அமரர் எஸ்.பொ. - அங்கம் 05 இலக்கியச் செல்நெறியில் எஸ்.பொ. வின் வகிபாகம் குறித்த விரிவுரைகளை நடத்தவேண்டும் - முருகபூபதி


எஸ்.பொ.வின் மகன் மருத்துவர் அநுர,   சென்னையில்  மித்ர  பதிப்பகத்தின் சார்பில்  முழுநாள்  இலக்கிய விழாவை   வெகு  சிறப்பாக  நடத்தி  முடித்த  பின்னர்  சிட்னியிலும் ஒரு    பெரு விழாவை   28-08-2004   ஆம்   திகதி  சிட்னி   ஹோம்புஷ் ஆண்கள்    உயர்நிலைக்கல்லூரியில்  நடத்தினார்.
இவ்விழாவில்   மூத்த  கவிஞர்  அம்பியின்  பவள  விழா நிகழ்ச்சிகளும்   இடம்பெற்றன.  அன்றைய  விழாவில்  மித்ர வெளியீடுகளான    ஆசி. கந்தராஜாவின்   உயரப்பறக்கும்   காகங்கள்,  தமிழச்சி   சுமதி  தங்கபாண்டியனின்  எஞ்சோட்டுப்பெண்,   நடேசனின் வண்ணாத்திக்குளம்,   கவிஞர்  அம்பியின்  அந்தச்சிரிப்பு,  எஸ்.பொ.வின்     சுயசரிதை    வரலாற்றில்    வாழ்தல்  - இரண்டு பாகங்கள்,     எஸ்.பொ.    ஒரு  பன்முகப்பார்வை,  மற்றும்  பூ   ஆகிய நூல்கள் வெளியிடப்பட்டன.
மண்டபம்   நிறைந்த  இலக்கிய  சுவைஞர்கள் . அனைவருக்கும்  அன்று இராப்போசன   விருந்தும்    வழங்கினார்    அநுர.
இந்த   நிகழ்விற்கு  முருகபூபதி  தலைமை   ஏற்க,  .கருணகரன்,  பேராசிரியர்  பொன். பூலோக சிங்கம்,   திருநந்த குமார்,   டொக்டர் ஜெயமோகன்,    மா. அருச்சுணமணி,  தனபாலசிங்கம்,  குலம்  சண்முகம் ஆகியோருடன்   இலங்கையிலிருந்து  வருகை  தந்த  ஞானம்  ஆசிரியர்  மருத்துவர்   தி.ஞானசேகரன்  தமிழகத்திலிருந்து  வருகை  தந்த  தமிழச்சி  சுமதி  தங்கபாண்டியன்  ஆகியோரும்  உரையாற்றினர் என்பது    குறிப்பிடத்தகுந்தது.
இந்நிகழ்வின்   நிகழ்ச்சிகளை   ஒருங்கிணைத்து  அறிவித்தார்  ஓவியர் ஞானத்தின்   புதல்வன்  ஞானசேகரம்  ரங்கன்.
பொன்னுத்துரையின்   வாழ்வில்  என்றும்  பக்கபலமாக  விளங்கிய திருமதி   பொன்னுத்துரை  அவர்களை   மேடைக்கு  அழைத்து அவருக்கு   பூச்செண்டு  வழங்கினார்  முருகபூபதியின்  மகள் பிரியாதேவி.
இந்நிகழ்வில்  நன்றியுரையை   நிகழ்த்தியவர்  மாத்தளை   சோமு அவர்களினால்   எஸ்.பொ.வுக்கு  1989  இல்  சிட்னியில் அறிமுகப்படுத்தப்பட்ட    பத்திரிகையாளர்    சுந்தரதாஸ்.

சிட்னியில்   இதுவரைகாலமும்  நடந்த  இலக்கிய  விழாக்களில் மேற்குறித்த   இந்த  விழா   ஒரு  மைல் கல்  என்று  சொல்வது மிகையான   கூற்று  அல்ல.  இதில்  வேடிக்கை   என்னவென்றால்  இந்த   விழாவில்  நேரம்  பற்றாக்குறையினால்  எஸ்.பொ.  ஒரு நிமிடம்தான்    பேசினார்.
அவர்   மறைவதற்கு  சில  வருடங்களுக்கு  முன்னர்  அவுஸ்திரேலியா   கம்பன்  கழகம்  அவருக்கு  சான்றோர்  விருது வழங்கி   கௌரவித்திருக்கிறது.   இலக்கியப்படைப்பாளிக்கு  இவ்வாறு விருது  வழங்கியிருப்பதனால்  அந்தப்பெருமை   கம்பன்  கழகத்திற்கும்  கிட்டியிருக்கிறது.
எஸ்.பொ.   குறித்த  மதிப்பீடுகள்  அவர்  வாழ்ந்த  காலத்தில் வந்துள்ளன.   அவற்றில்  சிலவற்றை  அவர்  ஏற்காமல்  கடுமையான தொனிகளில்   எதிர்வினையாற்றினார்.  தமது  நூல்களில் பதிவுசெய்தார்.    இன்று  அவர்    மறைந்துவிட்டார்.   அவரது  மறைவுக்கு  ஊடகங்களிலும்  மின்னஞ்சல்களிலும்  முகநூல்களிலும் அனுதாபம்   தெரிவித்தும்  மதிப்பீடுகளை  முன்வைத்தும்  பலர் எழுதுகிறார்கள்.   பலர்  எழுதுவதற்கு  தயங்குகிறார்கள்.   பலர் தாமதிக்கிறார்கள்.
பொன்னுத்துரையின்   பார்வையில்  அவர்  மற்றவர்கள்  மீது கொண்டிருந்த   மதிப்பீடுகளுக்கும் --  அவர்  குறித்து  மற்றவர்கள் அவர்   மீது  கொண்டிருக்கும்  மதிப்பீடுகளுக்கும்  இடையேதான் உண்மைகளை  நாம்  தேடவேண்டியிருக்கிறது.
அந்த   உண்மைகள்   கசக்கலாம்.   இனிக்கலாம்.   ஆயினும்  உண்மை சுடும்    என்ற    மறைபொருளும்  உண்டு.
காலம்   அவரைப்பற்றிய  சரியான  மதிப்பீடுகளை   வெளியிடும்  என நம்பலாம்.
எனது  எஸ்.பொ.  பற்றிய  இந்தத்தொடரின்  முதலாவது  அங்கத்தை படித்துவிட்டு --  இலங்கை   கண்டியில்    வதியும்  யாழ். பல்கலைக்கழகம் -- பேராதனைப்பல்கலைக்கழகம்  ஆகியனவற்றின் தகைமைசார்  பேராசிரியரும்    மூத்த   இலக்கிய    விமர்சகருமான எனது   அருமை  நண்பர்  எம்.. நுஃமான்  எனது  மின்னஞ்சலுக்கு  தனது   ஆழ்ந்த  அனுதாபங்களையும்  தெரிவித்து  பின்வரும்  தனது சிறிய   கவிதையையும்  இணைத்திருந்தார்.
இருந்து  சென்ற   முன்னோரின்
இடத்திலெல்லாம்  நாம்  இன்று
விருந்து   செய்து   மகிழ்கின்றோம்
விகடம்   செய்து    மகிழ்கின்றோம்
இருந்த  இடம்விட்டு நாமும்  இனி
எழுந்து  சென்றால்  இங்கிருந்து
விருந்து  செய்வார்  யார்...  யாரோ...?
விகடம்   செய்வார்  யார்...   யாரோ...?

எஸ்.பொ. 2014 நவம்பர் 26 ஆம் திகதி சிட்னியில் மறைந்தார். மற்றும் ஒரு மூத்த எழுத்தாளரான காவலூர் ராசதுரையும் 2014 ஒக்டோபர் 14 ஆம் திகதி சிட்னியில் மறைந்தார்.
காவலூர் ராசதுரையின் இறுதி நிகழ்வில் மெல்பன் – சிட்னி எழுத்தாளர்கள் உரையாற்றினர். ஆனால், எஸ்.பொ.வின் இறுதி நிகழ்வில் எந்தவொரு எழுத்தாளரும் இரங்கலுரையாற்றவில்லை.
அவரது இறுதிநிகழ்வு அவரது குடும்பத்தினராலேயே ஒழுங்குசெய்யப்பட்டு, குடும்ப உறுப்பினர்கள் மாத்திரமே உரையாற்றினர். எஸ். பொ. தனது வாழ்நாளில் பெரும்பகுதியை இலக்கிய பொது வாழ்வுக்கே அர்ப்பணித்திருந்தவர்.
அதனால், அவரின் இறுதி நிகழ்வாவது அவருடைய குடும்ப நிகழ்வாக அமையட்டும் என குடும்பத்தினர் கருதியிருக்கவேண்டும். எனினும் எஸ்.பொ. எழுதியிருந்த அனைத்து நூல்களும் அந்த இறுதி நிகழ்வு அரங்கில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.
மெல்பனில் 20-12-2014 ஆம் திகதி  எனது 20 ஆவது நூலான  “ சொல்ல மறந்த கதைகள் ” அறிமுக அரங்கு Darebin Intercultural Centre  மண்டபத்தில் நடந்தபோது, அதனை மறைந்த எமது  எழுத்தாளர்களின் நினைவரங்காகவும் மாற்றியிருந்தேன்.
எஸ்.பொ. – காவலூர் ராசதுரை இருவரதும் படங்கள் திரைநீக்கம் செய்யப்பட்டு இரங்கலுரைகள் நிகழ்த்தப்பட்டன. எனது நீண்ட கால குடும்ப நண்பரும் எழுத்தாளர் அருண். விஜயராணியின் அண்ணனும் கலை –  இலக்கிய ஆர்வலருமான சட்டத்தரணி செல்வத்துரை ரவீந்திரன் தலைமையில் நடந்த இந்நிகழ்வில், எஸ்.பொ.வின் நண்பர்களான இலக்கியத் திறனாய்வாளர்கள் கே. எஸ். சிவகுமாரன்,  சி. வன்னியகுலம்  மற்றும் இலக்கிய வாசகர் கண்டி அசோகா வித்தியாலய ஸ்தாபகர் நடராஜாவின் துணைவியார் திருமதி லலிதா நடராஜா ஆகியோரும் உரையாற்றினர்.
எஸ்.பொ. நவீன தமிழ் இலக்கியத்தில் பரீட்சார்த்தங்களை மேற்கொண்டவர். பல புதிய சொற்பதங்களை அறிமுகப்படுத்தியவர். படைப்பிலக்கியத்தில் செம்மைப்படுத்தும் கலையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியவர்.
பலரது படைப்புகளை செம்மைப்படுத்தியிருப்பவர். ஒரு காலத்தில் ஈழத்தின் மூத்த எழுத்தாளர்களான கே. டானியல், டொமினிக் ஜீவா ஆகியோரது படைப்புகளையும் செம்மைப்படுத்தியவர்.
ஆனால், அவர்களுடன் முரண்பாடு வந்ததும், “ அவர்களுக்கும் நான்தான் எழுதிக்கொடுத்தேன். அவர்களின் பெயர்களிலும் நான் எழுதியிருக்கின்றேன்”  என்றெல்லாம் சகிக்கமுடியாதவாறு பேசியிருப்பவர்.
மற்றவர்களை கடும்தொனியில் விமர்சிப்பார். பல்கலைக்கழக பேராசிரியர்கள் பலரை பேச்சிலும் எழுத்திலும் கடுமையாக விமர்சித்தவர்.  இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் ஆறுமுக நாவலரை,  தேசிய விழிப்பின்  சின்னமாக போற்றி விழா எடுத்தது. ஆனால், எஸ்.பொ. நாவலரை அவ்வாறு பார்க்காமல் வேறு ஒரு கண்ணோட்டத்தில் கடும்தொனியில் விமர்சித்தார்.
வட இலங்கையில் இருந்த கண்ணகி வழிபாட்டை  படிப்படியாக நிறுத்தி,  கண்ணகி கோயில்களை அம்மன் ஆலயங்களாக மாற்றியவர் நாவலர் என்று சொல்லிவந்தவர் எஸ்.பொ.
“வாணிய செட்டிச்சி கண்ணகியை எவ்வாறு வழிபடமுடியும் ? “ என்று நாவலர் வடக்கிலிருந்து  கண்ணகியை அப்புறப்படுத்தினாலும், கண்ணகி கிழக்கிலங்கைக்கு  இடம்பெயர்ந்து அங்குள்ள மக்களால் வழிபடப்படுகிறாள் என்று சொல்லி வந்தவர் எஸ்.பொ.
கண்ணகி கிழக்கிலங்கையில் தொடர்ந்தும் கொண்டாடப்படுகிறாள்!
எஸ்.பொ. மறைந்து நான்கு ஆண்டுகளாகிவிட்டன. அவரது இலக்கியத்துறைகள் தொடர்பாக தனித்தனியாக ஆராயவேண்டும்! இந்தப்பதிவை எழுதிக்கொண்டிருந்தபோது இலக்கிய நண்பர்  நடேசன், ஆண்டு தோறும் எஸ். பொ. நினைவுப்பேருரை நடத்தவேண்டும் எனச்சொன்னார்.
இலக்கியத்துறையில் ஈடுபடும் புதிய தலைமுறையினருக்கு ஈழத்து இலக்கிய செல்நெறியில் எஸ்.பொ. வின் வகிபாகம் குறித்த விரிவுரைகளை நடத்துவதன் மூலம் பரீிட்சார்த்தங்களையும் படைப்பிலக்கியத்திலும் ஊடகத்துறையிலும் செம்மைப்படுத்தல் கலையை மேம்படுத்த முடியும் என்பதும் நடேசனின் எதிர்பார்ப்பு.
எஸ். பொ .  அவர்கள் இலங்கை – தமிழகம் – சிங்கப்பூர் – மலேசியா – அவுஸ்திரேலியா – கனடா உட்பட அய்ரோப்பிய நாடுளிலும் நன்கறியப்பட்டவர். கவனத்திற்குள்ளானவர்.
எனவே , எஸ். பொ. பிறந்த தாயகத்திலும்  தமிழர் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளிலும் வதியும்  கலை, இலக்கியவாதிகளிடமும் இந்த எண்ணக்கருவை இந்தப்பதிகை  ஊடாக சமர்ப்பிக்கின்றேன்!
( முற்றும்)


-->

No comments: