அவுஸ்திரேலிய தமிழ் எழுத்தாளர் மாத்தளைசோமுவுக்கு சென்னையில் ‘கலைமகள்’ விருது


தமிழ்த் தாத்தாஎனப் புகழப்படும் .வே. சாமிநாதய்யர், கி.வா. ஜகந்நாதன் ஆகியோர் ஆசிரியராக இருந்த, பழம்பெரும் தமிழ் மாத இதழானகலைமகளின்’ 88-ஆவது ஆண்டு விழா சென்னையில் நடைபெற்றது.  ஒவ்வோராண்டும் இந்த ஆண்டு விழாவில் எழுத்தாளர்களுக்குக்கலைமகள்விருது வழங்குவது வழக்கமானது. இந்த ஆண்டு (2019) தமிழக எழுத்தாளர்களான வித்யா சுப்ரமணியன், திருமதி லட்சுமி ராஜரத்தினம், சிவசங்கரி ஆகியோரோடு, ‘தமிழ் ஓசைஆசிரியர் எழுத்தாளர் மாத்தளை சோமுவுக்கும்கலைமகள் விருதுவழங்கப்பட்டது.
விழாவில், மென்பொருள் துறையைச் சேர்ந்த பி.டி. சுவாமிநாதன் வரவேற்புரையையும், இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் தென்மண்டல இயக்குநர் செந்தில்குமார் தலைமை உரையையும், முனைவர் சோ. அய்யர் வாழ்த்துரையையும், கலைமகள் ஆசிரியர் கீழாம்பூர், விருது பெறும் எழுத்தாளர்களின் அறிமுக உரையையும் நிகழ்த்தினார்கள்.
எழுத்தாளர்களுக்கும், சிறப்பு விருந்தினர்களுக்கும் கலைமகள் பதிப்பாசிரியர் திரு. பி.டி. திருவேங்கடராஜன் பொன்னாடை போர்த்திக் கெளரவித்தார். கலைமகள் விருதினை எழுத்தாளர்களுக்கு முனைவர் சோ. அய்யர் வழங்கினார். எழுத்தாளர் லட்சுமி ராஜரத்தினம், தான் எழுதத் தொடங்கி இந்த ஆண்டோடு ஐம்பது ஆண்டுகள் ஆகின்றன என்றும், எழுபத்தியாறு வயதான போதும், தான் இளமையான மனதுடன் இருப்பதாகவும், கி.வா..வின் முன் திருப்புகழ் பாடிப் பாராட்டுப் பெற்றதை நினைவு கூர்ந்தும் பதிலுரையில் பேசினார்.

எழுத்தாளர் வித்யா சுப்பிரமணியன் தனது ஏற்புரையில், “சிவசங்கரி முதலான எழுத்தாளர்களுடன் கலைமகள் விருது வாங்குவதைத் தன்னால் நம்ப முடியவில்லைஎன்றார்.
சிவசங்கரி தனது ஏற்புரையில், “கலைமகளில் உனது எழுத்து வந்ததா? என்று என்னைக் கேட்டார்கள். ஒருவரை நல்ல எழுத்தாளராக மதிப்பதற்கான அளவீடாக இந்தக் கேள்வி இருந்தது. இலக்கியத்தை நல்ல முறையில் காப்பாற்றி வரும் பத்திரிகை கலைமகள். கி.வா.. இருந்த இடத்தில் தற்போது இருக்கும் கீழாம்பூர் மிகவும் அருமையாகத் தொடர்கிறார்என்றதுடன், வழக்கம்போல் ஒரு குட்டிக் கதையையும் சொன்னார்.
மாத்தளை சோமு தனது ஏற்புரையில், “விருது பெறும் மூன்று பெண் எழுத்தாளர்களையும் மலைமகள், கலைமகள், அலைமகள் என்று வைத்துக் கொண்டால், சிவனே என்று இருக்க வேண்டும் என்கிற கோணத்தில்தான் தன்னை அழைத்திருக்கிறார்கள் என நான் கருதிக் கொண்டேன்என்று நகைச்சுவை ததும்பப் பேசத்தொடங்கினார்.
தொடர்ந்து அவர் தனது உரையில், “இலங்கையில்கலைமகள்தமிழர் இல்லங்களில் தவழ்ந்த பத்திரிகை. கலைமகளில் சிறுகதை, கவிதை வந்தால்தான் எழுத்தாளர் என்று மதித்த காலம் உண்டு. 25ஆவது நூலை வெளியிட இருக்கும் எனக்கு  இந்த ஆண்டில் கலைமகள் விருது கிடைப்பது மகிழ்ச்சியானது. இந்த நேரத்தில் இந்த மேடையில் சிலவற்றைக் குறிப்பிட விரும்புகிறேன். ஈழத் தமிழரையும், தமிழ்நாட்டுத் தமிழரையும் கடல் பிரித்தாலும், தமிழ் நம்மை இணைக்கிறது. தமிழ் நமது அடையாளம். தமிழை மேம்படுத்தியதில் ஈழத்தமிழரின் கணிசமான பங்குண்டு. ஏட்டிலிருந்த தொல்காப்பியத்தை எழுத்து வடிவமாக்கிய முதல் தமிழர் சி.வை. தாமோதரம்பிள்ளை ஈழத்தைச் சேர்ந்தவர். ஆறுமுக நாவலரே பைபிளை முதன்முதலில் தமிழில் கொண்டு வந்ததோடு, தமிழ் அச்சு இயந்திரத்தையும் நிறுவினார்.
புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்கள், புலம் பெயர்ந்த நாடுகளிலும் தமிழ்க் கல்விக்காகத் தீவிரப் பணியாற்றி வருகிறார்கள். ஆனால், தமிழகத்தில் தமிழைப் படிக்காதவர்கள் தொகை அதிகமாகி வருகிறது. ‘யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்என்று பாடியவர் பாரதி. பாரதிதான்வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு என்று பாடியதோடு,   'தமிழ்நாடு' என முதன்முதலில் உசசரித்தவரும் அவரே.. . அவர் தமிழரின் தேசியக் கவிஞர். அவரைப் பிராமணர் என்று போற்றவோ, தூற்றவோ கூடாது. தேசியக் கவிஞர் என்று கொண்டாட வேண்டும். தமிழ் தமிழ்நாடு, இலங்கை, மலேயா, பர்மா ஆகிய நாடுகளில் இருந்தபோது, ‘தேமதுரத் தமிழோசை பரவும் வகை செய்தல் வேண்டும்என்று தொலைநோக்குப் பார்வையில் பாடினார். இன்று எல்லாக் கண்டங்களிலும் தமிழின் தேமதுர ஓசை முழங்குகிறது. அதற்குக் காரணகர்த்தாவாக இருப்பவர்கள் புலம் பெயர்ந்த தமிழர்கள் .மலேசியாவில் 500 க்கும் மேற்பட்ட தமிழ் பள்ளிகளையும்,தமிழ் கல்வியையும்போற்றி வருகிறார்கள் .பர்மாவில் 3000 தமிழ் பிள்ளைகள் தமிழ் படிக்கிறார்கள் ,அதற்கு அங்குள்ள தமிழர்களே உதவி வருகிறார்கள் இலங்கையில் எல்லாவகுப்பிலும் தமிழ் கட்டாயபாடம்.ஆனால்  தமிழ் நாட்டில் தமிழ் படிக்க தயங்குகிறார்கள்,தமிழை கட்டாயமாக்க அரசியல்வாதிகளும் தயங்குகிறார்கள் என்பது வேதனையானது என்றார்.
புரவலர் நல்லி சில்க்ஸ் நல்லி குப்புசாமி செட்டியார், நாடாளுமன்ற உறுப்பினர் மைத்ரேயன், இலக்கியவாதிகள் மாலன், ரமணன், டாக்டர் ஜெ. பாஸ்கர், காத்தாடி ராமமூர்த்தி, அருட்செல்வரின் தனி உதவியாளர் ரவி, வர்த்தமான் பதிப்பகம் வர்த்தமானன், கி.வா.. மகன் குமார், மகள் உமா பாலசுப்பிரமணியம், டாக்டர் ஜோ. ஜாய்ஸ் திலகம் மற்றும் மலேசியாவிலிருந்து வருகை புரிந்த புருஷோத்தமன்  ஆகியோர் முதல் வரிசையில் அமர்ந்து விழாவினை ரசித்தனர்.
விழாவின் இணைப்புரையை திரு. சந்திரமோகன் பொருத்தமாய்த் தமிழமுது கலந்து தொகுத்தார். அவர் தொகுப்புரையில்எத்தனை விருதுகள் வாங்கினாலூம், ‘கலைமகள்கரங்களால் வாங்கும் விருது பெரிய வரப்பிசாதம்என்று சொன்னபோது விழாவிற்கு வந்திருந்தவர்களின் ஒருமித்த கைகளின் ஓசை அவர்களின் ஒருமித்த கருத்தை வெளிப்படுத்துவதாய் இருந்தது.
-->
  .நாகராஜன்,









No comments: