அன்பு உலையைத் தேடிய அவன் - மு பொன்னம்பலம்

.


அன்பு வார்க்கப்படும் உலைதேடி அலைந்தான் அவன்.
அன்பு எங்கே வார்க்கப்படுகிறது?
எப்படிப்பட்ட உலை அது?
என்ன உலோகங்கொண்டு அன்பு வார்க்கப்படுகிறது?
என்ன உலோகமோ?
தங்கத்தைக் கொண்டுதான் என்றனர் பலர்
ஆனால் ஒரு தட்டுத் தட்டினாலே தகர்ந்து போகுமே இந்தத்தங்கம்
அன்பு அப்படிப்பட்டதா? இல்லையே.
உண்மையில் அன்பு ஒரு இரும்பு வார்ப்பு, இல்லையா?
இல்லை, இடி விழுந்தால் அந்த உலோகமும் ஒடிந்து போகுமே, தெரியுமா?
இது ஒரு வித்தியாசமான உலோகம்,
பஞ்சைவிட மிருதுவானது, பாலைவிட இனிமையானது
ஆயினும் எந்த இயற்கை உற்பாதங்களாலும்
அசைத்திட முடியாத ஓர் அற்புத தொழில்நுட்ப ஆயுதம்!

இது எங்கே உற்பத்தியாகிறது?
இது உற்பத்தியாகும் உலை எங்கே இருக்கிறது?
அவன் கேட்டுக் கொண்டே அலைந்தான்
ஈற்றில்,
இந்த அன்பை செயற்கையாக உற்பத்தி செய்த கொல்லர்கள் இருவரை அவன் சந்தித்தான்
அவர்களில் ஒருவர் மகாத்மாகாந்தி
மற்றவர் மண்டேலா
இவர்களிடமும் அவன் தன் வழமையான கேள்வியைக் கேட்டான்
அவர்கள் அவனை அழைத்துச் சென்றனர்,
அன்பு வார்க்கப்படும் உலையைக் காட்ட!
‘இதோ பார்’ என்று அன்புலையைக் காட்டினர் அவர்கள்.
அங்கே பிள்ளை ஒன்றுக்கு பாலூட்டித் தாலாட்டிக் கொண்டிருந்தாள்
ஒரு தாய்!
இங்குதான் அந்த அன்புலை மூட்டப்படுகிறது என்றனர் அவர்கள்.
தாய்மைதான் அன்பின் உலை.
தாய்மைதான் அன்பின் உலோகம்
தன் குஞ்சை இறாஞ்சிக் கொண்டு பறக்கும் பருந்தைத் தாக்கி
மீட்டு வரும் தாய்மையின் அன்பு வேகம் அற்புதமானது!
தன் குழந்தைக்கு பால் புரையேற, உடம்பின் அத்தனை நாளங்களும்
ஒருங்கிணைய துள்ளிக்குதித்து உச்சிமோந்து உடல் குலுங்கி பதறும் அந்த தாய்!
வளர்ந்தபின் பள்ளிக்குப் போன பிள்ளைகள் வீடுவரும் வரை
வீதிக்கோடிவரை விழியோட விட்டுப் பார்த்திருக்கும் அந்தத்தாய்!

எங்கோ ஒரு சிறிசின் அழுகுரல் கேட்டால் அது தன்பிள்ளையின்
குரலாய் எண்ணி விம்முவதும் அவள் தான்.
வீட்டில் பிள்ளைகள் இல்லாதபோது றோட்டில் வரும் பிள்ளைகளில்
உடல் ஒன்றி ஆறுவதும் அந்தத் தாய்தான்!
அன்பு இப்போ வீட்டை விட்டு வெளியே விரிகிறது.
நாட்டில் பாழாட்சி நிலவும் போது கொலைபடும் அத்தனை இளைஞரும்
தன் தனையராய் விரிகிறது அவள் நெஞ்சு!
விரியத் தொடங்கிய நெஞ்சின் பாய்ச்சலுக்கு தடையாய் நிற்கும்
அனைத்தையும் வீழ்த்தி, அவள் விழிவிரிய எங்கும் விடுதலையாய் அவள்!
அன்பு விரிய விரிய ஓர் தாயானவள் இப்பிரபஞ்சத்தையே
தன்மடியில் வைத்து தாலாட்டுகிறாள், விடுதலை மகவாய்!

மு.பொ.

2 comments:

சந்திரன் said...

மு பொ வின் கவிதை அருமை . நன்றி முரசு

சந்திரன்

tamilmurasu said...

நன்றி சந்திரன்