"யேசுபாலகன்
அவதரித்த நாளன்று பிறந்தவர்கள் யேசுவைப்போன்றே சாந்தமானவர்கள். அமைதியின் உறைவிடமாக
இருப்பவர்கள்" என்று எனது பாட்டி சின்னவயதில் எனக்குச்சொல்லியிருக்கிறார்.
சிலவேளை நான்
பாட்டி வாழ்ந்த காலத்தில் பெரிய குழப்படிகாரனாக இருந்திருக்கவேண்டும். எனக்குத் தெரிந்த
பல நண்பர்கள் யேசு பாலகன் தோன்றிய நாளில் பிறந்து,
பாட்டி சொன்னவாறு அமைதியாகவும் நிதானமாகவும்
வாழ்ந்திருப்பதை எனது வாழ்நாளில் பார்த்திருக்கின்றேன்.
அந்த வரிசையில்
ஒருவர்தான் எனது நீண்ட கால இலக்கிய நண்பர் புலோலியூர்
இரத்தினவேலோன். அவருக்கு டிசம்பர் மாதம் 25 ஆம் திகதி 60 வயது பிறக்கிறது. மானசீகமாக
அவரை வாழ்த்திக்கொண்டு இந்தப்பதிவை எழுதத்தொடங்குகின்றேன்.
வடமராட்சியில்
பல இலக்கியவாதிகளை குடும்ப உறவினர்களாக கொண்டிருக்கும் இரத்தினவேலோன், தனது இலக்கியவாழ்வில்
தான் பிறந்த ஊருக்கும் பெருமை சேர்க்கும் வகையில் புலோலியூரையும் இணைத்துக்கொண்டவர்.
1977 ஆம்
ஆண்டில் இவர் கல்லூரி மாணவன். தீவிர வாசிப்பில் ஈடுபாடும் இலக்கியத்தின் பால் நேசிப்பும்
மாணவர்களுக்கு வருமாயின் அதற்கு ஆசிரியர்கள், அல்லது குடும்ப உறவினர்கள்தான் காரணமாகியிருக்கவேண்டும்.
இக்காலத்தில்
மாணவர்களை இலக்கியத்துறையில் ஈடுபடுத்தும்
ஆசிரியர்களை காண்பது அரிது. இரத்தினவேலோன் தனது 19 வயதில், மாணவப்பருவத்தில் தினகரன் வாரமஞ்சரியில் புரளும் அத்தியாயம் என்ற சிறுகதையை எழுதி,
அது வெளிவந்தகாலத்தில் எவ்வளவு புலகாங்கிதம் அடைந்திருப்பார் என்பதை கற்பனை செய்து
பார்த்துவிடலாம். அச்சில் வெளிவந்த முதல்கதையை அவரே எத்தனை முறை மீண்டும் படித்துப்பார்த்திருப்பார்
என்பதையும் புரிந்துகொள்ளமுடியும்.
ஆனால், பின்னாளில்
அவரது எழுத்துக்களையும் ஒரு மாணவி பல்கலைக்கழக மட்டத்தில் ஆய்வுசெய்வார் என்பதை எழுதத்
தொடங்கிய காலத்தில் இவர் கற்பனையிலும் நினைத்துப்பார்த்திருக்கமாட்டார்.
செல்வி எம். திருமகள் என்ற யாழ். பல்கலைக்கழக மாணவி, தமிழ் சிறப்புக்கலைமாணித் தேர்வின் நிறைவாண்டுப்பரீட்சையின் ஒரு பகுதியை முழுமை
செய்யும் பொருட்டு, இரத்தினவேலோனின் சிறுகதைகளை
ஆய்வுசெய்து சமர்ப்பித்துள்ளார்.
இதில் ஒரு
சுவாரசியமும் இருக்கிறது. உயர்தரப்பரீட்சையில் சிறந்த புள்ளிகளைப்பெற்றும், தரப்படுத்தலினால்
பல்கலைக்கழகம் செல்லும் வாய்ப்பை இழந்தவர் இரத்தினவேலோன். எனினும், பின்னாளில் இவரது கதைகளையே ஒரு மாணவி பல்கலைக்கழகத்தில்
படித்து ஆய்வுசெய்துள்ளார்.
எழுதத் தொடங்கியது
முதல் நாற்பது ஆண்டுகாலத்தில் இவர் எழுதிய சிறுகதைகள் நாற்பத்திநான்குதான். அவற்றில்
41 கதைகள் ஐந்து தொகுப்புகளாக வரவாகியுள்ளன. அவை: புதிய பயணம், விடியட்டும் பார்ப்போம்,
நிலாக்காலம், நெஞ்சாக்கூட்டு நினைவுகள், காவியமாய் நெஞ்சில் ஓவியமாய்.
தினகரன்,
வீரகேசரி, தினக்குரல், ஈழநாடு, மல்லிகை, ஞானம், சுடர், ஜீவநதி, முதலான இதழ்களில் கதைகளையும்
எழுதியிருக்கும் இரத்தினவேலோன், பத்தி எழுத்துக்களின் தொகுப்பாக மூன்று நூல்களையும்,
தேர்ந்தெடுத்த ஆக்கங்களின் தொகுப்புகளாக மூன்று நூல்களையும் இலக்கிய வாசகர்களுக்கு
வழங்கியிருப்பவர். இவரது சில நூல்கள் வட- கிழக்கு மாகாண விருதும், வடமாகாண விருதும்
பெற்றவை.
மல்லிகைக்கதைகள்
தொகுப்பிலும் ஜீவநதி கதைகள் தொகுப்பிலும், இரசிகமணி கனகசெந்திநாதன் கதா விருதுபெற்ற
கதைகளின் தொகுப்பிலும் தமிழ்க்கதைஞர் வட்டத்தின் ( தகவம்) பரிசுச்சிறுகதைகளின் தொகுப்பிலும்
வடமராட்சி வடக்கு பிரதேச கலாசாரப்பேரவை வெளியிட்ட தரிசனம் தொகுப்பிலும் யாழ். கம்பர்மலை வித்தியாலய பழைய மாணவர் சங்கத்தின்
ஐக்கிய இராச்சிய கிளை வெளியிட்ட பூபாள ராகங்கள்
தொகுப்பிலும் காவலூர் எஸ். ஜெகநாதன் மறைவதற்கு முன்னர் சென்னையில் வெளியிட்ட காலத்தின் யுத்தங்கள் தொகுப்பிலும் இரத்தினவேலோனின்
கதைகள் இடம்பெற்றிருப்பதிலிருந்து இவரது அயராத இலக்கிய உழைப்பை இனம் காணமுடிகிறது.
ஈழத்து இலக்கியவளர்ச்சியில்
மூத்த தலைமுறையினர் தொடங்கி, நான்காவது தலைமுறையினர் வரையில் சில பரீட்சார்த்த முயற்சிகளும்
நிகழ்ந்துள்ளன. இரண்டு பேர் அல்லது நான்கு பேர் இணைந்து தொடர்கதை அல்லது நெடுங்கதை
எழுதும் மரபு, எஸ்.பொ. இ.நாகராஜன், குறமகள்
காலத்திலேயே தொடங்கியது. இவர்கள் மத்தாப்பு
என்ற தொகுதியை வரவாக்கினர்.
பின்னாளில்
மேலும் சிலர் இத்தகைய பரீட்சார்த்த முயற்சிகளில் ஈடுபட்டனர். புலோலியூர் இரத்தினவேலோனும்
கோகிலா மகேந்திரனும் இணைந்து ஒரு நெடுங்கதையை எழுதியிருந்தனர். இக்கதையும் இவர்கள்
எழுதிய தனித்தனிக்கதைகள் தலா மூன்றும் இடம்பெற்ற
தொகுதி அறிமுகவிழா, நான் இலங்கையிலிருந்த
காலப்பகுதியில் 1984 ஆம் ஆண்டில் வெளியானது. இதுபற்றி வீரகேசரி வாரவெளியீட்டில் இலக்கியப்பலகணி
பத்தி எழுதியபோது குறிப்பிட்டுள்ளேன்.
இவரது இலக்கிய
தாகத்திற்கு ஊற்றுக்கண்களாக இருந்தவர்கள் பற்றி இவரே கலைக்கேசரியில் இவ்வாறு தெரிவித்துள்ளார்:
"நான் பிறந்து வளர்ந்து வாழ்ந்த புலோலியூர் கிராமச்சூழல், எனது ஆர்வம், முயற்சி ஆகியனவற்றுக்கு அப்பால் மரபணுவும் எனது இலக்கியப் பிரவேசத்திற்கு வழிசமைத்திருக்கிறது எனத் தாராளமாகவே கூறலாம்.
இலக்கியமும் இரசனையும் எனக்குக் கருவிலேயே உருக்கொள்வதற்கு காரணமானவர் எனது தந்தை ஆறுமுகம் அவர்கள்தான். கணிப்பிற்குரிய கவிஞரான அவர் சிறந்த திறனாய்வாளராகவும் திகழ்ந்திருந்தார்.
ஈழத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களுள் ஒருவரான புலோலியூர் க.சதாசிவம் எனது தாய் மாமனார். ஒரே வீட்டில் அல்லும் பகலும் இவர்களுடன் வாழ்ந்த இளமைக்கால வாழ்க்கை, இயல்பாகவே இலக்கியம் என்னுடன் ஒன்றிவிட காரணங்களாயிற்று.
அத்துடன் ஈழத்துச் சிறுகதை முன்னோடிகளில் ஒருவரான மறுமலர்ச்சிக் காலத்தின் பெரியதம்பி அவர்களும் புலோலியூர் என்பதை தம் பெயர்களோடு இணைத்துக் கொண்ட எழுத்தாளர்களான க.தம்பையா, செ.கந்தசாமி ஆகியோர் எனது நெருங்கிய உறவினர்களும் அயலவர்களும் ஆவர்.
அதேபோல் கல்லூரிப் பருவமும் எனது இலக்கிய உணர்விற்கு உர மூட்டியது எனலாம். பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியில் பயின்ற 1977 க.பொ.த உயர்தரக் குழு தரமான இலக்கியகர்த்தாக்களை ஈழத்திற்குத் தந்திருக்கின்றது என்றால் அது மிகையாகாது. முதலாவது ஒரு சிறுகதை எழுத்தாளனாக என்னை உருவாக்கும் முயற்சி. மற்றையது கிராமத்து நண்பர்களின் கூட்டு முயற்சியில் பத்திரிகையாளனாக, அதாவது ஒரு கையெழுத்துப் பிரதி சஞ்சிகை ஆசிரியனாக ஈடுபாடு காட்டியமை.
“புத்தொளி” என்ற பெயரில் மாதமொருமுறை வெளிக்கொணரப்பட்ட அக் கையெழுத்துப் பிரதியின் ஆயுள் மிகச் சொற்பமாகவே இருந்தது.
அதன் பின்னர் முற்றுமுழுதாக எனது பங்களிப்பு சிறுகதைத் துறையிலேயே இருந்தது. ஒரே காலகட்டத்தில் நான்கு சிறுகதைகளை கல்லூரியில் பாவித்த “ஒற்றை ரூல்” அப்பியாசப் புத்தகமொன்றில் எழுதியவாறே புலோலியூர் தம்பையாவை அணுகினேன்.
கதைகளைப் படித்த அவர், அவற்றுள் ஒன்றைத் தெரிவு செய்து சில திருத்தங்களைக் கூறி அதை மீள எழுதித் தன்னிடம் தரும்படி கூறவே அவ்வாறே செய்தும் கொடுத்தேன்.
நம்பவே முடியாது, ஒரு சில வாரங்களின் பின்னர் இன்னும் திருத்தமாகச் சொல்வதெனில் மாதமொன்று முடியுமுன்பே “புரளும் அத்தியாயம்” என்னும் அக்கதை தினகரன் வாரமஞ்சரியில் பிரசுரமாகியிருந்தது.
முதன்முதலாக அச்சில் எனது ஆக்கத்தினைப்பார்த்த அடுத்த சில நிமிடங்கள் “புலோலியூர் மண்ணினை” விட்டு விண்ணில் மிதந்த வண்ணம் இருந்தேன்.
1977 இல் எனது பத்தொன்பதாவது வயதில் இது நிகழ்ந்தது. தனதூரில் அடுத்த தலைமுறையில் ஓர் எழுத்தாளன் உருவாக தம்பையா எடுத்த முயற்சி என்னைப் பொறுத்தமட்டில் எனது வாழ்வின் மிக முக்கியமானதொரு திருப்புமுனை என்றே கருதுகிறேன்.
இந்த வகையில் இக்காலகட்டங்களில் புலோலியூர் கந்தசாமியும் என்னைத் தட்டிக் கொடுத்ததை இவ்விடத்தே நினைவில் கொள்ளாவிடின் அவருக்கு நான் துரோகமிழைத்தவனாவேன்.
எனது கல்வி முன்னேற்றத்தையே இலக்காகக் கொண்டதனால் அந்நாட்களில் நான் இலக்கியத்தில் ஈடுபடுவதனை மாமனார் புலோலியூர் சதாசிவம் அதிகம் உற்சாகப்படுத்தவில்லை.
நாளடைவில் எழுத்தின் மீதான என் அதீத ஆர்வம் கண்டு கலையம்சங்களால் என் படைப்புக்களை மெருகேற்றப் பயிற்சி தந்ததோடன்றி அவ்வப்போது வெளிவரும் எனது ஆக்கங்களை அழகாக, ஆழமாக விமர்சித்துத் தனக்கென ஓர் வாரிசாக என்னை அவர் உருவாக்கிக்கொண்டார் என்பதை இங்கு கூறியே ஆக வேண்டும்."
------
இரத்தினவேலோனும் சிறுகதையில் தொடங்கி
இலக்கியத்தின் வேறு துறைகளில் ஈடுபட்டவர். முக்கியமாக பதிப்புத்துறையிலும் கவனம்
செலுத்தியவர். தனது செல்வப்புதல்வி மீராவின்
பெயரிலேயே பதிப்பகம் நடத்தி, சக எழுத்தாளர்களின் பல துறை நூல்களயும் வெளியிட்டார்.
அத்துடன், ஞாயிறு தினக்குரலில் பனுவல் என்ற பத்தியில் "புலோலியூரின் இலக்கிய கர்த்தாக்கள்"
என்ற தலைப்பில் ஒரு கட்டுரைத் தொடரும்
எழுதினார். அதே இதழில் இவர் அண்மைக்கால அறுவடைகள்
என்ற தலைப்பில் வாராந்தம் எழுதிய தொடர் ஐந்து ஆண்டுகாலம் வெளியான ஒரு மெகா தொடர் என்பதும்
குறிப்பிடத்தகுந்தது.
மேற்குறிப்பிடப்பட்ட தொடர்கள் ஈழத்து
இலக்கியவளர்ச்சியின் செல்நெறிப்போக்கினை அடையாளம் காட்டுவதாகவும் அமைந்திருந்தது.
ஒரு படைப்பாளி எத்தனை கதைகள் எழுதியிருக்கிறான்?
எத்தனை நூல்களை வரவாக்கியிருக்கிறான்? என்பதில் பெரிய சாதனை இல்லை. தான் நேசித்த இலக்கியத்துறையில்
எத்தனைபேரை சமூகத்திற்கு அறிமுகப்படுத்தி அடையாளப்படுத்தியிருக்கிறான் என்பதிலும் எத்தனைபேருக்கு
இலக்கிய உலகில் அறிமுகம் பெற்றுக்கொடுத்து இனம்காண்பித்து வளர்த்திருக்கின்றான் என்பதிலும்தான் அவனது மேதா விலாசம் கவனத்தைப் பெறுகிறது.
நண்பர் இரத்தினவேலோன், தனது சொந்தப்படைப்புளையும் வெளியிட்டு, தனது பிரதேசத்து
இலக்கிய ஆளுமைகளைப்பற்றிய குறிப்புகளையும் எழுதியவர். சமகால இலக்கிய அறுவடைகளைப்பற்றி
பதிவுசெய்து வாசகர்களுக்கு அடையாளம் காண்பித்தவர். இந்தப்பணியை செய்வதற்கு விசாலமான
மனம் வேண்டும்.
அதனால்தான் இவர் ஈழத்து இலக்கிய
உலகினால் நேசிக்கப்படுகிறார்.
டொமினிக்ஜீவாவின் மல்லிகை, 2007 ஆம் ஆண்டு இவரை அட்டைப்பட அதிதியாக கௌரவித்தது.
கொழும்பிலிருந்து வெளியாகும் ஞானம் இதழும் யாழ்ப்பாணத்திலிருந்து
வெளிவரும் ஜீவநதி இதழும் இம்மாதம் இந்த
மணிவிழா நாயகனை அட்டைப்பட அதிதியாக்கியிருக்கிறது
என்பதிலிருந்தும் இதழாளர்களினதும் நேசிப்பிற்குரியவர் எங்கள் இரத்தினவேலோன்
என்பதையும் இங்கு பதிவுசெய்யவிரும்புகின்றேன். வாழும் காலத்திலேயே இத்தகைய அங்கீகாரத்தை
வழங்கும் குறிப்பிட்ட இதழ்களையும் நாம் அவசியம் பாராட்டத்தான் வேண்டும்.
லண்டனில் 2006 இல் நடந்த பூபாளராகங்கள்
விழாவிற்கும் இரத்தினவேலோன் சிறப்பு அதிதியாக அழைக்கப்பட்டார்.
வீரகேசரியில் நாமிருவரும்
பணியாற்றிய காலம் எமக்கு வசந்தகாலம்தான். கருத்தொருமித்த நண்பர்களாகப்பழகினோம்.
யாழ்ப்பாணம் தெல்லிப்பழை மகாஜனாக்கல்லூரியை 1984 இல் இவர்தான் எனக்கு முதலில் காண்பித்தார்.
அன்றுதான் கோகிலா மகேந்திரனையும் எனக்கு அறிமுகப்படுத்தினார்.
கோகிலாவின் முரண்பாடுகள் அறுவடை நூலின் வெளியீட்டுவிழாவில் இருவரும் உரையாற்றினோம்.
1987 ஆம் ஆண்டு முற்பகுதியில் நான் நாட்டைவிட்டு
வெளியேற ஆயத்தமானபோது இவர் மிகவும் கவலைப்பட்டார்.
இலக்கிய நண்பர்களுடன் எங்கள் ஊருக்கு
வந்து எனக்கு விடைகொடுக்கும்போது, " இனி எனக்குக் கந்தோரே வெறுமையாக இருக்கும்"
என்று நாதழுதழுக்கச் சொன்னார். அதற்கு நான், " தம்பி, நண்பர்கள் உருவாக்கப்படுவார்களே
தவிர, பிறப்பதில்லை" என்றேன். " பலரும் உங்களைப்போல எளிமையாக,
உண்மையாக எத்தனைபேராலை பழகமுடியும்" என்றார். அதற்கு நான், " இடத்தால் பிரிந்தாலும்
இணைந்த இதயத்தோடு இலக்கியத்தோட்டத்தில் நின்று ஒன்றுபட்டு உழைப்போம்" எனக்கைகொடுத்து
பிரிந்தேன்.
இந்த உரையாடலையும் அப்படியே பதிவுசெய்து, ஒரு பிரியாவிடை மடலை
1987 ஆம் ஆண்டு மார்ச் மாத மல்லிகையில் விரிவாக எழுதி அந்த இதழையும் எனக்கு அனுப்பிவைத்தார்.
ஆண்டுகள் உருண்டோடிவிடும். நினைவுகள்
நிலைத்து நிற்கும். அன்று அவரைவிட்டு இடத்தால் பிரிந்தாலும் தொடர்ச்சியாக எமக்கிடையிலான
இலக்கிய உறவு நீடிக்கின்றது. இலங்கை செல்லும் சந்தர்ப்பங்களில் இவரையும் நான் சந்திக்கத்தவறுவதில்லை.
எமது இலக்கியப்பயணத்தில் சக பயணியாக
வந்துகொண்டிருக்கும் நண்பர் புலோலியூர் இரத்தினவேலோனை அவரது மணிவிழாக்காலத்தில் நெஞ்சம் மகிழ வாழ்த்துகின்றேன்.
letchumananm@gmail.com
No comments:
Post a Comment