கெட்ட வழக்கங்களை விடுவது எப்படி?


நல்ல வழக்கங்கள் உடனடி வலியை தரும். ஆனால் அதன் பலன்கள் மெது, மெதுவாக கூட்டுவட்டியை போல பல்கிபெருகி மிகப்பெரும் பலனை அளிக்கும்.

உதாரணமாக மாமரம் நடுகிறோம் என வைத்துக்கொள்வோம். உடனடியாக அதனால் வருவது குழி தோண்டவேண்டியது, தினமும் தண்ணிர் ஊற்றவேண்டியது, ஆடு,மாடு தின்னாமல் வேலி கட்டவேண்டியது என செலவுகளும் , வேலைகளும் தான். ஆனால் வளர்ந்து மரமானபின் தினமும் அது பழங்களை தந்துகொண்டெ இருக்கும்., நிழலை தரும். தண்ணீர் ஊற்ரவேண்டியது இல்லை. தலைமுறைக்கும் அதன் பலன்கள் தொடரும்.

கெட்ட வழக்கங்கள் உடனடியான இன்பத்தை தரும். ஆனால் நாட்கள் செல்ல, செல்ல பைனான்சியர் அன்புவிடம் மீட்டர் வட்டி வாங்கி படம் எடுத்த தயாரிப்பாளரின் நிலைபோல அதன் தீமைகள் பெருகிக்கொண்டே செல்லும். உதாரணமாக குப்பை உணவு, புகை பிடித்தல்...புகைபிடிக்கையில், மது அருந்துகையில்,இனிப்பு உண்கையில் தித்திக்கும். ஆனால் நாட்கள் செல்ல, செல்ல உடல் பெருக்கும், கான்சர் வரும், ஈரல் கெடும்...
இது எல்லாம் தெரிந்தும் ஏன் கெட்டவழக்கங்களை பின்பற்றுகிறோம், நல்ல வழக்கங்களை பின்பற்றுவதில்லை என்றால் அதற்கு காரணம் இந்த "கைமேல் பலன்" தான்..ஆங்கிலத்தில் இதை "instant gratification" என அழைப்பார்கள்.
ஒரு செயலை செய்ய வைத்து, அப்படி செய்வதால் அவர்களுக்கு ஒரு நன்மையை கொடுத்து, அப்படி அந்த செயலை செய்வதற்கான விலையை காலம் தாழ்த்தி பெற்றால், அந்த செயலை அதிகமான பேர் செய்வார்கள்.
ஒரு செயலை செய்வதால் உடனடியாக ஒரு விலையை கொடுக்கவேண்டும், செய்யாமல் இருந்தால் உடனடி தண்டனை எதுவும் இல்லை என்றால் அதை செய்ய பலரும் தாமதிப்பார்கள்.
உதாரணமாக உங்கள் கையில் லட்சம் ரூபாய் இருக்கிறது. அதை வங்கியில் பிக்சட் டெபச்சிட்டில் போட்டால் என்ன ஆகும்? அதன் உடனடி பலன் எதுவும் இல்லை. அதன் பலன் நீண்டகாலத்திய பலன்.
அதே கிரடிட் கார்டை தேய்த்து லட்சம் ரூபாய்க்கு ஒரு ஐபோனை வாங்கினால் உடனடி பலன் கையில் புதுபோன். நண்பர்களிடையே புகழ்..பெருமிதம்...கிரடிட் கார்டு பில் கூட அடுத்தமாதம் தான் வரும்.


ஆக:
நாம் செய்யவேண்டியது இதை அப்படியே தலைகீழாக மாற்றுவதுதான்.

*****நல்ல விசயங்களை செய்தால் உடனடியாக கைமேல் பலன்.

******கெட்ட விசயங்களை செய்தால் உடனடி தண்டனை

இதை எப்படி அமுல்படுத்துவது?

நீங்கள் நீண்டநாளாக விடவேண்டும் என நினைக்கும் ஒரு விசயத்தை எடுத்துக்கொள்ளவும். உதா: சமூக ஊடகங்களில் அதிகநேரம் செலவழித்தல்

நீங்கள் நீண்டநாளாக செய்யவேண்டும் என நினைக்கும் ஒரு நல்ல காரியத்தை எடுத்துக்கொள்ளவும். உதா: உடல்பயிற்சி

சமூக ஊடகங்களுக்கும், செல்போனுக்கும் அடிமையான பலரும் காலையில் எழுந்ததும் பேஸ்புக், வாட்சாப் முகத்தில் தான் விழிப்பார்கள். காலை 6 மணிக்கு எழுந்து, வாட்ஸாப் பார்த்து, பேஸ்புக்கில் ஒரு காலை வணக்க பதிவை போட்டுவிட்டு, லைக், கமெண்ட் எல்லாம் போட்டு முடித்து பார்த்தால் 1 மணிநேரம் ஓடியிருக்கும்.

ஆக நீங்கள் செய்யவேண்டியது:

இரவு தூங்குமுன் வாட்ஸாப், பேஸ்புக்கை அன் இன்ஸ்டால் செய்துவிடுவதுதான். காலையில் எழுந்து அதை இன்ஸ்டால் செய்ய ஒரு 5- 10 நிமிடம் ஆகும். ஆனால் அப்படி இன்ஸ்டால் செய்துகொன்டிருக்கமட்டோம். காலையில் எழுந்து ஆடோமேடிக்காக பேஸ்புக்கை கைகள் தேடும். ஆனால் அது இருக்காது. உட்கார்ந்து இன்ஸ்டால் செய்யாமல் வேறு வேலையை பார்ப்போம். ஆக காலையில் 1 மணிநேரம் மிச்சம்.

இது மிக, மிக பவர்புல்லான உத்தி. உலகபுகழ் பெற்ற எழுத்தாளர் விக்டர் யூகோ இந்த உத்தியை பயன்படுத்திதான் ஒரு மிகப்பெரும் காரியத்தை செய்துமுடித்தார். 1831ம் ஆண்டில் அவரது பதிப்பாளர் ஒரு நூலை எழுதித்தர சொல்லி கேட்டுகொண்டே இருந்தார். ஆனால் பாரிசில் அடிக்கடி வெளியே போய் நண்பர்களுடன் நேரத்தை கழித்ததால் விக்டர் யூகோவால் நாவலை எழுதமுடியவில்லை. கடைசியில் ஒரு மாதம் மட்டுமே நேரம் இருக்க, விக்டர் யூகோ ஒரு விந்தையான காரியம் செய்தார்.

உள்லாடை, சர்ட்டு,பேண்டு உள்பட தன் துணிகள் அனைத்தையும் மூட்டைகட்டி ஒரு நண்பனிடம் கொடுத்துவிட்டார். இப்போது அவரிடம் ஆடைகளே இல்லை. எப்படி வெளியே போவார்? அதன்பின் ஒரு மாதம் வீட்டுக்குள்ளேயே உட்கார்ந்து அந்த நாவலை எழுதி முடித்தார். அதுதான் உலகப்புக்ழ பெற்ற "ஹன்ச்பேக் ஆஃப் நார்டர்டேம்" நாவல்.

கெட்ட வழக்கங்களை செய்பவர்கள் பலரும் அதை இலகுவாக்க பல காரியங்களை செய்வார்கள். சிகரெட் பிடிப்பவர்கள் வீட்டில் பெட்டி பெட்டியாக சிகரெட் இருக்கும். காரில் ஆஷ்டிரே இருக்கும். ஆபிஸில் சிகரெட் ஸ்டாக் இருக்கும். என் பேராசிரியர் ஒருவர் ஆண்டு முழுமைக்குமான ஒயின்பாடில்களை வாங்கி வீட்டில் வைத்திருப்பார்.


ஆக நீங்கள் செய்யவேன்டியது கெட்ட்ட வழக்கங்களை இலகுவாக்கும் பழ்ககத்தை நிறுத்துவதுதான். வீட்டு கணிணி, ஆபிஸ் கணிணி, செல்போன், ஐபேட் என நாலைந்து டிவைஸ்க்லளில் பேஸ்புக், வாட்ஸாப்பை இன்ஸ்டால் செய்திருந்தால் ஒரே ஒரு டிவைசில் மட்டுமே அதை ஆக்சஸ் செய்வது என முடிவெடுங்கள்.

உதா: ஆபிஸ் கணிணியில் பேஸ்புக் பார்க்கமாட்டேன், செல்போனில் மட்டும்தான் பார்ப்பேன் என முடிவெடுத்தால் அதிலும் சிலமணிநேரம் மிஞ்சும். இரவு ஏழு மணிக்கு பேஸ்புக், வாட்ஸாப்பை அனின்ஸ்டால் செய்து அடுத்த நாள் மதியம் இன்ஸ்டால் செய்தால் பலமணிநேரம் மிஞ்சும்.

சமூக வலைதளம் மட்டுமல்ல..பல கெட்டவழக்கங்களை இதன்படி விடமுடியும்.

குப்பை உணவு உண்கிறீர்களா? அதை குறைக்கவேண்டுமா? ரைட்டு..நீங்கள் செய்யவேண்டியது வீட்டில் குப்பை உணவு ஸ்டாக் வைத்திருப்பதை நிறுத்தவேண்டியதுதான். கிரேவிங் அதிகமாகி முறுக்கும், அதிரசமும் சாப்பிட்டே ஆகவேண்டும் போல தோன்றினால் நடந்துபோய் அல்லது காரில் போய் ஒவ்வொரு தரமும் வாங்குங்கள். வீட்டில் டப்பாவில் வைத்திருந்தால் அதை உண்ன உடனடி விலை எதுவுமில்லை. ஆனால் ஒவ்வொருதரமும் கடைக்கு போய் வாங்கவேண்டும் என்பது அதற்கான உடனடி விலையை அதிகரிக்கும். அதனால் பல சமயம் அதை செய்யாமல் விட்டுவிடுவோம்.

சிகரெட்டை விடமுடியாமல் தவிக்கிறீர்களா? வீட்டில், காரில், ஆபிஸில் ஐம்பது சிகரெட் பாக்கட் ஸ்டாக் வைத்திருப்பதை நிறுத்தவும்.... ஒவ்வொரு சிகரெட்டையும் வெளியே நடந்துபோய் அல்லது கார், ஸ்கூட்டரில் போய் வாங்கவும். இப்படி செய்வதால் ஒவ்வொருமுறையும் சிகரெட் பிடிக்கையில் அதற்கான விலையாக ஒரு 10- 15 நிமிடத்தை கொடுப்போம். விரைவில் அவழ்ழக்கத்தை விட இதுவே உதவும்..

நல்ல காரியத்தை செய்யும் நேரத்தை அதிகரிப்பது எப்படி?

அடுத்த பதிவில் பார்ப்போம்.


No comments: