யாழிலுள்ள வீடுகளுக்கு ஆவா குழுவால் விடுக்கப்பட்ட எச்சரிக்கை
யாழ்.வீதிகளில் ஆவா வாசகம்
கொழும்பில் இளைஞர்கள் கடத்தப்பட்ட விவகாரம்- கோத்தபாயவை சிக்கவைத்தார் முன்னாள் கடற்படை தளபதி
திருக்கேதீஸ்வரத்தில் கத்தோலிக்கர்கள், அருட்தந்தையர்களை அச்சுறுத்தி துண்டுப்பிரசுரம்
திருக்கேதிஸ்வரத்தில் நடந்தது இதுதான்..: உண்மைகளை அறிக்கையாக வெளியிட்டது மறைமாவட்ட ஆயர் இல்லம்..!
திருக்கேதீஸ்வர ஆலய நுழைவாயில் வரவேற்பு வளைவு அகற்றப்பட்ட சம்பவம் ; நீதிமன்றின் அதிரடி உத்தரவு
யாழில் வாள்வெட்டு கும்பலின் பிரதான சந்தேகநபர் கைது
கிளிநொச்சிக்கு வழங்கப்பட்ட வெள்ள நிவாரணங்களுக்கு நடந்தது என்ன? பொது மக்கள் கேள்வி
யாழிலுள்ள வீடுகளுக்கு ஆவா குழுவால் விடுக்கப்பட்ட எச்சரிக்கை
06/03/2019 யாழில். வீடுகளுக்கு முன்பாக உள்ள கண்காணிப்பு (CCTV) கமராக்களை அகற்றுமாறு ஆவா பிளஸ் குழுவின் பெயரில் வீட்டு உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை கடிதங்கள் அனுப்பப்பட்டு உள்ளன.
குறித்த கடிதத்தில் , தங்கள் வீடுகளுக்கு முன்பாக உள்ள கமராக்களை தாமதிக்காமல் உடனே கழட்டவும் , அல்லது வீதியை பார்க்காது உள்ளே பூட்டவும் , நம்ம தோழர்கள் சிலர் மாட்டி இருக்கிறாங்க ஆகவே உடனடியாக மாத்தவும் , இந்த எச்சரிக்கையை மீறினால் , உங்கள் மீதும் தாக்குதல் விரைவாக நடத்தப்படும்.என குறிப்பிடப்பட்டு உள்ளது.
யாழில் நடைபெறும் வாள் வெட்டு சம்பவங்கள் தொடர்பான குற்றவாளிகளை பொலிஸார் சிசிரிவி கமரா ஆதாரங்களை கொண்டு கைது செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
யாழ்.வீதிகளில் ஆவா வாசகம்
05/03/2019 யாழ்.செம்மணி மற்றும் அதனை அண்டிய வீதிகளில் "ஆவா 001 ராஜ்ஜியம் " என கறுப்பு வர்ணத்தில் எழுதப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
யாழில்.ஆவா குழு எனும் பெயரில் இயங்கும் குழுவொன்று வாள் வெட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்து வருகின்றனர்.
இவ்வாறு வாள் வெட்டுக்களில் ஈடுபட்டு வந்தவர்கள் எனவும் ஆவா குழுவை சேர்ந்தவர்கள் எனவும் சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் பல இளைஞர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றங்களில் முற்படுத்தப்பட்டு அவர்களுக்கு எதிராக வழக்கு விசாரணைகள் நடைபெற்று வருகின்றனமை குறிப்பிடத்தக்கது நன்றி வீரகேசரி
கொழும்பில் இளைஞர்கள் கடத்தப்பட்ட விவகாரம்- கோத்தபாயவை சிக்கவைத்தார் முன்னாள் கடற்படை தளபதி
05/03/2019 பதினொரு இளைஞர்கள் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புபட்டுள்ளார் என்ற குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ள முன்னாள் கடற்படை தளபதி வசந்தகரணாகொட முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவையும் இந்த விவகாரத்தில் சிக்கவைத்துள்ளார்
வசந்தகரணாகொட தான் கைதுசெய்யப்படுவதை தவிர்ப்பதற்காக நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.
குறிப்பிட்ட மனுவில் அவர் கோத்தபாய ராஜபக்சவிற்கும் இந்த விவகாரம் குறித்து தெரியும் என குறிப்பிட்டுள்ளார்.
11 தமிழ் இளைஞர்கள் காணாமலாக்கப்பட்ட விடயம்எவ்வாறு இடம்பெற்றது என தனது மனுவில் குறிப்பிட்டுள்ள முன்னாள் கடற்படை தளபதி தன்மீதான பழியை கோத்தபாய ராஜபக்ச மீது போடுவதற்காக அவரை இந்த விவகாரத்திற்குள் இழுத்துவிட்டுள்ளார்
கொழும்பில் கடத்தப்பட்டு திருகோணமலை கடற்படை தளத்தில் சட்டவிரோதமாக தடுத்துவைக்கப்பட்டிருந்த இளைஞர்கள் விவகாரத்தின் முக்கிய சூத்திரதாரி என குற்றம்சாட்டப்படும் தனது பாதுகாப்பு அதிகாரி சம்பத் முனசிங்க குறித்து தனக்குமுறைப்பாடு கிடைத்ததாக வசந்த கரணாகொட தனது 11 பக்க ஆவணத்தில் தெரிவித்துள்ளார்.
2009 மே 23 ம் திகதி அப்போதைய பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவிடம் குறிப்பிட்ட விவகாரம் குறித்து தெரிவித்ததுடன் காவல்துறை விசாரணையை கோரினேன் என வசந்தகரணாகொட தெரிவித்துள்ளார்
எனினும் வசந்தகரணாகொடவின் செயலாளராக பணியாற்றிய சமல் பெர்ணான்டோ இளைஞர்கள் கடத்தப்பட்ட சம்பவம் குறித்து அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா சுட்டிக்காட்டியவேளை வசந்த கரணாகொட எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தனது சாட்சியத்தில் தெரிவித்துள்ளார்.
வசந்தகரணாகொட உரிய தருணத்தில் நடவடிக்கை எடுத்திருந்தால் ஐந்துபேரின் உயிர்களையாவது காப்பாற்றியிருக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார் நன்றி வீரகேசரி
திருக்கேதீஸ்வரத்தில் கத்தோலிக்கர்கள், அருட்தந்தையர்களை அச்சுறுத்தி துண்டுப்பிரசுரம்
05/03/2019 மன்னாரில் உள்ள கத்தோலிக்க அருட்தந்தையர்கள் மற்றும் கத்தோலிக்க மக்களை அச்சுரூத்தும் வகையில், திருக்கேதீஸ்வர ஆலயம் சார்ந்த பகுதிகளில் துண்டுப்பிரசுரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
நேற்று திங்கட்கிழமை இரவு மன்னார் திருக்கேதீஸ்வர மஹா சிவராத்திரியின் போது குறித்த துண்டுப்பிரசுரங்கள் வினியோகிக்கப்பட்டுள்ளது.
மன்னார் திருக்கேதிஸ்வர ஆலயத்திற்கான நுழைவு பகுதிக்கு புதிதாக வரவேற்பு வளைவு அமைப்பது தொடர்பாக கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை இந்து மக்களுக்கும்,கிறிஸ்தவ மக்களுக்கும் இடையில் முரண்பாடு இடம் பெற்றது.
இதன்போது எதிர்பாராத வகையில் சில சம்பவங்கள் இடம் பெற்றது.இந்த நிலையிலே குறித்த துண்டுப்பிரசுரம் வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த துண்டுப்பிரசுரத்தில் 'மன்னார் வாழ் மத வெறி குரோதம் பிடித்த கிறிஸ்தவ மத குருக்களும்,ஒரு சில கிறிஸ்தவ மக்களும் இலங்கை வாழ் தமிழ் மக்கள் பிரியும் நிலை ஏற்பட்டுள்ளது'.
இதற்கு சான்றாக 03-03-2019 அன்று மதியம் 02-30 மணியளவில் திருக்கேதீஸ்வர ஆலய நுழைவாயிலில் நடந்த அச்சுரூத்தல் யாவரும் அறிந்ததே.
குறிப்பு என குறிப்பிடப்பட்டு 'தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் என்பதற்கு பதிலாக' 'இரண்டு தமிழ் அமைச்சர்கள்' மன்னாரில் உள்ளனர் இவர்களும் மதம் சார்பாக உள்ளனர்.
இது தொடர்ந்து நடை பெறுமானால் உலக வாழ் இந்து தமிழ் மக்களின் நகர்வு வேறு பாதையை நோக்கி செல்லும்.
'இவ்வன்னம் கிறிஸ்தவ மதவெறியர்களால் பாதீக்கப்படும் இந்து தமிழ்கள்' என குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த துண்டுப்பிரசுரம் மன்னார் மறைமாவட்ட கத்தோழிக்க மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும்,கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. நன்றி வீரகேசரி
திருக்கேதிஸ்வரத்தில் நடந்தது இதுதான்..: உண்மைகளை அறிக்கையாக வெளியிட்டது மறைமாவட்ட ஆயர் இல்லம்..!
04/03/2019 மன்னார் மாந்தை புனித லூர்து அன்னை ஆலயத்தின் முன்பாக அமைக்கப்படவிருந்த திருக்கேதிஸ்வர ஆலய நிர்வாகத்தின் நிரந்தர அலங்கார வளைவு தொடர்பாகவும், இதனோடு மன்னார் மறைமாவட்ட குருக்களை இணைத்து ஊடகங்களூடாக பரப்பப்பட்டு வரும் திரிவுபடுத்தப்பட்டுள்ளதும் உண்மைக்குப் புறப்பானதும், மத உணர்வுகளைப் புண்படுத்துவதுமான செய்திகள் தொடர்பாக மன்னார் மறைமாவட்ட ஆயர் இல்லத்தினால் தெளிவு படுத்தும் அறிக்கை ஒன்று இன்று திங்கட்கிழமை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த ஊடக அறிக்கையினை மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை அடிகளார் ஒப்பமிட்டு அனுப்பி வைத்துள்ளார்.
-குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்...,
1.மாந்தை புனித லூர்த்து அன்னை ஆலயத்திற்கு முன்னதாக சிவராத்திரி விழாவிற்காக தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த அலங்கார வளைவிற்கு நல்லெண்ண அடிப்படையில் நல்லிணக்கப்பாடு இருந்தது. இந்த நிலையில் இதனை உதாசீனம் செய்வது போன்று புதிதாகவும், நிரந்தரமாகவும் அலங்கார வளைவினை அமைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், மாந்தை புனித லூர்த்து அன்னைஆலயப் பங்குத்தந்தை 02.03.2019 சனிக்கிழமை திருக்கேதீஸ்வர ஆலய சபை பொறுப்பாளர் திரு. இராமகிருஸ்ணன் மற்றும் இளைப்பாறிய அதிபர் திரு. தயானந்தராஜா ஆகியோரோடு ஒரு உரையாடலை மேற்கொண்டு. ஏற்கனவே இருக்கும் தற்காலிக வளைவினை பயன்படுத்துவதென்று கலந்துரையாடப்பட்டு, அது ஏற்றுக் கொள்ளப்பட்டது.
2.இவ்வாறு இருக்க, சமய நல்லிணக்கத்திற்கு எதிராக 03.03.2019 ஞாயிற்றுக்கிழமை மதியம் 75 பேருக்கும் மேற்பட்டவர்கள் கனரக வாகனங்கள், ஏற்கனவே பொருத்தி அமைக்கப்பட்ட இரும்பினாலான அலங்கார வளைவு, மற்றும் ஆயத்தம் செய்யப்பட்ட சீமெந்து கொங்கிறீட் கலவை ஆகியவற்றைக் கொண்டு வந்து. மாந்தை புனித லூர்த்து மாதா ஆலயத்திற்கு முன்பாக ஏற்கனவே இருந்த தற்காலிக வளைவினை தாங்களாகவே உடைத்து விட்டு. புதிய அமைப்பை நிறுத்தி கொங்கிறீட் இட்டபோது அங்கு நின்ற பொது மக்களுக்கும், நிர்மாணப்பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த குழுவினருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது. இதன் போது அமைதியான முறையில் இதை அமைப்பது தொடர்பாக கலந்துரையாட முற்பட்டபோது அங்கு வளைவு அமைக்க வந்த குழுவினர் இதனை ஏற்றுக் கொள்ளவில்லை.
ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டது போல எதுவும் இடித்துக் தகர்க்கப்படவில்லை. புதிதாக பலவந்தமாக கொங்கிறீட் இட்டுப்போடப்பட்ட கம்பிகளே பிடுங்கப்பட்டது.
3.இந்த சம்பவம் நிகழும் பொழுது எந்த ஒரு அருட்பணியாளர்களும் அந்த இடத்தில் இருக்க வில்லை. இவை அனைத்தும் நிகழ்வுற்று முடிவடைந்த நிலையில் மாந்தை தூய லூர்த்து அன்னை ஆலயப் பங்குத்தந்தை ஆலய வெளிவாயிலுக்கு வந்து பிரச்சனைகளை ஆராய முற்பட்ட போது அவருக்கு எதிராக சில பிரச்சனைகள் எழுந்த படியால் அங்கிருந்தவர்கள் சிலர் இதனை ஆயர் இல்லத்திற்கு தெரிவிக்க,செய்தி அறிந்தவுடன் சில அருட்பணியாளர்கள் சம்பவம் நடை பெற்ற இடத்திற்குச் சென்று மேலும் ஏற்படக்கூடிய அசம்பாவிதங்களைத் தடுக்கும் முயற்சிகளை மேற்கொண்டனர்.
இவ்வேளையில் அங்கு வந்த பொலிசார் நிலைமைகளை அவதானித்து இரண்டு பிரிவினரையும் அங்கிருந்து அகன்று செல்லும் படியும் ,தங்கள் பிரச்சனைகளுக்கு முடிவு காண்பதாகவும் தெரிவித்தார்கள்.
4.தற்போது மேன் முறையிட்டு நீதிமன்றத்தில் மாந்தை தூய லூர்த்து அன்னை ஆலயம் அமைந்த காணிதொடர்பாக திருக்கேதீஸ்வர ஆலய நிர்வாக உறுப்பினர்கள் காலஞ்சென்ற திரு. நீலகண்டன், திரு. ராமகிருஷ்ணன், ஆகியோரால் கத்தோலிக்க திருச்சபைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது. குறித்த வழக்கிலே காணி எல்லை,திருக்கேதீஸ்வர ஆலய தற்காலிக அலங்கார வளைவு தொடர்பான விடயங்கள் தீர்மானிக்கப்பட வேண்டிய நிலையில் இவ் அலங்கார வளைவை அமைக்க புதிதாக முற்படுவது ஆரோக்கியமான விடயமல்ல என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
5. இந்த நிலைமையை அறிந்தவுடன் ஏனைய மக்களும்,அருட்பணியாளர்களும் மீளவும் அங்கு ஒன்று கூடி மக்களை எந்த விதமான அசம்பாவிதங்களிலும் ஈடுபடாதவாறு அவர்கள் ஆலோசனை வழங்கிக் கொண்டிருந்தார்கள்.
6. இது இவ்வாறு இருக்க மீளவும் 03.03.2019 மாலை 7.30 மணியளவில் திருக்கேதீஸ்வரஆலயத்தில் இருந்து வளைவுகட்டப்படும் இடத்திற்கு மாந்தை மேற்கு பிரதேசசெயலாளர் திரு. கேதீஸ்வரன் அவர்களோடு வந்த குழுவினர் மீளவும் புதிய வளைவினை நிர்மாணிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இவ்வேளையில் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் திரு. கேதீஸ்வரன் அவர்கள் கத்தோலிக்க மக்களுக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்து அங்கு குழுமி இருந்த கத்தோலிக்க மக்களை அச்சுறுத்திக் கொண்டிருந்தார். அவ்வேளையில் அங்கு கடமையில் இருந்த பொலிஸார் செயற்பட்டு அனைத்தையும் மிகவும் சாதுரியமாக தமது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தனர்.
7. கத்தோலிக்கத் திருச்சபை பல நெடுங்காலமாக அமைதி வழித் தீர்வையே விரும்பி வருகின்றது. கத்தோலிக்கத் திருச்சபை ஒருபோதும் சமய நல்லிணக்கத்திற்கு எதிரானவர்கள் அல்ல என்பதையும் இப்புனித சிவராத்திரையை அனுஷ்டிக்கும் சகல இந்துக்களுக்கும் எதுவித இடையுறும் ஏற்படா வண்ணம் நடந்து கொள்ளுமாறு தயவாகக் கேட்டுக் கொள்கின்றோம்.என குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. நன்றி வீரகேசரி
திருக்கேதீஸ்வர ஆலய நுழைவாயில் வரவேற்பு வளைவு அகற்றப்பட்ட சம்பவம் ; நீதிமன்றின் அதிரடி உத்தரவு
04/03/2019 மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய நுழைவாயில் அகற்றப்பட்ட வரவேற்பு வளைவினை மீண்டும் தற்காலிகமாக அமைத்து எதிர்வரும் நான்கு நாட்களுக்கு பொருத்தும்படி மன்னார் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தின் வருடாந்த சிவராத்திரி திருவிழாவை முன்னிட்டு திருக்கேதீஸ்வரம் ஆலயத்திற்குள் செல்லும் வரவேற்பு வளைவு அமைக்கும் பனி நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றபோது இரு மதத்தினருக்கிடையில் இடம்பெற்ற முரண்பாடுகளைத் தொடாந்து அங்கு பதற்ற நிலை ஏற்பட்டதோடு, குறித்த வரவேற்பு வளைவு உடைத்து சேதப்படுத்தப்பட்டது.
இந்த நிலையில்,குறித்த வளைவு உடைக்கப்பட்டமை தொடர்பாக திருக்கேதீஸ்வர ஆலய நிர்வாகன்தினர் மன்னார் பொலிஸ் ஊடாக மன்னார் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர்.
குறித்த வழக்கு இன்று மன்னார் நீதிமன்றத்தில் மன்னார் பதில் நீதவான் இ.கயஸ்பெல்டானோ தலைமையில் விசாரனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன் போது விசாரனைகளை மேற்கொண்ட பதில் நீதவான் இ.கயஸ்பெல்டானோ அகற்றப்பட்ட குறித்த வரவேற்பு வளைவிளை தற்காலிகமாக மீண்டும் அமைத்து எதிர்வரும் நான்கு நாட்களுக்கு வைக்குமாறு திருக்கேதீஸ்வர ஆலய நிர்வாகத்திற்கு அனுமதி வழங்கினார். நன்றி வீரகேசரி
யாழில் வாள்வெட்டு கும்பலின் பிரதான சந்தேகநபர் கைது
07/03/2019 யாழ்ப்பாணத்தில் இடம்பெற்று வரும் வாள்வெட்டு வன்முறைகளின் பிரதான சந்தேகநபர் இன்று வியாழக்கிழமை அதிகாலை தனங்களப்பில் உள்ள வீடொன்றில் மறைந்திருந்த நிலையில் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 2 வாள்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த ஒரு வருடத்துக்கு மேலாக தலைமறைவாகியிருந்த இந்தச் சந்தேகநபரை யாழ்ப்பாணம் சிறப்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் கைது செய்தனர்.
“ஆவா குழுவிலிருந்து செயற்பட்ட இந்தச் சந்தேகநபர், மானிப்பாய் தனுறொக் என்பவர் மற்றும் அவருடன் தொடர்புடையவர்களின் வீடுகளைத் தாக்கி வந்த கும்பலைச் சேர்ந்தவர். அத்துடன் கடந்த ஆண்டு மருதனார்மடம் பகுதியில் சுன்னாகம் பொலிஸாரால் வாள்களுடன் கைது செய்யப்பட்ட கும்பலில் இருந்த இந்த நபர் தப்பித்திருந்தார்.
இந்த நிலையில் கடந்த ஒரு வருடமாக தலைமறைவாகியிருந்த சந்தேகநபர் தனங்களப்பு பகுதியிலுள்ள வீடொன்றில் மறைந்திருக்கின்றார் என யாழ்ப்பாணம் சிறப்புக் குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவுக்கு தகவல் கிடைத்தது.
அதனடிப்படையில் அந்தப் பிரிவுக்குப் பொறுப்பான ரஞ்சன் எதிரிசிங்க தலைமையிலான அணியினர் நேற்று நள்ளிரவு சந்தேகநபர் மறைந்திருந்த வீட்டைச் சுற்றிவளைத்தனர்.
பொலிஸார் சுற்றிவளைத்ததை அறிந்த சந்தேகநபர் தப்பிக்க முயற்சித்த வேளை கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து இரண்டு வாள்கள் , மூன்று முகமூடிக் கப்புகள் கைப்பற்றப்பட்டன. சாவகச்சேரி, சுன்னாகம் பொலிஸ் பிரிவுகளில் தலா 2 குற்றச்செயல்களிலும் மானிப்பாய் பொலிஸ் பிரிவில் 3 குற்றச்செயல்களிலும் சந்தேகநபருக்கு எதிராக வழக்குகள் உள்ளன.
விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர் இன்று மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படுவார்” என்று பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, சாவகச்சேரி பொலிஸாரால் சந்தேநபர் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டு நீதிமன்றப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். சந்தேகநபரிடமிருந்து மீட்கப்பட்ட வாள்களை நீதிமன்றில் சமர்ப்பிக்காமல் அவரை பிணையில் விடுவிப்பதற்கான சாவகச்சேரி பொலிஸாரால் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபா பணம் பெறப்பட்டுள்ளது என்று விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அத்துடன், சந்தேகநபர் கைது செய்யப்படாமல் மறைந்திருப்பதற்கு சாவகச்சேரி பொலிஸார் உதவினர் என்றும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இதனாலேயே யாழ்ப்பாணம் சிறப்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் சாவகச்சேரி பொலிஸ் பிரிவிலுள்ள தனங்களப்புக்குச் சென்று சந்தேநபரைக் கைது செய்து வந்தனர் என்றும் தெரிகிறது. நன்றி வீரகேசரி
கிளிநொச்சிக்கு வழங்கப்பட்ட வெள்ள நிவாரணங்களுக்கு நடந்தது என்ன? பொது மக்கள் கேள்வி
09/03/2019 கடந்த வருடம் டிசம்பர் மாதம் கிளிநொச்சியில் ஏற்பட்ட பெரும் வெள்ளத்தினை தொடர்ந்து நாட்டின் பல பாகங்களிலுமிருந்து பெருமளவான வெள்ள நிவாரணப்பொருட்கள் கிளிநொச்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தன.
ஆனால் இதுவரை எவ்வளவு பொருட்கள் மாவட்டச் செயலகத்திற்கு கிடைத்துள்ளன. அவற்றை எங்கெங்கு எவ்வளவு பொது மக்களுக்கு விநியோகிக்கப்பட்டது என்ற வெளிப்படையான தகவல்கள் எவையும் இதுவரை வெளிப்படுத்தப்படவில்லை.
அரசு, அரசசார்பற்ற நிறுவனங்கள், பொது அமைப்புகள், தனிநபர்கள் வழங்கிய பெருந்தொகை நிவாரணப்பொருட்கள் மாவட்டச் செயலகத்திடம் கையளிக்கப்பட்டிருந்தன. என்னெ்ன பொருட்கள் எவ்வளவு கிடைத்தது. அதனை மாவட்டச்செயலகம் எதனடிப்படையில் எந்தெந்த பிரதேசங்களுக்கு எவ்வளவு தொகையான பொருட்களை பகிர்ந்தளித்ததுள்ளது. என்ற எந்த தகவல்களும் வெளிப்படையில்லை எனவும் பொது மக்கள் தரப்பால் தெரிவிக்கப்படுகிறது.
கிடைக்கப்பெற்ற அனைத்துப் பொருட்களும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதா? என்ற கேள்வியும் பொது மக்கள் தரப்பால் எழுப்பட்டுள்ளது. எனவே இது தொடர்பில் உரிய தரப்பினர் பதிலளிக்க வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது. நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment