என்னைப் புரிந்துகொள்ள முடியாது!- நேர்காணல்: இளையராஜா

.

‘பாடல்கள் ஒரு கோடி.. எதுவும் புதிதில்லை… ராகங்கள் கோடி… கோடி… அதுவும் புதிதில்லை. எனது ஜீவன் நீதான்.. என்றும் புதிது’ எனத் தனது ரசிகர்களைப் பார்த்து உருகும் ஒப்பற்ற கலைஞர் இசைஞானி இளையராஜா.
75 வயதுக்குரிய முதுமை, தன்னைத் தொட்டுப் பார்க்க அனுமதிக்காத இந்த இளமை ராஜா, இசையுலகின் எட்டாவது சுரம். தலைமுறைகள் கடந்து கணினியில் மூழ்கிக் கிடக்கும் இன்றைய தலைமுறையின் ஸ்மார்ட் போனிலும் லேப் டாப்பிலும் குடியிருக்கும் ராகதேவன். அவரது 75-வது பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாகத் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் முன்னெடுக்கும் ‘இளையராஜா 75’ நிகழ்ச்சியைக் காண உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் காத்திருக்கும் வேளையில்… அதற்கான ஒத்திகையில் ஈடுபட்டிருந்தவரை அவரது இசைக்கூடத்தில் சந்தித்து உரையாடியதிலிருந்து…

இசை, ஆன்மிகம் இந்த இரண்டுக்கும் அப்பால், இளையராஜாவை இத்தனை இளமையாக வாழ்வித்துக்கொண்டிருப்பது எது?
இந்த இரண்டுக்கும் அப்பால் எதுவுமில்லை. இரண்டு என்பதைவிட ஒன்று சொல்வதே சரி. என் இசையும் ஆன்மிகம்தான், ஆன்மிகம் என்பதே இசைதான். இளமையாக இருக்க வேண்டும் என்று யாராவது முயற்சித்தால் அது முடியாது. ஆகிற வயது ஆகியே தீரும்.


உங்களது முதல் ஆர்மோனியம் இன்னும் உங்களிடம் இருக்கிறதா?
இன்னும் அதைப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறேன். அண்ணன்கள் அதை கோயமுத்தூரிலிருந்து வாங்கிக்கொண்டு வந்திருந்தார்கள். அதை நான் தொட்டால், தொட்ட கையைப் பிரம்பால் அடிப்பார்கள். அதைத் தொடாதே கெட்டுப்போய்விடுவாய் என்றார்கள். அவர்கள் இல்லாத நேரத்தில் அதைத் தொட்டுத் தொட்டுத்தான் நான் கெட்டுப்போனேன். காதலனும் காதலியும் சந்திப்பதைப் போல, அண்ணன்கள் இல்லாத நேரத்தில் அதை எடுத்து வைத்து வாசித்து இசைக்கக் கற்றுக்கொண்டேன். எனக்காகவே உருவாக்கப்பட்டது என்பது அந்த ஆர்மோனியத்துக்குத் தெரியும். ‘எனக்குள்ளிருந்து வர வேண்டிய இசை இன்னும் எவ்வளவோ இருக்கிறது’ என்று அது அடிக்கடி என்னிடம் கூறிக் கொண்டிருப்பதும் எனக்குப் புரியும்.
‘நினைவுகளைத் தூண்டி விடுவதுதான் உங்கள் இசையின் உச்சம். ஒவ்வொரு பாடலுமே வேறோர் உலகத்துக்கு அழைத்துச் செல்கிறது என்கிறார்கள்’. ரசிகர்களுக்கு மட்டும்தான் இந்த உணர்வா; மெட்டமைக்கையில் நீங்களும் வேறோர் உலகத்தில்தான் இருக்கிறீர்களா?
என்னிடம் கதையையும் பாடல்களுக்கான சூழ்நிலைகளையும் கூற இயக்குநர் மட்டுமே வருவார். கூறி முடித்தபின் அவரும் இருக்க மாட்டார். ஆனால் இயக்குநர் உருவாக்கி, அறிமுகப்படுத்திய கதாபாத்திரங்கள் எனது அறையில் இருப்பார்கள். இப்போது ஆர்மோனியப் பெட்டியில் கைவைத்தால் மெட்டுகள் வந்துகொண்டே இருக்கும். அது வேறோர் உலகம் என்று நீங்கள் அடையாளப்படுத்திக்கொண்டால் அது தவறில்லை. இன்றும் அது விவரிக்க முடியாத அனுபவம்தான். இசையமைத்தபின் ரசிகர்களின் உணர்வுடன் எப்படி அது கலக்கிறது என்பதும், அதைத் தங்களுடைய இசையாக எண்ணி அதில் அவர்கள் எப்படிக் கரைந்து போகிறார்கள் என்பதும் மிராக்கிள்தான்.
உங்கள் பாடல்களைத் திரையில் பார்த்துக்கொண்டே கேட்பது, பார்க்காமல் கேட்க மட்டுமே செய்வது என ரசனையில் இருக்கும் வேறுபாட்டைக் கவனித்திருக்கிறீர்களா?
கேட்பதற்கும் பார்த்து உணர்வதற்கும் இடையில் வேறுபாடு இருப்பதாக நான் நினைக்கவில்லை. இருப்பினும், இசை மட்டுமே கரைந்துபோகாமல் இறுதிவரை எஞ்சி நிற்கிறது. காட்சிகளைப் பார்ப்பதற்கு இசை துணை புரிகிறது. இசையைக் கேட்டுவிட்டு, அதைக் காட்சியுடன் கண்டு ரசிக்க எதிர்பார்ப்புடன் திரையரங்கு செல்லும் பார்வையாளர்கள், பாடலுக்கான காட்சிகளைப் பார்த்து சரியாக ‘பிக்சரைசேஷன்’ செய்யவில்லையே என நினைக்கச் செய்த படங்கள் அதிகமுண்டு. ஒரு இடைவெளிக்குப்பின் பாடலை நினைக்கும்போது அந்தப் பாடலுக்கான காட்சியும் நினைவுக்கு வந்தால் அது அந்தக் காட்சியை உருவாக்கிய இயக்குநரின் திறமை, தனித்தன்மை என்று எடுத்துக்கொள்ளலாம். ஆனால், எந்தப் படத்துக்காக நான் இசையமைத்தேன் என்பதையே ஒரு சில ஆண்டுகளுக்குப்பின் மறந்துவிடுகிறார்கள். படத்தை மறந்துவிட்டுப் பாடலை மட்டுமே நினைவில் வைத்துக்கொள்கிறார்கள். அவர்களது கவலை, துக்கம் போக்கவும், தூங்கவும்; ஏன் தூங்காமல் உழைக்கவும் என் பாடல்களை கூடவே வைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

இசையமைப்பு உங்களுடையது; பாடல் உருவாக்கத் தில் அதைப் பாடுவதும் கருவிகளில் இசைப்பதுமான சக கலைஞர்களின் பங்களிப்பை எப்படிப் பார்க்கிறீர்கள்?
மிக முக்கியமான விஷயமாக இதைப் பார்க்கிறேன். இன்றைக்கும் எத்தனையோ இசைக்கருவிகளைப் பயன்படுத்தித்தான் நான் இசையமைத்துக்கொண்டிருக்கிறேன். சற்றுமுன் ரிகர்சலில் பார்த்தீர்கள்தானே. ஒரு பாடலில் எத்தனை பேர் வாசித்தார்கள். அத்தனை பேரும் கொடுக்கப்பட்ட இசைக்குறிப்புகளை அனுபவித்து, ரசித்து உணர்வுபூர்வமாக வாசித்து வரக்கூடிய அந்த ஜீவன் முழுவமும் சேர்ந்துதானே உங்களை மயக்குகிறது, ஆட்கொள்கிறது அல்லது உங்களை வசப்படுத்துகிறது. ஒரு கலை என்றால் அதில் பெர்ஃபாமென்ஸ் இருக்க வேண்டும். பெர்ஃபாமென்ஸ் இல்லையென்றால், அது இசை அல்ல. எஸ்.எம்.எஸ். டைப் செய்வதுபோல கம்ப்யூட்டரில் புரோகிராம் செய்துவிட்டு இசை என்று சொன்னால் அதை எப்படி ஏற்றுக்கொள்வது?
‘இந்த ட்யூன் வேண்டாம், வேறு ஒன்று தாருங்கள்’ என்று கேட்கும் இயக்குநர்களைப் பார்த்திருப்பீர்கள். இப்படி ஒதுக்கப்பட்ட மெட்டுக்களை என்ன செய்வீர்கள்?
இந்த ட்யூன் வேண்டாம் என்று சொல்ல மாட்டார்கள். இன்னொரு ட்யூன் பார்க்கலாமா சார் என்றுதான் கேட்பார்கள். ‘முரட்டுக்காளை’ படத்துக்குப் பாடலை கம்போஸ் செய்துகொண்டிருந்தேன். இயக்குநர் கூறிய சூழ்நிலைக்கு ‘ஏ ஆத்தா.. ஆத்தோரமா வாரியா’ பாடலின் மெட்டு பிறந்தது. ஆனால், இயக்குநர் எடுத்துக்கொண்டது ‘பொதுவாக எம்மனசு தங்கம்’ பாடலை. இரண்டு பாடல்களும் ஒரே போன்று இருக்கும். இருந்தாலும் இது வேறு, அது வேறு. ‘மூடுபனி’ படத்துக்கான கம்போஸிங். பாலுமகேந்திரா ‘என் இனிய பொன் நிலாவே’ மெட்டைத் தேர்வு செய்துவிட்டார். அவர் கூறிய சூழ்நிலைக்கு முதலில் நான் மெட்டமைத்தது ‘இளையநிலா பொழிகிறதே’. இப்படி இடம் மாறிய படம் மாறிய பாடல்களின் பட்டியல் பெரியது.
இசைக்கு மொழியில்லை என்று கூறியிருக்கிறீர்கள். உங்கள் பாடல்களில் வரும் இண்டர்லூட் இசையை மொழியற்ற இசைக்கு உதாரணமாகக் கூறலாமா?
நீங்கள் எப்படி கூறிக்கொண்டாலும் எனக்கு மகிழ்ச்சிதான்.
‘ஹவ் டு நேம் இட்’, ‘நத்திங் பட் விண்ட்’ ஆகியவற்றுக்குப் பிறகு மொழியற்ற இசையை உங்களிடமிருந்து யாசித்துக் காத்திருக்கும் ரசிகர்களுக்கு அடுத்து என்ன தரப்போகிறீர்கள்?
அதற்கு ஏற்ற சூழ்நிலை அமைய வேண்டும். எந்த நேரத்திலும் அது பிறக்கலாம். ‘ஹவ் டு நேம் இட்’, ‘நத்திங் பட் விண்ட்’ ஆகியவற்றைக் கேட்டுவிட்டு கமல் என்னிடம் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அவரிடம் ‘நத்திங் பட் விண்டு’க்காக இசையமைத்த ஒரு பேஸ் ஃபுளூட் பீஸை, அதில் நான் பயன்படுத்தவில்லை என்றேன். அவருக்கு ஆர்வம் மிகுதியாகிவிட்டது… ‘என்ன அது… எனக்கு உடனே வாசித்துக்காட்டுங்கள்’ என்றார். அந்த பீஸை அவருக்குப் பாடிக் காட்டினேன். ‘ரொம்ப நல்லா இருக்கே.. நம்ம படத்துக்கு பாடலாகப் போட்டுவிடலாமா?’ என்றார். இல்லை இது புல்லாங்குழல் வழியே புறப்பட்டு வரவேண்டிய இசை, ஹரிபிரசாத் சௌராசியா வாசிப்பதற்காக வடிவமைத்தது என்றேன். ‘இல்லை… இல்லை இதையே எனக்குப் பாட்டாக்கித் தாருங்கள்’ என்றார். அந்தப் புல்லாங்குழல் இசைத் துணுக்கிலிருந்து பிறந்த அந்தப் பாடல் ‘வளையோசை கலகல கலவெனக் கவிதைகள் படிக்குது.. குளு குளு தென்றல் காற்றும் வீசுது’. இப்படிக் கருவிக்காக வடிவமைத்த இசையை ரசிகர்களுக்குப் பாடலாகவும் கொடுத்துக்கொண்டுதான் இருக்கிறேன்.
நீங்கள் இசையமைத்த படங்களில் இருக்கும் தீம் இசைகளை மட்டும் தொகுத்து ஒரு ஆல்பமாகத் தரும் திட்டம் இருக்கிறதா?
நல்ல திட்டம்தான். அப்படி வெளியிட்டால் அதை எடுத்துத் தொலைக்காட்சித் தொடர்களில் பயன்படுத்தி வீணடித்துவிடுவார்கள் என்பதற்காகவே. நான் அதைச் செய்யாமல் வைத்திருக்கிறேன். அப்படியிருந்தும் திரைப்படங்களில் எடுத்தாள்கிறார்கள். எடுத்தாளப்படும் என் இசை இடம்பெறும் காட்சிகள் வரும்போது இசைக்காகக் காட்சியின் அபத்தங்களைப் பார்வையாளர்கள் மன்னித்துவிடுகிறார்கள். எனது இசையின் பாதிப்பிலிருந்து தொலைக்காட்சித் தொடர் இயக்குநர்கள் மட்டுமல்ல; திரை இயக்குநர்களும் வெளியே வர முடியாத நிலைதானே இருக்கிறது.
இன்று திரையிசையின் ஒரு பகுதியாகவே நாட்டுப்புறப் பாடல்கள் மாறியிருக்கின்றன. அதற்கான அஸ்திவாரத்தைப் போட்டுத் தந்தவர் நீங்கள். உங்களுக்கு உந்துசக்தியாக இருந்த, நாட்டுப்புற இசையின் அசலான வேர்களைத் தொகுக்கும் எண்ணம் இருக்கிறதா?
இசையை நான் பிரித்துப் பார்க்க விரும்பவில்லை. நான் போட்ட பாடல்கள் நாட்டுப்புற இசை என்று நீங்கள் சொல்கிறீர்கள். அது கிளாசிக் என்பது உங்களுக்குத் தெரியாது. ‘மாங்குயிலே பூங்குயிலே’ பாடல் எந்த நாட்டுப்புற இசை? அதற்கு எங்கே ரெப்பரென்ஸ் இருக்கிறது. அது நான் போட்டது. அதைப் போல ஒரு கிளாசிக் கிடையவே கிடையாது. நாட்டுப்புற இசை என்றால், பத்துப் பதினைந்து பாடல்களோடு முடிந்துபோய்விடும். நாட்டுப்புற இசையை மட்டுமே நான் பயன்படுத்திக்கொண்டிருக்கிறேன் என்றால் அந்தப் பதினைந்து பாடல்களுக்குப்பின் எங்கே போவது? தவிலையும் உருமியையும் பயன்படுத்திப் பாடினால் அது நாட்டுப்புற இசையாகிவிடுமா? காந்தி கிராமம் பல்கலைக்கழகத்தில் அண்ணகாமு என்பவர் இருந்தார். அவர் தமிழகம் முழுவதும் பாடப்பட்ட கிராமியப் பாடல்களைத் தேடித் தொகுத்திருந்தார். அதை பத்மா சுப்ரமணியமும் அவரது அண்ணியார் ஷியாமளா பாலகிருஷ்ணனும் சுரப்படுத்தி ஆல்பமாக வெளியீட்டு விட்டார்கள். சினிமாவுக்கு வரும்முன்பே அந்த ஆல்பத்துக்கு வேலைசெய்து கொடுத்துவிட்டுத்தான் வந்தேன்.
இளையராஜா எனும் கவிஞரை, பாடலாசிரியரை அறிவோம். ஆனால், இளையராஜா எனும் கதாசிரியர் ‘நாடோடித் தென்றல்’ படத்துக்குப் பின் முகம் காட்டவே இல்லையே?
‘நாடோடித் தென்றல்’ என்னுடைய கதையே அல்ல. எனது பெயரைப் போட்டுக்கொள்ள வேண்டும் என்பதற்காக போட்டனர். நான் கூறிய கதையை அவர் எடுக்கவேயில்லை. அந்தக் கதை இன்னும் காத்துக்கொண்டிருக்கிறது. அதைப் படாமக்க விரும்பும் யாரும் என்னிடம் அதைக் கேட்க வரலாம். அதுவொரு கிளாசிக். அது மாதிரியான படங்களை எடுக்க இப்போது யாரும் வரமாட்டார்கள்.
உங்களது சில மேடைக் கச்சேரிகளில் கவனித்திருக்கிறேன். இசைக் கலைஞர்கள் வாசிப்பதில் சின்னத் தவறு வந்தாலும் அந்த இடத்திலிருந்து மீண்டும் வாசிக்க வைத்துவிடுவீர்கள். இது தரத்துக்கான பிடிவாதமா, ரசிகர்களுக்குப் புதிய அனுபவமாக இருக்கட்டும் என்பதற்காகவா?
நீங்கள் மார்கெட்டிங் செய்கிறீர்களா என்பதுபோல் கேட்கிறீர்கள். என்னைப் போன்ற ஒரு கலைஞனுடைய உண்மையான மனநிலையை உங்களால் புரிந்துகொள்ள முடியாது. முப்பது வருடங்களுக்கு முன் போட்ட பாடலை, தினசரி கேட்கும் பாடலை மறுபடியும் தவறாக வாசித்தால் அதை எப்படிச் சகித்துக்கொள்வது. இப்படித் தவறுகள் நடக்கும்போது என்னால் சகிக்க முடியவில்லை.
உங்களது இசைக்காக ஏங்கும் ரசிகர்களுக்கு நீங்கள் இசையமைத்த சிம்பொனியை எப்போது கொடுக்கப்போகிறீர்கள்?
எனது ஒவ்வொரு பாடலுமே சிம்பொனிதான். இதுவரை உலகம் முழுவதும் உள்ள கம்போஸர்கள் உருவாக்கிய சிம்பொனிகளைக் கேட்டுக் கேட்டு ரசித்து, சிம்பொனி என்றால் என்னவென்று புரிகிற ஒரு காலம் இங்கே வரும்போது அதை வெளியிடுவதுதான் சரியாக இருக்கும். அந்தக் காலமும் நேரமும் கூடி வரும்போது கண்டிப்பாக அது வெளியே வரும். அந்த சூழல் சீக்கிரமே உருவாக வேண்டும் என்று இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

nantri tamil.thehindu.com

No comments: