போராட்டமே. வாழ்க்கை’: பத்ம விருதைப் பெற்ற முதல் திருநங்கை நர்த்தகி நடராஜ் - முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ்

.
 நடனக் கலைஞரான நர்த்தகி நட்ராஜுக்கு பத்ம ஸ்ரீ விருதை வழங்கியுள்ளது மத்திய அரசு. இந்தியாவில் பத்ம விருதைப் பெற்ற முதல் திருநங்கை இவராவார். கடும் போராட்டங்களுக்கு மத்தியில் இந்த உயரத்தை அவர் அடைந்தது எப்படி?
சென்னை மயிலாப்பூரில் இருக்கும் நர்த்தகி நடராஜின் இல்லம் பரபரப்பாக இருக்கிறது. ஏகப்பட்ட ஊடகத்தினர் அவருக்காகக் காத்துக்கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு ஊடகத்திடமும் பொறுமையாகப் பேசி, பேட்டியளித்து வழியனுப்புகிறார் நர்த்தகி. ஒரு மிகக் கடினமான பயணத்திற்குப் பிறகு அவர் வந்தடைந்திருக்கும் இடம் இது. யாரொருவராலும் நினைத்துக்கூட பார்க்க முடியாத கடினமான பயணம். 
"ஒரு வசதியான குடும்பத்தில் பிறந்துவிட்டு, அடுத்த வேளை உணவிற்காக தெருவில் திரிந்திருக்கிறீர்களா? அதுவும் எந்தத் தவறும் செய்யாமல்? என் வாழ்வின் முக்கியமான காலகட்டம் அப்படித்தான் கழிந்தது" என்று பேச ஆரம்பிக்கிறார் நர்த்தகி.
மதுரை அனுப்பானடி பகுதியில் பிறந்த நடராஜ், வசதியும் அரசியல் செல்வாக்கும் மிகுந்த குடும்பத்தில், அவரது பெற்றோருக்கு ஐந்தாவது குழந்தை. ஆனால், 5-6 வயதிலேயே தான் மற்றவர்களைப் போல அல்ல என்று உணர ஆரம்பித்தார். 
"அந்த வயதிலேயே நான் பெண்ணைப் போலத்தான் உணர்ந்தேன். ஆண்களோடு விளையாடுவதைத் தவிர்க்க ஆரம்பித்தேன். பெண்களோடு இருப்பதுதான் பாதுகாப்பாக இருந்தது. அது மிகப் பெரிய சந்தோஷமாகவும் பாதுகாப்பாகவும் இருந்தது. ஒரு கோழியின் இறகுக்குள் இருப்பதைப் போல இருக்கும்" என்று நினைவுகூர்கிறார் நர்த்தகி. 



ஆனால், மெல்ல மெல்ல வீட்டில் உள்ளவர்கள் இந்த வித்தியாசத்தை உணர்ந்து அதிர்ந்துபோனார்கள். குறிப்பாக அவரது அண்ணன். நடராஜின் பெண்மை சார்ந்த உடல்மொழி அண்ணனை ரொம்பவுமே கோபத்திற்குள்ளாக்கியது. ஒழுங்காக நடந்துகொள்ளும்படி கூறி அடிப்பார். 
"சிறுவயதில் என்னை அடிக்க நானே அண்ணனிடம் பிரம்பெடுத்துக் கொடுப்பேன். என் அண்ணனுக்கு என்னைச் சுத்தமாகப் பிடிக்காது. வீட்டு வாசலைத் திறந்தாலே என்னை கேலி செய்ய ஆட்கள் இருப்பார்கள். யாராவது வந்தால் கேலி செய்வார்களே என்று வீட்டிற்குள் சென்றுவிடுவேன். அந்த வயதில் நான் எந்தத் தவறும் செய்ததில்லை. அந்த வயதில் என்ன தவறு செய்துவிட முடியும்? ஆனாலும் தொடர்ந்து தண்டிக்கப்பட்டேன். அடிப்பார்கள். இப்போதும் கனவு கண்டு விழித்தால், அந்த இருட்டும் அடியும்தான் நினைவுக்கு வருகிறது" என்கிறார் நர்த்தகி. 
அனுப்பானடியில் உள்ள தியாகராசர் முன்மாதிரிப் பள்ளியில் படித்த நடராஜ், படிப்பில் வெகு கெட்டி. இருந்தபோதும் உடலில் இருந்த மாற்றங்கள் அவரைத் தொந்தரவு செய்துகொண்டே இருந்தது. அதே பள்ளியில் படித்த பாஸ்கருக்கும் இதே நிலை என்பது புரிந்தது. இவரும் நண்பர்களானார்கள். பிறகு வாழ்நாள் முழுக்க.


"அந்த சிறுவயதில் எனக்கு நிறைய கனவுகள் இருந்தன. பெண்களைப் போல அழகாக இருக்க வேண்டும்; எதைச் செய்தாலும் நேர்த்தியுடன் செய்யவேண்டுமென நினைப்பேன். எழுதும்போது மிக அழகாக எழுதுவேன். இப்படி இருந்த நிலையில், வீட்டில் பிரச்சனைகள் அதிகமாகி விட்டன. இனி அங்கே இருக்க முடியாது என்ற சூழல் ஏற்பட்டது. 11 - 12 வயதில் கிட்டத்தட்ட அனாதையைப் போல உணர்ந்தேன். கொஞ்சம் கொஞ்சமாக வீட்டை விட்டு விலக ஆரம்பித்தேன். சில நாட்கள் வீட்டில் இருப்பது; ரொம்பவும் திட்டினால் வெளியே எங்காவது சென்றுவிடுவது என்றுதான் காலம் கழிந்தது".
வீட்டிலும் வெளியிலுமாக தங்கியிருந்தபடி 12ஆம் வகுப்புவரை படித்த நடராஜ், ஒரு வழக்கறிஞராக விரும்பினார். ஆனால், 12ஆம் வகுப்பு முடியும் காலகட்டத்தில் உடலில் ஏற்பட்ட மாற்றங்கள் இனி அவரால் கல்லூரிக்குச் சென்று படிக்க முடியாது என்ற சூழலை ஏற்படுத்தின.
சிறு வயதிலிருந்தே நடனத்தின் மீது அவருக்கு பெரும் ஈர்ப்பு இருந்தது. "நடனம் எனக்குள்ளேயே இருந்தது. பெண்மை முந்தியதா, நடனம் முந்தியதா எனத் தெரியவில்லை. நான் பெண்மையை உணரத் தொடங்கிய 7-8 வயதில், அந்த பெண்மையை வெளிப்படுத்துவதற்கான ஒரு களமாகத்தான் நாட்டியத்தை நான் நினைத்தேன்" என்கிறார் நர்த்தகி.
ஒரு வயதுக்குப் பிறகு, அவரும் அவருடைய நண்பரான பாஸ்கரும் தொடர்ந்து நடன பயிற்சிகளை சினிமா படங்களில் வரும் நடனக் காட்சிகள்தான் ஆசிரியர். அதனை மனதில் வைத்துக்கொண்டே தொடர்ந்து ஆடுவார்கள். ஒரு கட்டத்தில் மதுரையில் உள்ள பல கோவில்கள் திருவிழாக்களில் ஆட ஆரம்பித்தார்கள். சினிமா பாடல்கள் பின்னணியில் ஒலிக்க, இந்த நடனக் காட்சி நடைபெறும். 


"நான் நாட்டியம் ஆடுவதால் எனக்கு பெண் தன்மை வந்துவிட்டதா எனக் கேட்கிறார்கள். அப்படியல்ல. பெண்ணுக்கான ஆன்மா எனக்குள்ளேயே விதைக்கப்பட்டுத்தான் நான் அனுபப்பட்டிருக்கிறேன். யாரும் வலியவந்து வேண்டுமென்றே திருநங்கையாவது கிடையாது. மாறுபட்ட உடலுக்குள் தவிக்கும் ஒரு ஆன்மா இது" என்கிறார் நர்த்தகி.
அந்த காலகட்டத்தில் நடராஜின் நடனத்தைப் பார்த்தவர்கள் உன்னுடைய குரு யார் என்று கேட்க ஆரம்பித்தார்கள். "அப்போதுதான் நடனத்திற்கு குரு வேண்டுமென்பதை அறிந்தேன். அந்த காலகட்டத்தில் வைஜெயந்தி மாலாவின் குருவான கிட்டப்பா பிள்ளையைப் பற்றி பலரும் பேசியதால், நாங்கள் அவரிடம் சென்று மாணவர்களாகச் சேரலாம் என்று முடிவுசெய்தோம். நேராக தஞ்சாவூருக்குப் போனோம். அங்கே திண்ணையில் அமர்ந்து வெற்றிலை போட்டுக்கொண்டிருந்தவரிடம், எங்களுக்கு நடனம் நன்றாகத் தெரியும். மதுரையில் ரொம்ப பேமஸ். இருந்தாலும் ஒரு குருவிடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்கிறார்கள். அதனால், உங்களிடம் கற்றுக்கொள்ள விரும்புகிறோம் என்று சொன்னோம். அவர் 'நான்தான்மா கிட்டப்பா பிள்ளை' என்று சொன்னார். அப்படியே அவர் காலில் விழுந்தோம். அவர் உடனே ஏற்றுக்கொள்ளவில்லை. அவர் செல்லுமிடமெல்லாம் நாங்களும் சென்றோம். கிட்டத்தட்ட ஒரு வருடம் கழித்து எங்களை மாணவர்களாக அவர் ஏற்றுக்கொண்டார். ஒரு கட்டத்தில் அவருடனேயே தங்க வைத்துக்கொண்டார்" என்கிறார் நர்த்தகி.
கிட்டத்தட்ட 17வது வயதில் கிட்டப்பா பிள்ளையிடம் சேர்ந்த நடராஜ், அதற்கு அடுத்த 15 வருடங்கள் அவருடனேயே இருந்தார். அந்த 15 வருடமும் புகழ், மேடை, வருவாய் போன்ற எதைப் பற்றியும் கவலைப்படாமல் நடனத்தை கற்றுக்கொள்வதை மட்டுமே வேலையாக வைத்திருந்ததாகச் சொல்கிறார் நட்ராஜ். அந்த காலகட்டத்தில் கிட்டப்பா பிள்ளைக்கு குரு தட்சணையாகக் கொடுப்பதற்கு இவர்களிடம் எதுவும் இல்லை. இருந்தபோதும் தொடர்ச்சியாக நட்ராஜுக்கும் பாஸ்கருக்கும் கற்பித்தார் கிட்டப்பா பிள்ளை. நட்ராஜிற்கு நர்த்தகி என்று பெயர் சூட்டியவரும் அவர்தான். 
கிட்டப்பா பிள்ளையிடம் நடனம் கற்றுக்கொண்டதோடு, தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் ஒரு நான்கு வருடங்கள் அவரோடு இணைந்து பணிபுரியும் வாய்ப்பும் நர்த்தகிக்குக் கிடைத்தது. அப்போது அந்த பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக இருந்த ஔவை நடராஜன் இந்த உதவியின் பின்னணியில் இருந்தார். 
1999ல் கிட்டப்பா பிள்ளை இறந்துவிடவே, இரண்டு வருடங்கள் என்ன செய்வதெனத் தெரியாமல் தவித்த சக்தியும் நர்த்தகியும் 2001வாக்கில் சென்னைக்கு வந்தனர். அடுத்ததாக இந்திய அரசின் சில நிதி நல்கைகள் கிடைத்தன. 2011ல் சங்கீத நாடக அகாதமியின் புரஸ்கார் விருதும் கிடைத்தது. 
"நடனத்தில் தஞ்சாவூர் பாணியில் இருந்து நாங்கள் ஒருபோதும் விலகிச் செல்வதில்லை. சின்னைய்யா, பொன்னையா, சிவாநந்தம், வடிவேலு என்ற நான்கு பேர்தான் பரதநாட்டியத்தின் துவக்கத்தை விதைத்தவர்கள். இந்த நால்வரின் தலைமுறையைச் சேர்ந்தவர்தான் கிட்டப்பா பிள்ளை. அவர்கள் வகுத்த விதியிலிருந்து நான் மாறுவதேயில்லை. அதனால்தான் எங்களது நடனத்திற்கு இப்போதும் மரியாதை இருக்கிறது" என்று சொல்லும் நர்த்தகி, நடனம் கற்றுத் தருவதற்கு வெள்ளியம்பலம் நடன கலைக்கூடம் என்ற அறக்கட்டளையையும் வைத்திருக்கிறார். 
'போராட்டமே வாழ்க்கை': நர்த்தகி நடராஜ்
மாற்றுப் பாலினத்தைச் சேர்ந்தவர்களை குறிக்க தற்போது பயன்படுத்தப்படும் திருநங்கை என்ற வார்த்தையும் நர்த்தகியின் உருவாக்கம்தான். "இலக்கியங்களில் பல இடங்களில் திருநங்கைகளைப் பற்றிக் குறிப்பிடப்படுகிறது. குறிப்பாக மணிமேகலை இவர்களைப் பற்றி விவரமாகப் பேசுகிறது. இந்த காலகட்டத்தில்தான் மாற்றுப் பாலினத்தவரைக் குறிப்பதற்கான சொல்லைத் தேடினேன்" 
"நங்கையுடன் திரு விகுதியைச் சேர்த்து, திருநங்கை என்று அழைப்பது எனக்குப் பிடித்திருந்தது. பிறகு, கவிஞரும் மாநிலங்களவை உறுப்பினருமான கனிமொழி மூலமாக முதலமைச்சர் மு. கருணாநிதியிடமும் இதனை விளக்கினேன். பிறகு, இந்த வார்த்தையை அதிகாரபூர்வமான வார்த்தையாக அவர் அறிவித்தார்" என்கிறார் நர்த்தகி. 
பெண்களாகப் பிறப்பவர்கள் அவர்கள் தேர்வுசெய்து பிறப்பதில்லை. ஆனால், நாங்கள் ஆணாகப் பிறந்து பெண்ணாக இருப்பதைத் தேர்வுசெய்கிறோம். நாங்கள் பெண்ணாக மாறுவதற்கான சடங்குகள் நடக்கும்போது, அடுத்த நாள் உயிரோடு இருப்போமா என்பதுகூடத் தெரியாது. ஒன்று நாங்கள் பெண்ணாக இருக்க வேண்டும் இல்லாவிட்டால் சாக வேண்டும். அப்படியான ஒரு கடினமான வழிமுறையில்தான் பெண்ணாக மாறுகிறோம். ஆகவே நாங்கள் பெண்களைவிட உயர்ந்தவர்கள் என்று சிரிக்கிறார் நர்த்தகி. 
"திருநங்கைகள் வீட்டை விட்டுத் துரத்தப்படுவதால்தான் அவர்கள் தவறான வழிகளுக்குச் செல்கிறார்கள். பசி எதையும் செய்யத் தூண்டும். ஆனால் எங்களிடம் இருந்த கலை எங்களைக் காப்பாற்றியது. ஒருபோதும் தவறு செய்து, பசி ஆற்றிக்கொள்ளக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தோம். ஒருபோதும் எங்கள் குடும்பத்துப் பெயர்களை நாங்கள் வெளியில் சொல்வதில்லை. இன்றைக்கு நாங்கள் இருக்கும் நிலை எங்கள் கடின உழைப்பால் வந்தது" என்கிறார் அவர். 
இப்போதாவது அவரது குடும்பம் அவரை ஏற்றுக்கொண்டதா? "பத்ம ஸ்ரீ விருது கிடைத்த பிறகு, நான் இத்தனை காலமாக எதற்கு ஏங்கினேனோ, அது கிடைத்தது. என் தங்கைகள், அவர்களுடைய குழந்தைகள் குதித்தார்கள். மகிழ்ச்சியடைந்தார்கள்" என்கிறார் நர்த்தகி.
அண்ணன்? "அவர் இப்போது உயிரோடு இல்லை. ஆனால், கடைசிவரை அவர் என்னை ஏற்கவில்லை. எனக்கு தந்தை பெரியார் பல்கலைக்கழகம் கௌவர டாக்டர் பட்டம் அளித்தபோது அவர் மரணப் படுக்கையில் இருந்தார். அந்தத் தருணத்தில் அவரைச் சென்று பார்த்தேன். 20 ஆண்டுகளுக்குப் பிந்தைய சந்திப்பு. அப்போதும் அவர் ஏதும் பேசவில்லை. நான் உருப்பட மாட்டேன் என்று சொன்னீர்கள். ஆனால், இப்போது ஒரு பல்கலைக்கழகம் ஒரு கௌரவ டாக்டர் பட்டத்தை அளித்திருக்கிறது என்று சொல்ல விரும்பினேன். சொல்லவில்லை. பிறகு அவர் இறந்துவிட்டார்."
இந்த கௌரவம் அவரது வலிகளை நீக்கியிருக்கிறதா என்றால், "என்னுடைய வீட்டில் பிறந்த எல்லோரும் கல்லா - மண்ணா விளையாடினோம். எல்லோரும் கல்லில் ஏறிக்கொண்டுவிட்டார்கள். நான் மண்ணிலேயே தங்கிவிட்டேன் என்று என் தாயிடம் ஒரு முறை சொன்னேன். ஆனால், இப்போது நான் நிரூபித்திருக்கிறேன்" என்கிறார் நர்த்தகி.

nantri  

https://www.bbc.com/tamil/india-47073684

No comments: