பேய்களின் தாண்டவம் - வினோ சர்மிலா


Image result for பேய்


.
இப்பொழுதெல்லாம் எனது தெருக்களில் 
பேய்களினதும் குள்ள நரிகளினதும் கூடல்கள் 
வெகு சாதாரணமாகிவிட்டது 
அதிகாலை வேளையிலும் மாலை மங்கலிலும் கூட 
அவை சுதந்திரமாய் உலா வருகின்றன பேய்களின் இருப்பிடம் காடென்பது மாறி 
என் கிராமங்களாகிவிட்டன 
ஒளிந்து நெளிந்து வளைந்து திரிந்த அவற்றிற்கு 
முழு சுதந்திரம் கிடைத்துவிட்டதாய் மகிழ்கின்றன 


நான் ஒருபொழுதும் நினைத்துப்பார்த்ததில்லை 
எனது தெருக்களில் பேய்கள் உலாவுமென்பதை 
இரவுகளில் மட்டுமே பேய்கள் வெளிக்கிளம்பும் 
என்ற கற்பனையும் பேய்ப்பயமும் எனக்குள் 
சிதைந்துபோய் வெகு நாட்களாகிற்று 


அவற்றின் அடைப்புக்களையும் அடைத்தல்களையும் 
காணநேர்கையில் சீறிப்பாய்கிறது குருதி 
தாளாத சீற்றத்தில் 
என்னைத்தாண்டி செல்கையில் 
சிரிக்க முயல்கின்ற அவற்றைப்பார்த்து 
முறைத்துச் செல்கின்றேன் நான் 


அதர்வ வேதம் பாடும் உங்களுக்கு 
எனது தெருக்களிலும் எனது தோட்டங்களிலும் 
இங்கென்ன வேலை என்று கேட்கத் தோன்றுகையில் 
தொலைந்து போகின்றது எனது சித்தாந்தம் 


கைது செய்யப்படுதலும் கடத்தப்படுதலும் 
காலவரையின்றி கட்டுக்கோப்பாய் நிகழும் என்ற 
அச்சத்தில் மடக்க நினைக்கிறாள் அன்னை 
பேய்களின் பட்டியலில் என் பெயர் இருப்பதாயும் 
கூடாத சொப்பனத்தில் தொலைந்து நான் போனதாயும் 
சொப்பனத்தின் கதை சொல்லிப் புலம்புகிறாள் தினமும் 


என் தெருக்களில் தென்றல் வாங்குவதற்கும் 
சாளரத்தின் வழியே தலை நீட்டுவதற்கும் கூட 
திட்டித்திட்டி தடை விதிக்கிறாள் அன்னை 
இந்தப் பொல்லாத பேய்களின் 
தாண்டவத்திற்கு அஞ்சியவளாக


nantri eluthu.com

No comments: