19/12/2019 தோட்டத்தொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தை 1000 ரூபாவாக அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்தி கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக மலையக இளைஞர்கள் மூவர் மேற்கொண்டிருந்த உண்ணாவிரதப் போராட்டம் இன்று இரண்டாவது நாளாகவும் தொடர்ந்த நிலையில், சற்று சுமார் 9.30 மணியளவில் அவர்களை அங்கிருந்து பொலிஸார் அகற் முற்பட்டமையின் காரணமாக அங்கு பதற்றமானதொரு சூழ்நிலை தோன்றியது. 
மலையக தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை சம்ளத்தை ஆயிரம் ரூபாவாக அதிகரிக்குமாறு கோரி தலவாக்கலையை சேர்ந்த கணேஷன் உதயகுமார் மற்றும் ஹப்புத்தளையை சேர்ந்த கந்தையா அஷோக்குமார் ஆகிய இரு இளைஞர்களும் நேற்று செவ்வாய்கிழமை கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர். இந்நிலையில் இன்று புதன்கிழமை பொகவந்தலாவையை சேர்ந்த கனகரத்தினம் ராஜா என்ற இளைஞர் மூன்றாவதாக மேற்படி போராட்டத்தில் இணைந்து கொண்டார். 
கூட்டுஒப்பந்தத்தின் மூலம் தோட்டத் தொழலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டும். முதலாளிமார் சம்மேளனம், தொழிற்சங்கங்கள் மற்றும் அரசாங்கம் ஆகிய மூன்று தரப்பினதும் கவனத்தை ஈர்க்கும் வகையிலேயே இங்கு போராட்டத்தை முன்னெடுத்துள்ளோம். வாக்குறுதிகளை வழங்கிவிட்டு இனியும் ஏமாற்றலாம் என அரசியல்வாதிகள் நினைக்க கூடாது. எமக்கான சம்பள உயர்வு பெற்றுக்கொடுக்கப்படாவிட்டால், தேர்தல்களின் மக்கள் தமது பிரதிநிதிகள் என ஏற்காது நிராகரித்து, அரசியல் அநாதைகளாக்குவார்கள். எனவே சம்பள உயர்வை பெற்றுத்தர வேண்டும் எனப் போராட்டக்காரர்கள் வலியுறுத்தி இருந்தனர்.
இந்நிலையிலேயே சற்றுமுன்னர் இரவு 9.30 மணியளவில் கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த அவர்களை பொலிஸார் அங்கிருந்து அகற்ற முற்பட்டுள்ளனர். அதனால் அங்கு பதற்றமானதொரு சூழ்நிலை ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.