம் எடிட்டிங் தான், இரண்டு அருண் விஜய், அவர்களையும், அவர்கள் சொல்லும் கதையையும் அனைவருக்கும் புரியும் விதத்தில் கட் செய்து காட்டியுள்ளனர்.

க்ளாப்ஸ்

படத்தின் திரைக்கதை, செம்ம விறுவிறுப்பாக செல்கின்றது.
கிளைமேக்ஸ் டுவிஸ்ட், நாம் ஒன்று எதிர்ப்பார்த்து அட இது தானே என்றால் அதிலிருந்து வேறு இடத்திற்கு செல்கின்றது.
டெக்கனிக்கல் விஷயங்கள்.

பல்ப்ஸ்

படம் முடிந்து அந்த டுவிஸ்ட் மனநிலையிலேயே மக்களை செல்லவிடாமல், அதன் பிறகு வைத்த சில காட்சிகள் கொஞ்சம் தேவையில்லையோ என தோன்றுகின்றது.
மொத்தத்தில் அருண் விஜய்யும், மகிழ்திருமேணியும் தமிழ் சினிமாவில் மீண்டும் அழுத்தமான ஒரு தடத்தை பதித்துள்ளனர்.   
நன்றி  Cine Ulagam
அருண் விஜய்யின் 'தடம்' திரைப்பட புகைப்படங்கள்  (நன்றி வீரகேசரி )

No comments: