ஹிட்லரின் பெயரை குழந்தைக்கு சூட்டிய பெற்றோருக்கு நேர்ந்த விபரீதம்
துருக்கியில் 2 ஆயிரம் பேருக்கு ஆயுள் தண்டனை
இந்தோனேசியாவில் சுனாமி ; 20 பேர் பலி, 165 பேர் காயம்
ராஜஸ்தானுக்கு கர்ப்பிணிகள் செல்ல வேண்டாம் - அமெரிக்கா எச்சரிக்கை
புட்டினுக்கு மீண்டும் திருமணம்?
விஷால் கைது
சுனாமியால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரித்தது
ஹிட்லரின் பெயரை குழந்தைக்கு சூட்டிய பெற்றோருக்கு நேர்ந்த விபரீதம்
19/12/2018 பிரிட்டனின் பேன்பரி நகரைச்சேர்ந்து தம்பதிகளின் குழந்தைக்கு ஹிட்லரின் பெயரை வைத்ததால் சிறைத்தண்டனை வழங்கி அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பிரிட்டனின் பேன்பரி நகரத்தைச் சேர்ந்த தம்பதிகளான 22 வயது அடம் தோமஸ் மற்றும் 38 வயது க்ளவுடியா பட்டஸ் நாஜி தத்துவங்களை செயல்படுத்த முனையும் நவ நாஜிக்களாவர்.
இவ்விருவருக்கும் வன்முறையை தூண்டும் இனவெறி குறித்த நம்பிக்கைகள் இருந்ததற்கான பதிவுகள் இருப்பதாக நீதவான் நீதிபதி தெரிவித்துள்ளார்.
இத் தம்பதிகள் தங்களது குழந்தையின் பெயருக்கிடையில் ஹிட்லரை போற்றும் விதமாக அடால்ஃப் எனப் பெயர் வைத்துள்ளனர்.
இதன் காரணமாக தோமஸுக்கு ஆறு ஆண்டுகள் மற்றும் ஆறு மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் க்ளவுடியாவுக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
துருக்கியில் 2 ஆயிரம் பேருக்கு ஆயுள் தண்டனை
19/12/2018 இராணுவப் புரட்சியில் ஈடுபட்டதாகக் கூறி கடந்த 2016 ஆம் ஆண்டு கைதுசெய்யப்பட்ட 2 ஆயிரம் பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து அந் நாட்டு தீர்ப்பளித்துள்ளது.
துருக்கியில் இடம்பெற்ற இராணுவ ஆட்சியை முடிவுக்கு கொண்டு வருவதற்காக கடந்த 2016 ஆம் ஆண்டு துருக்கியின் அப்போதைய ஜனாதிபதி டையிப் எதுர்வானின் வேண்டுகோளுக்கு இணங்க மக்கள் இராணுவத்துக்கு எதிராக வீதிகளில் இறங்கி போராட்டங்களை மேற்கொண்டனர்.
இச் சம்பவத்தின் போது ஏராளமானோர் உயிரிழந்ததுடன், இராணுவ அதிகாரிகள், வீரர்கள், நீதிபதிகள் மற்றும் அரச உர் அதிகாரிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கைதுசெய்யப்பட்டனர்.
தற்போது அவர்கள் மீதான வழக்கு விசாரணைகள் நீதிமன்றில் இடம்பெற்று வருகின்றது.
இந் நிலையில் இது தொடர்பான தீர்ப்பு நேற்று நீதிமன்றில் அறிவிக்கப்பட்டது. அதில் 2 ஆயிரம் பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
இவர்களில் 1934 பேர் தங்கள் ஆயுள் முழுவதும் சிறையில் தண்டனை அனுபவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே 938 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
இந்தோனேசியாவில் சுனாமி ; 20 பேர் பலி, 165 பேர் காயம்
23/12/2018 இந்தோனேசியாவின் சுந்தா தீவை சுனாமி தாக்கியதில் சுமார் 20 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 165 பேர் வரையில் காயமடைந்துள்ளதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
குறித்த சுனாமி அனர்த்தம் நேற்று (22-12-2018) சனிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.
சுனாமி தாக்கத்திற்குள்ளான தீவான சுந்தா, இந்தோனேசியாவின் ஜாவா மற்றும் சுமத்ரா தீவுகளுக்கு மத்தியில் அமைந்துள்ளது.
குறித்த பகுதியில் எரி மலையொன்று வெடித்த பின்னர் அங்கு நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாகவும் அதன்பின்னரே குறித்த சுனாமி தாக்கியதாகவும் இந்த சுனாமி அனர்த்தத்தின்போது பல கட்டிடங்கள் இடிந்து வீழ்ந்துள்ளதாகவும் அந்நாட்டு அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
குறித்த சுனாமி இந்தோனேசியாவின் பல தீவுகளையும் லம்பெக்கை சுற்றியுள்ள கடற்கரை பகுதிகளையும் சுந்தா தீவின் பல பகுதிகளையும் தாக்கியுள்ளதாக இந்தோனேசிய வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
ராஜஸ்தானுக்கு கர்ப்பிணிகள் செல்ல வேண்டாம் - அமெரிக்கா எச்சரிக்கை
22/12/2018 இந்தியாவுக்கு சுற்றுலா செல்லும் அமெரிக்கர்களில், கர்ப்பிணிகள் யாரும் ராஜஸ்தான் மற்றும் அதன் அண்டை மாநிலங்களுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
இந்தியாவுக்கு சுற்றுலா செல்லும் அமெரிக்கர்களில், கர்ப்பிணிகள் யாரும் ராஜஸ்தான் மற்றும் அதன் அண்டை மாநிலங்களுக்கு செல்ல வேண்டாம் என்று அமெரிக்காவின் தேசிய அளவிலான நோய் கட்டுப்பாட்டு அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“மேற்கண்ட மாநிலங்களில் ”ஜிகா வைரஸ்” பாதிப்பு அதிகமாக உள்ளது. கர்ப்ப காலத்தில் இந்த வைரஸ் தாக்கினால், கடுமையான குறைபாடுடன் கூடிய குழந்தை பிறக்கும். எனவே கர்ப்பிணிகள் அங்கு செல்ல வேண்டாம்” என தெரிவித்துள்ளது. நன்றி வீரகேசரி
புட்டினுக்கு மீண்டும் திருமணம்?
21/12/2018 தான் இரண்டாவது திருமணம் செய்து கொள்ளப் போவதாக ரஷ்ய நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தெரிவித்துள்ளார்.
66 வயதாகும் புட்டின் கடந்த 31 ஆண்டுகளுக்கு முன்னர் லியுத்மிலா என்ற பெண்ணை திருமணம் செய்து, 2014 ஆம் ஆடு விவாகரத்து செய்தார். இவர்களுக்கு மரியா, கத்ரீன என இரண்டு மகள் உள்ளனர்.
இந் நிலையில் மொஸ்கோவில் ஊடகவியலாளர் ஒருவரால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த புட்டின், நான் ஒரு மதிப்பிற்குரிய நபரை திருமணம் செய்ய இருக்கிறேன் என சிரித்துக் கொண்டே பதில் அளித்தார்.
ஆனால் அவரது பெயரை வெளியிட மறுத்துவிட்டார்.
இதற்கிடையே புட்டினுக்கும், ரஷ்ய முன்னாள் ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக் வீராங்கனை அலினா கபேவா (34) என்பவருக்கும் இடையே தொடர்பு இருப்பதாக முன்னதாக தகவல்கள் வெளிவந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
விஷால் கைது
20/12/2018 தயாரிப்பாளர் சங்கத்திற்கு பூட்டு உடைக்க முயன்ற விஷால் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
விஷாலுக்கு எதிர்ப்பு தெரிவித்து தயாரிப்பாளர்களில் ஒரு குழுவினர் தயாரிப்பாளர் சங்கத்துக்கு நேற்று பூட்டு போட்ட நிலையில், அதனை உடைத்த விஷால் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டனர்.
நடிகர் விஷால் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராகவும் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொது செயலாளராகவும் பொறுப்பு வகித்து வருகிறார்.
இந்நிலையில் விஷாலுக்கு எதிராக தயாரிப்பாளர்களில் ஒரு பகுதியினர் போர்க்கொடி தூக்க தொடங்கினார்கள். பொதுக்குழுவை கூட்டவில்லை, வைப்பு நிதியில் முறைகேடு, வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை, பட வெளியீட்டில் பாரபட்சம், இளையராஜா இசை நிகழ்ச்சிக்கு சங்க பொதுக்குழு கூட்டாமல் தன்னிச்சையாக முடிவெடுக்கப்பட்டது உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று தயாரிப்பாளர் சங்கத்துக்கு சென்று போராட்டம் நடத்தினார்கள்.
ஏ.எல். அழகப்பன், டி.சிவா, எஸ்.ராதாகிருஷ்ணன், எஸ்.வி.சேகர், நந்தகோபால், மைக்கேல் ராயப்பன், தனஞ்செயன் உட்பட சுமார் 50 பேர் திரண்டனர். அவர்கள் சங்க அலுவலகத்துக்கு பூட்டு போட்டனர்.
மூத்த இயக்குனர் பாரதிராஜா தலைமையில் முதலமைச்சரை சந்தித்து விஷால் மீதான குற்றச்சாட்டுகளை கூற நேற்று முயற்சி செய்தனர். அவர்களுக்கு இன்று காலை அனுமதி கிடைத்துள்ளது என அரச தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாரதிராஜா தலைமையிலான தயாரிப்பாளர்கள் முதலமைச்சரிடம் சினிமா சங்கங்களில் நிலவும் பிரச்சினைகளை சமாளிக்க ஒழுங்கு நடவடிக்கை குழு அமைக்க கோரிக்கை விடுக்கப்போவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் விஷால் மற்றும் அவருக்கு ஆதரவான தயாரிப்பாளர்கள் இன்று தி.நகர் பொலிஸ் நிலையத்திற்கு அருகே திரண்டார்கள். மேலும் விஷால் மற்றும் அவரது ஆதரவு தயாரிப்பாளர்களுக்கும், பொலிஸாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து தயாரிப்பாளர் சங்கத்துக்கு நேற்று போடப்பட்ட பூட்டை உடைக்க முயன்ற விஷால் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்களை பொலிஸார் கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
சுனாமியால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரித்தது
23/12/2018 இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பால் ஏற்பட்ட சுனாமி தாக்குதலால் பலியானோர் எண்ணிக்கை 222 ஆக அதிகரித்துள்ளது.
இந்தோனேசியாவில் ஜாவா மற்றும் சுமத்ரா தீவுகளை இந்திய பெருங்கடலுடன் இணைக்கும் சுந்தா ஜலசந்தியில் மேற்கு ஜாவா தீவில் அனாக் கிரகடாவ் என்ற மலை கடந்த சில நாட்களாக குமுறிக் கொண்டிருந்தது.
இந்நிலையில், நேற்று இரவு 9.30 மணிக்கு திடீரென வெடித்து சிதறியது. இதனையடுத்து அங்கு ஏற்பட்ட சுனாமி தாக்குதலின் முதல் கட்டமாக 43 பேர் பலியானதாக தகவல் வெளியானது. பின்னர் உயிர்ச்சேதம் 168 ஆக உயர்ந்தது. மேலும், 750 பேர் காயம் அடைந்தனர். 30 பேரை காணவில்லை.
இந்நிலையில், தற்போது இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பால் ஏற்பட்ட சுனாமி அலைகள் தாக்குதலால் பலியானோர் எண்ணிக்கை 222 ஆக அதிகரித்துள்ளது.
பேரிடர் மேலாண்மை மீட்புக் குழுவினர் விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இன்னும் பலரை காணவில்லை என்பதால் பலி எண்ணிக்கை இன்னும் உயரலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தோனேசியாவில் சுனாமி தாக்குதலால் பலியானோருக்கு ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், சுந்தா எரிமலை வெடித்ததால் ஏற்பட்ட சுனாமி தாக்குதலில் பலியானோருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார். நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment