.
அலுவலகத்துக்கு செல்கிறீர்கள். அங்கே வழக்கமாக ஜோக் அடிக்கும் ஆபிஸ் நண்பருடன் ஐந்து நிமிடம் பேசுகிறீர்கள். மதியம் அனைவருடனும் சேர்ந்து உணவு உண்கிறீர்கள்.
மாலை மகளின்/மகனின் டியூசன் வகுப்புக்கு சென்று அங்கே இருக்கும் பிற குழந்தைகளின் தாய்,தந்தையருடன் உரையாடுகிறீர்கள். அதன்பின் வாக்கிங் போகையில் வழக்கமாக அங்கே வாக்கிங் வரும் நண்பருடன் பேசியபடி நடந்து செல்கிறீர்கள்.
ஆழமற்ற இத்தகைய காஷுவல் நட்புகள், உரையாடல்கள் கூட உங்கள் இதயநலன், மனநலனை வலுப்படுத்தும் என ஆய்வுகள் கூறுகின்றன. முன்பெல்லாம் ஆழமான நட்புகள், உறவுகள் தான் இதயநலன், மனநலனை வலுப்படுத்தும் என நம்பிக்கொண்டிருந்தார்கள். ஆனால் இப்போது "சோஷியல் இன்டெக்ரேஷன்"- அதாவது பலவித நட்புகள்/உறவுகள் கொண்ட ஒருவரின் உறவுச்சங்கிலியின் ஒவ்வொரு இணைப்பும் நம் இதயநலன், மனநலனை வலுவாக்கும் என கண்டறிந்து வருகிறார்கள்.
நீன்ட ஆயுள், நோய்நொடியற்ற வாழ்க்கை வாழும் பெரும்பகுதியினர் இப்படி ஒரு பெரிய நட்பு/உறவு வட்டத்தில் இருப்பவர்களாகவே இருக்கிறார்கள். வாரம் ஒரு கல்யானம், மாதம் ஒரு வளைகாப்பு என நாம் அலுத்துக்கொன்டாலும் அங்கே அத்தனை உறவுகள், நட்புகளை சந்திக்க முடிவது, திருவிழாக்கள், விசேசங்களில் உரையாட முடிவது அனைத்துமே நம் இதயநலன், மனநலனை வலுவாக்குகின்றன.
நம் கெட்ட வழக்கங்கள் பலவற்றையும் இத்தகைய உறவுச்சங்கிலிகள் களைகின்றன எனவும் கண்டறிகிறார்கள். பொது இடத்தில் நிறைய பேருடன் பழகுபவர் கெட்ட பெயருடன் இருக்க முடியாது. அதற்காகவே மெனகெட்டு சில மாற்றங்களை செய்துகொள்ள வேண்டும்.
இதில் நெகடிவ் ஆக இருக்கும் உறவுகள் கூட ஆயுளை வலுவாக்குவதாக ஒரு ஆய்வு கூறுகிறது. நோய்வாய்ப்பட்டு இருந்தவர்கள் நிறைய பேர் தம்மை வந்து பார்ப்பதாக புகார் கூறினார்கள். ஆனால் அப்படி வந்து பார்ப்பதும், விசாரிப்பதுமே அவர்களின் நலனை மேம்படுத்திவிடுகிறது.
விரைவில் மாரடைப்பு வருவது யாருக்கு, மனநலன் குன்றுவது யாருக்கு என பார்த்தால் இப்படி ஒரு நட்பு/உறவு வட்டம் இல்லாமல் தனிமையில் வாழ்பவர்களுக்கு தான். அப்படி வாழ்வது தினம் 15 சிகரெட் குடிப்பதற்கு ஒப்பானதாம்.
அதனால் போகும் இடங்களில் அனைவரையும் சந்தித்து நலம் விசாரித்து உரையாடவும். தினமும் ஒரு 10 பேரையாவது சந்தித்து உரையாடவும். விழாக்கள், விசேசங்களில் போனை கையில் வைத்துக்கொண்டு பேஸ்புக்கில் மூழ்குவதை தவிர்க்கவும் :-)
ஒவ்வொரு சிறிய புன்னகையும், உரையாடலும், காலை வணக்கமும், நம் ஆயுள், மனநலனை மேம்படுத்தும். நீங்கள் சேர்க்கும் ஒவ்வொரு உறவும், நட்பும் உங்கள் உடலநலன், மனநலனை மேம்படுத்தும். அது எத்தனை ஆழமான நட்பு என்பது முக்கியமில்லை.
ஒரு கணக்குப்படி ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு பிரச்சனை என வந்தால் முன் நின்று அதை தீர்ப்பவர்கள் என 12 பேர் இருப்பார்களாம். அந்த 12 பேர் யார் என கணக்கிடுங்கள். அவர்களுடன் வாரம் ஒரு முறையாவது போனை எடுத்தாவது பேசிவிடுங்கள். நேரில் சந்தித்தால் இன்னமும் நல்லது.
ஆன்லைன் நட்புகளை பொறுத்தவரை அவை "எந்த நட்பும் இல்லாததை விட மேல்" என்பதுதான் நிலை. ஆனால் நேருக்கு நேர், முகம் பார்த்து பழகும் நட்புகள், உறவுகள்மூலம் அடையும் நலன்களுக்கு அவை ஈடு ஆகாது என்றே ஆய்வுகள் கூறுகின்றன. நிறைய நேரம் சோஷியம் மீடியாவில் செலவு செய்பவர்கள் ஒருவிதமான தனிமையில் தம்மை அறியாமல் ஆழ்ந்து விடுகிறார்கள். அது நல்லது அல்ல.
மனிதன் சமூக விலங்கு...சமூகமாக கூடிவாழ்வதே நமக்கு ஆரோக்கியமான விசயம்
No comments:
Post a Comment