உலகச் செய்திகள்


இம்ரான் கானுக்கு தெரசா மே தொலைபேசியில் அழைப்பு!

அமெரிக்காவுடனான அணுஆயுத உடன்படிக்கையிலிருந்து விலகியது ரஷியா

எனக்கு தகுதியில்லை - பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்

இந்தியாவுக்கு வழங்கப்பட்ட அந்தஸ்தை பறிக்க முடிவு!

இந்தியாவுக்கு அமெரிக்கா வழங்கிவந்த வர்த்தக சலுகை இரத்து - ட்ரம்ப்

ஜெயலலிதாவின் மரணம் குறித்து சி.வி.சண்முகம் பரபரப்புத் தகவல்


இம்ரான் கானுக்கு தெரசா மே தொலைபேசியில் அழைப்பு!

04/03/2019 தீவிரவாதத்தினை ஒடுக்குமாறு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு இங்கிலாந்து பிரதமர் தெரசா மே தொலைபேசி அழைப்பினை மேற்கொண்டு வலியுறுத்தியுள்ளார். 

மேலும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் எல்லையில் பதற்றத்தை தணிக்கும் வகையில் இந்திய விமானி அபிநந்தனை விடுவித்ததற்கு இங்கிலாந்து பிரதமர் பாராட்டுக்களையும் தெரிவித்தார்.
அதோடு பாகிஸ்தானில் இருக்கும் அனைத்து தீவிரவாத குழுக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் குறித்தும் அவர் இதன்தபோது வலியுறுத்தினார்.  நன்றி வீரகேசரி 












அமெரிக்காவுடனான அணுஆயுத உடன்படிக்கையிலிருந்து விலகியது ரஷியா

04/03/2019 அமெரிக்காவுடன் கடந்த  1987 ஆம் ஆண்டில் செய்துகொண்ட ஏவுகணை உடன்படிக்கையிலிருந்து விலகுவதற்கான உத்தரவில் ரஷிய ஜனாதிபதி விளாடிமிர் புதின் இன்று கையொப்பமிட்டார். 
ரஷியா (முன்னாள் சோவியத் யூனியன்) - அமெரிக்கா ஆகிய இருநாடுகளும் தாங்கள் தயாரிக்கும் ஏவுகணைகளின் ஆற்றல் மற்றும் எண்ணிக்கை ஆகியவற்றை கட்டுப்பாட்டில் வைக்கும் வகையில் கடந்த 1987 அம் ஆண்டில் ஒரு உடன்படிக்கை செய்து கொண்டன.
இந்த ஒப்பந்தத்துக்கு மதிப்பளிக்காமல் ரஷியா ஏவுகணைகளை தயாரித்து வருவதாக அமெரிக்கா குற்றம்சாட்டி வருகிறது.
இந்நிலையில், ரஷியாவிடம் உள்ள அத்துமீறலான ஏவுகணைகள் அனைத்தையும் அழிக்காவிட்டால் அந்நாட்டுடன் செய்துகொண்ட உடன்படிக்கையில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடந்த ஆண்டு தெரிவித்தார்.
இந்த உடன்படிக்கைக்கான நிர்பந்தங்கள் எதற்கும் நாங்கள் கட்டுப்பட மாட்டோம். தங்களிடம் உள்ள அத்துமீறலான ஏவுகணைகள், ஏவுத்தளங்கள் மற்றும் ஏவுகணை தொடர்பான இதர தளவாடங்களை ரஷியா அழிக்காவிட்டால் அந்நாட்டுடனான ஏவுகணை உடன்படிக்கையில் இருந்து இன்னும் ஆறு மாதங்களுக்குள் அமெரிக்கா வெளியேறி விடும் என ட்ரம்ப் எச்சரித்திருந்தார்.
இந்நிலையில் அமெரிக்காவுடன் செய்துகொண்ட ஏவுகணை உடன்படிக்கையை முறித்துக் கொண்டதாக ரஷிய ஜனாதிபதி விளாடிமிர் புதின் கடந்த 2-2-2019 அன்று அறிவித்தார். 
‘எங்கள் அமெரிக்கப் பங்காளிகள் இந்த உடன்படிக்கையில் இருந்து விலகுவதாக தெரிவித்து விட்டதால் நாங்களும் இதில் எங்களது பங்களிப்பை விலக்கிக் கொள்கிறோம்’ என புதின் குறிப்பிட்டிருந்தார். 
இந்நிலையில், அமெரிக்காவுடன் 1987-ம் ஆண்டில் செய்துகொண்ட ஏவுகணை உடன்படிக்கையில் இருந்து விலகுவதற்கான உத்தரவில் ரஷிய ஜனாதிபதி விளாடிமிர் புதின் இன்று கையொப்பமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  நன்றி வீரகேசரி 











எனக்கு தகுதியில்லை - பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்

04/03/2019 அமைதிக்கான நோபல் பரிசு பெறுவதற்கான தகுதி தனக்கு இல்லை என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தனது உத்தியோகபூர்வ டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
அவர் தனது டுவிட்டரில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
‘நான் அமைதிக்கான நோபல் பரிசு பெறத் தகுதியானவன் அல்ல’ காஷ்மீர் மக்களின் விருப்பம்போல் காஷ்மீர் பிரச்சனையை தீர்த்து வைத்து அமைதிக்கும், மனித குல வளர்ச்சிக்கும் பாடுபடுபவரே இந்த பரிசுக்கு தகுதியானவர்” எனத் தெரிவித்துள்ளார்.
அண்மையில் புல்வாமா தாக்குதலில் பல இந்திய இராணுவத்தினர் கொல்லப்பட்ட நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இந்திய விமானப்படையினர் பாகிஸ்தான் பகுதிக்குள் ஊடுருவி பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தினர். 
இதன்போது இடம்பெற்ற விபத்தில் இந்திய விமானத்தை ஓட்டிச் சென்ற விமானி அபிநந்தன் பாராசூட் மூலம் கீழே குதித்து உயிர்தப்பினார். அவரை பாகிஸ்தான் இராணுவம் சிறைப்பிடித்தது. 
இந்நிலையில், குறித்த விமானியை ஜெனிவா ஒப்பந்தத்தின்படி உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று இந்தியா உட்பட பல நாடுகள் வலியுறுத்தி வந்தன.
அதன் பின்னர் அமைதி மற்றும் நல்லெண்ண அடிப்படையில் அபிநந்தனை விடுவிப்பதாக பாகிஸ்தான் பிரதமர் அறிவித்தார். அதன்படி கடந்த முதலாம் திகதி இரவு 9 மணியளவில், அபிநந்தன் இந்திய இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டார். 
இம்ரான் கானின் இந்த நடவடிக்கையால் இரு நாடுகளிடையே நிலவிய போர் பதற்றம் முடிவுக்கு வந்தது. எனவே, அவருக்கு பாகிஸ்தான் தலைவர்கள் பாராட்டு தெரிவித்தனர். மேலும், இம்ரான் கானுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என பாகிஸ்தானில் உள்ள முக்கிய அரசியல் தலைவர்கள் வேண்டுகோள் விடுத்தனர். 
இந்நிலையில், இம்ரான் கான் தனது டுவிட்டர் பக்கத்தில் இதுபற்றி கருத்து தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  நன்றி வீரகேசரி 










இந்தியாவுக்கு வழங்கப்பட்ட அந்தஸ்தை பறிக்க முடிவு!

06/03/2019 அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அறிவுரையின் பேரில் இந்தியாவுக்கு வழங்கி வரும் வர்த்தகத்துக்கான முன்னுரிமை அந்தஸ்தை பறிக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.
அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு இந்தியா 100 சதவீதம் வரை வரி விதிப்பதாகவும், இந்தியாவில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரி எதுவும் விதிக்கப்படுவது இல்லை ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், இந்தியாவுக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு வர்த்தக நாடு என்ற அந்தஸ்தை இரத்து செய்ய டிரம்ப் முடிவு செய்துள்ளார். 
அதேபோல், துருக்கிக்கு வழங்கப்பட்டு இருந்த வர்த்தக சலுகையையும் பறிக்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.   நன்றி வீரகேசரி 













இந்தியாவுக்கு அமெரிக்கா வழங்கிவந்த வர்த்தக சலுகை இரத்து - ட்ரம்ப்

05/03/2019 இந்தியாவுக்கு வழங்கி வரும் வர்த்தகத்துக்கான முன்னுரிமை அந்தஸ்தை இரத்துச் செய்ய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தீர்மானித்துள்ளார்.
கடந்த 42 ஆண்டுகளாக வழங்கிவந்த வர்த்தக சலுகையே இவ்வாறு இரத்துச் செய்யப்படவுள்ளதாக  ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அந்தவகையில், சுங்க வரிகள் எவையுமின்றி பல பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியில் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களை நிறுத்துவதற்கு ட்ரம்ப் முடிவு செய்துள்ளார்.
அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு இந்தியா மிக அதிகளவிலான வரியை விதிப்பதுடன் இந்திய சந்தைக்கான அமெரிக்காவின் நியாயமான அணுகுமுறைகளை உறுதிசெய்வதற்கு அந்நாட்டு அரசாங்கம் தவறிவிட்டதாகவும் அமெரிக்க பாராளுமன்றத்துக்கு எழுதியுள்ள கடிதத்தில் ட்ரம்ப் இதனைத் தெரிவித்துள்ளார்.  நன்றி வீரகேசரி 








ஜெயலலிதாவின் மரணம் குறித்து சி.வி.சண்முகம் பரபரப்புத் தகவல்

06/03/2019 "நீரிழிவு நோயால் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதாவுக்கு அல்வா கொடுக்கப்பட்டது. அவருக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் வைத்தியசாலை முழுவதும் இரத்தம் சிந்தியது எப்படி?" என அமைச்சர் சி.வி.சண்முகம் கேள்வி எழுப்பினார்.
கள்ளக்குறிச்சியில் அ.தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்களிடையே அவர் தெரிவித்ததாவது:
 எந்த இரட்டை இலை சின்னத்தின் மூலம் வெற்றி பெற்றோமோ, அந்த சின்னத்தை அழிப்பேன் என்பவருடன் கூட்டணி வைத்துக் கொண்டு துரோகம் இழைத்து கொண்டிருக்கிறார்கள்.
ஜெயலலிதா சாதாரணமாக இறக்கவில்லை. கிராமத்தில் படிக்காதவனைக் கேட்டால் கூட இதைச் சொல்வான். ஒருவரை சாகடிக்க விஷம் கொடுக்க வேண்டியதில்லை. வெல்லம் கொடுத்தே சாகடிக்கலாம். இது கிராமத்தவருக்கும் தெரியும். அதைத்தான் இவர்கள் செய்துள்ளனர்.
ஜெயலலிதாவுக்கு நீரிழிவு நோய்இருக்கிறது என்று தெரிந்து, வைத்தியசாலையில் சிகிச்சை எடுத்து, உயிருக்கு போராடி வரும் ஒருவருக்கு அல்வா கொடுத்திருக்கிறார்கள் என்றால் இவர்களை என்ன பண்ணலாம்? நோய் குறையாமல், முற்றி அவர்களை இயற்கையாக இறக்க வைக்க வேண்டும் என்பதுதான் அவர்களது நோக்கமாக இருந்திருக்கிறது.
இப்படித் திட்டம் போட்டே ஜெயலலிதாவை நம்மிடம்இருந்து பிரித்து விட்டார்கள்.
நன்றாக குணமாகி உடல்நிலை தேறி வரும்போது ஒருவருக்கு எப்படி மாரடைப்பு வரும்? மாரடைப்புவந்தால் எப்படி வைத்தியசாலை முழுவதும் இரத்தம் சிந்தப்பட்டிருக்கும். நாங்கள் அன்று அங்கிருந்தோம். 
சிலரை விசாரிக்க வேண்டிய முறையில் விசாரித்தால் உண்மை வெளிவரும். 'பல வாய்ப்புகள், வசதிகள், அதிகாரம் இருந்தும் அந்த அம்மாவ கொடுமையா இப்படி கொன்னுட்டாங்களே!' என அரசு உயர் பொறுப்பில் இருக்கும் ஒருவர் என்னிடம் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா ஆசி இருக்கும் வரை, தொண்டர் ஆதரவு இருக்கும் வரை அ.தி.மு.க.வை அசைக்க முடியாது என தெரிவித்துள்ளார்.    நன்றி வீரகேசரி 







No comments: