குறி அறுத்தேன் விமர்சனம். Tamil Books Review - ஜி. கே. தினேஷ்..

.

“குறி அறுத்தேன்” என்ற தலைப்பை கண்ட உடனேயே எதுவும் தவறாக கருத வேண்டாம். இவ்வுலகில் எது தான் சரி ? 

கடவுளால் கடவுளின் அர்த்தநாரீசுவரர் அவதாரமாக பிறக்கும் திருநங்கைகளை மட்டும் நாம் ஏன் தவறாக கருத வேண்டும் ?? 
சமுதாயத்தை விட்டு ஏன் ஒதுக்கி வைக்க வேண்டும். 

இந்த கவிதை நூலை விமர்சனமாக தான் எழுத முனைந்தேன். கடவுளே விமர்சனத்திற்குள்ளாகும் இந்த யுகத்தில் ஏதோ ஒன்று இந்நூலை விமர்சிக்க வேண்டாம் என உள்ளுணர வைத்தது !!! 

கடந்த வருடம் திசம்பர் மாதம் நான் விகடன் அலுவலகத்தில் சில அலுவல்களை பார்த்து கொண்டிருந்தேன். அப்போது தான் அண்ணன் கவிஞர். பழநிபாரதி யிடம் இருந்து இந்த புத்தகத்திற்கு அணிந்துரை வந்தது. ஆக சிறந்த அணிந்துரை என்று சொல்லலாம் ! 

கல்கி அவர்கள் என் முகநூல் நண்பர். என் முகநூல் ஆரம்பகாலத்தில் இருந்தே அவர்களின் நட்பு வட்டத்தில் உள்ளேன். அவரது முகநூலில் கவிதைகளை இடுவார். தனி தனி கவிதைகளாக படிப்பதை புத்தக வடிவில் படிக்கும் போது வேறு ஒரு உலகத்திற்கு அழைத்து சென்று விடுகிறது. 

திருநங்கைகள் வாழ்க்கையில் தான் எத்தனை எத்தனை உணர்வுகள் ! 

ஒட்டு மொத்த புத்தகத்தில் என்னை கவர்ந்த கவிதை இது !!! 

குறி 
அறுத்தேன் 
________________ 
மாதவம் ஏதும் 
செய்யவில்லை 
நான். 
குறி அறுத்து 
குருதியில் 
நனைந்து 
மரணம் கடந்து 
மங்கையானேன். 
கருவறை 
உனக்கில்லை 
நீ 
பெண்ணில்லை 
என்றீர்கள். 
நல்லது. 
ஆண்மையை 
அறுத்தெறிந்ததால் 
சந்ததிக்கு 
சமாதி கட்டிய 
பட்டுப்போன 
ஒற்றை மரம் நீ, 
விழுதுகள் இல்லை 
உனக்கு, 
வேர்கள் 
உள்ளவரை மட்டுமே 
பூமி உனை தாங்கும் 
என்றீர்கள். 
நல்லது. 
நீங்கள் கழிக்கும் 
எச்சங்களை, 
சாதி வெறியும் 
மதவெறியும் 
கொண்டு நீங்கள் 
விருட்சமாக்க 
விதைபோட்ட 
உங்கள் மிச்சங்களை 
சிசுவாக சுமக்கிற 
கருவறை 
எனக்கு வேண்டாம். 
உங்கள் 
ஏற்றத்தாழ்வு 
எச்சங்களை 
சுமந்ததால் 
பாவம் 
அவள் கருவறை 
கழிவறை ஆனது. 
நல்லவேளை 
பிறப்பால் 
நான் பெண்ணில்லை. 
என்னை பெண்ணாக 
நீங்கள் 
ஏற்க மறுத்ததே 
எனக்குக்கிடைத்த விடுதலை. 
பெண்மைக்கு 
நீங்கள் வகுத்துள்ள 
அடிமை இலக்கணங்களை 
நான் வாசிப்பதில்லை. 
என்னை இயற்கையின் பிழை 
என்று தாராளமாய் 
சொல்லிக்கொள்ளுங்கள். 
நான் யார் என்பதை 
நானே அறிவேன். 
மதம் மறந்து 
சாதி துறந்து 
மறுக்கப்பட்டவர்கள் 
ஒன்றுகூடி 
வாழும் வாழ்க்கையை 
வாழமுடியுமா 
உங்களால்? 
கருவில் 
சுமக்காமலேயே 
தாயாக முடியுமா 
உங்களால்? 
மார்முட்டி பசியாறாமலேயே 
மகளாக முடியுமா 
உங்களால்? 
என்னால் முடியும். 
உங்களின் ஆணாதிக்க 
குறியை அறுத்துக்கொள்ளுங்கள். 
நீங்கள் யார் என்பதை 
அப்போது 
நீங்கள் அறிவீர்கள். 
பிறகு சொல்லுங்கள் 
நான் பெண்ணில்லை என்று. 
-திருநங்கை கல்கி சுப்ரமணியம் – 

image 

என்னை கவர்ந்த இதர கவிதைகள்: 

எழுந்திரடி என் தங்கமே 
விதியை எழுதினேன் 
தாயம்மாவும் தாயுமானவனும் 
முன் குறிப்பு 
ஏதோ ஒன்று 
உன் மூச்சு 
கள் குடித்த கரடி 
வல்லூறுகளும் நீயும் 
தெளிவைத்தேடு 

கல்கி சுப்பிரமணியம் அவர்கள் 
புலப்படாத இருட்டில் இருந்து புலப்பட்ட கீற்று ! 

வாழ்த்துகள்.. 

நான் படித்த எண்ணற்ற நூல்களில் ஆக சிறந்த கவிதை நூல் இது !!! 

அடுத்த புத்தகம் எப்போது என்ற எதிர்பார்ப்புகளுடன் 
ஜி. கே. தினேஷ்..

nantri eluthu.com

No comments: